குடும்ப அரசியலின் பிடியில் இலங்கை. 

1,316 . Views .

ராஜபக்ச குடும்பம், இலங்கை அரசியல் அதிகாரத்தை முற்று முழுதாக தம் வசம் வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். கடத்த பொதுத் தேர்தலுக்கு முன்பே இந்த வேலையை அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். சனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் குவித்து வைத்திருக்கும் அதிகாரங்களை கோத்தபாய, மகிந்த சகோதரர் கைப்பற்றியது மட்டுமின்றி பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய முக்கிய அமைச்சுக்களையும் தம் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர். இன்னுமொரு சகோதரர் சாமல் மற்றும் மகிந்தவின் மகன் நாமல் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர். வரலாற்றில் முதல் தடவையாக எந்த ஒரு அமைச்சர் பதவியும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி அரசின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் உறவினர்கள் மற்றும் நெருக்கமான விசுவாசிகள் நிரம்பி வழியத் தொடங்கி இருக்கின்றனர்.

பொதுத் தேர்தலுக்கு முன்பே ராஜபக்ச குடும்ப விசுவாசிகள் மற்றும் விசுவாசமான இராணுவ அதிகாரிகள் அரச மற்றும் மக்கள் சேவை நிறுவனங்களுக்கு நியமிக்க தொடங்கி விட்டார் கோட்டபாய. ஐந்து வயது குழந்தை உட்பட பலரை கொலை செய்த குற்றத்துக்காக சிறையில் இருந்த சார்ஜன் சுனில் ரத்னாயகே விடுதலை செய்யப் பட்டது மட்டுமின்றி ஏனைய போர் குற்றம் சுமத்தப்பட்ட சவெந்திர சில்வா போன்றவர்களும் அதி உயர் பதிவிகள் வழங்கப் பட்டு கௌரவிக்கப் பட்டு வருகின்றனர். கோரக் கொலைகளில் ஈடுபட்டதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் 58 மற்றும்  53 ஆகிய இராணுவப் பிரிவுகளின் குற்றவாளிகள் பலரும் பல்வேறு முக்கிய பதவிகள் பெற்று வருவதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.  

இராணுவ மயப்படுத்தல் மற்றும் அதிகாரத்தை குவித்தல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக முன் வைக்கப் படுவதுதான் இருபதாவது சட்டத் திருத்தல். இதற்கு முந்திய ஆட்சியின் போது முன் வைக்கப்பட்ட சட்ட மாற்று நடவடிகைகள் கூட தமிழ் மக்கள் மட்டுமின்றி இலங்கையில் வாழும் எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உவப்பானதல்ல. ஆனால் அதைக்கூட கடுமையாக எதிர்த்தவர்கள் ராஜபக்ச குடும்பம். அவர்கள் பாராளுமன்றத்துக்கு வழங்கிய திட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் – மற்றும் அறிக்கைகளில் பேசியது என வெளிப்படையாகவே இது பற்றி பேசி வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என சொல்லிக் கொண்டு இயங்கும் பலர் இந்த உண்மையை தேர்தல் காலத்தில் மறைத்து விட்டார்கள். பழைய அரசின் முன்னெடுப்புக்களின் தொடர்ச்சியாகத்தான் கோட்டபாயாவின் சட்ட திருத்தல்களும் இருக்கும் என்ற நம்பிக்கையை சிலர் வழங்கினர். உதாரணமாக சுமந்திரன் தமிழ் மக்கள் சார்பான விசயங்களை எதிர்பார்த்த-  போலி நம்பிக்கையை முன் வைத்தார். தற்போது முன் வைக்கப் படும் சட்டத் திருத்தம் மற்றும் அதை தொடர்ந்து வரும் நடவடிக்கைகள் எல்லா சிறுபான்மை மக்களினதும் சனநாயக உரிமைகளை மற்றும் அவர்தம் அரசியற் பிரதிநிதித்துவத்தை அடித்து நொறுக்கப் போகிறது.  

தற்போது முன்வைக்கப் படும் சட்ட திருத்த ஆலோசனைப்படி சனாதிபதி சட்டத்துக்கு அப்பாற்பட்ட – மற்றும் பாராளுமற்றத்துக்கு அப்பாற்ப்பட்ட அதி கூடிய அதிகாரம் உடையவர் ஆகி விடுவார். சனாதிபதி என்ன குற்றம் செய்தாலும் அவரை சட்டத்தால் கேள்வி கேட்க முடியாது. தேர்தல் முடிந்து ஒரு வருடத்தின் பின் சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும். பிரதமரை பதவி விலக்கி தானே ஒருவரை நியமிக்க முடியும். மந்திரி சபையையும் தானே நியமிக்க முடியும். எதிர் கட்சி தலைவரை நீக்க முடியும். புதிய சட்டங்களை மிக விரைவில் அமுலுக்கு கொண்டு வர முடியும். புதிய சட்டத்தை கொண்டுவர நீண்ட பாரளுமற்ற விவாதமோ – அல்லது மக்களிடம் விவாதம் அலலது கருத்து கணிப்பு செய்வதோ இனிமேல் தேவை இல்லை. தேர்தல் கமிசன் அதிகாரிகள் முதற்கொண்டு சட்ட மா அதிபர் உட்பட பல பதிவிகள் சனாதிபதி நியமனம் மூலமே நிரப்பப்படும்.  தேவை ஏற்படின் சனாதிபதியும் பிரதமரும் சேர்ந்து அனைத்து அதிகாரங்களையும் தமது பக்கம் குவிக்க முடியும். அது மட்டுமின்றி எதிர் கட்சி தலைவர் உட்பட தமக்கு எதிரானவர்களையும் அவர்கள் நீக்க முடியும். கேள்விக்கு அப்பாற்ப்பட்ட அதிகாரத்தைக் குவிக்கும் வழிமுறை திறந்து விடப்பட்டுள்ளது.  

