பாலஸ்தீனியப் படுகொலைகளும் –தேசியம் சார் விவாதமும்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்திக்காத ஒரு நாடு இல்லை என்ற நிலைதான் இன்றைய உலக நெருக்கடி நிலை. இஸ்ரேல் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இரண்டு வருடத்துக்குள் நான்கு தேர்தல்களைச் சந்தித்தும்கூட ஒரு  ஸ்திரமான அரசை அமைக்க முடியாத முறையில் அனைத்து அரசியற் கட்சிகளும் பலவீனமாக இருக்கின்றன. பெஞ்சமின் நத்தன்யாகுவின் லிக்குயிட் கட்சி தம்மை வீடத் தீவிர வலதுசாரிய சக்திகளுடன் கூட்டு வைத்து ஆட்சி அமைக்க முயன்றதும் சரிப்பட்டு வரவில்லை. ‘பயங்கரவாதத்தைத் தடுக்க வேண்டும்- சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும்’ எனத் தொடர்ந்து பிரச்சாரித்து வருகின்றனர் தீவிர வலதுசாரிகள். அதற்காக பலமான அரசு வேண்டும் எனவும் அதற்கு தம்மைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் தீவிர மதவாத –சியோனிச அமைப்புக்களோடு இணைந்து லிக்குயிட் கட்சினரும் பிரச்சாரித்து வருகின்றனர். இருப்பினும் ‘பயங்கரவாதத்தின் மேலான பயம்’ காட்டுதல் மட்டும் தேர்தல் வெல்வதற்கு போதுமானதாக இருக்கவில்லை. இஸ்ரேலில் வசிக்கும் ஏராளமானவர்கள் பெரும் பொரளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள்.

ஏறக்குறைய 9 மில்லியன் மக்கள் வாழும் இஸ்ரேலில் 2 மில்லியனுக்கும் மேலான மக்கள் (25%க்கும் மேற்பட்டவர்கள்) வறுமைக் கோட்டின்கீழ் வாழ்வதாக பல்வேறு அறிக்கைகளை சொல்கின்றன. இந்தக் கணக்கு கிழக்கு ஜெருசலேமில் வாழும் அராபிய மக்களையோ பாலஸ்தீன மக்களையோ இணைத்த ஒன்றல்ல. அங்கு வறுமை மேலும் அதிகம். இஸ்ரேல் சமூகப் பொருளாதார பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இத்தருணம் ஒரு கட்சி கூட மக்கள் நலன்சார் கொள்கையை முன்வைக்கவில்லை. எல்லாக் கட்சிகளுமே பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. ‘அரச பயங்கரவாத’ நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள தீவிர வலது சாரிகள் முயற்சிப்பதை இலங்கை முதல் இஸ்ரேல் வரை நாம் பார்த்து வருகிறோம். பாலஸ்தீன மக்கள் மேலான கடுமையான தாக்குதல்களின் பின் இருக்கும் காரணத்தில் இதுவும் முதன்மையாக இருக்கிறது.

தற்போது நடக்கும் அடிபாட்டை இஸ்ரேல் அரசு திட்டமிட்டுத் தூண்டியது எனச் சொல்வது மிகையில்லை. ரமலான் காலப்பகுதியில் பாலஸ்தீனியர்கள் டமாஸ்கஸ் வாசல் அருகே ஒன்றுகூடுவது வழமை (பபழைய ஜெருசலேமின் பிரதான வாசல்). இஸ்ரேல் அரசு இந்த ஓன்று கூடலைத் தடை செய்ததைத் தொடர்ந்து பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். போராட தெருவுக்கு வந்த பாலஸ்தீனர்கள் வழமை போல  கடுமையாக தாக்கப் பட்டபோதும் போராட்டம் தொடர்ந்தது. கிழக்கு ஜெருசலேமில் இருந்து முற்றாக பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிகையைத் தொடர்ந்து செய்து வருகிறது இஸ்ரேல் அரசு. அங்கு வாழும் மக்களில் ஏறக்குறைய 40% இஸ்லாமிய மதத்தவர்களை அகற்றுவதற்கான படிப்படியான நடவடிக்கைகளில் ஒன்றாக சீக் யாரா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனர்களை வீடுகளை விட்டு துரத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராகவும் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு எதிராக தீவிர வலதுசாரிய இஸ்ரேலிய தேசியவாதிகள் ஒன்றுகூடினர். இவர்களுக்கு இடையில் நடந்த அடிபாட்டைப் பாவித்து இஸ்ரேலிய அதிகாரம் பாலஸ்தீனியப் போராட்டக்காரர் மேல் கடுமையான வன்முறையை செய்தது. இஸ்லாமியர்களின் மூன்றாவது முக்கிய புனித தளமாகக் கருதப்படும்  அல்-அக்சா பள்ளிவாசலின் வளாகத்துக்குள்ளேயே வைத்து கடுமையான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கமாஸ் இயக்கம் இஸ்ரேல் மேல் ராக்கட் தாக்குதல்களைத் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக தற்போது பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கத் தொடங்கி உள்ளது இஸ்ரேலிய அரசு. தம்மைப் ‘பாதுகாக்கும் உரிமை’ என்றுகூறி இதை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.

 

கமாஸ் இயக்கம் தீவிரவாத நடவடிக்கைளை எடுப்பது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியதே. கமாஸ் விடும் ஏவுகணைகளுக்கு பலியாவது நத்தன்யாகுவோ அல்லது சக தீவிரவாதிகளோ அல்ல. மாறாகப் பொது மக்கள்தான் இதற்கு பலியாகிறார்கள். இது நத்தன்யாகு போன்றவர்களின் ‘பாதுகாப்பு அவசியம்’ என்ற பிரச்சாரத்தைத்தான் பலப்படுத்துகிறது. அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அவர்தம் அதிகாரம்தான் இதனால் பலப்படுகிறது.

