ஜெருசலேமில் மோதல்கள் விரிவடைகின்றன

682 . Views .

 

யூடி பீசன் – தமிழில் ரேஷ்மி மாதவன் 

 

கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீதான இஸ்ரேலியர்கள் மிருகத்தனமான அடக்குமுறை, புதிய மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன. இம்முறை இஸ்ரேலிய அதிகாரிகள் ஜெருசேலத்திற்குள் மட்டும் இல்லாமல் பாலஸ்தீனக் கிளர்ச்சியை மிகவும் பரந்த அளவில் எதிர்கொள்கிறார்கள்.

ஜெருசலேதில் நடைபெற்ற நிகழ்வுகள் மீதான கோபம் காரணமாக மேற்குக் கரை, காசா மற்றும் இஸ்ரேல் முழுவதும் பாலஸ்தீனிய போராட்டத்திற்கு வழிவகுத்தது, மேலும் பரந்த மத்திய கிழக்கு மற்றும் உலகளவில் ஆதரவு போராட்டங்களுக்கும் இது வழிவகுத்தது. பாலஸ்தீனியர்களின் கோபத்தின் விளைவாக இஸ்ரேலுக்குள் உள்ள பல நகரங்களில் வெடிக்கும் போராட்டங்களை கண்டு பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். லோட் மற்றும் ராம்லே போன்று சரி பாதி யூத-பாலஸ்தீனிய மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தீவிர வலதுசாரி யூத ஆர்வலர்களின் தலையீடுகள் குறுங்குழுவாத மோதலின் கடுமையான ஆபத்துக்களைக் கொண்டு வந்துள்ளன. வளரும் உள்நாட்டுப் போர், கொலை மற்றும் மோதல்களுக்கான அபாயங்களும் தென்படுகின்றன. 

இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் இஸ்ரேலிய ஏவுகணைகள் 16 குழந்தைகள் உட்பட 60 க்கும் மேற்பட்ட காசா நகர்வாசிகளை கொன்றுகுவித்துள்ளன. அவர்களில் சிலர் அழிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளிலும் அதற்கு அருகிலும் வசித்தவர்கள். இந்த கொடூரமான இஸ்ரேலிய குண்டுவெடிப்பு அதிக மக்கள் தொகை கொண்ட காசா பகுதியில் பெரும் பயங்கரவாதத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. இதனை சி.டபிள்யூ.ஐ (தொழிலாளர் சர்வதேசத்துக்கான கமிட்டி) கடுமையாக கண்டிக்கிறது. இஸ்ரேலிய இராணுவம் காசாவிலும் தரைப்படைகளை அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகிறது.

காசாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி பாலஸ்தீனிய போராளிகளால் 1,000 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதில் பல இஸ்ரேலிய நகரங்களை தாக்கி, ஏழு பேரைக் கொன்றுள்ளன. அவர்களில் இருவர் பாலஸ்தீனிய குடியிருப்பாளர்கள்.

இந்த போராட்டங்களும் உயிரிழப்புகளும் பல நிகழ்வுகளில் விளைவாக நடந்து வருகின்றன. ரமலான் மாதத்தில் டமாஸ்கஸ் வாயிலுக்கு அருகில் கூடுவது பாலஸ்தீனியர்களின் வழக்கம். கடந்த மாதம், இக்கூட்டத்தை தடுக்க இஸ்ரேலிய ‘பாதுகாப்புப் படைகள்’ தடைகளை அமைத்தன. இது பாலஸ்தீன ஆர்பாட்டங்களுக்கு வழிவகுத்தது. அது கடும் அடக்குமுறையை சந்தித்தது. பின்னர் தடைகள் அகற்றப்பட்டபோது பாலஸ்தீனியர்கள் வெற்றியைக் கொண்டாடினார்.

