மே 18 முள்ளிவாய்க்கால் நாள் என்பது தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசு மற்றும் அதன் கூட்டாளிகளால் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்ட நாள் மாத்திரம் அல்ல, உலகம் எங்கும் இருக்கும் தமிழ் மக்கள் இந்த பச்சை படுகொலைக்கு எதிராக அதை தடுத்து நிறுத்துவதற்காக வீதியில் இறங்கி இந்த அதிகார சக்திகளுக்கு எதிராக தமது ஓர்மையை வெளிப்படுத்திய நாளும் கூட, 2009 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அரசின் இனப்படுகொலை அதனால் ஏற்பட்ட தோல்வியின் விரக்கத்தியிலும் கூட மக்கள் போராட்டம் தொடர வேண்டும் என்பதை ஆதரித்தார்கள்.மக்கள் வீதிக்கு இறங்கி போராட வருவது என்பது ஒரு அரசியல் நிகழ்வு. போராடுவதற்கு வீதிக்கு வந்த மக்களை இந்த பன்னிரண்டு வருடங்களில் நாம் வீட்டுக்குள்ளே அமுக்கி விட்டோம். இலங்கை அரசை பொறிக்குள் விழுத்தி விட்டோம், எமது சாணக்கியம் வென்றுவிட்டது என்று தம் பட்ட்ங்கள் அடித்தோம். இன்று 2009 இல் அதிகாரத்தில் இருந்த சக்திகள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருக்கிறது. அதிகாரத்துக்கு வந்த ராஜபக்ச சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை முள்ளிவாய்க்காலில் இருந்த நினைவுத்தூபியை உடைத்ததன் மூலம் சொல்லியிருக்கிறார்கள். யுத்தக் குற்ற விசாரணை – நல்லிணக்கம் உருவாக்குதல் – தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பெறுதல் ஆகியன ஒருபோதும் நடக்காது என்ற உறுதியான செய்தியை ராஜபக்ச அரசு இந்த நடவடிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் நினைவு கூறுவதை கூட மறுக்கும் இந்த அரசு தாம் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் எதிரி என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுவும் ஒரு வகை யுத்த பிரகடனம் தான்.
பாலஸ்தீன மக்களை இஸ்ரேலிய அரசு கொன்று குவிக்கத் தொடங்கிய அதே சமயம் தாமும் அத்தகைய நோக்கில் இருந்து வேறு பட்டவர்கள் இல்லை என்பதை இலங்கை அரசு வெளிச்சப் படுத்தி உள்ளது.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களை கொடூரமாக கொத்து கொத்தாக கொன்றொழித்து அந்த இரத்தத்தின் மீது நின்றுகொண்டு ராஜபக்ச சகோதரர்கள் கூறினர். “இலங்கையின் இறையாண்மையை நாங்கள் மீட்டு எடுத்து விட்டோம்.இனி இலங்கையின் ஒரு பிடி மண்ணை கூட யாரும் எடுத்துவிட முடியாது”என்று. ஆனால் இன்று இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எந்த இடங்களும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இலங்கை வல்லாதிக்க அரசுகளால் கூறுபோட்டு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதை மீளத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சக்தி இலங்கை அரசுக்கு இல்லை.
