பாலஸ்தீனம்/ஈழம் – போராட்ட அரசியல் தவிர்க்கவேண்டிய இரட்டை வேடங்கள். 

National Demonstration For Palestine.
லண்டனில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் தமிழ் சொலிடாரிட்டி
  1. கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள்

நாம் முன்வைக்கும் கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள். அவற்றை எழுந்தமானதாக வைக்க முடியாது. அவற்றுக்கு  நாம் எந்தப் புரிதலில் இருந்து வந்தடைகிறோம் – எந்தத் திசையில் நகர்வதற்காக முன்வைக்கிறோம் என்பவை முக்கிய கேள்விகள். 

பாலஸ்தீனத்தில் நடப்பது பற்றி நாம் அக்கறை கொள்ளத் தேவை இல்லை –  எமது பிரச்ச்சினைகள்தான் முக்கியம் எனப் பார்ப்பது அவசியம் எனச் சிலர் கருதலாம். 

போராட்ட அரசியல் என்பது தனித்து இயங்கும் ஒன்று அல்ல. ஒவ்வொரு போராட்டத்துக்கும் அரசியற் தொடர்பு உண்டு. ஒரு போராட்டத்தின் வெற்றி – தோல்வி ஏனைய போராட்டங்களில் செல்வாக்குச் செலுத்துகிறது. இலங்கை அரசு புலிகளை அழித்து முடித்த வழிமுறையை தாம் பின்பற்றப் போவதாக துருக்கிய அதிபர் எர்டகோன் அறிவித்ததை  அறிவோம். இலங்கையில் நடந்த அழிவு குர்திஸ் போராளிகளுக்கும் பின்னடைவுதான். பாலஸ்தீன போராட்டம் சரியான திசையில் செல்வதும் வெல்வதும் எல்லோருக்குமான வெற்றிதான்.

போராட்டச் சூழ்நிலை – இடங்கள் – போக்குகள் எனப் பல்வேறு தனிப்பட்ட வேறுபாடுகள் உண்டு. இடத்துக்கு இடம் இருக்கும் தனித்துவமான காரணிகளை நாம் உள்வாங்கத்தான் வேண்டும். உதாரணமாக ஈழ தனி நாட்டுக் கோரிக்கையும், பாலஸ்தீன தனிநாட்டுக் கோரிக்கையும் வேறுபாடுகள் கொண்டது. பாலஸ்தீனர்கள் பிரிந்துபோகும் உரிமையைக் கோரவில்லை – தமது நாட்டை பறித்ததற்கு எதிராகப் போராடுகிறார்கள். பாலஸ்தீனர்களும் யூதர்களும் எவ்வாறு தமது தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வது என்ற சிக்கலான கேள்வி அங்கு உண்டு. ஆனால் பொதுத்தன்மைகளும் நிறைய உண்டு. கொரோனா நெருக்கடி நிறுவிச் சென்றதில் இந்த அறிதலும் ஓன்று. இஸ்ரேலிய அரசு மட்டுமல்ல பாலஸ்தீனர்களின் எதிரி – அந்த அரசை தாங்கும், அதன் கொடுமைகளுக்கு உதவும் சக்திகளும் அவர்கள் எதிரிதான் என்ற புள்ளியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தெளிவு ஈழ விடுதலை பற்றிப் பேசுபவர்களுக்கும் அவசியம். ஒற்றை அரசுதான் எதிரி என்ற குறுகிய பார்வையை நாம் தாண்ட வேண்டும். எந்த ஒரு  அரசும் தனித்து இயங்குவததில்லை. 

நாம் முன்னெடுக்கும் திட்டமிடல் எமது விருப்பு வெறுப்பு சார்ந்ததாக இல்லாமல் அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டுமானால் – அந்த அரசியல் நிலைப்பாடு சமூகம் சார் புறநிலை ஆய்வின்/அறிதலின் அடிப்படையில் இருந்து உருவாக வேண்டும். முன்னுக்கு பின் முரணாக பேசுவது – எழுந்தமானத்துக்கு கருத்துக்கள் வைப்பது என்பவற்றை போராட்ட அரசியல் பேசுபவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசு என்றால் என்ன?, சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது?, ஒடுக்குமுறைகள் எவ்வாறு உருவாகின்றன?  – அவற்றை தொடர்ந்து செய்யும் சக்திகள் எவை? – எதற்காக அது நிகழ்கிறது ? போன்ற கேள்விகள் எழுந்தமானவை அல்ல. இவற்றை எவ்வளவு தூரத்துக்கு விஞ்ஞான முறையில் நாம் அணுக முயல்கிறோமோ அவ்வளவு தூரத்துக்கு எமது திட்டமிடல் சரியான திசையில் நகரும் வாய்ப்பு அதிகரிக்கும். 

ஒடுக்கும் அதிகாரம் முன்வைப்பது போன்ற, இடத்துக்கு ஒரு கதை – நேரத்துக்கு ஒரு நடவடிக்கை என்று போராட்ட சக்திகள் இயங்கமுடியாது. லாப நோக்கு என்ற ஒற்றை நலனைக் காக்க மனிதர் உட்பட அனைத்து உயிரினங்கள் – மற்றும் சுற்றுச் சூழல் அழிவதையும் ஏதோ ஒரு விதத்தில் நியாயப்படுத்துவர் அதிகார சக்திகள். சுய நலம் சார்ந்து சிந்திப்பது – அகவய அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார் முடிவுகள் எடுப்பது – எமக்கு எதிரான சக்திகள் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டும் என்பதற்காக எதிர்ப்பு காட்ட மட்டும் ஏதாவது ஒரு நிலைபாட்டைத் தூக்குவது – போன்ற நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்க முடியாது. 

நாம் என்ன நிலைப்பாட்டை முன்வைக்கிறோம் என்பது எமது அரசியலின் பல பரிமாணங்களை வெளிக்காட்ட வல்லது. உதாரணமாக இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது 2009 காலப் பகுதியில் பலர் எடுத்த நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்ட முடியும். தற்போது பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இவர்கள் என்ன நிலைப்பாடை எடுத்தார்கள் என்பதை ஒபிட்டுப் பார்த்தல் அவசியம். பலரின் அரசியற் போதாமைகளை இது தெட்டத் தெளிவாக வெளிக்காட்டி விடும். 

2. வலதுசாரிகள் – போராட அரசியலின் எதிரிகள்.

ஈழ விடுதலை – தமிழ் ஈழம் – தனி நாட்டுக் கோரிக்கை எனப் பேசும் அமைப்புக்கள் சர்வதேச நிகழ்வுகள் பற்றி ஒரு சொட்டும் கவலைப் படுவதில்லை. ஈழ விடுதலைப் போராட்டத்தில் சர்வேதச நிகழ்வுகளின் தாக்கம் இருப்பதை அறிந்த இவர்கள் – அது பற்றி சில சமயம் பேசும் இவர்கள்- அதை உள்வாங்கி தமது அரசியல் நகர்வை திட்டமிடுவதில்லை. உலகெங்கும் நடக்கும் மனித உரிமை மீறல் – படுகொலைகள் பற்றியும் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக உலகெங்கும் நடக்கும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றி எந்த அக்கறையும் இவர்களுக்கு இல்லை. உண்மையில் இது இவர்களின் மிகப் பெரும் அரசியற் பலவீனத்தை சுட்டிக் காட்டுகிறது. இதில் பெரும்பான்மையானவர்கள் வலதுசாரிய அரசியல் நிலைப்பாடு (அதாவது சுயநல – லாப நோக்குள்ள – அதிகார சக்திகள் சார்பு)  நோக்கி நகர்ந்து நிற்கிறார்கள். இதனால் இவர்களால் படுகொலைகளைக் ‘கண்டிக்கக்’ கூட முடிவதில்லை. 

ஈழ விடுதலை பற்றி பேசும் எந்த ஒரு ஈழ அமைப்பும் பாலஸ்தீனியர் படுகொலை செய்யப் படுவது பற்றி கண்டு கொள்ளவில்லை. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் லண்டன் தெருக்களில் திரண்ட பொழுது தமிழ் சொலிடாரிட்டி அமைப்பைத் தவிர வேறு எந்த அமைப்பும் பங்குபற்றவில்லை. லண்டன் தவிர்த்த ஐரோப்பிய நாடுகளில் ஒரு சிலர் பங்கு பற்றிய பொழுதும் எந்த ஒரு அமைப்பும் இது பற்றி கண்டுகொள்ளவில்லை. ‘தமிழர்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு’ என்ற வெறுமையான செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டன. உலகெங்கும் பாலஸ்தீனர்களுக்கு தமிழர் ஆதரவு போராட்டம் என்ற ஆதாரமற்ற செய்தியை வெளியிட்ட தமிழ் கார்டியன் சுவிட்சர்லாந்தில் ஒரு சிலர் புலிக் கொடியுடன் பங்கு பற்றியிருந்த செய்தியையும் வெளியிட்டு இருந்தது. லண்டனை தளமாக கொண்டு இயங்கும்  தமிழ் கார்டியன் லண்டனில் நடந்த பெரும் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. வழமை போலவே தமிழ் சொலிடாரிட்டி நடவடிக்கைகள்- முன் வைக்கும் நிலைபாடுகளை அவர்கள் இருட்டடிப்பு செய்தனர். இதை தெரிந்தே செய்கின்றனர். உண்மையில் ‘தமிழர்கள் பாலஸ்தீனிய படுகொலைக்கு’ எதிராக திரளவே இல்லை –அதற்காகப் அமைப்புக்கள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இந்த உண்மையை இருட்டடிப்புச் செய்யாதீர்கள். 

இத்தகைய வலதுசாரிய அரசியலை வைத்துக்கொண்டு தங்களைப் ‘போராட்ட சக்திகளாக’ காட்டுவது மிகபெரும் போலித்தனம். போராட்ட அரசியல் நோக்கி நகரும் அனைவரும் இதை திட்டவட்டமாக புறக்கணிக்கவேண்டும். ஈழ விடுதலை – தமிழ் ஈழம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள். அது பற்றிய எந்தத் தீவிர அக்கறையும் இவர்களுக்கு கிடையாது. அதை நோக்கி நகரும் எந்த திட்டமிடல்களும் கிடையாது. தமிழ் மக்களின் ஆதரவை தங்கள் பக்கம் தக்க வைக்க மட்டுமே இது பேசப்படுகிறது. 