பாடாசாலை அதிபர் பதவி உட்பட பல்வேறு மக்கள் நிறுவனங்கள் மற்றும் நடவடிக்கைளில் இராணுவத்தை புகுத்துவது முடுக்கி விடப்பட்டுள்ளது. கோவிட்-19 நிலவரத்தை கையாளும் பொறுப்பு யுத்தக் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவத்தினர் கைவசம் விடப்பட்டதும் நாமறிவோம். கோவிட்-19 நிலவரத்தைப் பாவித்து இராணுவத்தினர் மேல் கௌரவத்தை ஏற்படுத்தும் பிரச்சாரம் நடந்ததும் அறிவோம். இதில் இழுபட்டுச் சென்ற பல்வேறு தமிழ் மிதவாதிகள் பலரும் தாம் எதை ஊக்கிவிக்கிறோம் என அன்று அறிந்திருக்கவில்லை. போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட இலவச சுகாதார சேவை மற்றும் பல்வேறு அரச துறை – கடும் உழைப்பை வழங்கிய அரச ஊழியர்கள் பலர் என பல்வேறு காரணங்கள்தான் கோவிட்-19 பாதிப்பை குறைத்தது. ஆனால் அது கோட்டபாய அரசின் கெட்டித்தனம் என பல மக்கள் நம்பவைக்கப் பட்டனர். மக்கள் ஐம்பது வீத பொறுப்பும் அரசு ஐம்பது வீத பொறுப்பும் எடுக்க வேண்டும் என பேசியோரும் உள்ளனர். அரசு தன்னால் ஆனதைச் செய்கின்றது எனவும் சொன்ன இவர்கள் மொத்தத்தில் மக்கள் மேல் பெரும்பான்மை பொறுப்பை இறக்கினர். ஒரு சர்வாதிகார சூழ்நிலை வருவதற்கும் தாமும்தான் காரணம் என்பதை இத்தகைய மிதவாதிகள் ஒருபோது உணரவோ ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை.

கடுமையான முயற்சிகளின் விளைவாக இராஜபக்ச 2015ல் இராஜபக்ச தோற்கடிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர்கள் நிலை கொண்டிருத்த இனவாத அரசியல் உடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ராஜபக்ச பூச்சாண்டி காட்டி மக்களை தனது பக்கம் வைத்திருக்க முடியும் என்ற கற்பனையில் இயங்கி வந்தார் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. ராஜபக்சவின் சகோதரர் சாமல் இரகசியமாக ஓடித் தப்ப இருந்த நிலவரம் மாறி இந்த குற்றவாளிகள் தமது நிலையை மீண்டும் பலப்படுத்த அனுமதிக்கப் பட்டனர். பத்து வீதக் காரன் என பெயரெடுத்த ஊழல் புகழ் சாமல் இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்( அமெரிக்கா, இலங்கை). இரட்டை குடி உரிமை இருப்பவர்கள் மந்திரியாக – ஏன் சனாதிபதியாக கூட இருக்கலாம் என சட்டம் மாற்றம் முன்வைக்கப் படுவது இவருக்காகத்தான் எனவும் பேசப்படுகிறது. அமெரிக்க குடிமகனான கோட்டபாய தேர்தலுக்கு முன் தனது அமெரிக்க குடி உரிமையை ரத்து செய்து விட்டதாக அறிவித்திருந்தார். இதற்கான சரியான ஆதாரங்கள் இன்றுவரை முன்வைக்கப் படவில்லை என்பதை பல்வேறு ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.  

தமது குடும்ப நலனுக்கு ஆதரவான – தமது செல்வம் மற்றும் அதிகாரத்தைப் பெருக்கும் அனைத்தையும் செய்ய ராஜபக்ச குடும்பம் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்பது தெளிவு. ஆனால் குடும்ப நலன் என்று மட்டும் அவர்தம் நடவடிக்கைகளை இலகுவாக பார்ப்பது தவறு. பெரும்பான்மை சிங்கள இனவாத கட்டுப்பாட்டை நிறுவுவது அவர்கள் தலையாய நோக்கமாக இருக்கிறது. சிறுபான்மை கட்சிகளின் அரசியற் பலத்தை உடைப்பது அதில் ஒரு பகுதி. தாம் உருவாக்கி இருக்கும் குடும்ப கட்சிக்குள் மலையக மற்றும் கிழக்கு அரசியற் பிரதிநிதித்துவத்தை அவர்கள் உள்வாங்க நடவடிக்கை எடுத்து வருவதை கடந்த தேர்தலில் பார்த்தோம். அதே போல் தேர்ந்தெடுக்க படாத பௌத்த பிக்குகள் சங்கத்துக்கு அரசியல் அதிகாரம் வழங்கப் படுவதும் விரைவில் நடக்கும் சாத்தியம் உள்ளது. பதின் மூன்றாம் திருத்த சட்டம் உற்பட வெவ்வேறு சிறு உரிமைகளை வழங்கும் சட்டங்கள் அனைத்தும் மாற்றத்துக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் உள்ளது. இந்த நிலை வரும் என்று தெரிந்தும் அதற்கான தயாரிப்பு செய்யும் தலைமை தமிழ் மக்களிடம், முஸ்லிம் மக்களிடம் இருக்கவில்லை. அத்தகைய போர்குணம் மிக்க தலைமைகள் இனித்தான் உருவாக வேண்டும்.