தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரேமி கோர்பின் அவர்கள் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றார். கோர்பின் தலைமையில் இருந்த போது anti-semitism குற்றச்சாட்டுக்களை உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என்று தற்போது வெளியாகிய சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான கமிட்டியின் அறிக்கை கூறி இருந்தது. அதை தொடர்ந்து இந்த நீக்கம் நடைபெற்று இருக்கின்றது. முன்னாள் தலைவர் anti- semitic என்று கண்டு பிடிக்கப்பட்ட இந்த நாள் தொழிற்கட்சியின் கருப்பு நாள் என்று சொல்லியிருக்கின்றார் தற்போதைய தொழிற்கட்சி தலைவர் கீர் ஸ்டாமர்.
Anti-semitism மாத்திரமல்ல எல்லாவிதமான அடக்குமுறைகளும் எதிர்க்கப்பட வேண்டும். தனது வாழ்நாள் முழுவதும் அடக்குமுறைகளுக்கும், இனவாதத்திக்கும் எதிராக போராடி அதற்காக சிறை செல்லவும் தயாராக இருந்த கோர்பின் எவ்வாறு anti-semitic ஆனார்? 2017ல் தொழிலாளர் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர் மக்கள் சார்ந்த சில கொள்கை முடிவுகளை எடுத்தார். குறைந்தபட்ச தேசிய சம்பளம் மணித்தியாலத்திற்கு £10 ஆக உயர வேண்டும் என கோரிக்கையை ஏற்றுக் கொண்டவர் ஜெரமி. அனைவருக்கும் இலவச கல்வி, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வீட்டு வசதிகளை அதிகரித்தல் என்பன ஜெரமி முன்வைத்த கொள்கைகளில் சில. இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. ஆனால் இவற்றுக்கு தொழிலாளர் கட்சிக்குள் இருந்த வலதுசாரிகள் மத்தியில் ஆதரவு இருக்கவில்லை. தொழிலாளர் கட்சி ஒரு பெயரில் இயங்கும் இரு கட்சியாகத்தான் இயங்கி வந்தது. கோர்பினின் இடதுசாரிக் கொள்கைகள் எந்த வகையிலும் அதிகாரம் பெற்று விடக்கூடாது என்பதில் வலதுசாரி டோரி கட்சியிலும் பார்க்க தொழிலாளர் கட்சிக்குள் தனிக்கட்சியாக இயங்கிய சிவப்பு டோரிக்கள் ஒற்றைக்காலில் நின்றார்கள். கோர்பினை தேற்கடிக்க அவர் பிரிவினையாளர், யூதர்களுக்கு எதிரானவர் என்று பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசினார்கள். கடந்த தேர்தலில் இந்த சிவப்பு டோரிக்களல் தொழிற்கட்சி தோல்வியடைந்தாலும் 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2019ஆம் ஆண்டு தேர்தலில் அதிகூடிய வாக்குக்களை பெற்றிருந்தது கட்சி. ஐரோப்பாவிலேயே மிக அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் இருந்தது. ஆயினும் தேர்தல் தோல்வி காரணமாக கோர்பின் பதவி விலகினார். அடுத்த தலைவராக வலது சாரிகள் மற்றும் லிபரல்கள் சார்பாக கீர் ஸ்டாமர் தெரிவு செய்யப்பட்டார்.தனது முதல் வேலை பிளவுபட்ட கட்சியை ஒன்றிணைப்பது என தெரிவித்த கீர் ஸ்டாமர், கட்சிக்குள் இருக்கும் இடதுசாரிகளை வெளியேற்றுவதன் மூலம் அந்தக் கட்சியை “ஒன்றாக்கிக்” கொண்டிருக்கிறார்.