பொத்தாம் பொதுவாக ‘வன்முறையைக் கண்டிக்கிறோம்’ ‘பாலஸ்தீனியர் பாவம்’ போன்ற கதைகளை இஸ்ரேல் அரசு கூடப் பேசும். ராஜபக்ச அரசு கூட ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது அறிவோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் அமைப்புக்களோ அத்தகைய அறிக்கையைக்கூட விடவில்லை என்பதையும் நாம் பதிவு செய்துதான் ஆகவேண்டும். குழந்தைகள் உட்பட பலர் அநியாயமாக கொல்லப்படுவதாக மகிந்த ராஜபக்ச செய்தி முதலைக் கண்ணீர் வடித்தது. ராஜபக்ச குடும்பம் கொன்று குவித்த குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி முழுக் கணக்கும் இன்றுவரை இல்லை. தவிர, மகிந்த ராஜபக்ச அறிக்கை –அதாவது பிரதமரின் அதிகாரபூர்வ அறிக்கை சொன்ன விபரங்கள் வருமாறு: 

பாலஸ்தீன சொலிடாரிட்டி கமிட்டியை தான் உருவாகியதாக குறிப்பிட்டுக் காட்டும் மகிந்த, பாலஸ்தீனப் பிரச்சினை நேரடி ‘காலனித்துவத்தால்’ உருவானது என்றும் பாலஸ்தீனர்களின் அரசாட்சி உரிமை பாதுகாக்கப்படவேண்டியது என்றும் குறிப்பிட்டு இருப்பார். அதே சமயம் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் அருகருகே அமைதியாக வாழவேண்டும் என்பது ‘இலங்கையின் நிலைப்பாடு’ என்றும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. 

எத்தககைய பாசாங்குத்தனம் பாருங்கள்! மோடி முதற்கொண்டு அனைத்து அதிகார சக்திகளும் முதலைக் கண்ணீர் வடிப்பதில்/ பாசாங்கு செய்வதில் மாபெரும் திறமை படைத்தவர்கள். பாலஸ்தீனம் காலனித்துவத்துக்கு உட்பட்டு இருக்கிறது – அதனால் அவர்களுக்கு தேசிய உரிமை உண்டு என ஏற்றுக் கொள்ளும் ராஜபக்ச,  – அவர்கள் படுகொலை செய்வதை வன்மையாக கண்டிக்கும் ராஜபக்ச – தமிழ் தேசிய அபிலாசைகளை மாபெரும் படுகொலைகள் மூலம் முடக்குபவராக இருக்கிறார். தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கை அடக்குமுறை செய்யப்பட்டதன் அடிப்படையில் உருவாகவில்லை – அது வெறும் ‘புலித்தீவிரவாதம்’ என்பது இவர்கள் நிலைப்பாடு. தமிழ் தேசிய கோரிக்கை வைப்பவர்கள் அனைவரும் ‘புலி பாசிஸ்டுகள்’ என இலங்கை அரசு கருதுவது எல்லோருக்கும் தெரிந்ததே. 

இத்ததகைய போலி வலதுசாரிய போக்குகளை சிங்கள மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலையை நாம் செய்ய வேண்டும். 

போராட்டம் பற்றி சிந்திக்கும் சக தோழர்களே, இத்தகைய வலதுசாரிய பாசாங்குகளை தாண்டிப் பார்க்கும் பார்வைக்கு நீங்கள் வந்தடைய வேண்டும். டேவிட் கமரோன் இரக்கப் படுகிறார் என்பதுவும் ராஜபக்ச இரக்கப் படுகிறார் என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உள்நாட்டில் மனித உரிமைக்கு எதிரான கடும் நிலைப்பாடு கொண்ட டேவிட் கமரோன் தமிழரின் மனித உரிமையில் அக்கறை உள்ளவராக எவ்வாறு நடித்து ஏமாற்றினார் என அறிவோம். அதே போல் உள்நாட்டில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சவும் வெளிநாட்டில் ‘மனித உரிமை’ காக்கிறார். இலங்கைக்குள் பாலஸ்தீனிய சொலிடாரிட்டியை கட்டியதே அவர்தான்!

இத்தகைய பூச்சாண்டி காட்டுதல் பக்கம் நம்பிக்கையோடு திரள்பவர்கள் அறிதலைக் கேள்விக்குட்படுத்துங்கள். பாசாங்குகளை ‘பலமாக’வும் அதனால் ‘தீர்வும்’ எனப் பேசும் எந்த சக்தியும் மக்கள் மத்தியில் பலப்படக் கூடாது. மக்கள் மத்தியில் இவர்கள் செல்வாக்கு பரவுவதற்கு எதிராக நாம் கடுமையாக வேலை செய்ய வேண்டும். இத்தகைய செல்வாக்கு மக்கள் மத்தியில் இருந்து தூக்கி எறியப்படமால் போராட்ட சக்திகள் பலப்பட முடியாது.

இந்த தெளிவற்ற நிலைப்பாட்டால்தான் பாலஸ்தீன சொலிடாரிட்டி கம்பயின் அமைப்போடு தமிழ் சொலிடாரிட்டி மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. எவ்வாறு தமிழ் தலைமைகள் தாங்கள்தான் தமிழர் பிரதிநிதிகள் எனச் சொல்லிக்கொண்டு தமிழர் உரிமைகளுக்கு ஆப்பு வைக்கும் அரசியல் பக்கம் நிற்கிறார்களோ அதே போல்தான் பல பாலஸ்தீன  தலைமைகளும் செய்யல்படுகின்றன. பாலஸ்தீன அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பிஎல்ஓ (PLO)வும், அதன் தலைவர் முகமது அபாசும் அத்தகைய ஏமாற்று வித்தையைத்தான் செய்கிறார்கள். இஸ்ரேல் அரசுக்கு எதிர் என்று காட்டுவது – பின்பு இஸ்ரேலுடன் இணக்க அரசியல் செய்வது – இஸ்ரேல் அரசைத் தாங்கும் அதிகார சக்திகளை நட்புச் சக்திகளாக பார்ப்பது என்று இவர்கள் செய்யும் தவறான அரசியல் நடவடிக்கைகளால்தான் இன்று இவர்களின் ஆதரவு பாலஸ்தீனியர் மத்தியில் மங்கி வருகிறது. கமாசின் வளர்ச்சிக்கு இது முக்கிய காரணம். ஆனால் இந்த பாலஸ்தீன அதிகரத்தை விமர்சனம் இன்றி ஏற்றுக் கொள்கிறது பாலஸ்தீன சொலிடாரிட்டி அமைப்பு. இது போதாது என்று பாலஸ்தீன அதிகாரம் பல அடக்குமுறை சக்திகளையும் நட்பு சக்தியாகப் பார்க்கிறது. இலங்கையில் பாலஸ்தீன சொலிடாரிட்டி கட்டியது தான்தான் எனச் சொல்லும் ராஜபக்சவை அபாஸ் நட்புச் சக்தியாகப் பார்கிறார். ராஜபக்ச வெற்றிக்கு நெஞ்சு நிறைந்த பாராட்டை அனுப்பி வைக்கிறார். 

தமிழ் சொலிடாரிட்டி ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்த அமைப்பு. அரசியற் சமரசத்தின் அடிப்டையில் சொலிடாரிட்டி கட்டுவதை கடுமையாக எதிர்க்கும் அமைப்பு. அதே சமயம் போராடும் சக்திகள் மத்தியில் அரசியல் அடிப்படையில் உறவை பலபடுத்த வேலை செய்து வரும் அமைப்பு. இந்த அடிப்படையில் குர்திஸ், காஸ்மீர், மற்றும் பாலஸ்தீனப் போராட்ட சக்திகளோடு அரசியல் அடிப்படையில் இணைந்து வேலை செய்வதை முன்வைத்து –அதை நடைமுறைப்படுத்தியும் வரும் அமைப்பு. இந்த அடிப்படையில் இணைந்து வேலை செய்வது பற்றி பாலஸ்தீன சொலிடாரிட்டி அமைப்புடன் உரையாடிக் கொண்டிருந்த வேளையில்தான் அபாஸ் தனது இதயம் நிறைந்த அன்பை ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தார். இதை பாலஸ்தீன சொலிடாரிட்டி சார்ந்த பலர் வரவேற்றனர். பிழை என தெரிந்தவர்களும் கண்டிக்க மறுத்து விட்டனர். இதற்கு எதிராக கடுமையாக விவாதித்து அவர்கள் உறுப்பினர்களுக்கு இதை மறுத்து ஒரு அறிக்கை அனுப்பும்படி நாம் கேட்டோம். இன்றுவரை அது நடக்கவில்லை. தமிழ் சொலிடாரிட்டி அந்த அமைப்புடன் உறவை உடைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் மாறவில்லை. பாலஸ்தீன அதிகாரம் தமது அதி உயர் மரியாதையான ‘பாலஸ்தீனர்களின் நட்சத்திரம்’ விருதை ராஜபக்சவுக்கு வழங்கியதுதான் நடந்தது. 

பாலஸ்தீனர்களின் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்ற முடிவை பாலஸ்தீன சொலிடாரிட்டி பார்க்க முடியாமல் போவதற்கு பின் அவர்களின் அரசியற் போதாமை – வலது சாரிய சரிவுதான் காரணம் என்ற குற்றச் சாட்டை தமிழ் சொலிடாரிட்டி வைக்கிறது. பாலஸ்தீனர் எத்தகைய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றி தவறான கருத்துக்களை அவர்கள் முன்வைத்து வருவதையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். போராட்ட அரசியல் நோக்கி நகரும் பாலஸ்தீனர்களை எமது அரசியலோடு இணையும் படி கோரி வருகிறோம். இந்த அடிப்படையில்தான்தான் நாம் காஸ்மீர்- குர்திஸ் போராளிகளோடும் இணைகிறோம்.  நீங்கள் எந்த அரசியலை முன்னேடுத்தாலும் பரவாயில்லை – எமக்கு ஆதரவு தந்தால் மட்டும் போதும் என்ற போலி அரசியல் அடிப்படையில் இயங்குவதை கடுமையாக மறுத்து வருகிறோம். 

3. தூர நோக்குள்ள அரசியற் பார்வை வேண்டும் 

வலதுசாரியம் பக்கம் நின்று ‘போராட்டம்’ என பேசுவது முரண் நடவடிக்கை. மக்கள் போராட்டம் எப்போதும் இடதுசாரியம் நோக்கிச் சரியும் ஒன்றுதான். 

ஆனால் இடதுசாரிகள் – போராட்ட இயக்கங்கள் – முற்போக்குவாதிகள் என அடையாளப் படும் பலர்கூட சரியான நிலைப்பாடு நோக்கி நகர்வதில்லை. போராட்ட அரசியல் நோக்கி வருவது மட்டும் போதாது. அந்தப் போராட்டம் சரியாக வழிநடத்தப்பட வேண்டுமானால் தூர நோக்குள்ள அரசியற் பார்வை – அதன் அடிப்படையில் திட்டமிடல் இருக்க வேண்டும். 

இடது சாரிகள் – முற்போக்கு வாதிகள் என வேடம் போடும் பலரும் உண்டு. இடதுசாரிகளாக இருந்து கொண்டு அரச/அதிகார சக்திகளுக்கு முண்டு கொடுக்கும் பலரும் உண்டு. இலங்கையில் மிகப் பலமாக இருக்கும் ‘இடது சாரி இயக்கம்’ என கருதப்படும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே வி பி), இந்தியாவில் இருக்கும் மிகப் பலமான இடதுசாரிய இயக்கமாக கருதப்படும் இந்திய கம்யுனிச கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவற்றை உதாரணமாக காட்ட முடியும். 

தற்போது எமக்கு முன் இருக்கும் பணி மிகப்பெரியது. இத்தகைய போலிகளையும் தாண்டிய போராட்ட அமைப்பை கட்டி நிமிர்த்த வேண்டிய கடமை எமது கைககளில் உள்ளது தோழர்கள். இதற்கு அரசியல் ரீதியாக சிந்திக்கும் அனைவரும் ஒன்றுதிரண்டு முன்வர வேண்டும். 

