தொண்டமான் மரணமும். வறுமையில் நிகழ்ந்த மரணங்களும்.

1,841 . Views .

ஆறுமுகம் தொண்டமான் நேற்று 26-5-2020 திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக, இலங்கை தலங்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  காலமானார்.

1964.05.29 ஆம் திகதி பிறந்த ஆறுமுகம் தொண்டமான் 1994ல் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவானவர். அதன் பின் 1999 ல் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரானார். அத்தோடு 2000, 2004, 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் அமைச்சர் பதவிகளில் இருந்துள்ளார்.

இன்று அவருடைய இயற்கை மரணத்தை பற்றி நாம் இங்கு எழுத முற்படவில்லை. அவருடைய அரசியல் பாதையில் மலையக மக்கள் சந்தித்த இழப்புக்களை பற்றி சுட்ட வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது. 

யார் இந்த தொண்டமான்கள்? 

ஆரம்ப காலங்களில் மலையகத் தோட்ட தொழிலாளர்களின் குரலென அரசியலில் காலடி வைத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான். இலங்கை இந்திய காங்கிரஸின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13, 1939-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  (இக்கட்சி 1950ல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது). அவர் மறைந்த பின் பேரன் ஆறுமுகம் தொண்டமான் பதவியேற்று அரசியல் பயனத்தை மேற்கொண்டார். இவருடைய மரணத்தின் பின்பு   உடனடியாக பதவியை தக்க வைக்க ஆறுமுகம் தொண்டமானின் மகனான ஜீவன் தொண்டமான் பதவியேற்றார். 

இவ்வாறு ஒரு குடும்பத்தின் சொத்தாகா மாறி விட்டது தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லப்பட்ட கட்சி. இந்த குடும்ப அரசியலால் மலையக தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முன்னேற்றப் பட்டதா? தொண்டமான் குடும்ப சொத்துக்கள் மட்டுமே வேகமாக வளர்ச்சி கண்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டடுதான் இருந்தனர். அந்த போராட்டங்களின் வெற்றிக்கு தடையாகவும் இருந்திருக்கிறது தொண்டமான் குடும்பம். மலையக மக்களின் ஊதிய உயர்வு பற்றி சமீபத்தில் நாம் எழுதிய கட்டுரையை பார்க்க.(மலையக மக்களின் 1000 ரூபா கோரிக்கையை சுரண்டிய முதலாளிகள்)

தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்கள் எதிர் நோக்கும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.  அட்டைக்கடி, பாம்புக்கடி, குளவி கொட்டு ,  தேனீ கொட்டு, சிறுத்தை பயம்.  இவற்றையெல்லாம் தாண்டி நாள் முழுக்க வேலை செய்து பெறுவதோ சிறுபிடி காசு.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் புணரமைக்கப்படாத ஓட்டை வீடுகள். குளிர், மழை, அதையும் தாண்டி சரியான போக்குவரத்துக்கள் இல்லை. மண்சரிவுகள், பாடசாலை மாணவர்கள் சிரமப்படும் போக்குவரத்து பாதைகள் – கல்வி கூட வசதி இன்மை என பல குறைபாடுகள். 

இத்தகைய கொடூரங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கான திட்டமிடலை வைக்கும்  தொண்டமான்களாக இவர்கள் இருக்கவில்லை. ஆனால் தொண்டமான்களுக்கு மட்டும் சொகுசான வாழ்க்கை கிடைத்தது எவ்வாறு? மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகளாகவும் – முதலாளிதத்துவ அதிகாரத்துக்கு விசுவாசிகளாகவும் இருந்துதான் தொண்டமான் குடும்பம் வளர்ச்சி கண்டது என்பதை நாம் ஒழித்து பேச முடியாது. 

