அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்

இஸ்ரேல் குண்டுவீசுவதைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளபோதும் காசாவின் மேலான முற்றுகை நிறுத்தப்படவில்லை. போராட்ட நடவடிகைகளில் ஈடுபடுபவர்கள் மேல் தாக்குதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பாடிருக்கும் போராட்டம் நிறுத்தப்படாது. கலந்துகொள்ளுங்கள். 

பாலஸ்தீனர்கள் கண்மூடித் தனமாக கொல்லப்பட்டது உங்களுக்கு தெரியும். காசாவில் குடும்பங்கள் இரவில் தூங்கச் செல்லும் பொழுது ஒன்றாகத் தூங்குகிறார்கள். தமது சொந்தங்களை ஒவ்வொன்றாக இழந்து துயர் அனுபவிப்பதைத் தாங்க முடியாது ஒட்டுமொத்தக் குடும்பமாக செத்துப் போவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். இஸ்ரேல் அரசின்  குண்டு வீச்சில் குடும்பம் குடும்பமாகவும் இறந்து போகிறார்கள். ‘இதோ இங்கு இஸ்ரேலிய குண்டு விழப் போகிறது பாருங்கள்’ எனத் தமது கமராவை ஒரு கட்டிடம் முன் வைத்து விட்டுத், தனது நேயர்களுடன் காத்து இருந்தது அல்-ஜசீரா ஊடகம். அங்கு குண்டு வந்து விழுகிறது. எங்கள் கண்களுக்கு முன்னாள் – எங்கள் காதுகளும் மனங்களும் வெடிக்க குண்டுகள் சிதறுவதைப் பார்த்தோம். 

இது இருபத்தி ஓராம் நூற்றாண்டில் நடக்கிறது தோழர்கள். உங்கள் கைகளை நுள்ளிவிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் – உயிரோடுதான் இருக்கிறீர்களா? அப்படியாயின் உங்கள் உடல், உயிர், குரல் அனைத்தையும் அடக்குமுறைக்கு எதிராகத் திருப்புங்கள்.  

 வருபவர்கள் வாருங்கள் போராட்டத்திற்கு. உங்கள் கோபக் குரலை – எதிர்ப்பைப் பதிவு செய்வது மிக அவசியம். மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தி – போராட்ட வளர்ச்சி – அடக்குமுறையைத் தாங்கும் அதிகார சக்திகளின் மேல் அழுத்தத்தை உருவாக்கும். ஆனால் அது மட்டும் போதாது தோழர்கள்.  

போராட முன்வருவோர் –எத்தைகைய போராட்டம், எத்தகைய திட்டமிடல், எத்தகைய அமைப்பாகத் திரள்வது என்பது நோக்கியும் நகரவேண்டும்.  

நாம் முன்வைக்கும் கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள். அவை எழுந்தமானதாக வைக்கப்பட முடியாது. அவற்றை நாம் எந்த புரிதலில் இருந்து வந்தடைகிறோம் – எந்த திசையில் நகர்வதற்காக முன்வைக்கிறோம் என்பவை முக்கிய கேள்விகள்.  

பாலஸ்தீனத்தில் நடப்பது பற்றி நாம் அக்கறை கொள்ளத் தேவை இல்லை–  எமது பிரச்ச்சினைகள்தான் முக்கியம் எனச் சிலர் வாதிடலாம். போராட்ட அரசியல் என்பது தனித்து இயங்கும் ஒன்று அல்ல. ஒவ்வொரு போராட்டத்துக்கும் அரசியற் தொடர்பு உண்டும். வெற்றி – தோல்வி ஏனைய போராட்டங்களில் செல்வாக்குச் செலுத்துகிறது. இலங்கை அரசு புலிகளை அழித்து முடித்த வழிமுறையை தாம் பின்பற்றப் போவதாக துருக்கிய அதிபர் எர்டகோன் அறிவித்தது அறிவோம். இலங்கையில் நடந்த அழிவு குர்திஸ் போராளிகளுக்கும் பின்னடைவுதான். பாலஸ்தீன போராட்ட்டம் சரியான திசையில் செல்வதும் வெல்வதும் எலாருக்குமான வெற்றிதான். 

