இணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம் 

2,668 . Views .

ஐ பி சி தொலைக்காட்சி செவ்விக்கு பின்பு பிரித்தானிய தமிழர் பேரவையைச் சார்ந்த சுதா ஒரு தெளிவை ஏற்படுத்தினார். சுமந்திரன் ஒரு சிறந்த சட்ட வல்லுனரே தவிர அவர் சிறந்த அரசியல் வாதி அல்ல என்பதுதான் தனது நிலைப்பாடு என அவர் விளக்கினர். இதுதான் அவர்தம் முழுமையான நிலைப்பாடு என அவர் செவ்வியில் பேசியபோது தெளிவின்மையாக இருந்தது. தவறாகத்தான் புரிந்து கொண்டு விட்டேன். செவ்வியில் அவர் கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறார். நடேசன் சொன்ன சுமந்திரன் சிறந்த சட்ட வல்லுநர் சிறந்த அரசியல் வாதி அல்ல என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்லும் சுதா பின்பு அவரை சிறந்த அரசியல் வாதி அல்ல என்பதையும் சேர்த்துக் கொள்கிறார். மேற்சொன்னது குழப்பமாக இருக்கிறது அல்லவா. இது சுதா அவராக ஏற்படுத்திய குழப்பம்தான். சுமந்திரனுக்கு இருப்பது சட்ட ரீதியான பார்வை – அவர் செய்வது ஸ்டன்ட் அல்ல. மாறாக பிரக்ஞ்சா பூர்வமாக தனது அரசியல் நிலைப்பாடு இது என அவர் வைக்கிறார் என்பதைத்தான் நடேசன் சொன்னார். சுதாவுக்கு அரசியல் தெரிந்தால்தான் சுமந்திரனுக்கு அரசியல் இருக்கா இல்லையா எனத் தெரியும் என இதனால்தான் நான் சொன்னேன்.

 பலரும் பலருக்கும் போன் அடிச்சு குழம்பி ஒரு மாலைப் பொழுதை இழந்து கொண்டு இருப்பதற்கு இது என்ன அப்படி முக்கிய விவாதம் என சிலர் வியக்கலாம். சமீபத்தில் சுமந்திரன் சிங்களத்தில் வழங்கிய பேட்டி கிளப்பிய விவாதத்தின் தொடர்ச்சி இது.

நாம் முன் வைக்க வரும் புள்ளி இதுதான்: தனிநபர் பேச்சு சுதந்திரம் உட்பட அனைத்து சனநாயக உரிமைகளுக்காகவும் போராடுபவர்கள் நாம். ஒரு அமைப்பின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதுதான் எமது விவாதப் புள்ளி. இன்று சுமந்திரனை விமர்சிப்பவர்களில் பலர் சுமந்திரனின் அரசியல் நிலைபாட்டில் இருந்து மாற்றிய மாற்று நிலைப்பாடு கொண்டவர்கள் இல்லை. அடிக்கிற அலையில் எட்டி இரண்டு அடி போடும் நடவடிக்கையும் நடந்து வருவதை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

இதற்கும் அப்பால் இன்று தமிழ் தலைமைகள் தூக்கி இருக்கும் நிலைப்பாடு என்ன என்பதுதான் எமது கேள்வி. சுமந்திரன் கட்சியில் இருந்து வெளியேற்றப் பட போவது மில்லை – அவரை தேர்தலில் தோற்கடிக்கும் நிலை வரப்போவது சாத்தியமாகவும் தெரியவில்லை. இலங்கை அரசுக்கு எதிர்ப்பு என்ற முதன்மைக் காரணம் ஒன்றால்தான் கூட்டமைப்பு உடையாமல் இருந்து வந்திருக்கிறது. அதை உடைக்க உள்ளே இருந்து அதன் தலைமைகள் வேலை செய்கிறார்கள். வெளியே இருந்து இலங்கை அரசு வேலை செய்கிறது. அதன் சிதறிய அரசியல் நிலப்பாட்டாலும் – போராட்ட அரசியலை முன்னெடுக்காது தமிழர் நலன்களை காக்க வேலை செய்யாமையாலும் அது உடைவது சாத்தியம் என பல ஆண்டுகளாகப் பேசி வருகிறோம். ஆனால் ஒரு மாற்றுப் போராட்ட அரசியல் தளத்தைக் கட்டாமல் கூட்டமைப்பை ( அல்லது தமிழரசுக் கட்சியை) உடைக்கவும் முடியாது – உடைக்கவும் கூடாது எனவும் பேசி வருகிறோம். ஒரு மாற்றைக் கட்டாமல் அமைப்பை உடைப்பது என பேசுவது மக்களை நிராயுதபாணியாக்கும் செயல். கூட்டமைப்பும் அனைத்து மிதவாத சக்திகளும் சிதறிப் போக வேண்டும் எனத்தான் நாம் விரும்புகிறோம். அரசியல் தனித்துவத்தோடும் – தூர நோக்கிய அரசியற் பார்வை மற்றும் கொள்கைகளோடும் சனநாயக அடிப்படையில் இயங்கும் ஒரு அமைப்பு (தளம்) தேவை என்பதை எமது முதன்மைக் கோரிக்கைகளில் ஒன்றாக வைத்து வருகிறோம். அதைக் கட்டுவதுதான் மிதவாத சக்திகளை உடைக்கும். அதை விட்டு இருக்கிற அமைப்பை அடிப்போம் தூக்குவோம் எனப் பேசுவது அடாவடித்தனமும் வெறும் சாகச வாதமும். இந்த சுமந்திரனை தூக்கினால் இன்னொரு சுமந்திரன் வருவார். கூட்டமைப்பு மட்டுமல்ல தீவிர வலதுசாரியக் கட்சிகளில் கூட தலைமை மாறுவதால் அரசியல் மாறி விடுவதில்லை. நாம் கவனம் கொள்வது மாற்று அரசியற் தளத்தை உருவாக்குவது பற்றி. நாம் எதிர்ப்பது சுமந்திரன் என்ற தனி நபரையோ – அல்லது அவரது அடையாளங்களையோ அல்ல. மாறாக அவர் முன்வைக்கும் அரசியலை. அவரது ஒரு தனிப்பட்ட அடையாளத்தை வைத்து வயிற்றின் கீழ் குத்தினால் அதை மறுத்து பேச இருப்பது நாம் மட்டுமே. ஆளை ஆள் போடுவது – போட்டு வைப்பது என குறுகிய நடவடிக்கைகளில் தேறி தெளிந்த போலி ‘தலைகள்’ பல இன்றும் அதையேதான் செய்ய நிற்கின்றன. அவர்களுக்கு கை வந்த கலை அது மட்டுமே. அந்த அடிபாட்டுக்குள் நாம் போகப் போவதில்லை.

