மோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்!

1,012 . Views .

ஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவின் சமீபத்திய 48 மணிநேர பொது வேலைநிறுத்தம் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வேலைநிறுத்தம் தான். இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு 18 கோடி தொழிலாளர்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய பொது வேலைநிறுத்தமும் இந்தியாவில் மோடி ஆட்சியின் அழிவுகரமான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகத் தான் நடந்தது.

சமீபத்தில் நடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தின் காரணமாக நாடு முழுவதும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. அரசாங்க ஊழியர்கள், வங்கி ஊழியர்கள்,போக்குவரத்து ஊழியர்கள்,உற்பத்தியாளர்கள், விவசாயிகள்,ஆசிரியர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் மந்தநிலையும் அநேக துறைகளில் தேக்கநிலையும் ஏற்பட்டது.

48 மணி நேர வேலைநிறுத்தம் அனைத்து இந்திய கிசான் சபாவும் (சிபிஐ (எம்) விவசாயிகளின் பிரிவு), ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மன்ச் (Adivasi Adhikar Rashtriya Manch), பூமி அதிகார் அந்தோலன் (Bhumi Adhikar Andolan)உள்ளிட்ட பல விவசாயா மற்றும் பழங்குடி அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டது.

தற்பொழுது இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 134 கோடியாக உள்ளது, அதாவது உலகில் ஆறில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். அந்த 134 கோடியில் குறைந்தபட்சம் 9ல் 1க்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளனர் அல்லது உலக அளவில் 50 ல் ஒருவர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோரும் டில்லியில் 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்குபெற்று உள்ளனர்.அது மட்டுமன்றி கிராமப்புறத்தில் உள்ள 67 சதவிகிதத்தினர் பங்கேற்று உள்ளனர்.

புதிய சோசியலிச இயக்கம் (New Socialist Alternative) முந்தைய வேலைநிறுத்தத்தின்போது தனது அறிக்கையில் எழுதியிருந்தது போன்று

“1991 ல் நவ-தாராளவாதத்தின் பேரழிவுக் கொள்கைகளின் வருகைக்குப் பின்னர், இந்திய தொழிலாள வர்க்கம் பொது வேலைநிறுத்தத்தில் 17 முறை ஈடுபட்டுஇருக்கிறது”. பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு,அனைத்துத் துறைகளிலும் உழைக்கும் மக்களை தோல்வியுறச் செய்யும் விதமாகக் மீண்டும் கொண்டுவந்துள்ள பேரழிவுகரமான கொள்கைகளின் காரணமாகவே இந்த பொது வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.

வளர்ச்சி எனும் சொல்லானது வெறும் வெற்று  முழக்கமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

அச்சேத் தின் (நல்ல நாள்), ஊழலை ஒழித்துக்கட்டுவது,  ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு போன்ற கவர்ச்சிகர முழக்கங்களும் போலி வாக்குறுதிகளும் அள்ளித் தெளித்த மோடி இந்த 4.5 ஆண்டுகளில் செய்த ஒரே சாதனை ஏழைகளிடம் மிஞ்சி இருந்த செல்வத்தையும் பிடுங்கி செல்வந்தர்களுக்கு அளித்தது தான்.

மோடியின் ஆட்சியின் கீழ், நவ தாராளவாத தாக்குதல் அதிவேகத்தில் நடந்து வருகிறது. இந்தியாவில் 1 சதவிகிதத்தினர் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர், அவர்களது சொத்து மதிப்பு அதிவேகத்தில் வளர்ந்து வருகின்றது. இந்த 1 சதவிகிதத்தினர் தான் நாட்டு வளங்களின் பாதிக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். “வளர்ந்துவரும் சந்தைகள்” என்று பெயரிடப்பட்டாலும், 21 ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவமானது  பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள  மக்களை மோசமான ஏழ்மையில் தள்ளியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் 70 சதவிகிதத்தினர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் – சுமார் 90 கோடி மக்கள் நாள் ஒன்றிற்கு வெறும் 2டாலர் மட்டுமே பெற்று வறுமையில் வாடி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் வளர்ச்சி அதிவேகமானதாக இருக்கின்றது. 2013 ஆம் ஆண்டில் 196,000ஆக  இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 250,000 ஆக உயர்ந்தது, 2023 ஆம் ஆண்டளவில் 9 லட்சம் கோடீஸ்வரர்கள் உருவாகி விடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகின்றது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறான நடவடிக்கை என்பது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது. இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மட்டுமின்றி, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும் பறித்திருக்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின் படி 2 கோடி பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்.