ஒவ்வொருவரும் எத்தகைய நிலைப்பட்டை எடுக்கிறார்கள் எனப் பாருங்கள். அரசியற் தெளிவு பெற அதுவும் உதவும். அந்த அடிப்படையில் ஈழம்/பாலஸ்தீனம் பற்றிய இரட்டை வேட நிலைப்பாடுகள் பற்றி சில குறிப்புகளைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. 

4. பாலஸ்தீனர்களின் நட்சத்திரம்

இலங்கை அரசு உடனடியாக அனைத்து யுத்த/இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என நாம் கோரிக்கையை முன்வைத்து 2009ல், உலக நாடுகள் எங்கும் தெருத் தெருவாக போராட்டத்தைக் கட்ட முயற்சி செய்தோம். 2009 ஏப்ரல் 8ம் திகதி பல நாடுகளில் இலங்கை தூதரகம் முன் எம்மோடு இயங்கிய தோழர்கள் முற்றுகை இட்டனர். அத்தருணம் எம்மோடு இணைந்து வேலை செய்த இஸ்ரேல் தோழர்கள் (யூதர்கள்/பால்ஸ்தீனர்கள்) தெல்அவிவில் (Tel Aviv-Yafo) இருந்த இலங்கை தூதரகம் முன் போராட்டத்தைத் தொடங்கினர். இஸ்ரேலிய பொலிசாரை அழைத்து அவர்களை விரட்ட முயன்றபோதும் அவர்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. அத்தருணம் இஸ்ரேலுக்கான இலங்கை தூதராக இருந்த எம். செனவிரட்னே இலங்கையில் படுகொலை நடக்கவில்லை எனவும் அது வெறும் ‘புலிகள் பிரச்சாரம்’ எனவும் கூறியுள்ளார். ‘உங்கள் இஸ்ரேல் அரசு எவ்வாறு கமாஸ் இயக்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறதோ அதேபோல்தான் தாம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கிறோம்’ என அவர் மேலும் கூறி உள்ளார். அவ்வளவுக்கு இருந்துள்ளது அவரது அறியாமை. அப்போது இருந்த இலங்கை சனாதிபதி ராஜபக்சவின் விசிவாசி இந்த செனவிரத்ன. இலங்கைக்குள் பாலஸ்தீனியர்கள் உரிமையின் சம்பியன் தான் என ராஜபக்ச தம்பட்டம் அடிப்பதையும் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த செத்தவீட்டுக்குத்தான் அவருக்கு ‘பாலஸ்தீனர்களின் நட்சத்திரம்’ விருது வழங்கப்பட்டது எனபதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

‘தீவிரவாதத்துக்கு எதிர்’ என்ற பெயரில் கொலைவெறி நடவடிக்கை எடுக்கும் இஸ்ரேலிய/இலங்கை அரசுகள், பாலஸ்தீனியரை/தமிழரை கொலை செய்வதையும் அவர்கள் சனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதையும் முடக்கும் நோக்கமும் கொண்டவை. இதைச் சொல்லி தாம் எவ்வாறு காசாவின் முற்றுகை/கொலைகளை எதிர்கிறோமோ அதே வேகத்துடன் தமிழர் படுகொலையையும் எதிர்க்கிறோம் எனத் தோழர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

இந்த நிலைப்பாடு சரியான/அவசியமான நிலைப்பாடு. போராட்டச் சக்திகள் அனைத்தும் எடுக்க வேண்டிய நிலைப்பாடு. ஆனால் இலங்கைக்குள் இருந்த பல இடதுசாரிய அமைப்புக்கள் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

5.  ஜேவிபி யின் வேடம்

இலங்கைக்குள் இருந்த ஜே.வி.பி அத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தம்மை மார்க்சியக் கட்சி எனக் காட்டும் ஜே.வி.பி யுத்த ஆதரவு நிலைபாட்டுக்கு மேலே சென்று புலிகளின் அழிவைக் கொண்டாடும் நிலைக்குச் சென்றது. அதன் முக்கிய தலைமைகள் பல இராஜபக்ச அரசுடன் இரண்டறக் கலந்துவிட்டன. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து தாம் தவறு செய்து விட்டதாகக் கூறும் ஜே வி பி தலைமை – தாம் என்ன தவறு செய்தோம் என்பதையோ –தற்போது தாம் எத்தகைய ‘திருந்திய’ நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்பதையோ சொல்லவில்லை. தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கை சார் நிலைப்பாடு பற்றி அவர்கள் ஏற்படுத்திய எந்த மாற்றமும் எமது கண்களுக்குத் தெரியவில்லை. தமிழ் மக்களின் தேசிய உரிமை பற்றி எந்த வார்த்தைகளையும் உச்சரிக்க இன்றுவரை இவர்கள் தயாராக இல்லை. ஆனால் பாலஸ்தீனம் சார்பாக மகிந்த ராரஜபக்ச முன்வைக்கும் போலி நிலைப்பாட்டோடு முழுமையாக உடன்படுகின்றனர் இவர்கள். 

பாலஸ்தீனர்களின் இறையாண்மை கேள்விக்கு இடமற்றது எனவும் கிழக்கு ஜெருசலேம் மேல் பாலஸ்தீனியக் கொடி பறக்க எல்லோரும் போராடவேண்டும் எனவும் கூட இவர்கள் முன்பு அறிக்கை விட்டிருக்கிறார்கள். இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பிமல் ரத்னாயகே ஜேவிபி யின் ‘சர்வதேச உறவு’ துறை சார்பாக இவ்வாறு கூறி இருக்கிறார். இது தவிர தமது செல்வாக்கு இருக்கும் 16க்கும் மேற்பட்ட அமைப்புக்களின் சார்பிலும்கூட கடந்த ஆண்டு ஜேவிபி அறிக்கை விட்டிருக்கிறது. ‘சுதந்திர இறையாண்மை உள்ள பாலஸ்தீனத்திற்கு விடுதலை’ என்ற முழக்கத்தை வைக்கும் அவ்வறிக்கை கமாசினதோ அல்லது வேறு பாலஸ்தீன இயக்கங்களின் நடவடிக்கை பற்றியோ எதுவும் பேசவில்லை. புலிகள் ‘பாசிஸ்டுகள்’ என அவர்களின் ‘தீவிரவாத’ நடவடிக்கையை கடும் கொடூரமாக சித்தரிக்கும் இந்த ஜேவிபி பாலஸ்தீனிய போராட்டத்தை புனிதப் படுத்தித் தூக்குகிறது. புலிகள் சிங்கள மக்களை எதிரிகளாக கட்டமைத்தார்கள் எனச் சொல்லும் இவர்கள் யூதர்கள் பற்றி ஒரு சொட்டு அக்கறையும் எடுக்கவில்லை. 

தற்போது இந்த பழைய மோசமான நிலைப்பாட்டில் இருந்து ஜேவிபி மேலும் கீழே இறங்கி வந்து விட்டது. ஜேவிபி மேலும் மேலும் வலது சாரியம் நோக்கிச் சரிவதற்கு இதுவும் ஒரு சான்று. தற்போது நடந்த படுகொலை சார்ந்து இவர்கள் விட்ட அறிக்கையில் பாலஸ்தீனர் விடுதலையை எப்படி அடைவது என இவர்கள் கூறுவது மிகவும் வேடிக்கையான ஓன்று. பாலஸ்தீன இறையான்மையை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் கோருகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் 1967 உடன்படிக்கை படி இஸ்ரேலுக்கு பக்கத்தில் பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என இவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் முன்வைக்கும் ‘தீர்வைத்’ தாண்டி சிந்திக்க முடியாத இவர்களின் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’ பாசாங்கு உங்களுக்கு எரிச்சலைத் தரலாம். ஐ.நா பற்றியும், ‘தமிழ் அமைப்புக்களின் மேற்கு நாடுகள் மேலான நம்பிக்கை’ பற்றியும் இலங்கைக்குள்-தமிழ் மக்கள் மத்தியில் இவர்கள் செய்யும் பிரச்சாரத்தைப் பார்ப்பவர்கள் கதி கலங்கிப் போகலாம். என்ன  கேவலமான இரட்டை வேடம் இது. இவர்களை ‘இடது சாரிக் கட்சி’ எனக் குறிப்பிடுவதே தவறு என பலர் கோபத்தில் கொப்பளிப்பது இத்தகைய நிலைப்பாடுகளால்தான். 

தமிழ் மக்கள் இவர்களிடம் ஏமாந்துவிடக் கூடாது. ஜேவிபி சிங்கள மக்களை எமாற்றுவதை தடுக்கும் பொறுப்பையும் நாம் கையில் எடுக்கவேண்டும். இவர்களின் இத்தகய பாசாங்குகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும். 

6.  போலி எதிரியைத் தாக்கிய வித்தை

இலங்கைக்குள் படுகொலை நடந்த பொழுது, ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐ.சோ.க). மற்றும் நவ சம சமாஜ கட்சி (மேலும் ஒரு சில மிகச் சிறு இடதுசாரி கட்சிகள்) ஆகிய கட்சிகள் மட்டுமே யுத்த நிறுத்த நிலைப்பாட்டை எடுத்தன. இதில் ஐ.சோ.க மட்டும் நிபந்தனையற்ற யுத்த மறுப்புச் செய்தது மட்டும் இன்றி அதற்கான போராட்டத்தையும் கட்ட முன்வந்தது. இலங்கைக்குள் இருந்த வேறு எந்த அமைப்புக்களும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. 

உலகெங்கும் போராட்டத்துக்கு முன்வந்தவர்களோடு தம்மை இணைத்துக் கொண்ட ஐ.சோ.க தமிழ் நாட்டில் ஒரு திரட்சி உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. சாஸ்திரி பவனைச் சுற்றி வளையுங்கள் – வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள் – ஈழப் படுகொலை உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால் தமிழ்நாடும் பிரியும் என்ற முழக்கத்தை வையுங்கள், என்ற பல்வேறு நடவடிகைகளை முன்னெடுக்க முயன்றது இக்கட்சி. இக்கட்சியின் தலைமை உறுப்பினர் சிறிதுங்க ஜெயசூரிய தமிழ் நட்டுக்கு தப்பிச் சென்று அங்கிருந்த ஊடகங்கள் அனைத்துக்கும் செவ்வி கொடுப்பதும் – போராட்ட சக்திகளை போராட்டம் நோக்கி வரும்படி கேட்பதுமாக காலம் கழிக்க வேண்டி இருந்தது. ‘தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து’ என்ற சர்வேதசப் பிரச்சார நடவடிக்கயை முன்னெடுத்த எம்மோடு ஐ.சோ.க முழுமையாக இணைந்து கொண்டது. அந்த சர்வதேச நடவடிக்கையின் தொடர்ச்சியாக உருவானதுதான் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு. 

இதே சமயம் இலங்கைக்குள் இருந்த புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி அத்தகைய எந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை. சிறிதுங்க ஜெயசூரிய ஒரு சிங்களவர் என்பதும் மேற்சொன்ன கட்சி தமிழர்களை மட்டும் கொண்ட கட்சி என்பதும் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். இந்தியாவில் இயங்கும் இந்தியக் கம்யுனிச கட்சி (மார்க்சிஸ்ட்) சி.பி எம்(எம்)- கட்சி எடுத்த நிலைபாட்டைதான் ஏறக்குறைய இந்தக் கட்சியும் எடுத்தது. 