 

இருப்பினும் இஸ்ரேலிய அரசின் வன்முறைதான் கமாஸ் போன்ற இயக்கங்களை வளர்ச்சி அடைய வைக்கிறது – அவர்களை தீவிர நடவடிக்கை நோக்கித் தள்ளுகிறது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். இஸ்ரேல் அரசுடன் இணங்கி வேலை செய்பவர்கள்கூட ஒருசொட்டும் அசைய முடியாத இறுகிய கட்டுப்பாட்டில்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். வெஸ்ட்பாங் பகுதியில் நிலவும் கடுமையான வறுமை நிலவரத்தை மாற்ற இஸ்ரேல் அரசை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைதான் இருக்கிறது. வெஸ்ட்பாங் (A & B பகுதிகள்) பகுதியில் இயங்கும் பாலஸ்தீனிய தேசிய அதிகாரத்தின் கட்டுப்பாடு பாலஸ்தீன விடுதலை அமைப்பின் கையில் இருக்கிறது. யாசர் அரபாத் தலைமை வகித்த காலத்தில் இருந்த விடுதலை அரசியல் இந்த அமைப்பிடம் இன்று இல்லை. இதன் தலைவர் முகமத் அபாஸ் இஸ்ரேலுடன் இணங்கி வேலை செய்த போதும் அவர்கூட ‘சுதந்திரமாக’ எதையும் செய்துவிட முடியாது. இத்தகைய இணக்க அரசியலை நோக்கிப் பாலஸ்தீன விடுதலை இயக்கம் சென்றுவிட்ட பின்னணியில்தான் காமாஸ் இயக்கம் வளர்ச்சி அடைந்தது. இஸ்ரேல் அரசை தீவிரமாக எதிர்க்கும் கமாசுக்கு பாலஸ்தீனர் மத்தியில் – குறிப்பாக காசா பகுதியில் பெரும் செல்வாக்கு உண்டு. (கமாஸ் 2006 பகுதியில் காசாவில் தேர்தல் வெற்றி பெற்றமையும் அங்கு ப்பாட்டா (பாலஸ்தீன தேசிய விடுதலை இயக்கம்) இராணுவ ரீதியாக அவர்களால் தோற்கடிக்கப்படதும் அறிவோம்). இந்தக் காரணங்கள் மற்றும் அராப் லீக்கில் இருக்கும் சில நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆதரவு என்பன கமாசுக்கு ஆட் பலம் மற்றும் ஆயுத பலத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கமாசைத் ‘தீவிர வாத’ இயக்கமாகக் கருதும் இஸ்ரேலிய அரசு ஒருபோதும் அவர்கள் ஆதரவு நிலைப்பாடு – அல்லது அவர்கள் ஆட்சி அமைப்பதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. தமது கைப்பாவையாக இருக்கும் தருனத்தில் மட்டும் பாலஸ்தீன அதிகாரத்தை அனுமதிக்கும் இஸ்ரேலிய அரசு. பாலஸ்தீன அதிகாரத் தலைமை இஸ்ரேலிய நலன் தாண்டி ஒரு அங்குலம் அசைந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்பட்டு விடுவர் என்பதுதான் அங்கிருக்கும் நிலைமை. இதனால் தமக்கு வேறு வழியில்லை என இணக்க அரசியலை நியாயப்படுத்தி வருகிறது ப்பாட்டா. முறையான சனநாயக தேர்தலில் தாம் வெல்ல முடியாது என்ற கடும் பயம் அபாசுக்கும் ப்பாட்டாவுக்கும் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு இதுவும்தான் காரணம். இஸ்ரேலிய அரசு தமக்கு சார்பற்ற எந்த சக்தியும் அதிகாரத்தை பிடிக்க அனுமதிக்கப் போவதில்லை. அவர்கள் தேர்தலில் வென்றால்கூட அதிகாரத்தை தக்க வைக்க முடியாமல் தடை செய்யப்படுவர் என்பதை காசா வரலாறு தெளிவாக காட்டி உள்ளது. இருப்பினும் பாலஸ்தீன அதிகாரமும் மக்கள் ஆதரவின்றி தேர்தலுக்குப் பயப்படுகிறது. தமக்கு எதிரான சக்திகளை ஓரம் கட்டி – தேர்வை ஒருதலைபட்சம் ஆக்கியபின் தேர்தலுக்கு செல்வதுதான் அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. இந்த மாதம் மே 22 ல் நடக்க இருந்த தேர்தல் பிற்போடப்பட்டதுக்கும் – தொடர்ந்து காசா மேல் குண்டுத் தாக்குதல் நடத்தப் படுவதற்கும் பின் இதுவும் இருக்கிறது.

காசாவில் குழந்தைகள் குண்டுபட்டு சிதிலமடையும் காட்சிகள் உலகெங்கும் காட்டப் படுகிறது. எமது கண்முன்னால் பச்சைப் படுகொலை நடக்கிறது. தடுப்பதற்கு ஒரு சக்திகளும் தயாராக இல்லை. மாறாக இந்தச் செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கும் அல்ஜசீரா ஊடக கட்டிடம் குண்டு போட்டு தகர்க்கப் படுவதுதான் நடக்கிறது. பிபிசி போன்ற ஊடகங்கள் ‘நடுநிலை’ என்ற பெயரில் இஸ்ரேலிய அரசின் ‘தம்மை பாதுகாக்கும் உரிமை’ பற்றிப் பேசுகின்றன. இது படுகொலையை நியாயப்படுத்தும் வாதம். ‘தீவிரவாதம்’ என்பதைச் சுட்டி பாடுகொலை செய்யும் ‘உரிமை’ எந்த அரசுக்கும் கிடையாது. முதலாளித்துவ – குட்டி முதலாளித்துவ ஊடகங்கள், தம்மமை தாமே ‘புத்தி ஜீவிகள் எனக் கருதுவோர் பலரும் ‘படுகொலைக்கான உரிமை’ யை நியாயப் படுத்துவதை நடுநிலை என்கிறார்கள். ‘படுகொலைக்கான உரிமை’ என்பதை எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டு இயங்குவது மிகக் கேவலமான மனித குல எதிர்ப்பு நடவடிக்கை எனத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இஸ்ரேலிய அரசுக்கு தம்மை பாதுகாக்கும் உரிமை இருக்கிறது என அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் கூறுகின்றன. ‘இரண்டு பகுதியினரும்’ மனித உரிமையைக் காக்க வேண்டும் என இவர்கள் கூறுகிறார்கள். இது படு கேவலம். இலங்கையில் 2009 படுகொலை காலப் பகுதியிலும் இதே பேச்சுத்தான் முன்வைக்கப்பட்டது.

