புது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்

1,092 . Views .

கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய பார்வைகள். சமூகத்தை மிஞ்சிய சிக்கலான கட்டமைப்பு உலகில் எதுவுமில்லை. அந்த சிக்கலின் பல்வேறு வெளிப்பாடுகளைச் சுருக்கி சிறு விதிகளுக்குள் அடக்கி விட எத்தனிப்பதும் – அல்லது எள்ளி நகையாடுவதும் ஆழமற்ற பார்வையால் மட்டுமே நிகழ்கிறது.

கலைக்கென்று எந்த வரையறையும் கிடையாது. கலை வெறுமனே காலத்தின் பிரதி பலிப்பு மட்டுமல்ல. மனித குலத்தின் எழுச்சி, வீழ்ச்சி, மற்றும் நாகரிகத்தின் முனைகளையும் தொட்டு நிற்பது. ஒரு கலைஞனின் சிறப்பும் முக்கியத்துவமும் சமூகம் சார்ந்த விசயம் எனச் ‘சுருக்கிச்’ சொல்லலாம். ஆனால் அதன் பின்னும் பல்வேறு சிக்கல்கள் உண்டு. சமூக நலன் முதன்மைப்பட்ட சமூகத்திலா நாம் வாழ்கிறோம். எவ்வாறு ஒடுக்கபடுவோருக்கான அரசியல் முடக்கப்படுகிறதோ அதே போல் அவர்கள் சார் கலை வெளிப்பாடுகளும் தவிர்க்கப் படுகின்றன – ஒதுக்கப் படுகின்றன – ஓரங் கட்டப் படுகின்றன. இது தரம் தரமில்லை சார்

பிரச்சினை இல்லை. சமூக – அரசியற் போக்குகள் நகரும் திசைகள் சார்ந்ததாகவும்இருக்கிறது. இந்தக் கொரோனா முடக்க காலப் பகுதியில் வெளிவந்த குப்பைகள் பலதை நாம் பார்த்தோம். வரலாறு சார் அர்த்தத்தில் நாம் குப்பை என்ற சொல்லை இங்கு பாவிக்கிறோம் என்பதறிக. வரலாற்றின் குப்பைத் தொட்டி நோக்கி நகர்பவை இவை. சம காலத்தில் பலமாகவும் வரலாற்றில் நிரந்தரமாகவும் நிற்பதான தோற்றம் தரும் அதிகார மையங்கள் சார்ந்து இந்த

கன்றாவிகள்(கலையாம்) பெருகுகின்றன. நமக்கு முன் வந்த பலத்தை நாம் கட்டுடைப்புச் செய்து குப்பைத் தொட்டிக்கு அனுப்புவது போல் இவற்றுக்கும் ஒருகாலத்தில் திருவிழா நடக்கும். வைத்திய சாலைகள் மற்றும் முதியோர் இருக்கும் இல்லங்கள் என பல இடங்களை கொலைக் களமாக உருவாக்கி வைத்திருப்பது அரசு என்ற சிறு கருத்தைக் கூட இவர்களால் உள்வாங்க முடியவில்லை. பச்சையான அரச பிரச்சாரமாக புளுத்து எழும் குப்பைகள் மட்டுமே இதுவரை பார்த்தோம். அவை ஒட்டு மொத்தமாக மக்கள் மேல் குற்றச் சாட்டும் – அவர்களை ‘திருத்துவதும்’ என அரச பணி செய்கின்றன. ஐக்கிய நாடுகள் வெளியிட்ட பாடலைச் சென்று பாருங்கள். கொரோனா பெயரில் மக்கள் மேல் பொறுப்பு திணித்தும் சீனர்கள் மேல் வெறுப்புப் பரப்பியும் எத்தனை ‘கலை’ வடிவங்கள் சமூக வலைத் தளங்களில் செம்மை போடு போடுகின்றன எனப் பாருங்கள். முதலாளித்துவம் தனது வரலாற்றில் சந்தித்திராத பெரும்

நெருக்கடியை சந்த்தித்து இருக்கும் இந்த நிலையில் – நாம் ஒரு புது உலக ஒழுங்குக்குள் நுழைந்து நிற்கும் நிலையில் ஒரு கலைஞராவது (தமிழில்) இதை உள்வாங்கி உள்ளாரா? சிலர் எழுந்தமானத்துக்கும் தமது சுய தம்பட்டம் அடிக்கவும் அலட்டுவது போல் கலை திட்ட மிட்டு உருவாகுவதோ அல்லது – முழுப் பிரக்ஞைபூர்வ செயற்பாடோ அல்ல. ஆனால் அது கலைஞனின் சமூக தொடர்பை உள்ளடக்கத்தில் காட்டக் கூடியது. 

சமகால முக்கிய புள்ளிகளை சுஜீத்ஜியின் புதிய பாடல் நேரடியாக தொடுகிறது. புது உலககொழுங்கு என்ற தலையங்கமே உங்களை நேரடியாக வரலாற்றுக் கட்டத்துக்குள் இழுத்து வருகிறது. சுஜீத்ஜியின் இந்த சொல்லிசை துள்ளல் வரலாற்றின் சரியான திசையின் பிம்பங்களை பேசுகிறது. பாடல் மட்டுமின்றி அதற்கான கானொளியையும் அவரே செய்துள்ளார். மாட்டு மூத்திரம் குடிப்பதை புனிதமாக காட்டும் அதே மிருகங்கங்கள் மனிதர்களை வேட்டை ஆடுவதை- முள்ளிவாய்க்கால் அவலத்தை என பல்வேறு பிம்பங்களை இணைத்து உங்கள் முன் நிறுத்தி உள்ளார். எந்தப் பக்கம் நீ என்ற கேள்வியை அழுத்தி வைக்கிறது இப்பாடல். மேலே சொல்ல விருப்பமில்லை. நீங்களே கேளுங்கள். 

நான் சமீபத்தில் மீண்டும் மீண்டும் போட்டு பலமுறை கேட்ட ஒரே ஒரு தமிழ் பாடல் இது மட்டும்தான். இதுதான் கலை என சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை . இது வெறும் சொல்லிசை மட்டுமல்ல – வரலாற்றில் நகரும் கலை. குப்பைகள் உலா வந்தளவு இந்த பாடல் ஏன் வலைத் தளங்களில் சுற்றித் திரியவில்லை என்ற கேள்வியை நீங்களே கேளுங்கள். அதன் விடைகான தேடல் உங்களுக்கு பெரும் அரசியற் தெளிவுகளை கொண்டு வந்து சேர்க்கலாம்.

வரலாறு பிற்காலத்தில் தூக்குவதற்கு காத்திருக்காமல் நாம் இப்போதே தூக்குகிறோம். இந்தா பிடியுங்கள். இதையும் கேளுங்கள். இதோடு நிறுத்தாமல் பகிருங்கள். பரப்புங்கள்.

[yotuwp type=”videos” id=”HF9YZkLErwc” ]