இவர்கள் படுகொலை தவறு என்றனர்- மக்கள் துன்பப்படக்கூடாது என்றனர்- ஏன் நடப்பது இனப்படுகொலை என்று சொல்லும் அளவுக்குகூட சிலர் சென்றனர். ஆனால் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் இவர்கள் முன்னெடுக்கவில்லை. இந்தப் படுகொலை எவ்வாறு நிகழ்கிறது என இவர்கள் கணித்த விதம்தான் அதற்கு முக்கிய காரணம். ‘போரட்டத்தின் தவறான கொள்கை வழிமுறைகள்’ காரணத்தை முதன்மைக் காரணமாக இவர்கள் முன்வைத்தனர். அழிவுக்கான ‘முழுப் பொறுப்பும்’ ‘தெற்கின் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினரும் வடக்கின் தமிழ்த் தேசியவாதம் பேசிவந்த குறுந்தேசியவாதிகளும் ஏற்றுக் கொள்ள வோண்டும்’ என்றனர். ‘ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி மூலமாக நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்’ என்ற மந்திரத்தைதான் இன்றுவரை இவர்கள் சொல்லி வருகின்றனர். அதற்கான சமூக விஞ்ஞான விளக்கத்தை இன்றுவரை இவர்கள் முன்வைத்ததில்லை. 

இலங்கையில் யுத்தம் முடித்தபின் முன்னெடுக்கப்பட்ட நினைவு நாளைக்கூட ‘தமிழ் வலதுசாரிய தேசியம்’ என்று இவர்கள் பார்த்தனர். சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கு ஏற்ப சந்தர்ப்பவாதிகளாக இவர்கள் மாறி இருப்பதை தோழர் நடேசன் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு சுட்டிக் காட்டி இருப்பார்.

“‘தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்என இன்று பத்து ஆண்டுகள் கழித்து ஏற்றுக் கொள்ளும் நீங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் என்ன செயதீர்கள் என்ன சொன்னீர்கள்? இந்த கொலைகளுக்கு காரணம் புலிகள்தான் என்ற உங்கள் நிலைப்பாட்டில் தான் இப்போதும் உள்ளீர்களா அல்லது சுய விமர்சனம் நடந்து முடிந்து விட்டதா?

லெனின் பெயரைத் தாங்கி அரசியல் செய்யுய் நீங்கள் ஐக்கிய பட்ட இலங்கைகுள் சுயநிர்ணய உரிமை’  என்று சொல்லவதன் பொருள் என்ன

தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை நீங்கள் மறுத்து கொண்டு எவ்வாறு உங்களை லெனினிய கட்சி என்று அடையாளப் படுத்துகின்றீர்கள்? லெனினை தற்காலத்துக்கு ஏற்ப உபயோகிப்பது போன்ற பேச்சு கட்சி தலைமையால் பேசப்பட்டது (ஜேவிபி போல்). அது எவ்வாறு என விளக்க முடியுமா? ‘நடைமுறைக்கு உகந்ததீர்வு என்று நீங்கள் எதை சொல்கிறீர்கள்? நடைமுறைக்கு சரிப்படாத விசயங்களை முன்வைகாதீர்கள் என கேட்கிறீர்களா?

 இலங்கை வரலாற்றில் இடது சாரிகள் எடுத்த தவறான பல நிலைபாடுகள் இன்றும் எமது தோள்களில் இருக்கும் சுமை. மக்கள் இடது சாரியம் நோக்கி நம்பிக்கையின்மையுடன் பார்க்க இதுவும் காரணம். தேசியப் பிரச்சினை பற்றிய சரியான நிலைப்பாடு எடுப்பது இலங்கைக்குள் இயங்கும் அனைத்து இடது சாரிய கட்சிகளுக்கும் அவசியம். இந்த அடிப்படையில்தான் இந்தக் கேள்விகளை கேட்கிறோம். குழப்பங்களை கொள்கை  கோட்பாடுஎன முன்வைத்து தனிநபர்கள் சமூக வலைத்தளங்களில் வம்படிப்பது போல் ஒரு அமைப்பு இயங்க முடியாதல்லவா? தெளிவு தேவை அதற்கு உரையாடலும் தேவை.

இவற்றோடு சேர்த்து இன்னுமொரு முக்கிய கேள்வியையும் தோழர் நடேசன் கேட்டிருந்தார். 

‘ஈழம், பலஸ்தீனம், காஷ்மீர், திபேத்வட அயர்லாந்து, ஸ்கட்லாந்து, கற்றலோனியா ஈறாக தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன

 உலகெங்கிலும் தேசியம் சார்ந்த எழுச்சி கூர்மையடைந்து வருவதை அவதானித்து இருப்பீர்கள். அவற்றையும் குறுந்தேசியம் என அடையாளப்படுத்துகிறீர்களா?

பதில் வரும் என நடேசன் எதிர்பார்த்ததாக தெரியவில்லை. வம்புகளுக்கு விழுந்தடித்து எழுதிக் குவிப்பதும் கொள்கை/அரசியல் சார் உரையாடலை தவிர்ப்பதும் ‘தமிழ் பாரம்பரியம்’ – இடது சாரிகள் எனச் சொல்லிக் கொள்வோரும் இதற்கு விதி விலக்கில்லை. ஆனால் நடேசன் கேள்வி கேட்டு இரண்டு நாட்களில் பாலஸ்தீனம் பற்றி அறிக்கை போடும் கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டி இருந்தது. ராஜபக்ச அளவுக்குக்கூட இவர்களிடம் தெளிவில்லை என்பதைத்தான் அறிக்கை காட்டியது. ‘ஆக்கிரமிப்பு’ ‘மிலேச்சத்தன’ இஸ்ரேலையும் ‘கேடுகெட்ட’ ஏகாதிபத்தியத்தையும் தாக்கிய அறிக்கை பாலஸ்தீன போராட்டம் – தீர்வு என்ன ? போன்ற எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. மிக மிக மோலோட்டமான – ராஜபக்ச அறிக்கையை விட பலவீனமான ஒன்றே இவ்வறிக்கை. வழமை போலவே தமிழ் தேசியக் குறுகிய எண்ணம் கொண்டவரை தாக்கும் அறிக்கை தமிழர் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது பற்றிப் பேசவில்லை. அகண்ட பாலஸ்தீனத்தில் சுயாட்சி தீர்வா? அல்லது ஒன்றுபட்ட இஸ்ரேலுக்குள் சுய நிர்ணயமா? என ஓன்றும் தெரியவில்லை. தமிழர்/பாலஸ்தீனிய பிரச்சினைகள் வெவ்வேறு அதற்கு வெவ்வேறு நிலைப்பாடு என்றால் – அதையாவது சொல்லுங்கள். உலக மக்களோடு இணைந்து பாலஸ்தீனிய படுகொலைக்கு எதிராக போராட்ட வேண்டும் என சொன்ன இக்கட்சி உலக மக்களோடு இணைத்து ஈழப் படுகொலைக்கு எதிராக என்ன என்ன போராட்டங்களை முன்னெடுத்தது?  

பாலஸ்தீன மக்களின் ‘புரட்சிகரபோராட்ட’ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவுத்து அறிக்கை விடுகிறது மார்க்சிச லெனினிச கட்சி. கமாஸ் அடிக்கும் ராக்கட் பற்றி ஓர் வார்த்தை இல்லை. இந்த நிலைப்பாட்டுக்கும் இலங்கையில் படுகொலை நடந்த போது இவர்கள் புலிகளை மட்டும் தீவிரவாதம் என தாக்கித் திரிந்த நிலைபாட்டுக்கும் தொடர்பு என்ன? இந்த அரசியல் இவர்களின் ஒட்டுமொத்த அரசியற் பலவீனத்தையும் சுட்டி நிற்கிறது எனச் சொல்வது மிகையில்லை.

7. சம உரிமையா? தேசிய உரிமையா? 

இலங்கைக்குள் இயங்கும் முன்னிலை சோசலிச கட்சி வெளியிட்ட அறிக்கை இன்னொரு உதாரணம். ‘சரியான உரிமை’ – சரியான தீர்வு’ நோக்கி நகர வேண்டும் எனக் கூறும் அறிக்கை அந்த உரிமை என்ன எனச் சொல்லவில்லை. யூதரும் பாலஸ்தீனரும் ‘சமஉரிமை’ அடைவதற்கான போராட்டம் முன்னெடுக்க வேண்டும் எனச் சொல்கிறார்களா? 

அதே சமயம் பாலஸ்தீனம்/இஸ்ரேல் என்ற இரு ‘நாடுகளின்’ ஆட்சியாளர்களையும் மக்கள் ஒன்றுபட்டு எதிர்க்கவேண்டும் என கோருகிறது அறிக்கை. இரு நாடுகள் எங்கு இருக்கிறது? அல்லது இரு நாட்டுக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளகிறார்களா? எதுவும் தெளிவில்லை. உண்மையில் இலங்கைக்குள் இந்தக் கட்சி என்ன திட்டத்தை முன்வைக்கிறதோ அதே குழப்ப நிலைப்பாட்டைத்தான் இந்த விசயத்திலும் முன்வைக்கிறது. ஒரு நாட்டில் முன்னெடுக்கப்படும் கொள்கை மற்றும் திட்டமிடல்களுக்கும் சர்வதேச முன்னோக்கு மற்றும் திட்டமிடல்களுக்கும் தொடர்பு உண்டு. இக்கட்சி முன்வைக்கும் ஒன்றுபட்ட போராட்டத்தின் அவசியம் சரியானதே. தோழர்களுடன் அதற்கு தோள் கொடுக்க நாம் தயார். ஆனால் ‘சம உரிமை’ என்ற போர்வையில் தேசிய உரிமை பற்றி பேசுவதை இவர்கள் தவிர்ப்பது சரியான நிலைப்பாடு இல்லை. பாலஸ்தீன மக்களின் தேசியக் கோரிக்கை தவறு என்றும் அவர்கள் சம உரிமைக்காக போராட வேண்டும் எனவும் இவர்கள் சொல்வது எப்படி சரியாகும்? அல்லது பாலஸ்தீனத்தில் சம உரிமையுடன் யூதர்கள் வாழ வேண்டும் எனச் சொல்கிறார்களா? பாலஸ்தீனர்களின்- யூதர்களின் ‘தேசிய உரிமை’ என்ற சொற்களை உச்சரிக்க ஏன் இந்த இயக்கங்கள் தயங்குகின்றன? 