இன்று இலங்கை கடனில் மூழ்கி இருக்கும் ஒரு நாடு. மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமான தொகையை தனது கடன்களுக்கான வட்டியாக திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு,உள்ளூர் உற்பத்தியை பெருக்க முடியாமை, மற்றும் அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் என்பன இலங்கை மக்களை நேரடியாக பாதிக்கிறது. இந்தக் கொரோனா நெருக்கடியால் இலங்கைக்கு அன்னிய செலாவணியை கொண்டுவரும் துறைகளான சுற்றுலா, ஆடை உற்பத்தி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா நெருக்கடியை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இலங்கையின் சுற்றுலாத்துறை உடனடியாக புது ஊக்கம் அடைய கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. இந்த நிலைமை இலங்கை மக்களின் கைகளில் பணம் புழங்குவது குறைத்து இருக்கிறது. மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இலங்கை அரசு வங்கிகளின் கடன் வீதத்தைக் குறைத்திருக்கிறது. இதன் மூலம் உயர் நடுத்தர வகுப்பினர் வங்கிகளில் கடன் பெறுவதை ஊக்குவிக்கின்றது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும் ஏற்கனவே வடக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் நுண் கடன் திட்டம் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக பல சமூக பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி இருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வட்டிக் குறைப்பு சாதாரண மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றங்களையும் கொண்டு வரப்போவதில்லை. சிறு நடுத்தர தொழில்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது கூலிக்கு வேலை செய்பவர்கள் தமது அன்றாட வாழ்வுக்கான பணத்தினை சம்பாதிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இன்று இலங்கையின் வைத்தியசாலைகளின் படுக்கைகளை விட கொரோனா தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருக்க மேலதிகமாக முதலீடுகள் தேவைப்படுகிறது. இந்த நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்கு இலங்கைக்கு மேலும் மேலும் கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை. தற்போது இலங்கைக்கு கடன் வழங்க கூடிய ஒரே சக்தி சீனா மாத்திரமே. ஆயினும் சீனா வழங்கும் கடன்கள் மற்றும் முதலீடுகள் அனைத்தும் இலங்கை லாபம் ஈட்ட முடியாத கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான சீன முதலீடுளாகவே இருக்கின்றது. அவை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை. மாறாக இலங்கை இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சீனாவுக்கே நீண்ட கால குத்தகைக்கு கொடுக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
கொரோனா நெருக்கடி இலகுவில் சாதாரண நிலைக்கு திரும்ப போவதில்லை. நிலைமை சமூகத்துக்கு திரும்பத் தொடங்கினாலும், பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் எந்த பலமான உற்பத்தி அடிப்படைகளும் இலங்கை அரசிடம் இல்லை. ஆடைகள் செய்யும் ஆலைகள், சுற்றுலாத் துறை போன்ற –மற்ற பொருளாதாரங்களில் தங்கி இருக்கும் நிலைதான் இலங்கையில் இருக்கிறது. தேயிலை உற்பத்தி போன்ற ஒரு சில உற்பத்திகளும் போதுமானவை அல்ல. நீண்ட காலத்திற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்த நிலையிலேயே இருக்கப் போகிறது இலங்கை. கடனை நம்பி இருப்பதைத் தவிர வேறு வழியில்லை இலங்கை அரசுக்கு. ‘கடன்கொண்ட நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற பாடல் தற்போதைய இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு நாற்றாக பொருந்தும். கடன் வழங்கியவர்களின் கைப்பாவையாக ஆடுவதைத் தவிர வேறு வழியில்லை இலங்கை அரசுக்கு. ஆனால் வாக்கு வழங்கிய மக்கள் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. பாராளுமன்றம் தமக்கு சார்பற்ற கொள்கைகள் முன்னெடுக்க அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கப் போவதில்லை. போராட்டங்கள் பல தளங்களில் வெடிக்கும் சந்தர்ப்பமே உண்டு. ‘அமைதியான’ நிலையை காத்துக்கொள்ள வேண்டும் என்ற பெயரில் இராணுவ மயப்படுத்துவது – சர்வாதிகார நிலை நோக்கிச் செல்வதும் நிகழ்வது இதன் தொடர்ச்சி தான். ஒருவகை போனபார்ட்டிச ஆட்சியே இலங்கையில் நீடிக்கும் நிலை இருக்கிறது.
உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்கனவே சீர்குலைந்து இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைத்து வருகிறது. இலங்கைக்கு வலிமையான தலைவர் வேண்டும் என்கிற பிரச்சாரத்தின் மூலம் தனிச் சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியானார் கோத்தபாய ராஜபக்ச. இந்தப் பொருளாதார நெருக்கடி மற்றும் அதைத் திறம்பட கையாள முடியாத நிலை என்பனவற்றால் ராஜபக்சக்களின் அரசாங்கத்தின் செல்வாக்கு தென்பகுதியில் குறைவடைந்து வருகிறது. தமது செல்வாக்கை தக்க வைப்பதற்கும் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கும் ராணுவ அதிகாரத்தை பலப்படுத்துவதை நோக்கி ராஜபக்சக்கள் நகர்கிறார்கள். கோத்தபாய ராஜபக்ச நாட்டின் சிவில் சேவைக்கு சமாந்தரமாக ஒரு ராணுவ அதிகாரத்தை நிறுவ முயல்கிறார். இதன் அடிப்படையில் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இலங்கையின் 25 மாவட்டங்களில் இணைப்பாளர்களாக ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களினால் சிவில் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எதிர்ப்பதற்கு சிவில் சேவை அதிகாரிகள் பயப்படுகின்றார்கள். அத்தோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் ஈடுபட்ட கொலைகாரர்கள் எல்லோருக்கும் அரச பதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் போக்கு இலங்கை ராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது என்பதைக் காட்டுகிறது.
பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தில் பேசிய இலங்கையின் ஜனாதிபதி “நான் பௌத்த மக்களின் தலைவன்” என்பதில் பெருமை கொள்வதாக கூறினார். இதன் மூலம் தனிச் சிங்கள வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நான், பௌத்த சிங்கள மக்களுக்காகவே இருக்கின்றேன் என்ற தனது இனவாத நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டார்.இந்த அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை எதிர்ப்பதற்கோ சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கோ பலமான எதிர்க்கட்சி எதுவும் இலங்கையில் இல்லை.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் பலவீனப் படுத்தப் பட்டுள்ளது. சிவில் அமைப்புக்கள் தளர்ந்து இருக்கின்றார்கள். இருக்கும் சில தொழிற்சங்கங்கள் கூட கட்சிவாரியாகப் பிரிந்து இருக்கின்றன. இன்று இலங்கையில் இருக்கும் மக்கள் தமது எதிர்ப்பினை கட்டுவதற்கான ஜனநாயக வெளி மறுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது வடக்கு கிழக்கு மக்களையும் சேர்த்துத் தான் பாதிக்கின்றது. 30 வருடகால யுத்ததின் அழிவு. அதன் பின்னரான வறுமை என்பன வடக்கு கிழக்கு மக்களின் எதிர்காலத்தை சூனியத்தை நோக்கி இழுக்கின்றது. வடக்கு கிழக்கு எங்கும் முன் எப்பொழுதும் இல்லாதவாறு வறுமையின் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து இருக்கின்றன. தமிழ் பேசும் மக்களின் அரசியல் பலமும் அழிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறான கையறு நிலையில் மக்கள் தமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை வேறு வழியில்லாமல் தேர்ந்து எடுக்கின்ற நிலையைத்தான் கடந்த தேர்தல்களில் பார்த்திருக்கின்றோம். அதனாலேயே வாக்குகள் அனைவருக்கும் பிரிந்து சென்று அரசியல் பிரதிநிதித்துவம் சிதறிக் கிடக்கிறது.
இன்று தமிழ் பேசும் மக்களின் மத்தியில் இருக்கும் வறுமை, அரசியல் வங்குறோத்து நிலை, நிச்சயமற்ற எதிர்காலம், என்பன மக்களை ஒரு கையறு நிலையை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இவ்வாறான நிலைமையை தமக்குச் சாதகமாக்க அனைத்து பிற்போக்கு சக்திகளும் வடக்கு கிழக்கில் அணிவகுத்து நிற்கின்றன. உலகில் இருக்கின்ற அனைத்து மத அமைப்புகளும் தமது கூடாரத்தை வடக்கு கிழக்கில் போட்டிருக்கிறார்கள். மக்களும் கையறு நிலையில் எந்தப் பேயை பற்றிக்கொண்டாவது தேறிவிட முடியாதா என்று பார்கிறார்கள். ஆபிரிக்க கண்டத்தில் இருக்கும் சில வறிய நாடுகளின் நிலையை நோக்கித்தான் இலங்கை சென்றுகொண்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் தேசிய கோரிக்கைக்கான நீண்ட போராட்ட வரலாறு என்பன இன்று அந்த கோரிக்கையை மிகவும் கூர்மைப்படுத்தி இருக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று எந்த தமிழ் கட்சிகளும் தமிழ் தேசியத்தை பேசாமல் வாக்கு வாங்க முடியாத நிலைமைதான் உருவாக்கி இருக்கிறது. இலங்கை அரசின் அடக்கு முறையையும் மீறி இன்று மக்கள் ஆங்காங்கே எதிர்ப்பை காட்டுவதற்கு தொடங்கியிருக்கின்றனர். இதற்கு அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை என்ற பேரணியைக் கூறலாம். யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தையும் சுட்ட முடியும். ஆனால் சரியான அரசியல் நிலைப்பாடு/ தலைமைத்துவம் அங்கு இல்லை. மாறாக இவற்றைக் கபளீகரம் செய்யும் அரசியல்வாதிகள் தம்மை நிலைநிறுத்தி மக்களின் கோரிக்கையை நீர்த்துப் போக வைத்து விடுகின்றார்கள். இவ்வாறு மக்களின் எழுச்சியை தமது சுயநலத்திற்காக பாவிப்பவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மக்களின் பொருளாதார மேம்பாடு, ஜனநாயக உரிமைகள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் தேசிய அபிலாசை என்பனவற்றை எவ்வாறு வென்றெடுப்பது என்பதுதான் தமிழ் பேசும் மக்கள் சார்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களின் முக்கிய செயற்பாடாக இருக்க வேண்டும். இவற்றை வென்றெடுப்பது என்பது ஒரு தீவிரமான விடயம். நாளை தமிழீழம் எடுப்போம், தீபாவளிக்குள் தீர்வு எடுப்போம், என்று வாய்ச் சவடால்கள் விடும் வேலை அல்ல இது. இந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கு நீண்டகால மற்றும் உடனடி திட்டமிடல்களை முன் வைக்க வேண்டும்.