போராட்ட சூழ்நிலை – இடங்கள் – போக்குகள் என பல்வேறு தனிப்பட்ட வேறுபாடுகள் உண்டு. இடத்துக்கு இடம் இருக்கும் தனித்துவமான காரணிகளை நாம் உள்வாங்கத்தான் வேண்டும். உதாரணமாக ஈழ தனி நாட்டுக் கோரிக்கையும், பாலஸ்தீன தனிநாட்டுக் கோரிக்கையும் வேறுபாடுகள் கொண்டது. பாலஸ்தீனர்கள் பிரிந்துபோகும் உரிமையைக் கோரவில்லை – தமது நாட்டை பறித்தததற்கு எதிராக போராடுகிறார்கள். பாலஸ்தீனர்களும் யூதர்களும் எவ்வாறு தமது தேசய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வது என்ற சிக்கலான கேள்வி அங்கு உண்டு. ஆனால் பொதுத்தன்மைகளும் நிறைய உண்டு. கொரோனா நெருக்கடி நிறுவிச் சென்றதில் இந்த அறிதலும் ஓன்று. இஸ்ரேலிய அரசு மட்டுமல்ல பாலஸ்தீனர்களின் எதிரி – அந்த அரசை தாங்கும், அதன் கொடுமைகளுக்கு உதவும் சக்திகளும் அவர்கள் எதிரிதான் என்ற புள்ளியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தெளிவு ஈழ விடுதலை பற்றிப் பேசுபவர்களுக்கும் அவசியம். ஒற்றை அரசுதான் எதிரி என்ற குறுகிய பார்வையை நாம் தாண்ட வேண்டும்.  

ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட பொழுது நாம் துடித்த அதே துடிப்புத்தான் பாலஸ்தீனத்திலும். யுத்த மறுப்பு என்று பெயரளவில் பேசியா பலர் உண்மையில் படுகொலையை நியாயப் படுத்தினர். படுகொலை அரசை எப்படியாவது காக்க வேண்டும் என்பது அவர்கள் பலரின் வாதங்களின் சாரமாக இருந்தது. இதை எல்லாம் தாண்டித்தான் எமது போராட்டம் மீண்டும் கட்டி எழுப்பப் படவேண்டி உள்ளது. பாலஸ்தீன போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு.  

 

போராட்டம் முடியும் வேளை ஒரு தெரு கூட்டம்/உரையாடல் ஒன்றையும் செய்ய உள்ளோம். தயவு செய்து அதிலும் கலந்து கொள்ளுங்கள்.  

  • கூட்டம் கூடும் இடம் : எம்பாங்மன்ட் (டெம்பிள் ஸ்டேசன் அருகே).  

(கூட்டம் அதிகரித்தால் டெம்பிள் ஸ்டேசன் மூடப்பட்டுவிடும் – நேரத்துக்கு வரவும் – இல்லை எனில் மாற்றய ஸ்டேசனில் இறங்கி நடந்து வரவும்.)  

  •  ஆரம்பிக்கும் நேரம் : ஒரு மணி – கூட்டம் அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருப்பதால் 12 மணிக்கு முன்பே வந்து சேரவும்.
  •   ஸ்டேசனுக்கு வெளியே தமிழ் சொலிடரிட்டி பாணர் இருக்கும் ஸ்டாலுக்கு வரவும். அதை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் அங்கிருக்கும் மாற்றிய ஸ்டால்களில் (சோசலிச கட்சி ஸ்டால் ஸ்டேசன் வாசலுக்கு முன் இருக்கும்) கேட்டால் காட்டுவார்கள்.  

(தேவை என்றால் போராட்ட ஒழுங்கமைப்பாளர் மதனுக்கு தொலைபேசி அடிக்கவும்.  சத்தம் காரணமாக பேச முடியாவிட்டால் டெக்ஸ்ட் செய்யவும். உடனடியாக அவர் உங்களைத் திருப்பி தொடர்பு கொள்ளுவார். அவர் இலக்கம் : 07454471030 )

  • மாஸ்க் அணிந்து வரவும். உங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பின் கலந்து கொள்வதை தவிர்க்கவும்.