உள்நாட்டில் ஒரு பேச்சு வெளிநாட்டில் வேறு பேச்சு என்ற குற்றச் சாட்டைப் பற்றிய பயம் இன்றிய இந்திய மார்க்சிய/லெனினிச கட்சி பாலஸ்தீனிய விடுதலைக் கோசத்தை முன்வைக்கிறது. அதே சமயம் சயோனிச காலனிதத்துவமாக இஸ்ரேலை வர்ணிக்கிறது. யூதர்களின் தேசிய உரிமை பற்றியோ – அல்லது இஸ்ரேலுக்குள் இருக்கும் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டம் பற்றியோ எந்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை. அதே சமயம் ‘யூதர்கள் பாலஸ்தீனியர் போராட்டத்திற்கு ஆதரவாக’ திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய கண்மூடித்தனமான வாதத்தை எதிர்கொள்ள சியோனிச எதிர்ப்பு சமன்  யூத எதிர்ப்பு என நிறுவ இஸ்ரேலிய அரசு முயல்கிறது. அதனால் இதை இவர்கள் சரியானபடி கண்டிக்கின்றனர். இருப்பினும் யூதர்களின் உரிமைகளை மறுத்து (பாலஸ்தீனத்துக்கு ஆதரவானவர்கள் தவிர்த்து) பேசும் இவர்களின் வாதம் இஸ்ரேலிய அதிகார சக்திகளையே பலப்படுத்தும். அந்த அடிப்படையில் இவர்கள் ‘வர்க்க ஒற்றுமை’ பற்றிப் பேச முடியாது. யூதர்களின் உரிமைகள், பாலாஸ்தீனர்களின் உரிமைகள் – குறிப்பாக அவர்கள் தேசிய உரிமைகள் பற்றி – எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பது அதற்கான போராட்டத் திட்டமிடலை முன்வைப்பதற்கு அவசியம். தேசிய உரிமை பற்றிப் பேசுவதை தவிர்த்தல் செய்ய முடியாது. அதே சமயம் யூதர்களுக்கு தேசிய உரிமை இல்லை என்ற நிலைப்பாடும் எடுக்க முடியாது. அதே சமயம் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டத்தை புறந்தள்ளிய ‘தேசிய விடுதலை’ பற்றிய பேச்சு, பிற்போக்கு தேசிய போக்குகளை வளர்க்கும் (அதனால் போராட்டத்தை தோற்கடிக்கச் செய்யும்) சாத்தியமும் உண்டு.  சரியான நிலைப்பாடு எடுப்பது ஒரு ‘சிக்கலான ஒன்றாக’ தோற்றத்தை தருவதற்கு மேற்சொன்ன புள்ளிகளும் காரணம். ஆனால் இது புதிதல்ல. லெனின் காலத்தில் இருந்து மார்க்சியர் – போராட்ட சக்திகள் எதிர்கொண்ட ‘சிக்கல்கள்தான்’ இவை. லெனின் முதலானவர்கள் முன்னெடுத்த நடைமுறைகளில் இருந்து கற்றுக் கொண்டுத்தான் நாம் நகரவேண்டும். ஆனால் தம்மை ‘லெனினிஸ்ட்’ என சொல்லிக் கொள்ளும் இந்தக் கட்சிகள் லெனினை உள்வாங்க முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. 

7. இந்தியாவில் சி.பி எம்(எம்)

இந்தியாவில் சி.பி எம்(எம்) முன்வைக்கும் விசயங்கள் ஒரு போராட்ட சக்தி எப்படி இயங்க கூடாது என்பதற்கான உதாரணங்கள். ஈழ படுகொலை/விடுதலை – காஸ்மீர் விடுதலை பற்றி மோசமான நிலைப்பட்டைக் கொண்ட கட்சி இது. 

லட்சக் கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லும் இந்தக் கட்சியின் காரியாலயங்கள் – அவர்கள் கட்டுப் பாட்டில் இருக்கும் தொழிற்சங்க காரியாலயங்கள் அனைத்தின் வாசலிலும் போராட்டம் ஒழுங்கு படுத்தச் சொல்லி 2009ல் காத்திருந்தோம். அவர்களை சந்திக்க – அழைத்து வர கடும் வெய்யில் பாராது திரிந்த தோழர்கள் ஏமாற்றம் அடைந்தனர். காலம் கடந்து மக்கள் படுகொலை செய்வதற்கு எதிராக எனச் சொல்லி சில நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுத்தனர். ஆனால் தமது கட்சிப் பலத்தை யுத்தத்துக்கு எதிராகத் திருப்பவோ அல்லது மக்களை திரட்டவோ உபயோகப்படுத்த இவர்கள் முன்வரவில்லை. மாறாக புலிகளின் அராஜகம் என்ற பிரச்சாரத்தை முதன்மைப் படுத்தும் நரித்தனமான வேலைகளை பலர் செய்ய முன்வந்தனர். ‘தீவிரவாத பாசிச புலிகளுக்கு’ எதிராக இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுப்பது சரி என்ற அடிப்படையில் அவர்கள் வாதங்கள் புலிகளை தாக்குவதையே சுற்றி சுற்றிச் வந்தன. யுத்த நிறுத்த கடுமையான நிலைப்பாடு எடுக்க அவர்கள் நோக்கி எழுந்த அழுத்தத்தை ‘புலிகளை ஆதரிக்கச் சொல்கிறீர்களா’ எனக் கேட்டு தட்டிக் கழிக்கும் போக்கு இருந்தது. 

இது தவிர தமிழ் ஈழம்தான் தீர்வு என்று சொல்ல வேண்டாம் என்றனர். தமிழ் நாடு தனியாகப் போகும் எனக் கிளறி விடுவது சரியில்லை என வாதிட்டனர். 

புலிகள் தமிழ் மக்களை கேடயமாக பாவிக்கிறார்கள் என்றும் – தமிழ் மக்களை காப்பாற்றத் தாம் செய்வது உலகின் மிகப்பெரும் ‘மீட்பு நடவடிக்கை’ எனவும் ராஜபக்ச அரசு கடுமையான பிரச்சாரம் செய்து வந்த காலம் அது. புலி எதிர்ப்பை தமது வாழ்நாள் பணியாகக் கருதி வந்தோரும் இந்தக் கட்சிகளும் அதை தாமும் கையில் எடுத்தனர். தாம் மக்கள் மேல் அதி கரிசனை எனக் காட்டிக் கொள்ள தவறாத இவர்கள் – மக்களை விட்டு விட்டு புலிகளும் இராணுவமும் சண்டை போடட்டும் என்ற பாணியில்தான் எந்த நடவடிக்கையும் இன்றி வேடிக்கை பார்த்தனர். 

இவர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் முதற்கொண்டு பலர் – (தம்மை ‘புத்தி ஜீவிகளாக’ கருதும் பலர் – எழுத்தாளர்கள் எனப் பலர்) நிலைப்பாடு எடுத்தனர். கடுமையான உரையாடலின் பின் அ.மார்க்ஸ் போன்ற சிலர் தமது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள முன் வந்தனர். ஆனால் வெற்றுப் புலி எதிர்ப்பை மட்டும் சுவாசிப்போர் தமது மடமைத்தனமான நிலைப்பாடு பற்றி புரிந்து கொள்ளவில்லை ( இன்றுவரை இல்லை). 

காஸ்மீர் விடுதலை பேசுவது பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகப் போய்விடும் எனக் கருதும் கட்சி இது. ஈழ விடுதலை அவசியம் இல்லை – இலங்கை என்ற ஒருமைப்பட்ட நாட்டுக்குள் தமிழர் உரிமைகள் எனப் பேசுபவர்கள் இவர்கள். தமிழர்களுக்கான தீர்வை இலங்கை அரசுதான் முன்வைக்க வேண்டும் எனவும் அவ்வாறு திருப்தியான தீர்வு வழங்கும்பொழுது அதை ஏற்றுக் கொள்ளும்படி தமிழ் தரப்பை வலியுறுத்துவோம் என்பதும்தான் கட்சி நிலைபாடு என தா பாண்டியன் முதலானவர்கள் ‘தெட்டத் தெளிவாக’ வைத்து விட்டனர். இந்திய அரசு நலன் தாண்டி இவர்கள் ஒருபோதும் நகரப் போவதில்லை என்பதை ஒவ்வொரு கால கட்டத்திலும் தெளிவாக்கி வந்திருக்கின்றனர். நேபாளத்தில் இந்திய அரசு ஆதரவுக்காக வேலை செய்தது முதற்கொண்டு இந்திய நலன்களைத் தாண்டி இவர்கள் ‘வெளிவிவகார’ கொள்கை விரிவடைந்ததில்லை. இந்திய தேசியவாதத்தின் விசுவாசிகளாக இருக்கும் இவர்கள் மற்றவர்கள் பலரை சில சமயம் ‘தேசியவாதிகள்’ எனத் திட்டுவது வேடிக்கையானது. 

யுத்தம் நடந்த பொழுது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது இவர்களின் நட்புச் சக்தியான திமுக. யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப் படுவதற்கு காரணமாக இருந்த திமுக மேல் ஒரு கேள்வியும் இன்றி யுத்த நிறுத்தம் பற்றி வெறுமனே பேசி விட்டு கண்டும் காணாமல் இருந்தவர்கள் இந்த கட்சித் தலைமைகள். கட்சியின் சாதாரண உறுப்பினர்கள் போராடினர் – எம்மோடு இணைந்து போராடினர். தலைமையை மீறித்தான் இதைப் பலர் செய்தனர். திமுகவை தோற்கடித்து முதலமைச்சரான ஜெயலலிதா 2013ல் தமிழ்நாடு சட்டசபையில் ஒரு தீவிர தீர்மானத்தை நிறைவேற்றினார். இலங்கை அரசுக்கு எதிராக ஐ,நா வில் கடுமையான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கவேன்டும் எனக் கோரிய தீர்மானம்- ஈழம் உருவாகுவதற்கான கருத்துக் கணிப்பு நடத்த மத்திய அரசு ஐ,நாவில் வாதிட வேண்டும் எனவும் கோரியது. இத்தகைய தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு அரசு அதுவரை முன்னெடுத்த வரலாறு இல்லை. இதுவும் செயற்பலமற்ற வெற்றுத் தீர்மானம் என்று அறிவோம். இது வெற்றுப் பேச்சு – இதை நிறைவேற்றும் திட்டமிடல் உங்களிடம் என்ன இருக்கிறது – அது இல்லாது இந்த வெற்றுத் தீர்மானம் மக்களை ஏமாற்றுவதாகவே இருக்கும் என நாம் கூறினோம். ஆனால் அந்த நோக்கம் இல்லாத கடுமையான கண்டனத்தை முன்வைத்தது சிபிஐஎம் தலைமை. அதிகாரப்பகிர்வு என்பதைத் தாண்டிய எந்த தீர்வும் ஈழ தமிழருக்கு சரிப்பட்டு வராது என அடித்துக் கூறியது அவர்களின் உத்தியோகபூர்வ கட்சி அறிக்கை. இலங்கை நட்பு நாடு இல்லை என கூறுவதோ, ஈழ உருவாக்கத்துக்கு வாக்கெடுப்புக் கோருவதோ பிரச்சினையை பெரிது படுத்தும் எனக் கூறி அதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஈழவிடுதலைக்கு எதிர்ப்பு மட்டும் அல்ல – இலங்கை அரசு நட்புச் சக்தி என்ற நிலைபாடும் இவர்கள் எடுத்தனர் என்பதை கவனிக்கவும். இந்த லட்சணத்தில் ‘சர்வதேச குற்ற விசாரணைக்கு’ தாம் ஆதரவு என்ற போலிப் புலம்பல் வேறு. 

