கொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்

Anger at replacement of hated SARS police unit by Special Weapons and Tactics (Swat) units
1,084 . Views .

அக்டோபர் மாதம் முதல் நைஜீரிய மக்கள் சார்ஸ் (SARS- Special Anti Robbery Squad) என அழைக்கப்படும் சிறப்பு கொள்ளை எதிர்ப்புப் படைக்கெதிராக போராடி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டு நைஜீரிய அரசினால் உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பான சார்ஸ், பல வருடங்களாக கொலை கொள்ளை வழிப்பறி என பல அட்டுழியங்களை செய்து வந்துள்ளன. மக்களைப்பாதுகாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இப் பொலிஸ் படை அமைப்பானது தம் நோக்கத்திலிருந்து முற்றாக விலகி மக்களை அச்சுறுத்தும் ஒரு அமைப்பாக வளர்ந்து வந்துள்ளது. இவ்வமைப்பின் கொடுமைகளை பொறுக்க முடியாத மக்கள் தற்பொழுது வீதிகளில் இறங்கி மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த கோபம் இளைஞர் ஒருவரின் கொலையோடு வெடித்துக் கிளம்பியது. இளைஞர் ஒருவரைக் கைது செய்து பின்னர் அவ் இளைஞனை சுட்டுத் தள்ளிவிட்டு அவரின் காரினையும் திருடிக் கொண்டு சென்ற சார்ஸ் அமைப்பிலுள்ளவர்களின் செயலானது நைஜீரிய மக்களை மிகுந்த கோபத்திற்கு உள்ளாகியது. இக்காணொளி மக்கள் மத்தியில் வைரலாகியதைத்தொடர்ந்து மிகப் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. அண்மையில் ஜார்ஜ் பிளாயிட் எனப்படும் அமெரிக்கரின் கழுத்தை நெரித்து கொலை செய்த காணொளி மக்கள் மத்தியில் பரவி எவ்வாறு மிகப் பெரும் போராட்ட்டம் அமெரிக்காவில் வெடித்ததோ அதே போல் இவ் இளைஞனின் காணொளி நைஜீரிய மக்களை கிளர்ந்தெழச்செய்தது.

சார்ஸ் அமைப்பிலுள்ள போலீசார் அப்பாவி பொது மக்களின் மீது பொய்க் குற்றம் சுமத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொலை செய்தல் என பல நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ஒருவர் கார், கைமணிக்கூடு, தொலைபேசி, லேப்டாப் போன்றன வைத்திருந்தால் அவர்களை யாஹூ பாய்ஸ் (Yahoo Boys) என முத்திரை குத்தும் சார்ஸ் அமைப்பினர் அவர்களிடமிருந்து அவற்றை பிடிங்கி கொள்கின்றனர் .யாஹூ பாய்ஸ் என்றால் சார்ஸ் அமைப்பினரைப் பொறுத்தவரை இணைய திருட்டில் இடுபடுபவர் என்று பொருள்.

ஆட்கடத்தல், ஆயுதக் கொள்ளை, சித்திரவதை, சட்டவிரோத உடல் உறுப்பு வர்த்தகம், வீடு புகுந்து கொள்ளையடித்தல், மக்களை காணாமல் போகச் செய்தல் எனப் பல ஜனநாயக விரோத கடமைகளிள் ஈடுபட்டமையாலேயே மக்கள் இன்று அவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர். இலங்கையின் விசேட அதிரடிப் படையினர் யுத்த காலத்தில் எவ்வாறு மக்களுக்கு எதிராக செயற்பட்டர்களோ அதே போன்ற நடவடிக்கைகளையே சார்ஸ் உறுப்பினர்களும் இன்று மேற்கொள்கின்றனர்.

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் என்னுமிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்காக மிருகத்தனமாக செயற்பட்டது நைஜீரிய ராணுவம். கண்ணீர்புகை, நீர் பீரங்கி என்பன பயன்படுத்தப்பட்டதுடன் பலரை சுட்டும் கொன்றுள்ளது நைஜீரிய அரசு. 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்ட போதும், மேலும் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சுட்டுக் கொள்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இறந்த உடல்களை அப்புறப்படுதியும், சம்பந்தப்ப்பட்ட இடத்திலுள்ள சீசீடீவி காமெராக்களை செயலிழக்கச்செய்தும் இச்சம்பவத்தை மறைக்க முயன்றது நைஜீரிய ராணுவம். அத்தோடு நில்லாமல் அரை குறை காயங்களுடன் தப்பி ஓடியவர்களின் மூலம் உண்மை நிலமை கசிந்து விடும் என்பதனால் அவர்களைக் கொலை செய்வதற்கு வலை வீசி தேடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகவிருக்கும் ஜனாதிபதி புஹாரி யின் நடைவடிக்கையானது மக்களை மிகுந்த ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது. மேலும் மக்களின் போராட்டத்தைக் கண்டு கதிகலங்கிய நைஜீரிய அரசு சார்ஸ் கலைக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது. எனினும் அதற்குப் பதிலாக ஸ்வாட் – SWAT எனப்படும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு அதிலுள்ள காவல்துறையினர் இதில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவித்திருந்தது. பழைய கள்ளை புதிய போத்தலில் தரும் நைஜீரிய அரசின் இவ் விளையாட்டானது மக்களை இன்னும் கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. சார்ஸ் கலைக்கப்பட்டு விட்டதாக நைஜீரிய அரசு கூறினாலும் மக்கள் அதனை நம்பி போராட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை. புதிய அரசியல் சீர்திருத்தம் ஒன்றை வேண்டியே மக்கள் தற்போது அப்போராட்டத்தை தொடர்கின்றனர்.