உண்மையில் தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் உரிமை பாலஸ்தீனர்களுக்குத்தான் உண்டு – இஸ்ரேல் அரசுக்கு அல்ல. ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு நடவடிக்கையை தாக்கப்படும் பாலஸ்தீனர்கள் முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள்மேல் குண்டு போட்டு ‘படுகொலை செய்யும் உரிமை’ இஸ்ரேல் அரசுக்கு இல்லை. அதே சமயம் கமாஸ் போன்ற இயக்கங்கள் பாரபட்சமின்றி இஸ்ரேலிய மக்களை கொள்வதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அது பாதுகாப்பு நடவடிக்கை அல்ல. அவர்கள் எம்மை கொள்கிறார்கள் – அதனால் நாம் பதில் கொலை செய்வோம் என்ற வாதம் பொறருத்தமற்றது.

இந்தப் புள்ளிகள் மிக முக்கியமானவை. ‘புத்தி ஜீவகள்’ என தம்மைத் தாமே அறிவித்துக் கொள்ளும் பல்வேறு அரைகுறைகள் – குட்டி பூர்சுவா மனநிலை கொண்டோர் பலர், மேற்சொன்ன புள்ளிகளை தலைகீழாக வாதிப்பதை நாம் பார்க்க முடியும். தாம் படுகொலையை நியாயப் படுத்துகிறோம் என்பதை அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை. தாம் ‘பாலஸ்தீன விடுதலை’ பக்கம் என மேம்போக்காக நம்பும் பலர் அதற்கு நேரதிரான ‘நடைமுறைகள்’ பேசுவதை நாம் அவதானிக்கலாம்.

 

இஸ்ரேலிய அரசையும் அடிவாங்கும் பாலஸ்தீனியர்களையும் (ஏன் கமாசையும் கூட) ஒரே தராசில் வைத்து சமமாக நிறுப்பது மிகப்பெரும் தவறு. இது ஒருவகையில் படுகொலையை நியாயப்படுத்தும் வாதம் அது. கமாஸ் போர்நிறுத்தம் கோரிய பின்னும் அதற்குத் தயார் இல்லை என அறிவித்து, தாகுதல்களைத் தொடர்கிறது இஸ்ரேல் அரசு. அவர்கள் தரைவழித் தாக்குதலையும் செய்ய முயலலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இது மிகப்பெரும் அச்சம். 2014ம் ஆண்டு நடந்த தரைவழி தாக்குதலின்போது 2000 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிவோம்.

 

மத்திய கிழக்கில் இருக்கும் பெரும் வளங்களைக் – குறிப்பாக எண்ணைக்  கிணறுகளைக் – சுரண்டும் நடவடிக்கைதான் மேற்கு நாட்டு அரசுகளுக்கு முதன்மை நோக்கு. இதன் பகுதியாக இருக்கும் இஸ்ரேல் அரசு இந்த முதலாளித்துவ அரசுகளின் முக்கிய ‘நட்புச் சக்தி’. இதை மீறி பாலஸ்தீன உயிர் ஒருபோதும் முதன்மைப்படப் போவதில்லை.

உலகெங்கும் லட்சக் கணக்கான மக்கள் இந்தப் படுகொலைகளுக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடி தமது குரலை பதிவு செய்து வருகிறார்கள். இந்த எதிர்ப்புத்தான் சில அரசுகளை, மேற்போக்காக என்றாலும், இஸ்ரேலிய அரச நடவடிக்கை மேல் சில விமர்சனங்களை வைக்கத் தூண்டி உள்ளது. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் சில கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளன. இஸ்ரேல் உடன் சமீபத்தில் உடன்படிக்கை போட்ட நாடுகள் கூட கண்டித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் வழமை போல தனது கண்டிப்பு – இரு தரப்பும் மனித உரிமை காக்க வேண்டும் என்ற கோரிக்கைச் ‘சடங்கை’ நிறைவேற்றி உள்ளது. இதைத் தாண்டி எதுவும் நடந்துவிடப் போவதில்லை. மக்கள் அனாவசியமாக கொன்று குவிக்கப் படுவது நிற்கப் போவதில்லை. அது முற்றிலும் இஸ்ரேல் அரசின் கையில்தான் விடப்பட்டுள்ளது.

எவ்வாறு இஸ்ரேலிய அரசை தோற்கடிப்பது என்பதுதான் நமக்கு முன் உள்ள முக்கிய கேள்வி. ஆயுத முனையில் – இராணுவ நடவடிக்கை மூலம் இஸ்ரேல் அரசை தோற்கடிக்க முடியாது. பல்வேறு அரபு நாடுகள் இணைந்து போர் தொடுத்தும் இஸ்ரேல் அரசை தோற்கடிக்க முடியாமல் போனது அறிவோம். இஸ்ரேல் தோற்கடிக்கப் படுவதை அமெரிக்க மற்றும் மேற்கு முதலாளித்துவ நாடுகள் அனுமதிக்கப் போவதில்லை. இராணுவ நடவடிக்கைக்கு மாற்றான இன்டிஃபாடா (intifada – எழுச்சி) நோக்கி மக்கள் நகரவேண்டும். மூன்றாவது இன்டிஃபாடா நோக்கி நகர்வது தவிர வேறு வழியில்லை.