பாலஸ்தீனம் பற்றிய அவர்கள் நிலைப்பாடு வேறு. பாலஸ்தீன ‘ஆக்கிரமிப்பு’ சர்வேதச சட்டத்திற்கு எதிரானது என்பது இவர்கள் நிலைப்பாடு. இந்த விசயத்தில் இந்திய அரசு இஸ்ரேல் அரசுடன் நெருக்கம் வைத்திருப்பதை இவர்கள் கண்டிக்கிறார்கள். பாலஸ்தீனியர் கோரிக்கைக்கு ஆதரவான நிலைப்பாடு நோக்கி வரவேண்டும் என மத்திய அரசை இவர்கள் ‘கேட்டுக் கொள்கிறார்கள்’. என்னே தீவிர புரட்சிகர கொள்கை நிலைப்பாடு! இந்திய அரசு நோக்கியும் ஐ.நா நோக்கியும்தான் தீர்வு பற்றி இவர்கள் பேசுகிறார்கள். அரசுதான் ‘தீர்வுகள்’ வழங்க வேண்டும். இந்தியா தலையிட வேண்டும். பாலஸ்தீன/யூத மக்கள் சார்பில்தான் இந்தியா தலையிடும் என இவர்கள் கணிப்பு. இந்த கன்றாவியில் புரட்சிகர கட்சி என்ற ஒரு பெயர் வேறு. அமெரிக்காவிற்கு உதட்டளவில் எதிர்ப்பு என்பதுதான் இவர்கள் சொல்லும் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’. தேசிய பிரச்சினை மட்டுமல்ல –கொரோனா நெருக்கடி சார் பிரச்சினை மட்டுமல்ல – எல்லாவித போராட்ட நடவடிக்கைகளிலும் அரசுசார் மிதவாத/தேர்தல் அரசியல் சார் நிலைப்பாடு நோக்கி சரியும் இந்தக் கட்சி ஒரு போராட்ட அரசியற் கட்சி இல்லை. 

இந்த கட்சியில் இருக்கும் போராட்ட சக்திகள் – போராடும் பல தோழர்கள் நோக்கி நாம் இந்த கேள்விகளை வைக்கிறோம். உங்கள் தலைமை திருந்தாது. சரியான போராட்ட அரசியல் நோக்கி தோழர்கள் நகர வேண்டும். 

8. ஈழ புலி எதிர்ப்பு பிற்போக்குகள்

இது தவிர தம்மைத் தாமே முற்போக்கு எனச் சொல்லிக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் உலாவி வரும் சில சில்லறைகள் உண்டு. தமிழ் இலக்கிய துறையில் தன்னை நிலை நாட்டிய ஷோபாசக்தி போன்றவர்கள் – புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்த புலி எதிர்ப்பாளர்கள்- புலி எதிர்ப்பை தலையாய கடமையாகச் செய்யும் தனி நபர்கள் – போன்ற ஒரு கூட்டம் உண்டு. இவர்களும் இந்த இரட்டை வேடத்தில் விதிவிலக்கு இல்லை. 

யுத்த மறுப்பு என்பது ஒரு மேலோட்டமான பார்வை இவர்களுக்கு. புலி எதிர்ப்பு என்பதை வைத்து யுத்த மறுப்பை முழுமையாக கையில் எடுக்க மறுத்தவர்கள் இவர்கள். யுத்த மறுப்பு என்பது புலிகள் ஆதரவு அல்ல என நாம் சுட்டிக் காட்ட வேண்டி இருந்தது. ‘சுத்த சைவ’, நூறுவீத புலி எதிர்ப்பின் பின்னணி, அரச ஆதரவு நிலைப்பாட்டில்தான் அவர்களை நிறுத்தியது. இவர்கள் அரச ஆதரவாளர்கள் இல்லை. ஆனால் புலிகள் மேலிருந்த இவர்களது தனிப்பட்ட வெறுப்பு இவர்களை மோசமான நிலைபாட்டுக்கு எடுத்துச் சென்றது – அது அரச ஆதரவு பலப்படும் பக்கமாக இருந்தது. நாம் அரசையும் இருநூறு வீதம் எதிர்க்கிறோம் எனச் சொல்லி இவர்கள் தப்பிவிட முடியாது. உங்களது அரசியல் நிலைப்பாட்டின் பலவீனத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. புலி எதிர்ப்பு என்ற ஒற்றைப் பார்வை – ஒட்டு மொத்த பார்வையையும் குருடாக்கி விட்டது. 

‘நந்திக் கடலில் மிதந்துகொண்டிருக்கும் பிணங்களுக்கு இலங்கை அரசபடைகள் மட்டுமே காரணமில்லை. அரசபடையின் கொலை இலக்குகளுக்கு நேராக விடுதலைப் புலிகள் நமது மக்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்’ அதனால் புலிகளும் படுகொலைக்குச் சம காரணம் என இந்தப் புலி எதிர்ப்பாளர் இன்றுவரை பேசி வருகின்றனர். பாலஸ்தீனிய படுகொலைகளுக்கு கமாசும் இஸ்ரேலும் சமமான பொறுப்பெடுக்க வேண்டும் என இவர்கள் கேட்பார்களா? 

‘சமம்’ என்பது எந்த அடிப்படையில் புரிந்து கொள்ளப் படுகிறது? அதிகாரத்தையும் – அதன் எதிர்ப்பையும் (அது எவ்வளவும் மோசமாக இருப்பினும்) ஒரு தளாத்தில் வைக்க முடியாது. தலித் மக்களின் வன்முறையையும் பி.ஜே.பி அரசின் அடக்குமுறையையும் சமம் என்று பேச முடியுமா? இவர்கள் செய்தாலும் செய்வர். கொரோனா நெருக்கடியை தீர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசுக்கும் மக்களுக்கும் ‘சம பங்கு’ உண்டு எனப் பேசும் போக்கிரித்தனமும் இந்த வகை வாதமே. அந்த அடிப்படையில் முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடியின் மேல் இவர்களுக்கு இரக்கம் வரும். சாவுக்கு மக்களும்தான் பொறுப்பு என இவர்கள் சொல்வது மோடியின் படுகொலையை மறைப்பதாகாதா? மக்களிடம் எந்த அதிகாரத்தை வழங்கிவிட்டு அவர்கள் மேல் சரிபாதி பொறுப்பைச் சுமத்துகிறீர்கள்? இந்த வகை ‘சமநிலை’ – ‘நடுநிலை’ – நூறு வீதம் – இருநூறு வீதம் எதிர்ப்பு’ போன்ற பேச்சு எல்லாம் ஒருவகை மிதவாதம் – அரச அதிகாரம் பக்கம் சரியும் போக்கிரித்தனம். படுகொலை பற்றிய டாக்குமென்றி செய்த கலும் மாக்ரே அவர்கள் ‘நடுநிலை’ ஊடகவியலாளர் இல்லை என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசு முன்வைத்தது அறிவோம். படுகொலை முன் நின்றபடி ஒருவர் எவ்வாறு ‘நடுநிலை’ எடுக்க முடியும்? அத்தகைய மிதவாத நிலைப்பாடு படுகொலைகளை நியாயப் படுத்துவது –அல்லது மறைப்பது என்பதை நாம் திரும்ப திரும்ப சுட்டிக் காட்டுவோம். 

 புலிகள் ஓட்டுமொத்த மக்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கின்றனர் –தப்ப நினைபப்பவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர் என்ற ஒரு விம்பத்தை தோற்றுவித்து – இராணுவப் பக்கம் வரும் மக்கள் புலிகளிடம் இருந்து தப்பி ஓடி வருபவர்கள்தான் என இவர்கள் வாதிட்டனர். இதன் சாராம்சமாக புலி எதிர்ப்பை மட்டும் கடுமையாக இவர்கள் முன்வைத்தனர். ‘பாஸிஸ்டுகளை பகுதியளவு ஆதரியுங்கள்’ எனச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனப் பேசிய இவர்கள் புலி எதிர்ப்பை மட்டும் முற்று முழுதாக முன்னெடுத்தனர். 

இது தவிர உலகெங்கும் நடந்த போராட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் குறிவைத்துத் தாக்கினர். அது ‘புலிகளின் ஆதரவாளர்கள் நடத்தும்’ பேரணி எனப் புறந்தள்ளினர். இலங்கை அரசும் அதையே வாதிட்டது. தனக்கு எதிராக எழும் அனைத்து எதிர்ப்பையும் யூதர்களுக்கு எதிரான நிலைபாடாக திருப்ப முயல்வது – போராட்டம் செய்பவர்களை கமாஸ் ஆதரவாளர்களாக சித்தரிப்பது என்பதை இஸ்ரேல் அரசும் அவர்தம் தீவிர ஆதரவு சக்திகளும் செய்துவருவதை அறிவோம்.

அதற்காக பாலஸ்தீன படுகொலையில் கமாசுக்கு சம பங்கு உண்டு எனப் பேச முடியுமா? கமாஸ் அடிக்கும் குண்டில் சாதாரண மக்கள்தான் சாகிறார்கள் என்பதை சுட்டுவதும் சரியான திட்ட மிடல் நோக்கி போராட்ட அரசியல் நோக்கி நகர வேண்டும் எனப் பேசுவதும் வேறு. கமாஸ் சம பங்கு – அதன் அழிவில்தான் பால்ஸ்தீனர்களுக்கு விடிவு என பேச முடியுமா? கமாஸ் பாலஸ்தீனர்களை கேடயமாக பாவிப்பதை நிறுத்த வேண்டும் – பாலஸ்தீனர் இல்லாத இடத்தில் இருந்து குண்டு போட வேண்டும் எனக் கேட்க முடியுமா? பாசிச காமாசை  பாதுகாக்கும் உரிமை யாருக்கும் இல்லை என புலம்ப முடியுமா? நூறுவீதம் கமாஸ் எதிர்ப்பு – இருநூறு வீதம் இஸ்ரேல் எதிர்ப்பு எனப் பேச முடியுமா? கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். ஒப்பிட்டு பல கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இஸ்லாமிய அரசு உருவாக்குவது – யூதர்கள் அனைவரையும் வெளியேற்றுவது போன்ற மிக கடுமையான நிலைபாடுகளை வைக்கும் இந்த அமைப்பு நோக்கி விமர்சிப்பதுதான் முதன்மைப்படவேண்டும் என வாதிப்பது தவறு. ஏன் என்றால் இஸ்ரேல் அரசின் படுகொலை நடவடிக்கையும் கமாசும் சமனில்லை. 

புலம்பெயர் சமூகத்தில்  இருந்த அனைத்துப் புலி எதிர்ப்பாளர்களும் அவர்கள் சார்ந்து இருந்த சிறு சிறு அமைப்புக்களும் இத்தகைய நிலைப்பாட்டையே எடுத்தனர். ஒரு விதிவிலக்கு இருக்கவில்லை. 