அதே நேரத்தில், அருகிலுள்ள ஷேக் ஜார்ராவில் பாலஸ்தீனிய குடும்பங்களை அச்சுறுத்தும் ‘இன அழிப்பு’ – வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு நடைபெற்ற முயற்சிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன. வலதுசாரி இஸ்ரேலியர்களுக்கும் ஷேக் ஜார்ரா குடியிருப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. ஆயுதங்களின்றி இளம் பாலஸ்தீனிய போராட்டக்காரர்களுக்கு எதிராக இஸ்ரேலிய காவல்துறை கையெறி குண்டுகள் உட்பட பயங்கரமான ஆயுதங்களை பயன்படுத்தியது. பல தசாப்தங்களாக இந்த பகுதியில் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர், ஆயினும் அவர்கள் புலம்பெயர்ந்த யூதர்களால் கொண்டுவரப்பட்ட வரலாற்று யூத உரிமைக் கோரிக்கைகளின் அடிப்படையில் வெளியேற்று உத்தரவுகளை எதிர்கொண்டனர். இஸ்ரேலிய சட்டத்தின்படி, யூத மக்களுக்கு கிழக்கு ஜெருசலேமில் 1948 க்கு முந்தைய காலத்தில் சொந்தமான நிலம் அல்லது வீடுகளின் மீது உரிமை கோர முடியும், ஆனால் பாலஸ்தீனியர்கள் 1948 க்கு முன்னர் இஸ்ரேலில் எங்கும் வைத்திருந்த நிலத்தை மீட்டெடுக்க முடியாது.

1967 ஆம் ஆண்டு கிழக்கு ஜெருசலேமை யூதர்கள் கைப்பற்றினார்கள். இதனை இவர்கள் ஜெருசலேம் தினம் என்று ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள். மே 10 அன்று, வலதுசாரி இஸ்ரேலிய தேசியவாத போராட்டங்களுக்கு மத்தியில் இக்கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையில் காவலர்கள் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை அக்ஸா மசூதிகுள் இருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீது வீசினர். அது பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாத்தின் மூன்றாவது புனித ஸ்தலத்தில், ரமலானின் கடைசி வாரத்தின்போது ஏற்பட்ட இந்த தாக்குதல் உள்நாட்டிலும் உலகெங்கிலும் கிளர்ச்சியை தூண்டியுள்ளது. இது குறிப்பாக அரபு மற்றும் முஸ்லீம் மக்களிடையே கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து வலதுசாரி ஹமாஸ் படைகள் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசினர். பெஞ்சமின் நெதன்யாகுவை பாதுகாக்கும் இஸ்ரேலிய அரசாங்கம் இக்காரணத்தை பயன்படுத்தி காசா மீது உயர் தொழில்நுட்ப ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த ஒரு புதிய போரைத் தொடங்க தயாராகியுள்ளது.  

இனவெறி தூண்டுதல்

அடுத்தடுத்து நடைபெற்ற நான்கு இஸ்ரேலிய பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெறத் தவறிய நெத்தன்யாகுவினால் ஒரு புதிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. இதுவே இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கின் வலுவான பாதுகாவலர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் நோக்கோடு தேசிய உறவுகளை சீர்குலைப்பதை நெதன்யாகுவின் வலதுசாரிய கட்சியும் மற்ற வலதுசாரிக் கட்சிகளும் நிறுத்தவில்லை. உதாரணமாக, திங்களன்று, சியோனிசக் கட்சியின் தலைவரான பெசலெல் ஸ்மொட்ரிச், கோபமூட்டும் வகையில் ஷேக் ஜர்ராவுக்குச் சென்று பாலஸ்தீனிய போராட்டக்காரர்களுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அவர் குறிப்பிட்டு சொன்னது: “ஒரு நிலையான அரசாங்கத்தை நாம் உருவாக்கி இஸ்ரேல் அரசின் பொறுப்பாளர்களை துடைத்தெறிய வேண்டும்” என்பது தான். 