Leaflet issued by YRC on October 14

சார்ஸ் என்னும் போலீஸ் படைக்கு எதிராக பலமுறை போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டாலும் இம்முறை போராட்டம் வீரியமடைவதற்க்கு முக்கிய காரணம் நைஜீரிய நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளாகும். வேலையில்லாப்பிரச்சனை, ஊழல், மின்சாரமின்மை, மோசமான சாலைகள் போன்றன அரசின் மீதான மக்களின் அதிருப்திக்குரிய சில காரணங்களாகும். தொடர்ச்சியான மின்சாரம் வழங்குவதற்கு நைஜீரியாவிற்கு இன்னும் நாற்பத்தியொரு ஆண்டுகள் எடுக்கும் என செனட் சபை அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது தவிர அதிகரிக்கும் பணவீக்கத்தால் உணவுப்பொருட்களின் விலை வருடந்தம் 17 வீதத்தால் அதிகரிக்கின்றது. இது தவிர அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வோருக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படாமை, மக்களுக்கான முறையான அரச கொடுபனவுகள் கிடைக்காமை போன்ற காரணிகளால் மக்கள் சாதாரண வாழ்க்கையைக் கூட வாழ முடியாத நிலையிலேயே காணப்படுகின்றனர்

2௦5 மில்லியன் சனத்தொகை கொண்ட நைஜீரியாவின் 1௦2 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். அதாவது கிட்டத்தட்ட ஐம்பது வீதமான மக்கள் வறுமையுடன் வாழுகின்றனர். அதிலும் குறிப்பாக 15-34 வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை நாற்பது மில்லியன் ஆகவும் அதில் வேலை வாய்ப்புள்ளோரின் எண்ணிக்கை வெறும் 14.7 மில்லியன் ஆகவுமே காணப்படுகின்றது. நாட்டின் பெருந்தொகையான மக்கள் வேலைவாய்ப்பில்லாதவர்களாகவும் மிகுந்த ஏழ்மை நிலையிலுமே காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்று அறுபது ஆண்டுகள் ஆகியும் நைஜீரியா இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கின்றது. மாற்றத்தைக் கொண்டுவருவேன் என வாக்குறுதி அளித்து 2௦15 இல் பதவிக்கு வந்த புஹாரி மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் அதிகார வர்க்கத்துக்கு சார்பாகவே இயங்கி வருகிறார். இதேபோல் தான் 2௦15 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனாவும் நல்லாட்சியை வழங்குவேன், மாற்றத்தைக் கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்து இலங்கையில் ஜனாதிபதி ஆகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து அதிகார சக்திகளும் பதவியைக் கைப்பற்ற ஒரே விதமான பொய்களையே உலகம் முழுவதும் கூறுகின்றன. மைத்திரி முதல் புஹாரி வரை அனைவரும் சொல்லி வைத்தாற்போல் மாற்றத்தைக் கொண்டு வரமால் இருந்ததை விட இன்னும் கீழான நிலைமைக்கே நாட்டை கொண்டு சென்றனர்.

2௦16 – 2௦2௦ வரையான காலப்பகுதியில் பிரித்தானிய அரசும் நைஜீரியாவின் சார்ஸ் படைக்கு பயிற்சி மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை வழங்கி உதவியும் செய்துள்ளதாக தெரிய வருகிறது. அதிலும் குறிப்பாக பிரித்தானியாவால் நைஜீரிய காவல்துறைக்கு வழங்கப்பட்ட வானொலி உபகரணங்கள் சார்ஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியா வழங்கிய உதவியானது மறைமுகமாக மக்களை துன்புறுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நைஜீரிய காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு பிரித்தானியா அரசு வழங்கிய அனைத்து பயிற்சிகளையும் மறு ஆய்வு செய்யுமாறு ஆயுத வர்த்தகத்திற்கு எதிராக இயங்கும் அமைப்பான CAAT (Campaign Against Arms Trade) கோரிக்கை விடுத்துள்ளது.

[yotuwp type=”videos” id=”0MwlFIPy0OI” ]

பிரித்தானியா உள்ளிட்ட உலகின் பல இடங்களில் நைஜீரிய அரசின் அடக்குமுறையைக் கண்டித்து பல ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன. மக்கள் நலனை பற்றிச் சிந்திக்காது அதிகாரத்தை மட்டும் நோக்காகக் கொண்டு இயங்கும் புஹாரியின் தற்போதைய அரசு வீழ்த்தப்படவேண்டும். அதற்காக மக்கள் DSM (சனநாயக சோஷலிச இயக்கம்) போன்ற மக்கள் நலனுக்காக இயங்கும் அமைப்புகளுடன் சேர்ந்து பலமான அணியாகத் திரண்டு தமக்கான உரிமையை வென்றெடுக்கவேண்டும். DSM பல சர்வதேச நாடுகளுடன் தமது தொடர்புகளைக் கொண்டிருப்பதால் நைஜீரிய மக்களின் பிரச்சினை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் போராட்டம் சர்வதேசமயப்படவைக்கும் முயற்சிகள் நிகழ்கிறது. மக்கள் புஹாரி அரசுக்கு எதிராக ஒரு அணியாகத் திரண்டாலே இது சாத்தியமாகக்கூடும். இந்த போராட்டத்துக்கான ஆதரவை நாமும் வழங்க வேண்டும்.

சு.கஜமுகன் 

gajan2௦5௦@yahoo.com