இன்று சுமந்திரன் எடுத்திருக்கும் நிலைப்பாடு தற்செயலானதல்ல. அது ஒரு பிரக்ஞ்சா பூர்வ நிலைப்பாடு என நாம் சுட்டிக் காட்டுகிறோம். இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளாத எந்த சக்தியையும் தாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை கோத்த பாய பக்கம் தெளிவாக வைத்துள்ளது. இந்த நிலையை எதிர்கொள்ள தெரியாத கூட்டமைப்பு தானே தன்னை உடைத்துக் கொள்ளும் என தெட்டத் தெளிவாக இந்த விவாதத்துக்கு முன்பிருந்தே சுட்டிக் காட்டி வந்துள்ளோம். தற்போது சுமந்திரனின் சட்ட மூளை வளைந்து போக தாயாராகி விட்டது. ஆனால் இதை வெறும் சுமந்திரன் நிலைப்பாடு என நாம் சுருக்கி விட முடியாது. தமிழரசு கட்சிகளின் பெரும் தலைகள் எல்லாம் இந்த ஒத்தோடும் நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் கோத்தபாயவை சந்திக்க முடியும். இதே சமயம் முன்பு ரணில் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் அது தமிழ் மக்களையும் சர்வதேச சக்திகளையும் ஏமாற்றியதாக இருக்கும் அதை நிறை வேற்ற ஒத்துழைப்பு தருகிறோம் என ஒரு அறிக்கை வேறு. கோத்தபாயாவின் நிலைப்பாடு உலகறிந்த விசயம். இந்த இழுபறிதான் கூட்டமைப்பை உடைக்கும். கோத்தாவின் கட்டுப்பாட்டில் இலங்கை பாரளுமற்றத்துக்குள் இழுபறி செய்ய தம்மை தயார்ப்படுத்தும் வேலையை தமிழரசுக் கட்சி செய்யத் தொடங்கி விட்டது. அதன் ஒரு பக்க விளைவுதான் சுமந்திரனின் செவ்வி. இதைத் தவிர்த்து பேச முடியாது. 

சுமந்திரனின் தற்போதைய பேச்சு வெளிநாட்டில் செய்த வேலை எல்லாத்தையும் உடைத்து விடும் செயல் என டெலோ அமைப்பு சார் சாம் தெரிவித்தார். இலங்கை இறையாண்மை மீறாமை  – மற்றும் புலிகள் பயங்கரவாதிகள் என்பதை ஒத்துக் கொள்ளும் அடிப்படையில் மட்டுமே நீங்கள் சொல்லும் அனைத்து ‘சர்வதேச’ சக்திகளும் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததும் – தேர்வுகள் பற்றி படங்காட்டுவது இரகசியமான ஒன்றல்ல. இது சுமந்திரனுக்கு தெரியும். உங்களுக்கு தெரியவில்லையா?

இறுதியாக ஒரு விடயத்தை மேலும் வலியுறுத்திச் சொல்ல வேண்டி உள்ளது. சிங்கள மக்கள் எமது எதிரிகள் அல்ல. சிங்கள தேசிய அடையாளங்கள் அனைத்தையும் கடுமையாக எதிர்க்கும் பல சிங்கள தொழிலாளர் – இளையோர் அனைவரையும் எமது நட்பு சக்திகளாக கருதி அவர்களையும் எமது போராட்டத்தில் இணைப்பதுதான் எமது நோக்கமும் நடைமுறையும். இனவாதத்தை எதிர்க்க நாம் இன- மத – சாதிய வாதங்களுக்குள் விழுந்து விட முடியாது. அது இலங்கை அரசைத்தான் மேலும் ஆயுத மயப்படுத்தும்.