புதிய தீவிர வலதுசாரி நெசெட் (இஸ்ரேலிய பாராளுமன்ற) உறுப்பினர், இட்டாமர் பென்-க்விர், அங்கு இனவெறித் தூண்டுதலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பென்-க்விர் பெருமளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத தீவிர வலதுசாரி கஹானிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவர், அவருடைய தீவிர வலதுசாரி சித்தாந்தம் அவரை இஸ்ரேலின் இராணுவத்தில் பணியாற்றவிடாமல் தடுத்தது. மார்ச் மாத பொதுத் தேர்தலுக்கு முன்னர், அரசாங்க பெரும்பான்மைக்கான நேர்மையற்ற மற்றும் இரக்கமற்ற உந்துதலில், நெத்தன்யாகு, மூன்று தீவிர வலதுசாரி அமைப்புகளை ஒரே தேர்தல் பட்டியலில் ஒன்றிணைத்தார், இதனால் அவர்கள் குறைந்தபட்ச வாக்களிப்பு வரம்பைக் கடந்து அவரது ஆளும் தொகுதியில் பங்கேற்க முடியும். அந்த வகையில், பென்-க்வீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்து பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையாளர் டேவிட் கார்ட்னர் எழுதியுள்ளார்: “பென்-க்வீரின் நடத்தை மறைந்த பிரதமரும் குடியேறியவர்களின் தலைவருமான ஏரியல் ஷரோனின் நடத்தையை நினைவுபடுத்துகிறது. செப்டம்பர் 2000 இல் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய கலகப் பிரிவு காவலர்களுடன் (riot police) ஹராம் ஆஷ்-ஷெரீப்பை கடந்து டெம்பிள் மவுண்டை நோக்கிச் சென்றதை நினைவுபடுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார். “இது அல்-அக்ஸா இன்டிபாடா என்று அழைக்கப்படும் இரண்டாவது பாலஸ்தீன எழுச்சிக்கு வழிவகுத்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அதிகரித்த அடக்குமுறை, இனவெறி தூண்டுதல்கள் மற்றும் தற்போதைய தீர்வுத் திட்டங்களுடன் இஸ்ரேலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்த முதலாளித்துவ விமர்சனங்களில் கார்ட்னரின் எச்சரிக்கை ஒன்றாகும். இவை அனைத்தும் “ஒரு பாலஸ்தீனிய அரசின் சாத்தியத்தை முன்னறிவித்து, ஒரு பெரிய இஸ்ரேலுக்குள் சம உரிமைகளுக்காக போராட பாலஸ்தீனியர்களை கட்டாயப்படுத்துகிறது, இது உலக அரங்கில் இஸ்ரேலின் நியாயத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இது அரபு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடம் உள்ள இஸ்ரேலின் உறவை ஆபத்தில் ஆழ்த்துகிறது” என அவர் கூறியுள்ளார்.

பாலஸ்தீனிய இளைஞர்களிடையே கோபம் நீண்ட காலமாக தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிய மோதல்கள் தவிர்க்க முடியாமல் ஒரு கட்டத்தில் நிகழப்போகிறது. மிருகத்தனமான இராணுவ ஆக்கிரமிப்புடன், அவர்கள் அதிக அளவு வேலையின்மை, வறுமை மற்றும் சேவைகளின் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர் – தற்போது போதுமான கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மற்றும் பிற சுகாதார வசதிகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. முதலாளித்துவ சார்பு பாலஸ்தீனத்தை மாற்றாக கொண்ட எந்தவொரு கட்சியும் இந்த எந்த விஷயத்திலும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது, ஃபத்தா மற்றும் ஹமாஸ் உட்பட எந்த கட்சியும் அவற்றை முடிவுக்கு கொண்டுவருவதை ஒருபோதும் பொருட்படுத்தாது. முதலாளித்துவ சக்திகளின் ‘சர்வதேச சமூகம்’ என்று அழைக்கப்படுபவை இவ்வாறான பிரச்னைக்கு தீர்வை கொடுக்க இயலாது என்பதற்கு இதுவே ஒரு சான்றாக அமைந்துள்ளது.