இன்று மேம்போக்காக பார்க்கும் சிலருக்கு இதில் என்ன தவறு எனத் தோன்றலாம். புலிகள் ‘தீவிரவாத’ நடவடிக்கையை செய்து இருக்கிறார்கள்தானே – யுத்தக் கடைசியில் மக்களைச் சுட்டது உண்டுதானே எனக் கேட்கலாம். இந்த கேள்விகள் தவறில்லை. புலிகள் முன்வைத்த போராட்ட அரசியலில் ஏராளமான பிழைகள் உண்டு – முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் முதற்கொண்டு மிகப்பெரும் தவறுகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். யுத்த கடைசிக் காலத்தில் மக்களை நோக்கி சுட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. இதை யாரும் மறுக்கவில்லை. ‘மனிதக் கேடயம்’ குற்றச் சாட்டுக்கு இவைகள் ஆதாரம் அல்ல. அரசின் கொலைவெறிக்கு இதைவைத்து நியாயம் தேட முடியாது.

புலிகள் பற்றிய பார்வை மட்டுமல்ல – போராட்ட இயக்கங்கள் பற்றிய அவர்களின் பார்வை மிகத் தவறானது. போராட்ட அரசியல் பற்றி ஒரு சொட்டும் அறிந்திராத பார்வைகள் அடிப்படையில் இவர்கள் சொந்த விருப்பு வெறுப்பு/அனுபவம் மட்டும் சார்ந்தே முடிவுகளுக்கு வருகிறார்கள். ஷோபாசக்தி இதற்கு நல்ல உதாரணம். தான்  ‘மடத்தனத்தின் உச்சம்’ என்று நிறுவும் வகையில் ஒருமுறை இவர் பிரான்ஸ் பெனனை தனது புலி எதிர்ப்பு வாதத்திருக்கு மேற்கோள் காட்டி இருப்பார். ஷோபாசக்தி பெனன்னை படித்திருக்கும் வாய்ப்பே இல்லை. எங்கோ ஒரு மேற்கோளை கண்டுவிட்டு ‘மேதாவித்தனம்’ காட்ட அதை பயன்படுத்துவது பலர் செய்வதுதான். புரட்சிகர வன்முறை – மற்றும் கொலை செய்வதை நியாயப்படுத்துவது என்றெல்லாம் பேசிய பெனன்னை அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. உண்மையில் புலிகளின் வன்முறை நடவடிக்கைகள் பெனன் பார்வையோடு எவ்வாறு பொருந்துகிறது என்பதை பெனன் பற்றி ஆழமான ஆய்வைச் செய்த ஆர் கார்த்திக்கை விசாரித்து அறிந்து கொண்டிருக்கலாம். அத்தருணம் தன்னை பெனன்னிஸ்டாக பார்த்த கார்த்திக் தமிழ்நெட் ஆசிரியரில் ஒருவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெனனிசம் மிகத் தவறான போராட்ட வழிமுறைகளை முன்வைக்கிறது. எதிர்ப்பின் வன்முறை நியாயப் படுத்தப்படும் ‘முறை’ தவறு. நாம் காந்திய – சாத்வீக வாதிகள் அல்ல. அதே சமயம் மக்களை அநியாயமாகப் பலிகொடுக்காது போராட்ட அரசியலை முன்னகர்த்தும் திட்டமிடலை நாம் கையில் எடுக்க வேண்டும். வன்முறைக்கு ஆதரவு – ஆயுத போராட்டத்திற்கு எதிர்ப்பு என்ற இருமையின் இரண்டு துருவங்களுக்கும் சடார் சடார் எனத் தேவைக்கேற்றபடி தாவும் குதர்க்கவாதிகள் ஒருபோதும் எந்தப் போராட்டத்தையும் கட்டப் போவதில்லை. தம்மைச் சுற்றி ‘ஒளிவட்டம்’ கட்டுவது தாண்டி இவர்கள் நகரவே மாட்டார்கள். ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத் திட்டமிடல் இதற்கு அப்பால் செல்லும் ஓன்று. 

அடிப்படையில் படுகொலைகளை நியாயப்படுத்துவதே இவர்கள் நிலைப்பாடாக இருந்தது. 5000 புலிகள் 50,000 மக்களை மனிதக் கேடயமாக வைத்திருகிறார்கள் என ராஜபக்ச முகாம் அறிவித்தது. இத்தருணத்தில் புலிகள் மக்களை விடுதலை செய்யவேண்டும் எனப் பேசுவது ராஜபக்சாவுக்கும் ஷோபாபாசக்தி தரவளிகளுக்கும் சரியாக இருந்தது. அங்கு 50,000 மக்கள்தான் இரானுவத்தால் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுத்தோம். இராணுவம்   500,000 க்கும் மேற்பட்ட மக்களை சுற்றி வளைத்து நிற்கிறது என்பதையும் –அவர்கள் இலக்கத்தைக் குறைத்துச் சொல்வதன் நோக்கத்தின் பின் பெரும் படுகொலை நோக்கம் இருக்கிறது எனவும் நாமும், எம்மைப்போல் மக்கள் பக்கம் போராடிக் கொண்டு இருந்தவர்களும் மட்டும்தான் சுட்டிக் காட்டினோம். வேறு யாருமே அது பற்றி அக்கறை எடுக்கவில்லை. இது வெறும் கணக்கு வழக்கல்ல. ஒவ்வொரு உயிரும் பெறுமதி வாய்ந்தவை. எத்தனை உயிர்களைக் காப்பாற்ற முடியுமோ அத்தனை உயிரையும் காக்க நாம் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய வேண்டும் என முயன்றோம். அரசு சொல்வதுபோல் 5000 புலிகள் இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் பகுதியளவுகூட ஆதரவு வழங்க முடியாத ‘பாசிஸ்ட்டாக’ இருக்கலாம். ஆனால் அந்த ஒவ்வொரு ‘பாசிச’ உயிர் காப்பாற்ற பட்டாலும் பரவாயில்லை – மக்கள் படுகொலை செய்யப் படுவதை நிறுத்துங்கள் என நாம் பேசினோம். இது அவர்கள் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சமரசமற்ற யுத்த மறுப்பு இது.

கமாஸ் ஏவுகணை விடுகிறது என்பதற்காக இஸ்ரேல் அரசு கொலைவெறி நடவடிக்கையில் இறங்க முடியாது. தீவிரவாத பயம்காட்டி ஈராக் மக்கள் கொன்று குவிக்கப்பட்டது எவ்விதத்திலும் ‘நியாயமான நடவடிக்கையாக’ மாற முடியாது. தீவிரவாத நடவடிக்கை ஒன்றைச் சுட்டி மக்களைக் கொல்லும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது. தாம் நல்லதை செய்வதன் ‘இணைசேதமாக’ (collateral damage) மக்கள் சிலர் இறக்கின்றனர் என்ற அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸசின் வாதம் கொலையை நியாயப் படுத்தும் வாதமே. 

புலிகளைப் ‘பாசிஸ்ட்’ எனப் பேசுவது –அதனால் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களே என முன்வைப்பது தவறு. பாசிசம் என்றால் என்ன என்று இவர்கள் கருதுகிறார்கள் என இன்றுவரை எமக்கு விளக்கியதில்லை. புலிகள் இயக்கத்தில் இருந்த அனைவரும் கொன்று குவிக்கப்பட வேண்டும் என்ற கொலைவெறி வாதத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிட்லரோடு இருந்த இரானுவத்தினர் அனைவரும் கொன்று குவிக்கப்பட வேண்டும் அல்லது கிட்லருக்கு ஆதரவை வழங்கிய ஜேர்மன் மக்கள் கொல்லப்படுவது நியாயம் என்றெல்லாம் கூடப் பேச முடியாது. புலியிசம் அழிய வேண்டும் என்றுகூட இவர்கள் பேசுவதில்லை. ஒட்டுமொத்த புலிகள் – அதன் ஆதரவாளர்கள் அழிவது பற்றியதுதான் இவர்கள் பேச்சு. புலிகள் அழிய வேண்டும் என்பதற்காக படுகொலையை நியாயப்படுத்துவதே இதன் வாதம். இவர்கள் அரசுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட தூக்கவில்லை என்பதையும் சொல்லித்தான் செல்லவேண்டும். புலிகள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப் பட்டுக் கொன்டிருக்கும் பொழுது அவர்களுக்கு ஒருசொட்டு ஆதரவும் கொடுக்கக்கூடாது என ஒருவர் நிலைப்பாடு எடுக்கிறார் என்றால் –அந்த நிலைபாட்டின் அரசியற் பின்னணி என்ன? 

புலிகளுக்கும் இராணுவத்துக்கும் நடந்த யுத்தம் ‘சமநிலை’ யுத்தம் அல்ல. புலிகள் ‘கொரில்லா’ யுத்தம் செய்து வருபவர்கள் என்பது ஓன்றும் புதிய செய்தி இல்லை. புலிகளின் ‘யுத்த முறை’ உலகறிந்த ஒன்றே. மக்கள் மத்தியில் நீந்திக் கொண்டு யுத்தம் செய்வது என்று மாவோ சொன்னதை ‘வேத வாக்காக’ பார்ப்பவர்கள்கூட புலிகளின் ‘யுத்த முறை’ பற்றி விமர்சிப்பது வேடிக்கையானது. புலிகளின் யுத்த முறை தவறு. மக்கள் உயிர் காக்க ஒதுங்கும் இடங்களில் இருந்து தாக்குதல் செய்யும் முறை மக்கள் உயிரை பொருட்படுத்தாத நடவடிக்கையே. ஆனால் ஒட்டுமொத்த மக்களையும் புலிகள் கேடயமாக பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. யுத்தத்தில் துன்புற்ற ஆயிரக்கணக்கான மக்களின் வாக்குமூலங்கள் இன்று பதிவு செய்யப்பட்டிருகிறது. அந்த வாக்கு மூலங்களில் புலிகள் செய்த மனித உரிமை மீறல்களும் பதிவாகி இருக்கிறது. எவ்வாறு மக்கள் திட்டமிட்ட முறையில் இலங்கை இரானுவத்தால் கொல்லப் பட்டார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. இப்படி இருக்க அந்த இறப்புக்கு எல்லாம் எப்படி புலிகள் சம பெறுப்பு எடுக்க வேண்டும் என நீங்கள் கேட்க முடியும்? ‘புலிகள் சண்டை போட்டதால்தான் இராணுவம் சுட்டது’ – ‘புலிகளின் பாசிச அரசியலால்தான் இராணுவம் நடவடிக்கை எடுத்தது’ போன்ற கேவலான வாதங்களைக் காவிக்கொண்டு வராதீர்கள். வேறு வழியின்றி இராணுவம் இந்தப் படுகொலைகளை செய்தது என்பதுதான் அதன் அர்த்தம். இராணுவம் இந்த படுகொலைகள் செய்வது தவிர்க்க முடியாததாக இருந்தது என படுகொலையை நியாயப்படுத்துவதுதான் அதன் அர்த்தம். 

புலிகள் மனிதக் கேடயமாக மக்களைப் பாவித்தனர் என்பதை ராஜபக்ச அரசும் மேற்கு நாட்டு அரசுகளும் அடித்துக் கூறுகின்றன. புலிகள் சுட்டார்கள் –இரானுவத்தை நோக்கி மக்கள் நகரவிடவில்லை என்பதைத் தவிர இவர்களிடம் வேறு வாதம்/ஆதாரம் கிடையாது. புலிகள் இல்லாத இடங்களில் என்ன நடந்தது? 