இஸ்ரேலுக்குள் இருக்கும் போராட்ட சக்திகள் ஒன்றுபட வேண்டும். இது வெறும் தேர்தல் அடிப்படை சார்ந்ததாக இருக்கக் கூடாது. அங்குள்ள அராப் கட்சிகள் பல இணைந்து கூட்டு ஒன்றை கட்டி தேர்தலுக்காக ‘கூட்டுப் பட்டியலில்’ ஒன்றை உருவாக்கி இருந்தார்கள். இதில் இஸ்ரேலிய இடதுசாரிகள் பலரும் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் களத்தைத் தாண்டி அந்த கூட்டு இயங்க முடியவில்லை. இஸ்ரேலுக்குள் இருக்கும் கம்யுனிசக் கட்சி இந்த அடிப்படையைத் தாண்டி வர முடியாத முடக்க அரசியலையே முன்னெடுக்கிறது. இஸ்ரேலுக்குள் இருக்கும் அரச எதிர்ப்பு பலப்பட வேண்டும் – அந்த எதிர்ப்பை பாலஸ்தீனியர்கள் தமது நட்புச் சக்தியாக பார்க்க வேண்டும். அதேபோல் இஸ்ரேலுக்குள் இருக்கும் இடஹ்டு சாரிகள், மற்றும் போராட்டச் சக்திகள் பாலஸ்தீனர்களை நட்புச் சக்தியாகப் பார்க்க வேண்டும். இஸ்ரேலுக்குள் போராட்ட அரசியலைக் கட்டி வரும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி அந்த அணுகுமுறையை முன்னெடுத்து வருகிறது.

ஒட்டுமொத்த யூதர்களையும் எதிரியாக கட்டமைக்கும் போக்கு மிகத் தவறு. உலகெங்கும் யூத மக்கள் கொடுமைக்கு உள்ளான வரலாறு தெரிந்ததே. யூத மக்கள் அல்ல பிரச்சினை. மாறாக இஸ்ரேலிய அரசும் அதைத் தாங்கும் லாப நோக்குள்ள சக்திகளுமே எமது எதிரிகள்.

யுத்தத்துக்கு எதிராக பல இஸ்ரேல் தொழிற்சங்கங்கள் நிலைப்பாடு எடுப்பது வரவேற்கத் தக்கதே. பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்த பொது வேலை நிறுத்தம் மிகப் பலமானதாக நடந்தேறி உள்ளது. இது சரியான வழிமுறை. இந்தப் பொது வேலை நிறுத்தத்துக்கு பாலஸ்தீனிய பகுதிகளில் மட்டும் இன்றி இஸ்ரேலுக்குள்ளும் ஆதரவு இருந்ததை நாம் பார்த்தோம்.  இந்த தொழிற்சங்கங்களில் இருக்கும் எல்லாத் தொழிலாளர்களையும் யுத்ததுக்கு எதிராக மட்டுமின்றி புதிய இன்டிஃபாடா நோக்கி நகர்த்த அதன் தலைமைகள் முன்வரவேண்டும். 18000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய தொழிற்சங்கமான ‘தொழிலாளருக்கான அதிகாரம்’ (Power to the workers) இஸ்ரேலிய அரச வன்முறைக்கு எதிரான கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய – பாலஸ்தீன உறுப்பினர்கள் எவ்வாறு ஒருவருக்கு ஒருவர் உதவியுடன் தம்மை காப்பதில் ஈடுபடுகின்றனர் எனப் பெருமையாக குறிப்பிடுகிறது அவ்வறிக்கை. இதுதுதான் இஸ்ரேலிய அரிசின் இருத்தலை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கை. இதுதான் மேலும் பலப்பட வேண்டும். இஸ்ரேலியத் தொழிலாளர்கள் பாலஸ்தீனியர் உரிமைப் போராட்டத்தில் இணைவதுதான் இஸ்ரேலிய அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தை உருவாக்கும்.

இதைப் புறக்கணித்து ஒட்டு மொத்த இஸ்ரேலியர்களையும் பாலஸ்தீனியர்களின் எதிரிகளாக கட்டமைப்பது – எல்லா இஸ்ரேலிய யூதர்களையும் எதிரியாக கட்டமைப்பது- வெறும் முட்டாள்தனமானது மட்டுமில்லை மிகவும் ஆபத்தானதும்கூட. அது துவேச நடவடிக்கை மட்டுமல்ல ஒருவகையில் படுகொலையை நியாயப் படுத்துவதாகவும்தான் இருக்கிறது. ‘யூத எதிர்ப்பு’ துவச நடவடிகையே. அது எவ்வாறு போராட்ட அரசியலை முடக்க பயன்படுத்தப்படும் என்பதையும் அறிவோம். (இங்கிலாந்தில் ஜெரமி கோர்பினுக்கு எதிராக நடந்த பிரச்சாரத்திலும் இது பயன்பட்டதை அறிவோம்).

இத்தகைய நடைமுறையில் இருந்து மாறிய அரசியலை முன்னெடுக்கும் ஒன்றுபட்ட எழுச்சி நோக்கி நகர்வது அவசியம். யூதர்களும் பாலஸ்தீனர்களும் ஒருபோதும் உடன்பாட்டுக்கு வர முடியாது எனச் சிலர் சொல்வர். தற்போது இருக்கும் துருவ மயப்பட்ட நிலை அவ்வாறுதான் தோற்றம் தருகிறது. ஆனால் அது தவறு. மேற்சொன்னதுபோல் இனையும் புள்ளிகள் பல உண்டு – இணைந்த நடவடிக்கைள் பல உண்டு. இந்த சிறுபான்மை பலப்படவேண்டும். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான அத்தகைய ஒன்றிணைவு சாத்தியம் இன்றி இஸ்ரேலிய அரசை தோற்கடிக்க முடியாது.