பாலஸ்தீன போராட்டம்

இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ராக்கெட்டுகளை ஏவுவது மற்றும் கண்மூடித்தனமான தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவது விரக்தியைக் காட்டுகின்றது. ஆனால் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையை அடைவதற்கான வழி அதுவல்ல. காசாவிலிருந்து வரும் ஏவுகணைகள் துல்லியமாக இலக்கை குறிவைக்கும் அளவுக்கு உயர் தொழில்நுட்பம் கொண்டவை அல்ல, மிகக் குறைவான இஸ்ரேலிய இராணுவ இலக்குகளையே தாக்கியுள்ளன.  ஆனால் இஸ்ரேலில் இயங்கும் பல தொழிலாள வர்க்க நகரங்களில் – அஷ்கெலோன், ஹோலன் மற்றும் ரிஷான் போன்றவற்றை இவை கண்மூடித்தனமாக காயப்படுத்தியுள்ளன. இந்த தாக்குதல்கள் சாதாரண இஸ்ரேலியர்களை பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதிகரித்த மிருகத்தனத்தோடு வினையாற்றும் வலதுசாரி அரசாங்க அமைச்சர்களுடன் நெருக்கமாக ஆகிவிடுகின்றது. இவர்கள் பாலஸ்தீனிய போராளிகளைக் காட்டிலும் மிகப் பெரிய அளவிலான ஆயுதங்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழியில் பாலஸ்தீனிய போராட்டத்திலிருந்து அந்நியப்படுவதை விட, இஸ்ரேலிய யூத தொழிலாள வர்க்கத்தை இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்திலிருந்து பிரிக்க வேண்டும். பாலஸ்தீனியர்களுக்கு முக்கியமான கேள்வி இஸ்ரேலிய ஆட்சி எவ்வாறு தோற்கடிக்கப் போகிறது என்பதுதான். இது இராணுவ வழிமுறைகள் மூலமாக மட்டுமல்ல, இஸ்ரேலிய சமுதாயத்தை வர்க்க ரீதியில் பிரிக்கக்கூடிய ஒரு போராட்டத்தின் மூலம் – தேசிய உரிமைகளுக்கான ஒரு சோசலிச தீர்வை ஆதரிப்பதை நோக்கி முடிந்தவரை பல தொழிலாளர்களை வெல்வது, மற்றும் பிரிவின் இருபுறமும் இயல்பான வாழ்வாதாரத்தை கொண்டிருப்பதாகும்.

ராக்கெட்களை ஏவுவது துப்பாக்கிச் சூடு நடத்துவது ஆகியவை போராட்டத்தின் முக்கிய வழிமுறையாக இருக்க வேண்டும் என்ற தவறான பிம்பத்தை இது அளிக்கிறது. இதன் மூலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களில் வலதுசாரி ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்கு இது முக்கியத்துவம் அளித்துவிடுகிறது.

மாறாக, ஒரு வெற்றிகரமான போராட்டம் பாலஸ்தீனிய மக்களின் ஜனநாயக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட, வெகுஜன அணிதிரட்டல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் – ஒரு புதிய வெகுஜன இன்டிஃபாடா (இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீன எழுச்சி) உருவாக்கப்பட வேண்டும். புதிய தலைமுறை பாலஸ்தீனிய இளைஞர்கள் – இஸ்ரேலுக்குள்ளும், அதன் பிராந்தியங்களிலும் – எதிர்ப்பு இயக்கங்களில் முன்னுக்கு வருகிறார்கள், இந்த மாறுபட்ட வழிமுறைகளை கேள்விக்குள்ளாக்குவார்கள், விவாதிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை, வெகுஜன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளை கட்டமைக்கும் திசையில் அவர்களால் செல்ல முடியும். அதுவே தற்போது அவசரமாக தேவைப்படும் ஒன்றாகும். இந்த வெகுஜன போராட்டத்தின் ஒரு பகுதியாக, பொது சமூகங்களால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படும் ஆயுத தற்காப்பை ஏற்பாடு செய்வதன் மூலம் பாலஸ்தீனியர்கள் தங்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆயுதப்படைகளின் தாக்குதல்களை எதிர்க்க உரிமை உண்டு.

பல வாரங்களாக இஸ்ரேலில் பாலஸ்தீனிய சமூகங்கள் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, அவர்களின் சமூகங்களில் வறுமை தொடர்பான குற்றங்கள் மற்றும் கூட்டு வன்முறைகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் இல்லாததால் கிழக்கு ஜெருசலேமில் இந்த கிளர்ச்சி வெடித்துள்ளது. வடக்கு நகரமான உம் அல்-பாஹ்மில் ஒவ்வொரு வாரமும் போராட்டங்கள் நடந்தன, மார்ச் மாதத்தில் டெல் அவிவில் சுமார் 2,000 பேர் திரண்டனர். கோபம் அரசாங்கத்தின் மீது மட்டுமல்ல, பாலஸ்தீனிய அரசியல் பிரதிநிதிகளிடமும் செலுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பொதுத் தேர்தலில் இது தெரியவந்துள்ளதுஅங்கு 50% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. வாக்களித்தவர்களின் சதவீதம் 2020 மார்ச் மாதத்தில் 65% ஆக இருந்தது.