மக்களின் நிலை இவ்வாறு இருக்கையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தைரியமாக “வேலை நிறுத்த நடவடிக்கைக்கான தேவை இருக்கிறதா இல்லை இடதுசாரிய அமைப்புகள் இந்திய அரசியல் வரைபடத்தில் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இவ்வாறு பாசாங்கு காட்டுகிறார்களா?” என்னும் கேள்வியை தொழிலாளர் வர்க்கத்தையும் தொழிற்சங்கத்தையும் பார்த்துக் கேட்டு இருக்கிறார்.

அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.18,000 நிறுவுதல்,  தொழிற்சங்கங்களை பதிவு செய்யுமாறு கட்டாயப்படுத்த கூடாது, ஒப்பந்த முறையை ஒழித்து தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்,  கூட்டுபேரத்திற்கும், அமைப்புரீதியாக திரள்வதற்குமான உரிமைகளை உறுதி செய்தல், தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை உடனடியாக கைவிட்டு, தொழிலாளர் நலச்சட்ட விதிகளை கண்டிப்பான முறையில் அமல் படுத்துதல் உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, 10 மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பங்கு பெற்றனர் என்று, பத்து தேசிய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கூறினர். ஜனவரி 8 ம் தேதி ஏழு மாநிலங்களில் முழு அடைப்பு கடைப்பிடிக்க பட்டது, ஜனவரி 9 ம் தேதி புதன்கிழமையன்று கூடுதலாக நான்கு மாநிலங்களிலும் இதே போன்ற முழு அடைப்பு கடைப்பிடிக்க பட்டது.

அரசாங்க துறை, வங்கித் துறை, காப்பீட்டுத் துறை மற்றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைநிறுத்தம் 100 சதவீதம் வெற்றிகரமாக நடந்தேறியது. தனியார் மற்றும் மாநில கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன, பெரும்பாலான மாநிலங்களில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பல ஆண்டுகளாகப் போராடி தொழிற்சங்கங்கள் 44  தொழிலாளர் நலச் சட்டங்களை வென்றெடுத்து உள்ளனர். மோடி அரசாங்கம் அந்நலச் சட்டங்களை செயல் இழக்கச் செய்த காரணத்தினால் இப்பொழுது வெறும் 4 சட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. குறிப்பாகக் குறுகிய காலத்திற்கு மட்டும் வேலை ஒப்பந்தம் மற்றும் வேலைப் பாதுகாப்பு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதின் காரணமாகவே தொழிலாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

இரண்டு நாள் வேலைநிறுத்தம் பொதுவாக அமைதியான முறையில் நடந்தேறினாலும்,ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் சிறு கலவரங்கள் நடைபெற்றன. வேலைநிறுத்தத்தின் முதல் நாள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களை நிறுத்தி, கற்களை வீசினர் மற்றும் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில், சுமார் 22 காவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மோதல்களில் காயமடைந்தனர்.  இரண்டாவது நாள், மேற்கு வங்கத்தில் நான்கு பேர் காயமுற்றனர்.

இந்தியாவின் தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை அவர்கள் “வாழ்க்கை” சூழலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே வாழ்க்கையை நடத்துகின்றனர். பெரும்பான்மையானவர்களின் நாள் ஒன்றிற்கான சம்பளம் 1/2 டாலருக்கும் குறைவானதாகும், அவர்கள் எந்தவித சமூக பாதுகாப்பும் இன்றி இருக்கின்றனர். எந்நேரமும் 1000 திற்கும் மேற்பட்ட துண்டுகளாக வெடிக்க இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் வேலைவாய்ப்பு நெருக்கடி: 90,000 காலியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் விண்ணப்பதாரர்கள்!

ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் இந்தியர்கள் தொழில் துறையில் நுழைகின்றனர் ஆனால் இதில் ஒரு பகுதி வேலை வாய்ப்புகள் கூட உருவாக்கப் படுவதில்லை. இந்திய ரயில்வே துறையில் இருக்கும் 90,000 காலி பணியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த ஏற்றத் தாழ்வானது நாட்டில் வேலையற்ற மக்களின் இன்னலை வெளிப்படுத்துகிறது.

நரேந்திர மோடி பதவி ஏற்கும் பொழுது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதியை நான்கு ஆண்டுக்கால பதவிக்கு பிறகும் நிறைவேற்றாத காரணத்தினால் அவர் மீது பல விமர்சங்கள் வைக்கப்பட்டு வருகின்றது. 2014ம் ஆண்டு அவர் பதவியேற்ற போது பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும், அதன் மூலம் பல துறைகளில் புது வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்று அவர் உறுதி அளித்தார். உதாரணமாக உற்பத்தித் துறையை கட்டி எழுப்புவேன் என்று உறுதி அளித்தார்,  எடுத்துக்காட்டாக 2022 ஆம் ஆண்டில் தனது “இந்தியாவில் தயாரிப்பதற்கான” (Make in India)  திட்டத்தின் மூலம் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் வேலையின்மையின் விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது. இது 15 மாதங்களில் இல்லாத அளவில்  இருந்தது என்று இந்திய பொருளாதாரத்தின் கண்காணிப்பு மையம் (மும்பையைச் சார்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் )தெரிவித்துள்ளது. இந்தியாவின் 134 கோடி ஜனத்தொகையில் 3ல் 2 பகுதியினர் 35 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் ஆவர். அது மட்டுமின்றி மாதம்தோறும் 10 லட்சம் பேர் பணிபுரிய தயாராகின்றனர்.

உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம்,போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம்,கல்வி, சுகாதாரம், விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகிய எட்டு முக்கியமான இந்திய தொழில் துறைகளில் 2015 ஆம் ஆண்டு வெறும் 155,000 புதிய வேலைவாய்ப்புகளும்  2016ம் ஆண்டு வெறும் 231,000 வேலைவாய்ப்புகளும் மட்டுமே உருவாக்கப்பட்டதாக இந்திய அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது (2017ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு இன்னும் பதியப்படவில்லை).

தடையில்லா வர்த்தக உடன்படிக்கைக்கு எதிரான இயக்கம்” (Forum against Free Trade Agreement) எனும் ஒரு தொழிலாளர் நலக்குழு “நவ-தாராளவாதத்தின் கீழ் நடைமுறையில் இருந்த வர்த்தக வெளிப்படைத்தன்மை, தனியார்மயமாக்கல்,ஒழுங்குமுறை விதிகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு எந்த விதத்திலும் பலன் அளிக்கவில்லை என்று எழுதியிருந்தனர். தரமான வேலை வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது என்று வேலைநிறுத்தம் செய்யும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. உலக வர்த்தக அமைப்பு (WTO) அல்லது புதுயுக தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) மற்றும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (BITs)ஆகியவற்றின் தடையில்லா வர்த்தக விதிகள் பொருளாதாரத்தின் மீதும் தொழிலாளர்கள் மீதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்தது என்ன?

இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் காரணத்தினாலும் இன்னும் ஓரளவிற்கு “ஜனநாயக நெறிகளை” கடைப்பிடித்து கொண்டிருக்கும் காரணத்தினாலும் வெகு ஜனத்தின் வர்க்க நடவடிக்கைகளும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் என்ன முடிவுக்கு இது வழிவகுக்கின்றது? என்ற கேள்வியே நிலவுகின்றது. முன்னர் குறிப்பிட்டபடி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் நவ-தாராளவாத கொள்கைக்கு எதிராக 1991ம் ஆண்டில் இருந்து இது வரை 17 பொது வேலைநிறுத்தங்கள் நடைபெற்று உள்ளன. உழைக்கும் மக்களிடையே உள்ள தீவிர முற்போக்கு மற்றும் போர்க்குணமிக்க பிரிவுகள் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் கூட்டணியிலிருந்து ஒரு சில சலுகைகளை மட்டுமே பெற தாங்கள் மீண்டும் மீண்டும் பகடைக்காய்களாக உபயோகப்படுத்தப்படுவதை எண்ணி கோபம் அடைந்து உள்ளனர்.

இந்த இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பெரும் திரளானோர் பங்கேற்ற போதிலும்,விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்தபோதிலும் மோடி மற்றும் பா.ஜ.க மீதான வெறுப்பை மட்டும் பதிவு செய்தார்களே தவிர அதற்கான மாற்றை கண்டறியத் தவறிவிட்டனர். சில “பாசிச” வழிமுறைகளைக் கூட கையாள தயங்காத வகுப்புவாத மோடி அரசுக்கான மாற்றாக, “மதச்சார்பற்ற” (என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும்) காங்கிரஸ் உடன் கூட்டணி சேர மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது. வரலாற்றில் கம்யூனிச/ஸ்டாலினிச கட்சிகள் தங்களது அழிவுகரமான திட்டங்களைச் செயல்படுத்த முதலாளித்துவ கட்சிகளின் முற்போக்கு பிரதிநிதிகளிடம் இருந்து ஆதரவு தேட உபயோகித்த குறியீடு தான் மதச்சார்பின்மை.

ஆனால் இம்முறை சித்தாந்த முரண்பாடுகளின் காரணமாக இந்தியாவின் 2 மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இவ்வகை பிளவு குறிப்பாக CPI (M) இல் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவு – யெச்சூரி பிரிவு – மோடி அரசு ஒரு பாசிச அரசு எனும் ஒரு தவறான புரிதலில் உள்ளது. ஆகையால்,அது அனைத்துத் தரப்பினருடனும் தடையற்ற உடன்பாட்டை வலியுறுத்துகிறது. மற்றொரு பிரிவு – கரத் பிரிவு – “மதச்சார்பற்ற ஜனநாயக” கூட்டணிக்குச் சற்றே வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறது வகுப்புவாத பிஜேபிக்கு எதிராக காங்கிரசை தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டு எனும் கருத்தில் உள்ளனர்.

இதில் கசப்பான உண்மை என்னவென்றால் இரண்டு பிரிவினர்களும் அரசியல் சந்தர்ப்பவாதிகள், இவர்கள் முதலாளித்துவ அமைப்பின் மீது கோபத்தில் உள்ள பாட்டாளிகளுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். இரண்டு பிரிவுகளுமே பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் அடிப்படையான மற்றும் ஆழமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க தவறிவிட்டன.

இன்னமும், சிபிஎம் மற்றும் சிபிஐ தலைமைகளுக்கு இந்தப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான தெளிவு இல்லை. இதற்கு ஒரு உதாரணம், மோடி இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம் பெற்ற வெற்றியையும், ஏற்படுத்திய தாக்கத்தையும் மறைக்கும் விதமாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு வேலை மற்றும் கல்வியில் 10 % இடஒதுக்கீடை அறிவித்தார். பா.ஜ.க.வின் வாக்குகளால் மட்டுமின்றி, எதிர்க்கட்சியான சிபிஎம் இன் வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தத் மசோதாவை நிறைவேற்றினர்.