கோர்பின் கொள்கைகளின் எச்ச சொச்சங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என ரெட் டோரிக்கள் விரும்புகின்றனர். அதற்கு பயன்பட்டது தான் இந்த 130 பக்கங்களை கொண்ட anti-semitism அறிக்கை. அந்த அறிக்கையின் பெரும் பகுதி புனையப்பட்டு இருக்கின்றது. கோர்பினை குற்றவாளி ஆக்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே எழுதப்பட்டிருக்கின்றது. லேபர் கவுன்சிலர் Pam Bromley மற்றும் முன்னாள் லண்டன் மேயர் Ken Livingstone ஆகியோர் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டுள்ளனர். Pam Bromley மீதான குற்றச்சாட்டை மிகுந்த சிரத்தையுடன் கவனித்து கோர்பின் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டு இருக்கின்றது. இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை யூதர்களுக்கு எதிரானவை என திரிபு செய்யப் பட்டுள்ளது. வலதுசாரி ஊடகங்கள் தொழில் கட்சிக்குள் யூதர்களுக்கு எதிரான போக்கு இருப்பதாக பிரசாரம் செய்து ஊதி பெரிதாக்கி வருகின்றன.
அப்பாவி யூத மக்கள் மீதான அடக்குமுறைகள், பலஸ்தீன மக்கள் மீதான படுகொலைகள், உலகத்தின் அடக்குமுறை அரசாங்கங்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற இஸ்ரேலிய அரசாங்கத்தின் மனிதகுல விரோத செயற்பாடுகள் கண்டனத்துக்கு உரியவை. அவை எதிர்க்கப்பட வேண்டியவையும் கூட. ஆனால் இஸ்ரேலிய அரசு தனது பலம்வாய்ந்த லொபி மூலமாக தன் மீதான எதிர்ப்புகளை anti- Semitism என்று பிரச்சாரம் செய்கின்றது. இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு என்பது எவ்வாறு யூதர்களின் மீதான வெறுப்பாக முடியும்? இவ்வாறுதான் இலங்கை அரசாங்கம் தன் மீதான புலம்பெயர் தமிழ் மக்களின் எதிர்ப்பை சிங்கள மக்களுக்கு எதிரானதாக பிரச்சாரம் செய்கின்றது.
கோர்பினை தொழிலாளர் கட்சியிலிருந்து நீக்கியதன் மூலம் ரெட் டோரிக்கள் தாம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு ஆதரவாளர்கள் என்பதை வெளிப்படுத்தி விட்டனர். ஏனென்றால் இப்பொழுது இருக்கும் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் போருக்கு ஆதரவாகவும் மக்களின் சமூக நலன்களுக்கான முதலீடுகளை குறைப்பதற்கு ஆதரவாகவும், அகதி தஞ்சம் கோருபவர்களுக்கு எதிராகவும் வாக்களித்தவர்கள். இவ்வாறு மக்கள் நலனுக்கு எதிரான இவர்கள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி கட்சிக்குள் இருக்கின்றார்கள். ஆனால் மக்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக நிற்பவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
கோர்பின் தொழிற்கட்சியின் தலைவராக இருந்தபோது கட்சியை ஒன்றாக்குதல் என இந்த ரெட் டோரிக்களுடன் செய்த சமரசம் இன்று அவரது கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் படி செய்துவிட்டது. வலது சாரிகளுடன் செய்யும் எந்த விதமான சமரசமும் இறுதியில் மக்கள் போராட்ட அரசியலுக்கு கொள்ளி வைக்கும்- எம்மை பலவீனப்படுத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எமது உரிமைகளை பெறுவதற்கு நாம் சமரசமின்றி போராடக்கூடிய தொழிலாளர் இளைஞர்களை ஒன்றினைத்த வெகுஜன கட்சி ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. மக்கள் சார்பாக இருப்பவர்களுக்கு தொழில் கட்சியில் இனி எந்த வேலையும் இல்லை என்பதை கோர்பின் வெளியேற்றப்பட்டமை நமக்கு தெளிவுப்படுத்துகின்து. அடக்குமுறைகளுக்கு எதிராகவும் எமது உரிமைகளை பாதுகாக்கவும் எமது சக்தியை நாமே கட்டி எழுப்ப வேண்டியது அவசியம். இதுவே காலத்தின் கட்டாயம். அதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் வாருங்கள்.