2015 பொதுத் தேர்தலில் போராடுவதற்காக அமைக்கப்பட்ட நான்கு அரபு அடிப்படையிலான கட்சிகளின் ‘கூட்டுப் பட்டியலில்’ அவர்களுக்கு ஆரம்பத்தில் நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்தக் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, கடந்த தேர்தலில் இஸ்லாமியக் கட்சியான ராம் { Ra’am (ஐக்கிய அரபு பட்டியல்) } அதன் வலது பக்கத்திலிருந்து வெளியேறியதன் மூலம் பட்டியல் ஓரளவு உடைந்தது. அடுத்த இஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து பாலஸ்தீனிய சமூகங்களுக்கு எவ்வாரான நிதிகளை பெற முடியும் என்பதில் மட்டுமே ராம் தற்போது கவனம் செலுத்துகின்றது, அதற்கு பதிலாக அதன் ஐந்து நெசெட் வாக்குகளைப் பயன்படுத்தி கூட்டணி அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல் கட்சியையும் அது பதவியில் தொடர அனுமதிக்கின்றது. இதற்கிடையில், இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டு பட்டியலில் பிணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது ஒரு சோசலிச சக்தியுடன் சேர்ந்து ஒரு சுயாதீனமான, முதலாளித்துவ எதிர்ப்பு தேர்தல் சவாலுக்கு தலைமை தாங்கியிருக்க வேண்டும்.

பாலஸ்தீனிய அதிகாரத்துவ (பி.ஏ) பகுதிகளில், 15 ஆண்டுகளுக்கான முதல் பொதுத் தேர்தல் மே 22 ஆம் தேதிக்கும், பின்னர் ஜூலை மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இரண்டும் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பொதுஜன முன்னணியால் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனியர்களை வாக்களிக்க இஸ்ரேல் அரசாங்கம் மறுத்ததை காரணமாக சொல்லி அப்பாஸ் இதனை ரத்து செய்துள்ளார். ஆனால் உண்மையில், அப்பாஸ்ஸுக்கும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேர்தல் தோல்வி பயத்தையே இது பிரதிபலிக்கின்றது. அரசியல் கட்சிகளில் அதிகப்படியான பிளவுகள் ஏற்பட்டுள்ளது. ஃபத்தா போட்டி பட்டியல்களாகப் பிரிந்து, தேர்தலை ரத்து செய்வதை எதிர்த்த ஹமாகளிடமும் – அறிவிக்கப்பட்ட பல பட்டியல்களிடமும் தோல்வியை தழுவியது.

இந்த தேர்தல் ரத்து, முன்னரே ஃபத்தா மீது இருந்த அதிருப்தியை மேலும் அதிகரிக்கும். பொதுஜன முன்னணியின் 93% க்கும் அதிகமானோர் வாக்களிக்க பதிவுசெய்திருந்தனர். பெரும்பான்மையானவர்கள் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று விரும்பினர் – ஆனால் அவர்கள் இதை மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் செய்யவில்லை.

இஸ்ரேலிய அரசியலும் சமூகமும்

நெத்தன்யாகு காசாவிலிருந்து வந்த ராக்கெட் தீயைப் பயன்படுத்தி தன்னை நோக்கி ஆதரவைப் பெற முயற்சிப்பார், அச்சுறுத்தல்களை முறியடிக்க துணை நிற்கும் ஒரு தலைவராக தன்னை காட்டிக்கொள்வார். இருப்பினும், அதே நேரத்தில், ராக்கெட்டுகளால் ஏற்படும் இறப்புகள், காயங்கள் மற்றும் உள்நாட்டுப் போரின் வளரும் கூறுகள் ஆகியவை இஸ்ரேலில் பாதுகாப்பின்மை உணர்வுகளை பெருமளவில் மோசமாக்குகின்றன. நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான முறையில் பேரழிவை சந்தித்து இஸ்ரேலிய சமுதாயத்தில் அதிர்ச்சி ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மெரோன் மவுண்டில் நடந்த ஒரு நிகழ்வில் 45 பேர் மரணித்தனர். இது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அலட்சியத்துடன் தொடர்புடைய ஒரு சோகம்.