இஸ்ரேலிய அரசு மேற்கு நாடுகளால் வலிந்து உருவாக்கப் பட்ட ஓன்று அதனால் அது இருப்பதற்கான நியாயப்பாடு எதுவும் இல்லை எனச் சிலர் வாதிடுவர். இஸ்ரேலிய அரசு இல்லாமல் போய்விட்டால் பிரச்சினைக்கு தீர்வு வந்து விடும் என்பது இவர்கள் எண்ணம். ‘வடிகட்டின முட்டாள்தனம்’ என்பதற்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும்.

இஸ்ரேலிய அரசு வலிந்துதான் உருவாக்கப்பட்டது. ஆனால் யாரால் ? எதற்காக உருவாக்கப் பட்டது? இந்த அரசு இல்லாமல் போவதை இந்த ‘உருவாக்கிய சக்திகள்’ அனுமதிக்குமா? இந்த அடிப்படைக் கேள்வியை கேட்பதற்கு ஒரு காரணம் உண்டு. மேற்சொன்ன வாதத்தை முன்வைக்கும் பலர் இஸ்ரேல் அரசை உருவாக்கிய இங்கிலாந்து  அரசையோ அல்லது மேற்கு அரசுகளையோ கடுமையாக எதிர்ப்பதில்லை. மாறாக அந்த அரசுகளின் லாப நலன்களின் பின் இயங்கும் அரசியலுக்கு பலம் சேர்த்துக் கொண்டு இந்த வாதத்தை முன் வைக்கின்றனர். இது முற்றிலும் முரணான நடவடிக்கை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. பாலஸ்தீனியர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பலர் இந்தகைய குறுகிய பார்வையை முன்வைப்பது தவறு. பாலஸ்தீன சொலிடாரிட்டி ஒருங்கிணைப்பு இஸ்ரேலை தாங்கும் மேற்கு அரசுகளை கடுமையாக எதிர்ப்பதில்லை. ஆனால் அதே சமயம் இஸ்ரேல் இருக்க கூடாது எனக் கோருகிறது. அது மட்டுமின்றி இராஜபக்ச அரசு முதலான மற்றைய அடக்குமுறை அரசுகளுடன் பாலஸ்தீன அதிகாரம் நட்பு கொள்வது பற்றியும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. இத்தகைய அரைகுறை – அரசியலற்ற திட்டமிடல், போராட்டத்தைப் பலப்படுத்தாது. யாசர் அரபாத் வகை விடுதலை அரசியலின் பெரும் பலவீனங்களில் ஒன்றாக இது இருக்கிறது.

இஸ்ரேலியர்கள் மத்திய கிழக்கில் வாழ முடியாது – யூதர்களுக்கு ஜெருசலேம் மேல் எந்த உரிமையும் இல்லை போன்ற அடிப்படைவாத நிலைப்பாட்டில் இருந்து இந்தக் கருத்து கிளம்புகிறது. இஸ்ரேல் ஒரு ‘காலனித்து நாடு’ என்றும் – யூதர்கள் அங்கு வந்து காலனித்துவ கட்டுப்பட்டில் பாலஸ்தீனியர்களை வைத்து இருக்கிறார்கள் எனவும் – தென் ஆபிரிக்க நாட்டில் இருந்த பிரிவினை (அப்பாத்தயிட்) போல இஸ்ரேலில் யூதர் – யூதர் அற்றவர் என்ற கூர்மையான பிரிவினை உண்டு எனவும் – அதனால் இஸ்ரேல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை எனவும் சிலர் வாதிடுவர். குறிப்பாக குறுங்குளுவாத இடதுசாரிகளிடம் இருந்தும் மத அடிப்படைவாதிகளிடம் இருந்தும் இத்தகைய குரல் எழுவதை பார்க்க முடியும்.

காலனித்துவம் என்றால் என்ன என இவர்கள் புரிந்து வைத்திருகிறார்கள் எனத் தெரியவில்லை? ‘யூத கலானியாதிக்கத்தை’ நீக்குவதன் போது அந்த யூதர்கள் எங்கு திரும்பி அனுப்பி வைக்கப்படப் போகிறார்கள்? மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய காலனித்துவம் முடிவுக்கு வந்து – நவ காலனித்துவ கட்டுப்பாடு ஆரம்பித்த தருணம் – அதற்காக உருவாக்கப் பட்ட நாடு இஸ்ரேல் எனப்தை இவர்கள் வசதிக்காக மறந்து விடுகிறார்கள். காலனித்துவத்தோடோ அல்லது தென்னாபிரிக்காவுடனோ இஸ்ரேலை இணைத்துப் பார்ப்பது தவறு. இஸ்ரேலுக்குள் கூர்மையான பிளவு உண்டுதான். அதன் அடிப்படை வேறு. தவிர நிறுவனப்பட்ட நிறவாத பிரிவினை தென்னாபிரிக்காவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது அந்த நாடு இல்லாமல் போனதா? நிறவாதம் இல்லாமல் போனதா? கறுப்பு மக்கள் நலன்கள் வெற்றி பெற்று விட்டதா? ‘கறுப்பு அதிகாரம்’ என வர்ணிக்கப்படும் அதிகார சக்தி அங்கு மிகவும் ஒடுக்கும் சக்தியாக தொடர்கிறது.