இந்த உரிமைகளை வென்று எடுப்பதானால் இந்த ராஜபக்சேக்களின் அரசு வீழ்த்தப்பட்டே ஆக வேண்டும். இதையேதான் அனைத்து தமிழ் அமைப்புகளும் கூறுகின்றன. இவ்வாறு செல்பவர்களின் மீது எங்களுக்கு எழுகின்ற கேள்வி, நீங்கள் உண்மையிலேயே ராஜபக்சக்களின் அரசை வீழ்த்துவதை நோக்கி செயல்படுகிறார்களா? என்பதே. நீங்கள் தெற்கில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் பற்றியோ அதிலே செல்வாக்குச் செலுத்துவதை பற்றியோ எந்தவிதமான அக்கறையும் இன்றி இருக்கின்றீர்கள். தெற்கு அரசியல்தான் தமிழ் மக்களின் அரசியல் தலையெழுத்தையும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. உடனே நாங்கள் அவ்வாறு தான் செயல்படுகிறோம். கடந்த நல்லாட்சி அரசில் நாங்களும்தான் பங்குபற்றினோம் என்று வியாக்கியானம் கூறாதீர்கள். அத்தகைய இணக்க அரசியலால் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மேலும் பலவீனப் பட்டிருகிறதே தவிர வேறு பலன் இல்லை. தவிர, நீங்கள் கூறுவது பாராளுமன்றத்துக்குள் சார்பு நிலை எடுப்பது பற்றியது. நாங்கள் கூறுவது அதற்கு வெளியே மக்கள் சார்பான பலத்தினைக் கட்டிப் பாராளுமன்ற அதிகாரத்தை அழித்தொழிப்பது பற்றியது. அதற்கு எம்மோடு நின்று போராடக்கூடிய தென்பகுதி நட்பு சக்திகள் அனைவரோடும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்கிறோம்.
இது ஒரு நீண்டகால வேலைத்திட்டம். இலங்கையில் மக்கள் சார் சக்தி அதிகாரத்திற்கு வருவது என்பது தெற்காசியாவில் மக்கள் அதிகார சக்திகள் பலப்படுபதுடன் தொடர்புடையது. இதற்கு நாங்கள் தெற்காசியாவில் இருக்கின்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. மாறாக “இந்திய அரசே வா! மோடி வா!” என்று அழைப்பது தென்பகுதியில் இருக்கும் பௌத்த பேரினவாத அரசையே பலப்படுத்தும். மோடியும் ராஜபக்சேவும் வேறு வேறு அல்ல. அவர்கள் அரசு அதிகாரத்தின் வேறு வேறு முகங்கள் மட்டுமே.