நெத்தன்யாகு தற்போது ஊழல் தொடர்பான விசாரணையில் உள்ளார். இவர் பிரதமராக இருப்பது இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்திற்கு நீண்டகாலமாக ஒரு பிரச்சினையாக உள்ளது. ஏனெனில், சிறையில் இருந்து வெளியேற முயற்சிக்க தனது பதவியை பயன்படுத்துவது அவரது ஒரே நோக்கமாகவுள்ளது. தீவிர வலதுசாரிக் கட்சிகளை அவர் சீர்குலைப்பதும் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இவை உள்நாட்டு மோதல்கள் அதிகரிக்க பங்களித்த காரணிகளாகும். இது உள்நாட்டில் ஆளும் இஸ்ரேலிய உயரடுக்கிற்கு ஒரு நெருக்கடி மட்டுமல்ல, சர்வதேச அளவிலும், உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ சக்திகளுடன் – ஜோ பைடனின் அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஐ.நா உட்பட – அனைத்தும் கட்டாயத்தை உணர்ந்து எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு நாடுகளான பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்த சீற்றத்தை கண்டித்துள்ளன.

எனவே, தேசிய மோதலின் தீப்பிழம்புகளைத் தூண்டிவிட்டு, நெத்தன்யாகு இப்போது முழு அளவிலான போரைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேலுக்குள்ளும் சர்வதேச அளவிலும் இருந்து பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறார். முந்தைய போர்களோடு ஒப்பிடும் பொது இந்த முறை இஸ்ரேலிய நகரங்களை அதிக அளவில் பாதிக்கப்படும்.

வரவிருக்கும் காலகட்டத்தில், ஆக்கிரமிப்பு, குடியேற்றங்கள் மற்றும் பாகுபாடு குறித்து என்ன செய்வது என்பது குறித்து தலைவர்கள் மற்றும் இஸ்ரேலின் அரசு நிறுவனங்களின் முன்னாள் தலைவர்கள் மத்தியில் பிளவுகள் ஆழமடையும். இந்த சூழ்நிலையில் இஸ்ரேலிய பாராளுமன்ற ‘ஜனநாயகம்’ என்பது ஒரு பெரிய நெருக்கடியில் உள்ள ஒரு அமைப்பாகும். இது இரண்டு ஆண்டுகளில் நான்கு முடிவில்லாத தேர்தல்களால் தெளிவாகியுள்ளது, அவற்றின் சிரமங்கள் பெருகும். அந்த தேர்தல் முடிவுகள், பிரதான முதலாளித்துவ சார்பு அரசியல் கட்சிகளின் பிளவுகளில் விளைகின்றன, அவை அவற்றில் அதிகரித்துவரும் ஏமாற்றத்திலிருந்து உருவாகின்றன – இது உலகளவில் காணப்படுகிறது.

ஊழல் வழக்குகள், அதிகரித்துவரும் சமத்துவமின்மை, சேவைகளின் பற்றாக்குறை மற்றும் யூத சமுதாயத்திற்குள் பாகுபாடு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான பல காரணிகளால் நெத்தன்யாகுவை பதவியில் இருந்து நீக்க மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் விரும்பினர்.

ஆனால் அவர் ஒரு சிறுபான்மை ஆதரவு தளத்தையும் தக்க வைத்துக் கொண்டார் – மார்ச் பொதுத் தேர்தலில் அவரது வலதுசாரிய கட்சி முதலிடத்தை பிடித்து உள்ளது. இது, சமீபத்தில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குவதில் தலைமை தாங்க உதவியது. பல நாடுகளை விட பொருளாதாரம் ஒரு சிறிய தோல்வியையே அடைந்ததற்கு இதுவே ஒரு முக்கிய கரணம் – 2020 ஆம் ஆண்டில் 2.3% ஆக சுருங்கியது.

ஒரு புதிய கூட்டணியை ஒன்றிணைக்க நெதன்யாகு இதுவரை தவறிவிட்டதால், மூன்று ஆண்டுகளுக்குள் ஐந்தாவது பொதுத் தேர்தல் சாத்தியமாகும். ஏழு வெவ்வேறு ‘நெதன்யாகு-எதிர்ப்பு’ கட்சிகள் தங்களது சொந்த ஆளும் கூட்டணியை அமைப்பதன் மூலம் இதைத் தவிர்க்க முடியுமா என்று விவாதித்து வருகின்றன. ஆனால் அதிகரித்து வரும் தேசிய மோதல் காரணமாக அந்த பேச்சுவார்த்தைகள் ராமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன – இதனை அமைக்க ராமின் எம்.கே.க்களின் (மந்திரிகள்) ஆதரவு தேவை. மோதல்கள் ஆரம்பத்தில் நெதன்யாகுவின் கைகளில் இருந்தது என்பதை இது காட்டுகிறது, இதற்கிடையில் அவர் நிர்வாகத் தலைவராக இருக்கிறார்.