தேர்தல் வருவதற்கு 10, 12 வாரங்களுக்கு முன்னர் போராடும் மக்களின் கவனத்தை திசைதிருப்பப் பா.ஜ.க. செய்யும் சதி தான் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு. இந்த சீர்திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று வைத்துக்கொண்டாலும் இதில் பல ஓட்டைகள் இருக்கின்றன. முதலில் வேலை இழப்பு ஒரு மிக முக்கியமான பிரச்சினை ஆகும். கடந்த ஆண்டு மட்டும் 11 லட்சம் வேலைகள் பறிபோயின. இரண்டாவதாக, இந்த புதிய சட்டம் அரசுத் துறையில் பொருந்துமா அல்லது தனியார் துறையில் பொருந்துமா? எனும் கேள்வி எழுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படவில்லை. 1991 ல் இருந்து முதலீடு செய்யாதது மற்றும் தனியார்மயமாக்கலின் காரணமாக மத்திய-மாநில அரசுகளில் வேலைவாய்ப்புகள் சுருங்கி வருகின்றன.

மிக முக்கியமாக, பா.ஜ.க. மற்றும் ராஷ்ட்ரிய சுவயம்சேவாக் சங்க் (ஆர்.எஸ்.எஸ்) ஆகியவற்றின் பிரிவினையை தூண்டும்  வகுப்புவாத மற்றும் சாதிய வெறியை பற்றி புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் போராடும் மக்கள் இடையே குழப்பத்தையும்,அதிருப்தியையும் உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும். ஆனால் மோடியின் இந்த சமீபத்திய மோசடி நடவடிக்கைக்கு எதிராக ஒரு வெகுஜன எழுச்சியை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இடதுசாரிகள் கற்பனையான வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடியின் இந்த நடவடிக்கையானது,ஒப்பீட்டளவில் செல்வந்தர்களான மேல் சாதி என்று அழைக்கப்படும் சமூக சலுகைகள் பெற்ற பிரிவினருக்கு ஆதரவானது மற்றும்  அரசியலமைப்பிற்கு எதிரானதுமான பிரிவினைவாதமாகும். இந்த இல்லாத வேலைகளுக்குத் தகுதி பெறுவதற்கான அளவுகோல் வருடத்திற்கு ரூ.800,000 வருமானம் மற்றும் 5 ஏக்கர்க்கும் குறைவாக நிலம் வைத்திருப்பது தான். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.66,000 வருவாயை விடக் குறைவாக சம்பாதிக்கக்கூடிய உயர் சாதியை சார்ந்த யாராக இருந்தாலும் இதற்குத் தகுதியுடையவர்கள் என்று சொல்ல வேண்டும். 90 கோடி மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பொழுது இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என்பதைச் சுட்டிக்காட்ட தேவையில்லை.

மோடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய ஒரு தேவை இருக்கும் பொழுது அதைச் செயல்படுத்துவதற்கான தயாரிப்புகளை செய்வதற்குப் பதிலாக, முதலாளித்துவ கட்சிகளுக்கு மாற்றாக முதலாளித்துவ கட்சிகளுடனே கூட்டணி வைத்து ஒரு முதலாளித்துவ அமைப்பையே உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். அதேசமயத்தில், உண்மையில், ஒவ்வொரு பிரிவினரும், பிரிந்திருந்தாலும், பல்வேறு அடையாளங்களின்கீழ் அவர்கள் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர தங்கள் போர்க்குணமிக்க சக்திகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளனர்.

வரலாற்றில் மோடியின் ஆட்சியைக் குப்பைத்தொட்டியில் எரிய மட்டும் அல்லாமல் முதலாளித்துவத்தையும்,நிலப்பிரபுத்துவத்தையும் கடந்த காலமாக மாற்ற மற்றும் ஒரு சோசியலிச மாற்றை உருவாக்க இந்தப் போராட்ட சக்திகளை ஒன்று திரட்டும் தேவை உள்ளது. இவ்வகை ஒருங்கிணைப்பின் மூலம் உருவாக்கப் படும் ஒரு சோசியலிச மாற்று முழு துணைக்கண்டத்திலும் ஒரு சோசியலிச புரட்சியை ஏற்படுத்தும்.

Thank You : www.akhilam.org