எக்காரணம் கொண்டும் நாம் போராட்ட அரசியலை கைவிட்டுவிட முடியாது. பலமான பூகோள சக்திகள் எமது நலனுக்கு ‘சார்பான நிலை’ எடுக்கக்கூடும் என்ற வெற்றுக் கனவோடு எமது பலத்தை நாமே உடைத்துக் கொள்ளக்கூடாது. போராட்ட அரசியலை கைவிட்ட நிலை என்பது மிக பலவீனமான நிலை. போராட்டத்தை கைவிடுங்கள் என்ற கோசம் ‘எங்களுக்கு அடிமையாக இருங்கள்’ என்பதற்கு சமனானது. எமது போராட்ட அரசியல் எத்தகையது – அதன் சரி பிழைகள் என்ன என்பவை வேறு விசயம். ஆனால் இணக்க அரசியோல் – மிதவாத அரசியல் நோக்கி நாம் நகர்வது எமஹ்டு எதிர்காலத்தை முடக்கும் செயல். ஒட்டுமொத்த ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையை நெஞ்சில் சுமப்பவர்கள் அத்தகைய செயலைச் செய்ய முடியாது. போராட்ட அரசியலின் அவசியத்தை உணர்வோர் ஒன்றுதிரட்டு பலப்பட்டுக் கொள்வது அவசியம். அதற்காக நீங்கள் முன்வரவேண்டும் என உங்களை அழைக்கிறோம்.புலத்தில் இருக்கின்ற தமிழ் பேசும் மக்களுக்காக வேலை செய்கின்ற அமைப்புகள் ஒரே தளத்தில் தமது திட்டங்களை வைக்க கூடிய ஒரு ஜனநாயக வெளியை நோக்கி நகர்வது இன்று அவசியம். அத்தோடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற இலங்கை அரசை எதிர்ப்பதற்காக இலங்கையில் இருக்கின்ற முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஒரு தளத்தை அமைக்க முயல வேண்டும். இது இலகுவான வேலை இல்லை என்பது சரியே. இருப்பினும் இவ்வருடம் அதற்கான வேலைகளையாவது நாம் ஆரம்பித்து வைக்கவேண்டும். யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்பகுதியில் இருக்கும் ஜனநாயக முற்போக்கு மாணவர் சக்திகளுடன் ஒரு திட்டமிடலுடன் இணைந்து செயல்படுவதை நோக்கி சிந்திக்க வேண்டும். அன்மையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் உடைப்பு விவகாரத்தில் தென்பகுதி மாணவர்களின் எதிர்ப்பும் இலங்கை அரசை ஒரு கணம் ஆட வைத்ததைக் கண்கூடாக கண்டீர்கள். இந்த பலம் மேலும் பலப்பட வேண்டும்.
இருக்கின்ற தமிழ் கட்சிகள் சரியில்லை என்று அவர்கள் மீது விமர்சனங்களை மாணவர்கள் வைக்கிறார்கள். அரசியல் கட்சி தலையீடு வேண்டாம் என்றோ, அல்லது அரசியலே வேண்டாம் என்றோகூட மாணவர்கள் தவறான முடிவுகளுக்கு தாவுகிறார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட போராட்டம் என்று எதுவும் இல்லை. அமைப்பாகத் திரளாத போராட்டம் நீண்டு நிலைத்து அதிகாரத்துக்கு சவால் விட்ட வரலாறும் இல்லை. எத்தகைய போராட்ட அரசியலை நாம் முன்னெடுப்பது – எத்தகைய அமைப்பாக திரள்வது என்பவைதான் முக்கியமான கேள்விகள். ஆனால் மாணவர்கள் போராட்டங்களின் முடிவில் தமிழ் கட்சிகள் சொல்வதைப் போலவே தங்களது கோரிக்கைகளை ஐநாவை நோக்கி சுருக்கிக் கொள்கிறார்கள். நாங்கள் அரசியல் ரீதியாக எமது பலத்தினை திரட்சியடையவைக்காத வரை, எமக்கான உரிமைகள் ‘வழங்கப்படும்’ என எதிர்பார்ப்பது தவறு. கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஐநாவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருக்கும் சிறு விடயமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கூட இன்னும் நடைமுறைப் படுத்தப்டவில்லை. இலங்கை அரசு உட்பட அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயத்தைக் கூட ஏன் இன்னும் நிறைவேற்ற முடியவில்லை? இன்று வரை அந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை எனபதன் பின்னிருக்கும் அரசியல் என்ன?
மக்களுக்காகத் துணிந்து போராட்டங்களை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இராணுவத்தின் மீது கல்லெறிந்து அடிவாங்குவதால் மட்டும் எதுவும் சாதித்துவிட முடியாது என்பதை அறிய வேண்டும். எமது ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக அதை நோக்கி போராடுவதற்கான ஒரு அமைப்பை நாம் கட்டுவது அவசியம் – அதுவே நமக்கான சிறந்த ஆயுதம்.
தோழர்களே!! ஆயுத மயப்படுங்கள். போராட்ட அரசியல் ஒன்றுதான் இலங்கை தமிழ் மக்களுக்கான ஒரே தெரிவு. இதை எதிர்ப்பவர்களை மக்கள் நிராகரித்தே ஆக வேண்டும். ஆதரிப்பவர்கள் தமது திட்டங்களை மக்கள் முன் வைக்க வேண்டும்.