இந்த ‘எதிர்க்கட்சி’ பேச்சுவார்த்தைகள் நாஃப்தாலி பென்னட் மற்றும் யெய்ர் லாப்பிட் தலைமையிலான அரசாங்கத்தை விளைவித்தால், அதன் சிறுபான்மை நிலை மற்றும் மாறுபட்ட அலங்காரம் காரணமாக அது மிகவும் பலவீனமாகவும் நிலையற்றதாகவும் இருக்கும். ‘எதிர்க்கட்சி’ என்ற சொல் இங்கு பிரதானப்படுத்தப்பட்டுள்ளது ஏனெனில் பென்னட் மற்றும் லாப்பிட் போன்றவர்கள் வலதுசாரியத்துக்கு ஒரு அடிப்படை மாற்றீட்டை முன்வைக்கவில்லை, தொழிலாள வர்க்க இஸ்ரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவத்திலோ அல்லது தேசிய கேள்வியின் அடிப்படையிலோ இவர்கள் மாற்றை முன்வைக்கவில்லை. கூட்டணியின் சில தலைவர்கள் நெதன்யாகுவின் வலதுபுறத்தில் கூட இருப்பார்கள். கூடுதலாக, தொழிற்கட்சி மற்றும் மெரெட்ஸ் போன்ற பெயரளவிலான இடதுசாரிய கட்சிகளின் தோல்விகள், நெத்தன்யாகு 12 ஆண்டுகளாக ஏன் ஆட்சியில் இருந்தார் என்பதையும், அடுத்த அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட வலதுசாரி தன்மை அவரை உள்ளடக்கியதா இல்லையா என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இதைப் பற்றி தவிர்க்க முடியாதது எதுவுமில்லை – ஒரு சோசலிச மாற்றை முன்வைக்கக்கூடிய வெகுஜன தொழிலாளர் கட்சி இல்லாததால் தான் இவை நடைபெறுகின்றன. தேர்தலில், தொழிற்கட்சியின் திசையில் ஒரு சிறிதளவு ஆதரவு காட்டப்பட்டது.  இது அதன் சிறிய எண்ணிக்கையிலான நெசெட் இடங்களை அதிகரித்தது. ஏனெனில் அதன் புதிய தலைவர் மெரவ் மைக்கேலி இடது திசையில் சில வரையறுக்கப்பட்ட நகர்வுகளை மேற்கொண்டார்.

பாலஸ்தீனிய தொழிலாளர்கள் மிக மோசமான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை அனுபவிக்கும் அதே வேளையில், இஸ்ரேலிய யூதத் தொழிலாளர்களில் பெரும் பகுதியும் வறுமையால் பாதிக்கப்படுகின்றனர், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தினால் ஏற்படும் நிதி பாதுகாப்பின்மை, சம்பள குறைபாடு, நிபந்தனைகள் மற்றும் நலத்திட்டங்கள் மீது அவ்வப்போது ஏற்படும் தாக்குதல்கள் ஆகியவற்றால் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் பெரும்பாலும் வெடிக்கின்றன – சமீபத்தியது மே 10 அன்று 24 மணி நேர மருத்துவர்களின் வேலைநிறுத்தம் – கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது 600 கூடுதல் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி திரும்பப் பெறப்படலாம் என்ற அச்சத்தினால் இது நடைபெற்றது. மேலும், வழக்கம்போல் ஊழலுக்கு எதிராக நடக்கும் நெத்தன்யாகு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், மற்ற பிரச்சினைகள் குறித்த ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன.

பிரெச்சனைகள் எழும் பகுதிகளில் தீவிர வலதுசாரிகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான வன்முறைக்கு எதிராக, தொழிற்சங்கவாதிகள் மற்றும் பிற தொழிலாளர்கள் உள்ளூர் அடிப்படையில் – பணியிடங்களிலோ அல்லது வேலைத் துறைகளிலோ – ஒன்றுசேர ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் தற்போது உள்ளது. தொழிலாளர் இயக்கம் இந்த ஆபத்துக்கு எதிராக தனது சொந்த சக்திகளை மட்டுமே நம்ப முடியும், மோதல்களுக்கு அடிப்படையை அமைத்த அரசுப் படைகள் அல்லது முதலாளித்துவ சார்பு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது.