இஸ்ரேலை வலிந்து உருவாக்கியது மட்டுமல்ல பிரித்தானிய ஏகாதிபத்தியம் செய்தது. உலக வரைபடத்தில் நேர்கோடுகளைப் போட்டு வெட்டி ஏராளமான தேசங்கள் – தேசியக் குழுக்கள் முடக்கப்படுவதற்கும் – தொடர் சச்சரவில், போரில் ஈடு படுவதற்கும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் பெரும் காரணம். உருவாக்கப்பட்ட இந்த நாட்டை வரைபடத்தில் இருந்து அழிப்பது அல்ல இதற்குத் தீர்வு. கிறேமிய மக்கள் முதற்கொண்டு பல்வேறு தேசிய இனங்கள் தாம் துரத்தப்பட்டு வாழும் புதிய இடங்களில் தமது தேசிய கோரிக்கையை முன்னெடுக்கிறார்கள். இது தவறில்லை. பழைய எல்லைகள் – பழைய இன அடிப்படைதான் என்றால் எந்த காலவரையறை நோக்கிப் போவது ? எப்படி தீர்மானிப்பது ? பெர்சியப் பேரரசு – போத்துக்கல், ஸ்பெயின் வரை ஆண்ட ஓட்டமான் பேரரசு என பழைய எல்லைகளுக்குப் போவதா? இடம்பெயர்ந்து வாழும் மாசிடோனியா மக்களுக்கு அந்த இடம் சொந்தமில்லையா? துருக்கிக்குள் வாழும் கிரேக்க மக்களுக்கு நில உரிமை இல்லையா? அதிகார சக்திகள் செய்த அநியாயங்களுக்கு மக்கள் ஏன் பொறுப்பெடுக்க வேண்டும்? முதலாளித்துவம் ஏற்படுத்திய சிக்கலை தீர்க்க வரலாற்றை பின் நோக்கி நகர்த்த முயல்வது தவறு.

இஸ்ரேலிய நாடு உருவாக்கப்படும் தருணம் இடது சாரிகள் அதை கடுமையாக எதிர்த்தனர். யூதராக இருந்த ட்ராட்ஸ்கி முதற்கொண்டு பலவேறு இடது சாரிகள் இந்த நடவடிக்கை ‘இரத்த ஆறு ஓடும்’ நடவடிகையாக மாறும் என சரியாக கணித்து இருந்தனர். இது ஏகாதிபத்திய – முதலாளித்துவ நலனை நிறைவேற்ற முன்னெடுத்த நடவடிக்கையே தவிர யூத மக்களுக்கானதல்ல. ஆனால் அதற்காக யூத மக்களுக்கு தேசிய உரிமை இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது.

 

அதேபோல் இஸ்ரேல் என்ற யூத நாட்டில் பாலஸ்தீனர் இருப்பதற்கு பதிலாக – பாலஸ்தீன நாட்டில் யூதர்கள் இருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப் படுகிறது. இதை எல்லாம் ‘தீர்வு’ என முன்வைப்பவர்கள் அதன் சாத்தியப்பாடு – அதற்கான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி எந்தக் கவலையும் படுவதில்லை. இது முக்கியமான புள்ளி. பாலஸ்தீனர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமை என்பது வெறும் ‘யூத அரசின்’ இனவாத நடவடிக்கை என குறுக்கிப் பார்க்கும் போக்கு இது. எந்த இனத்திடம் அரச அதிகாரம் இருக்கிறது என்பதோடு இவர்தம் ‘தீர்வுக்’ கரிசனை சுருங்கி விடுகிறது.

இடதுசாரிகள் எனக் கூறுவோர் – தம்மை மார்க்சியர் எனக் கூறுவோர் சிலரும் கூட இத்தகைய வாதத்தின் வெவ்வேறு வடிவங்களை முன்வைப்பதைப் பார்க்க முடியும். இந்த அடிப்படையில் இருந்துதான் தவறான சுலோகங்களும் பிறக்கின்றன. ‘பாலஸ்தீனத்தை விடுதலை செய்’ என்ற கோரிக்கை இஸ்ரேலுக்குள் வாழும் யூதர்களை என்ன செய்வது என்பதோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. ஈழ விடுதலை அல்லது காஸ்மீர் விடுதலை என்பது வேறு. அங்கு தனிப்பட்ட பிரதேசம் – தனிப்பட்ட தேசிய அடையாள பிராந்தியம் – அதற்கு மேலான பெரும் தேசிய அடக்குமுறை உண்டு. கஷ்மீர் விடுதலை இந்தியர்களை தேசமற்றவர்கள் ஆக்குவதன் அடிப்படையில் கோரப்படுவதல்ல. ஈழ விடுதலை இலங்கையை இல்லாமல் செய்யப் போவதில்லை. அப்படி கோரும் மடத்தனமான கோரிக்கைகளும் உண்டு என்பது வேறு விசயம் – இலங்கையைப் பொறுத்தவரை அதை மடத்தனம் என ஏற்றுக்கொள்பவர்கள் மேற் சொன்ன வாதத்தின் மடமையைப் புரிந்து கொள்வதில்லை. இஸ்ரேல்/பாலஸ்தீனம் சார் தொடர்பு – நெருங்கிய அறிதல் இன்மை இத்தகைய மேலோட்டமான –ஆபத்தான பார்வை ஏற்பட ஒரு காராணம். இத்தகய வாதத்தின்படி இலங்கையில் மலையக மக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்ற மிகத் தவறான முடிவுக்குத்தான் நாம் வரவேண்டி இருக்கும். பாலஸ்தீன விடுதலை என்ற கோரிக்கை எந்த அடிப்படையில் கோராப்டுகிறது என்பதை விளக்குவது அவசியம்.