இவ்வாறு இருக்கையில் பல போராட்டங்கள் தொழிலாளர்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டங்களின்  மூலமாக சிறு  சிறு உரிமைகள் வெல்லப்பட்டதே தவிர தொண்டமான்கள் தலைமையிலான நடவடிக்கை மூலம் பெறப்பட்டவை அல்ல. தொண்டமான் தலைமையில்தான் உரிமைகள் வெல்வது நடந்ததென சொல்லும் அரசியல்வாதிகள் நலன் சார்ந்து வேலை செய்யும் மீடியாக்களையும் விமர்சிக்க வேண்டிய கடமை பாதிக்கபட்ட மக்களுக்கு இருக்கின்றது. தேர்தல் வெற்றி நோக்கத்துக்காக வீச எறியப்பட்ட சலுகலைகள் பல தேர்தல் முடிந்த கையுடன் பறிக்கப் பட்டு இருக்கின்றன. வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக அரச காசில் சீமெந்து ரோட்டு போட்டு விட்டு சி.டபுள்யு.சி என முத்திரை குத்தி விடச் செய்தது போன்ற வரலாற்றைத் தான் இவர்கள் சொந்தம் கொண்டாட முடியும். கடந்த வருடத்திலிருந்து மக்கள் கேட்டு போராடிக் கொண்டிருக்கும்  குறைந்தபட்சம் 1000 ரூபா ஊதியத்தைக்கூட தற்போது மறைவான ஆறுமுகம் தொண்டமானால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இதை வழங்குவதாக பழைய – மற்றும் தற்போதைய அரசுகள் வாக்குறுதி வழங்கி இருந்தன. அப்படி இருந்தும் அதை நடத்தி வைக்க கூடிய அக்கறை இவர் தம் கட்சிக்கு இருக்கவில்லை. மக்கள் முன் ஒரு பேச்சு – அரசுக்கும் முழு ஆதரவு என்ற தமது பாரம்பரியத்தை தொடர்ந்து காத்து வருகிறார்கள். 

வருடாவருடம் தேயிலை உற்பத்திக்கான இலாபம் பெருகி கொண்டிருக்கின்றது. அண்மையில் கொரோனா தொற்றுக் காலங்களில் தேயிலைக்கான  விலை அதிகரித்திருக்கின்றது. கடந்த வருடம் இலங்கை ரூபா  85 க்கு விற்கப்பட்ட பச்சைத் தேயிலை தற்போது 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அத்தோடு ரூபாய் 300-500 விற்கப்படும் ஒரு கிலோ தேயிலைத்தூள் 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மற்றும் தரமான BOB ரகம் என அழைக்கப்படும் தேயிலை  2600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இலங்கையிலிருந்து வருடத்திற்கு மட்டும் சுமார் 340 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால்  1.5  பில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கின்றன. 

இவ்வாறான இலாபத்திலும், கொரோனா காலங்களில் வெறுமனமே 5000 ரூபா  மட்டும்  வேலைக்கு செல்ல முடியாதவர்களுக்கு வழங்கப்படுகிறது.  

தொடர்ந்தும் ஊதியத்திற்கான மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த   மக்கள் போராட்டங்களை கட்ட வேண்டும். தொழிலாளர்களுக்கான நலன்களை முதன்மைப் படுத்தும் போராட்ட குணம் மிக்க யூனியன்களை கட்ட வேண்டும். ஒடுக்கப்படும் மக்களுக்காகக் பாடுபடுவதாக கூறும் அனைவரும் இதற்காக ஒன்றுபட வேண்டும். 

எமக்கான உரிமைகளை தொண்டமான்களால் எடுத்து தர முடியாது. வறுமையால் மரணங்களும் தொண்டமான் ஆட்சி அதிகாரத்தோடு இருந்த காலங்களில் நடந்திருக்கின்றன. தொழிலாளர்களின் வேலைக்கேற்ப ஊதியத்தை வாங்கிக்கொடுக்க முடியாத தொண்டமான்களை நாம் கேள்வி கேட்பதில் தவறில்லை.

எந்த ஒரு சாவையும் சரியென வாதிடுபவர்கள் இல்லை நாம். தொண்டமான் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  ஆனால் இன்றும் லயன்களில் வாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள்தான் எமது கண் முன் நிற்கிறார்கள். தொண்டமானின் திடீர் மரணம் இந்த மக்களின் பாடுகளை மறைக்க முடியாது. அந்த துன்பங்களுக்கு ஐவரும் காரணமாக இருந்தார் என்ற உண்மையும் ஆறாது. அனுதாப அலையில் மீண்டும் இந்த அதிகார கட்சி தன்னை பலப்படுத்தி கொள்வதை நாம் அனுமதிக்க கூடாது. அக்கறை உள்ளவர்கள் ஒரு மாற்று அரசியல் தளத்தை கட்ட முன் வர வேண்டும். உண்டபடுபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். 

மதன் 

Mathan@tamilsolidarity.org