நீண்டகாலத்திற்கு அதிகாரப்பூர்வ தொழிற்சங்கக் குழுக்கள் மற்றும் தேசிய கட்டமைப்புகளை உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படும் போர்க் குழுக்களாக வளர்ப்பது அவசியமான பணியாகும். மேலும், இஸ்ரேலில் பாலஸ்தீனிய மற்றும் யூதத் தொழிலாளர்களின் போராட்டங்களை பாலஸ்தீனிய பிரதேசங்களில் உள்ளவர்களுடன் இணைப்பதும் பிரதானமாகும்.

யூத மக்களுக்கான பாதுகாப்பு இராணுவ வழிமுறைகளால் அடையப்படாது. இஸ்ரேலிய முதலாளித்துவ சார்பு அரசியல்வாதியின் பல பிராண்டுகளில் ஏதேனும் ஒன்றை மற்றொரு முதலாளித்துவ தீர்வுக்காகப் பார்ப்பதன் மூலம் அதனை அடையமுடியாது. இஸ்ரேலிய யூதத் தொழிலாளர்கள், இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து, முதலாளித்துவ நலன்களிலிருந்து முற்றிலும் வெளியேறி சுயாதீனமான தங்கள் சொந்தக் கட்சியை உருவாக்க வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை, நடவடிக்கைகளையும் பாதுகாப்பையும் ஒழுங்கமைக்க ஜனநாயக ரீதியாக இயங்கும் உள்ளூர் குழுக்களை உருவாக்குவது ஒரு அவசர பணியாகும் – அவர்கள் ஃபத்தா அல்லது ஹமாகலை மாற்றாக பார்க்க முடியாது. அவற்றில் எதுவுமே முன்னோக்கி செல்ல வழி வகை செய்யாது. இந்த குழுக்கள் வெகுஜன ஆர்ப்பாட்டங்களால் அண்மையில் அடைந்த வெற்றிகளைப் மேலும் கட்டியெழுப்ப முடியும் – இதில் சமீபத்திய ஷேக் ஜர்ரா வெளியேற்றங்களைத் தொடர்ந்த நீதிமன்ற விசாரணையை ஒத்திவைத்தல் மற்றும் ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருக்கும் அரபு பகுதி வழியாக செல்ல விரும்பிய ஜெருசலேம் தின அணிவகுப்பை கடைசி நிமிடத்தில் ரத்து செய்தல் ஆகியவை அடங்கும். ஜனநாயகக் குழுக்கள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுவது, பாலஸ்தீனிய பகுதிகளில் ஒரு வெகுஜன, சுயாதீனமான, தொழிலாள வர்க்க தலைமையிலான கட்சியை உருவாக்குவதற்கான முக்கியமான ஆரம்ப நடவடிக்கைகளாக இருக்கும்.

தொழிலாளர் கட்சிகள், பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலியர்களுடன் இணைந்து சோசலிச கண்பிடறேசனின் பகுதியாக சோசலிச இஸ்ரேல்/ சோசலிச பாலஸ்தீனத்திற்கான ஒரு திட்டத்தை நோக்கி நகர்வதுதான் – முதலாளித்துவதால் ஏற்படும் இறப்புக்களையும் பேரழிவுகளையும் தடுக்க வழியேற்படுத்தும்..

  • காசா மீது இஸ்ரேலிய இராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்து!
  • பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளையும் மத தளங்களையும் பாதுகாப்பதற்கு எதிராக அழிவுகரமான ராணுவ சக்திகளை பயன்படுத்துவதை நிறுத்து!
  • பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்றுவதை நிறுத்து
  • பாலஸ்தீனிய சமூகங்களில் ஜனநாயக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கு 
  • ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தை உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் காசா மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஆதரவு வழங்கு 
  • தேசிய விடுதலைக்காக போராட பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் ஒரு வெகுஜன போராட்டத்தை நடத்த ஆதரவு
  • பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் உள்ள சுயாதீன தொழிலாளர் அமைப்புகளுக்கு ஆதரவு
  • ஒரு சோசலிச மத்திய கிழக்கிற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு சுதந்திரமான, ஜனநாயக சோசலிச பாலஸ்தீனிய அரசுக்கு, ஒரு ஜனநாயக சோசலிச இஸ்ரேலுடன், ஜெருசலேமில் இரண்டு தலைநகரங்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினருக்கும் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதற்கு ஆதரவு.