ஒரு ஏகாதிபதிய சக்தியால் வலிந்து தேசமிளக்க செய்யப்பட்ட – தொடர்ந்து கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அதை ‘யதார்த்தம்’ என ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் இத்தகைய லாப நோக்கு ஏகாதிபத்தியத்தின் உருவாக்கம்தான். இத்தகைய சக்திகளுக்கு எதிராக எம்மை திட்டவட்டமாக நிறுத்திக் கொள்வது நாம் செய்ய வேண்டிய முதற் செயல். மத்திய கிழக்கு வளங்கள் அங்கு வாழும் மக்களுக்குச் சொந்தமானது – உலக மக்களின் நலன்களுக்குச் சொந்தமானது என்ற நிலைப்பாட்டுக்கு வருவது அதன் பகுதி. அந்த வளங்களை அங்கு வாழும் மக்களுக்கு பகிரத் தொடங்கும் திட்டம் என்பது ஒரு தேசத்துக்குள் பல முரண் சக்திகள் ஒன்றுபட்டு வாழும் சந்தர்பத்தை  வலுப்படுத்தும் சாத்தியம் உள்ளது. இந்த நிலையிலும்கூட யூதர்களுக்கோ, பாலஸ்தீனியர்களுக்கோ தேசத்துக்கான உரிமை மறுக்கப் பட முடியாது. ஒன்றுபட்ட வாழ்தலை அதன் சாத்தியத்தை ஏற்றுக் கொள்வது அந்த மக்களின் தெரிவு. திணிக்க வேண்டிய ஒன்றல்ல. பாலஸ்தீனம் மட்டும்தான் இருக்க முடியும் – அதற்குள் வேண்டுமானால் யூதர்கள் இருந்து விட்டுப் போகட்டும் எனப் பேச முடியாது. அதைத் தாண்டி வரலாறு நகர்ந்து விட்டது. வரலாற்றைப் பின்னோக்கி நகர்த்த முடியாது. சோசலிச திட்டமிட்ட பொருளாதார அடிப்டையில் அத்தகைய ஒரு தேசத்தில் வாழ்தல் சாத்தியப் படலாம். முதாளித்துவ அடிப்படையில் – உதாரணமாக ப்பாட்டா அல்லது கமாஸ் அரச ஆட்சியில் யூதர்கள் எவ்வாறு வாழ்வது? அதை யூதர்களால் கற்பனை செய்ய முடியுமா ? அதற்காக விட்டுக் கொடுத்து அவர்கள் வரப் போகிறார்களா? அல்லது மீண்டும் யூதர்கள்மேல் வன்முறை  திணித்து அவர்களைக் கட்டுப் படுத்துவதா? இது போன்ற கேள்விகளை கேட்டு நாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.

இஸ்ரேல் இருக்கும் வரை பாலஸ்தீனம் சாத்தியமில்லை எனவும் சிலர் கூறுவர். முதலாளித்துவ இஸ்ரேல் அரசு தமக்கு பக்கத்தில் ஒரு பாலஸ்தீன தேசம் உருவாகுவதை அனுமதிக்காது என்பது சரியான கணிப்புத்தான். வெஸ்ட்பாங், காசா தனித்து இருக்கிறது இவற்றை இணைத்து ஒரு நாடு உருவாகுவது எப்படிச் சாத்தியம் எனவும் கேட்பர். அதன் சாத்தியம் இல்லைத்தான். இது தவிர ஜெருசலேம் யார் தலைநகரம் என்ற பஐம் சிக்கலும் உண்டு. ‘சாத்தியம் எது’ – ‘யதார்த்தம் எது’ என்ற அடிப்படையில் பார்ப்பதானால் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்குள் வாழ்வது மட்டுமே சாத்தியம் என்ற முடிவுக்குத்தான் நாம் வரமுடியும். தமக்கான சனநாயக உரிமைகள் வழங்கப்படும் தருணம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு பல பாலஸ்தீனர்கள் வருவதும் நடக்கலாம். ஆனால் இது தன்னார்வ முறையில் – அவர்கள் தாமக எடுத்த முடிவாக இருக்குமா? அதைச் சாத்தியப்படுத்த எத்தகைய அரசு தேவைப்படும்?

பாலஸ்தீனர்கள் உடன்பட்டு வாழ்வதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் அடக்குமுறைதான் அவர்களின் தேசியக் கோரிக்கையைப் பலப்படுத்துகிறது. ஆரம்பத்தில் தனியாக ஒரு நாடு என்ற கோரிக்கை பலப்பட்டு இருந்தமையை அறிவோம். இஸ்ரேல் அரசின் வன்முறை – அவர்களின் திட்ட மிட்ட நிலப்பறிப்பு – குடியேற்றம் போன்ற நடவடிக்கைகள்தான் அந்த நிலைப்படு மாற முதன்மைக் காரணம். தற்போது ஒரு தேசம் என பேசப்படுவது பாலஸ்தீனம் என்ற ஒரு தேசம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டின் அடிப்படையில் இருந்து வைக்கப் படுகிறது. அது சாத்தியப்படப்போவதில்லை. இஸ்ரேலியர்களின் அழிவின் மூலம்தான் அது சாத்தியம் எனத் தெரிந்தும் சிலர் இது பற்றி பேசுகிறார்கள்.

 

இதனால்தான் பாலஸ்தீர்களுக்கான தனித்தேசம் என்ற கோரிக்கை எழுகிறது. பாலஸ்தீனமும் இஸ்ரேலும் என்ற ‘இரு தேச’’ நிலைபாட்டை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மேற்கு நாடுகள் சில கூட தள்ளப்பட்டுள்ளன. வலதுசாரிய பாலஸ்தீன அதிகார சக்திகள் பலவும் அதை ஏற்றுக் கொள்கின்றன. இதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என்ற நிலைதான் இன்று இருக்கும் நிலை. தவிர இந்த சக்திகள் முன்வைக்கும் ‘திட்டம்’ யுத்தத்தை ‘தீர்வுக்கு’ கொண்டுவருவதாக இருக்காது. இரு தேசங்கள் நிரந்தர யுத்தத்தில் இருப்பது ஒன்றும் தீர்வல்ல. அங்கு இருக்கும் வளங்கள் யார் கட்டுபடுத்துவது அது எவ்வாறு நடக்கிறது என்பதோடு தொடர்பு பட்டதுதான் இதுவும். அதனால்தான் ஒரு சோசலிசத் திட்டமிடல் அடிப்படையில்தான் அத்தகைய இரு தேசம் உருவாவதும் – அவை ஒரு கொன்பிடரேசன் அடிப்படையின் இணைந்து வளங்களை பகிர்வதும் – சாத்தியம் என நாம் பேசுகிறோம். அதுவும் நிரந்தரமான நிலைப்பாடு அல்ல. மத்திய கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள சிக்கல்களுக்கு அவ்வளவு இலகுவில் தீர்வுகளைப் பொக்கட்டில் கொண்டு திரிய முடியாது.

யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் தேசிய உரிமை உண்டு. அங்குள்ள வளங்கள் அந்த மக்களுக்கானவை. யாரையம் யாரும் அடக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நடைமுறை ஏற்றுக் கொள்ள முடியாது. போன்ற அடிப்படைகளை ஏற்றுக் கொண்ட நிலையில் இருந்தே எமது கோரிக்கை மற்றும் திட்டமிடல்கள்  உருவாக வேண்டியது அவசியம். அவ்வாறு சிந்திப்பவர்கள் ஆற்றில் இருந்து கடல்வரை பாலஸ்தீனம் விடுதலை அடையும் என மேம்போக்காகக் பேச முடியாது – சுலோகங்களை வைக்க முடியாது. ஒரு தேசம் பற்றிப் பேசுபவர்களின் பக்கம் இருந்து வரும் போதாமை அது.

இஸ்ரேலிய அரச வன்முறையைக் கடுமையாக கண்டிக்கும் அதே தருணம் நாம் தீர்வு பற்றியும் சிந்திக்க வேண்டும்.

பின்வறுக் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப் படவேண்டும்

 • காசா மீதும் பாலஸ்தீன பகுதிகளிலும் நடக்கும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
 • உரிமைகளுக்குப் போராடும் பாலஸ்தீனர்கள் மேல் வன்முறை அடக்குமுறை செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
 • காசா மீதான முற்றுகை உடனடியாக நிறுத்தப்பட்டு, தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் உடனடியாக வழங்கப்படவேண்டும்.
 • பாலஸ்தீனக் குடும்பங்கள் அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
 • பாலஸ்தீனியர்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் தாக்கபடுவதை தடுக்கும், சனநாயக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பு கமிட்டிகள் கட்டப்படவேண்டும்.
 • பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்து இருக்கும் இராணுவம் வெளியேற்றப்படவேண்டும்.
 • கூட்டம் கூடும் உரிமை, பேச்சு உரிமை, போராடுவதற்கான உரிமை,மத உரிமை, முதற்கொண்டு அனைத்து சனநாயக உரிமைகளையும் எந்த கட்டுப்படும் இன்றி வழங்கப்படவேண்டும்.

 

மேலதிக கோரிக்கைகள்/புள்ளிகளையும் நாம் கவனத்திற்கு கொண்டுவருவோம்.

 • பாலஸ்தீனிய விடுதலைக்கான போராட்டம் சனநாயக முறையில் கட்டப்படவேண்டும்.
 • பாலஸ்தீனத்துக்குள்ளும் இஸ்ரேலுக்குள்ளும் இருக்கும் தொழிலாளர் சங்கங்கள் – மற்றும் அமைப்புக்களின் சுயாதீன தன்மயைக் காக்க வேண்டும். அவர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
 • மத்திய கிழக்கு வளங்கள் அங்கு வாழும் மக்களின் சொந்தமாக்கப்பட வேண்டும். அவை திட்ட மிட்ட பொருளாதாரம் மூலம் அங்குள்ள மக்களுக்கு பகிர்வது நிறைவேற்றப்படவேண்டும். அதைச் சாத்தியப்படுத்த மத்திய கிழக்குச் சோசலிச கண்பிடரேசன் நோக்கி நகர்வது அத்தியாவசியம். தனார்வ முறையில் – தாமாக கபிடரேசனில் இணையும் தேசங்கள் வளங்களைப் பகிரும் திட்டமிடலை மக்கள் நலனை முதன்மை படுத்தி முன்னெடுக்க முடியும்.
 • பாலஸ்தீனியர்களின் –மற்றும் யூதர்களின் தேசியக் கோரிக்கை நிறைவேற்றப் படவேண்டும். முதலாளித்துவ கட்டமைப்புக்குள்ளேயே சாத்தியப்படுத்தக் கூடிய சனநாயக கோரிக்கைதான் இது. ஆனால் முதலாளித்துவ சக்திகளின் கட்டுப்பாட்டில் இதைச் சாதிப்பது சாத்தியமில்லை என்பதை வரலாறு தெளிவுபடுத்தி உள்ளது. சோசலிச பாலஸ்தீனம் – சோஷலிச இஸ்ரேல் நோக்கி நகராமல் தேசிய அபிலாசைகள் நிறைவாகுவது சாத்தியமில்லை. மத்திய கிழக்கு சோசலிச கண்பிடரேசனின் பகுதியாக இது உருவாவது சாத்தியப்படும். ஜெருசலேம் இரு பகுதியும் பகிர்ந்து கொள்ளும் பொதுத் தலை நகரமாக இருக்க முடியும்– அல்லது இரு தலைநகரை உள்வாங்கிய இடமாக ஜெருசேலம் இருக்க முடியும்.
 • எத்தகைய எல்லைகள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விட முடியாது. தொழிலாளர் –பொதுசன இயக்கம் முன்னெடுக்கும் போராட்டம் சனநாயாக முறை உரையாடல் மூலம் அதை தீர்மானிக்க முடியும். எல்லைகள் பற்றியது மட்டுமின்றி பல்வேறு பகிர்வுசார் சனநாயகக் உரையாடலும் தெரிவும் அத்தருணம் நிகழ வேண்டி இருக்கும். போராட்டம் முன் தள்ளும் ஒற்றுமையின் அடிப்படையிலேயே இந்த சனநாயக உரையாடல் சாத்தியப்படும்.
 • இந்த தேசிய கோரிக்கை அங்கு வாழும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளையும் வழங்கிய முறையில் முன்வைக்கப்படவேண்டும்.