யுத்தம் முடிந்த கையோடு ‘கொலை மறப்பு’ செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் மும்முரமாக இவர்கள் முன்னெடுத்தனர். படுகொலையை செய்யும் போதும் –அதை மூடி மறைக்கும் போதும் இலங்கை அரச அதிகாரம் பக்கம் நின்று கொண்டு தாம் அரசை ‘நூறுவீதம்’ எதிர்ப்பதாக தம்பட்டம் அடிப்பது கேவலம். 

தமது உறவுகளை பலிகொடுத்துக்கொண்டிருந்த உறவுகள் தெருவில் கூடிய பொழுது அவர்களை புலி ஆதரவாளர் எனத் தட்டிக் கழித்து ஒதுக்கியவர்கள் போராட்டம் என்றோ ஒடுக்கப்படுவோர் பக்கம் நிற்கிறோம் என்றோ சொல்லிக் கொண்டு வராதீர்கள். உங்கள் நிபந்தனைகளை எல்லாம் ஏற்று மக்கள் தெருவுக்கு வந்தால்தான் ஆதரவு என்ற உங்கள் நிலப்பாட்டோடு உங்கள் வீடுகளில் – வலைத்தளங்களில் முடங்கி கிடந்து குத்தி முறியுங்கள். உங்கள் பேச்சுரிமைக்கும் சேர்த்துத்தான் நாம் போராடுகிறோம். ஆனால் நீங்கள் முன்வைக்கும் அலட்டல்களை – அரச ஆதரவு கன்றாவிகளை சரி என நிறுவ முயற்சிக்காதீர்கள்.  

புலிகள் அராஜகம் செய்திருக்கிறார்கள் – ஆனால் ‘பாசிஸ்டுகள்’ இல்லை. ஒட்டுமொத்த யூதர்களையும் கொல்லவேண்டும் எனக் கருதும் கமாஸ் இயக்கம்கூட பாசிஸ்ட் இயக்கம் எனச் சொல்லி விட முடியாது. ஆனால் மேற்சொன்னவர்கள் யாரும் தற்போது ‘பாசிச கமாஸ் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றோ – கமாசை கண்டிப்பதை முதன்மையாகச் செய்ய வேண்டும் என்றோ சொல்வதில்லை. 

மற்ற புலி எதிர்ப்பாளர் பலர் ‘தீவிரவாத’ இஸ்ரேல் இருப்பதற்கு உரிமை இல்லை எனச் சொல்லி ‘பாலஸ்தீன விடுதலைக்கு’ ஆதரவு தெரிவிக்கின்றனர். கமாஸ் குழந்தைகளை கேடயாமக பாவிக்கிறது என்ற குற்றச் சாட்டை இஸ்ரேல் அரசு வைக்கிறது. ஏராளமான குழந்தைகள் இஸ்ரேல் குண்டுகளுக்கு இரையாகியதை அவ்வாறுதான் இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. கமாசையும் இஸ்ரேல் வன்முறையையும் ஒரே தளத்தில் வைக்க முடியாது என்ற மிக அடிப்படையான – மிக சுலபமான புள்ளியைக் கூடவா உங்களால் விளங்கி கொள்ள முடியவில்லை. விளங்குது என்றால் இது எந்த விதத்தில் புலிகள்/இலங்கை இராணுவத்துக்குப் பொருந்தாது?

ஈழ விடுதலை போராட்டத்தில் பாலஸ்தீன விடுதலை அரசியலின் செல்வாக்கு அதிகம். பிஎல்ஓ (பாலஸ்தீன விடுதலை இயக்கம்) பெயரைப் பின்பற்றிதான் ரிஎல்ஓ (ஈழ விடுதலை இயக்கம்) என்ற பெயர் வைப்பது ஆரம்பித்தது. அரபாத் என்ற பெயரை தங்களின் இயக்கப் பெயராக எடுத்துக் கொண்டவர்கள் பலர். ஆயுத பயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்று வந்தவர்கள் பலர். குறிப்பாக புளொட் இயக்கம் சார்ந்தவர்கள் பலர் பாலஸ்தீனம் சென்று வந்தனர். என்ன ஆயுதப் பயிற்சி எடுத்தனர் – எத்தகைய அரசியற் தெளிவை அடைந்தனர் என்பது வேறு விசயம்.  பிஎல்ஓ ட்ரையினிங் எனச் சொல்லி கீரோ வேசம் போட்டுத் திரிந்ததுதான் மிச்சம். தங்களை ‘உயரடுக்கில்’ நிறுத்தி உயிரைக் கொடுக்க வந்த பல போராளிகளை துச்சமாக பார்தது – அவர்தம் உயிரைப் புடுங்கியதும் ஈழ வரலாறாக இருக்கிறது. இருப்பினும் போராட்டங்களுக்கு இடையில் எவ்வாறு செல்வாக்கு நகரும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் இது இருக்கிறது. 

ஈழப் போராட்டமும் பாலஸ்தீன போராட்டமும் ஒரே மாதிரி என நாம் சொல்லவில்லை. ஆனால் இந்த போராட்டங்கள் பற்றி – உலகெங்கும் நடக்கும் தேசிய கோரிக்கை போராட்ட நகர்வுகள் பற்றி – சீரான பார்வை –சரியான கொள்கை நிலைப்பாடு எடுப்பது அவசியம் என்றே சொல்கிறோம். ஒரு அதிகார சக்தி/ ஒரு கொடுமை சரி – மற்றதற்கு எதிர்ப்பு என்ற முரண்பட்ட நிலைப்பாட்டை எந்த போராட்ட அமைப்பும் எடுக்கக் கூடாது. 

‘எல்லா அமைப்பும் பிழை. நீங்கள்தான் சரி என சொல்ல வருகிறீர்களா’ என சிலர் இங்கு கேட்கலாம். இது அர்த்தமற்ற கேள்வி. இங்கு கூறிய கருத்துக்களில் முரண்பாடு – தவறுகள் இருப்பின் அதை சரிப்படுத்த வாருங்கள்- எது சரி என்ற உங்கள் நிலைப்பாட்டை வையுங்கள். சும்மா தட்டிக் கழித்து செல்லும் பிரச்சினை அல்ல இது. யுத்தம் நடக்கும் அல்லது சமூகம் அசையும் புரட்சிர கால கட்டங்களில் கொள்கை நிலைப்பாடு சார் பெரும் பிளவு உருவாகுவதை நாம் அவதானிக்க முடியும். முதலாம் உலகப் போர் சார்ந்த நிலைப்பாடு எவ்வாறு போராட்ட சக்திகளைப் பிளவு படுத்தியது என்பதையும், மக்கள் சார்பு என சொல்லிக் கொண்டு நின்றவர்கள் எவ்வாறு தங்கள் தங்கள் நாட்டு அதிகார சக்திகள் பக்கம் திரண்டனர் என்பதையும் வரலாற்றில் பார்க்க முடியும். பாரளுமற்ற அரசியற் பிரதிநித்துதவம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய அளவில் இருந்த கட்சிகள் இருந்தும் அவை யுத்த கால கட்டத்தில் சரியான நிலைப்பாடு எடுக்கத் தவறின. சுவிட்சலாந்தில் இருந்த சிம்மவால்ட் என்ற இடத்தில் இரகசியமாக நடத்தப்பட்ட இடதுசாரிகளின் யுத்த மறுப்பு மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதை பார்ப்பவர்களுக்கு ஏக்கமே மிஞ்சும். சமரசமற்ற யுத்த மறுப்பு என்ற நிலைபாட்டில் அந்த மாநாடு கூட பிளவுபட்டது. லெனின் ட்ரொட்ஸ்கி முதலானவர்கள் இந்த மாநாட்டில் வாதிட்ட நிலைப்பாடு பின்பு எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் – அநியாயமாக கொடுமைக்கு உள்ளாகி செத்துக் கொண்டிருத்த ஏழைச் சிப்பாய்கள் மத்தியில் பரவியது என்ற வரலாறை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சிம்மவால்ட் விவாதத்தை போராட்ட சக்திகள் அனைவரும் வாசிக்க வேண்டும். 

இத்தகைய இக்கட்டான கால கட்டத்தில் மக்கள் பக்கம் நிற்போர் தனிமைப் படுத்தப் படுவர் என்பதை 2009 ம் ஆண்டு படுகொலை கால கட்டம் எமக்கும் கற்றுத் தந்திருக்கிறது. இக்கால கட்டத்தில் மேற்சொன்ன சக்திகள் எவருமே மக்கள் பக்கம் நிற்கவில்லை- சரியான நிலைப்பாடு நோக்கி நகரவில்லை. நாம்தான் என்றும் சரி என்ற ‘அராஜக’ முறையில் இதைச் சுட்டவில்லை. மாறாக அரசியல் நிலைப்பாடு மற்றும் அனுபவ அடிப்படையில் நாம் சொல்லுகிறோம். வரலாற்றை பாருங்கள் – நிலைப்பாட்டை பாருங்கள். சரி தவறுகளை விவாதிக்க முடியும். உங்கள் பக்க நியாயங்களை வையுங்கள். தட்டிக் கழித்து விட்டு மீண்டும் மீண்டும் தவறான வழிமுறைகளை வைத்துக் கொண்டு – அதுதான் சரி என நிறுவ முயலாதீர்கள். 

தேசியக் கோரிக்கை என்பது மிகச் சிக்கல் வாய்ந்தது எனவும் – இடத்துக்கு இடம் மாறுபடும் எனவும் ‘அதி மேதாவித்தனக்’ கதை பேசுவதை நிறுத்தி – அது எப்படி மாறுபடுகிறது – இரட்டை வேடம் போட வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறது என்பதை அதைச் செய்பவர்கள் சரியாக விளக்க வேண்டும். சர்வதேச நிலவரங்களில் சரியான நிலைப்பாடு எடுப்பது உள்நாட்டில் சரியான நிலைப்பாடு எடுப்பதோடு தொடர்பு பட்டது என்பதை ஏற்றுக் கொள்வது, தூர நோக்குள்ள போராட்ட அரசிய நோக்கி நகர்பவர்களுக்கு அத்தியாவசியமானது. 

போராட்டம் தேவை என கருதும் மக்களே, தோழர்களே, ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு எடுக்கிறார்கள் எனச் சிந்தியுங்கள்? இந்த போலித்தனத்தின் பின் இருக்கும் அரசியல் என்ன? தனிப்பட்ட ‘உணர்வு’-அனுபவம் சார்ந்து எழுந்தமான முடிவுகளுக்கு தாவுவது எத்தனை தவறு என தெரிந்து கொள்ள வேண்டும். தம்மை போரட்ட சக்தியாக காட்டிக் கொள்ளும் அமைப்புக்கள் இதை நிச்சயமாகச் செய்ய முடியாது. சிறந்த கொள்கை நோக்கி நகர சீரான பார்வை வேண்டும். நுனிப்புல்(கூகுள்) மேய்ந்து சொந்த சுய நல நிலப்பாட்ட்டுக்கு ஆதாரம்/நியாயம் தேடுவதை விட்டு ஒடுக்க்கப்படும் மக்களை முதன்மைப் படுத்திய அறிதல்/நடவடிக்கை நோக்கி நாம் நகர வேண்டும்.