– பாரதி – –
தேசிய விடுதலை என்பது ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மூடிமறைத்துக்கொண்டு அதன் மேல் ஏறி நின்று பேசவதல்ல. எம்மத்தியில் உள்ளவர்கள் சிலர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் எம் சமூகத்தில் மிக சொற்பமானவர்களே. இவர்களை இனம் கண்டு மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவது முக்கியம்.
அடித்து வீழ்த்தும் வசனங்களால் பச்சை இனவாதம் பேசும் சிலரால் விடுதலை என்ற பதமே பொருள் இழந்து விடும் அபாயம் இருக்கிறது.
ஒரு இனமக்கள் ஏன் தேசியத்தை நோக்கி நகர்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் விடுதலையை வேண்டிப் போராட்டம் நோக்கி நகர்கின்றனர்.
ஒடுக்குதலுக்கும் சுரண்டக்கும் எதிராகப் போராடி பெறப்போகும் விடுதலை எந்த மக்களுக்கானது? பொரும்பான்மையான தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கானதா? அல்லது சிறுபான்மை சுரண்டுபவர்களுக்கும் சாதி ஆதிக்க பிற்போக்கு வாதிகளுக்குமானதா?
அதிகாரச் சிறுபான்மையர் சொல்லும் தேசியம் இதுதான். சாதியம் இருக்கும். பெண் ஒடுக்குமுறை இருக்கும். வர்க்க வல்லூறுகள் இருக்கும். இவற்றையெல்லாம் யாரும் கண்டுக்கொள்ளக் கூடாது- அது தானாய் கானாமல் போய்விடும் என நம்பவைக்க பார்க்கிறார்கள்.
அவர்கள் சொல்லுகிறார்கள் ‘இப்போதெல்லாம் யார் சாதிப்பாக்கிறார்கள்’ ‘இந்தியச் சாதி பிரச்சனை போல் ஒன்றும் இங்கில்லை’ ‘திரு மணங்களில் மாத்திரமே சாதிப்பார்க்கிறார்கள்’ ‘நீங்கள் தான் சும்மா சும்மா ஊதிப் பெருப்பிக்கின்றீர்கள்’ என்று கூறுகிறார்கள்.
நாங்கள் இவர்களை நோக்கி வைக்கும் கோரிக்கை மிக எளிமையானது ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சனையைப் பேசுங்கள். விவாதியுங்கள். ஒரு முற்போக்கு விடுதலைத் தேசியத்தை நோக்கி நகருங்கள் எனபதுதான். தவிர எல்லா ஒடுக்குமுறைகளையும் மூடி மறைத்துக்கொண்டு ‘நம்பிக்கை வையுங்கள் எல்லாம் நாளை மாறும்’ என்ற செயலற்ற வெற்று நம்பிக்கையின் அடிப்படையில் இயங்காதீர்கள்.
சாதியத்தையும் மற்றய ஒடுக்குமுறைகளையும் மறைத்துக்கொண்டு பேசும் இவர்ளை நாம் இரண்டுவகையாகப் பிரி;த்துப்பார்க்கலாம் என்று நினைக்கிறேன். முதலாவதானவர்கள் ஆதிக்க சாதியினர். இவர்கள் மற்றவர்களை ஒடுக்கியே வாழ்ந்தவர்கள். ஒடுக்குதலுக்கு உள்ளானவர்களின் வலி தெரியாது. இல்லாத ஒன்றை நாம் ஏன்பேசுகிறோம் எழுதுகிறோம் – கொள்கைகளில் ஒன்றாயக்; கொண்டுள்ளோம் என்ற கவலை அவர்களுக்கு. மற்றயவர்கள் தேசியம் என்ற பெயரால் வர்க்க நலத்துடன் சாதிய மேலாதிக்க நலன்களின் வழி நின்றுகொண்டு தேசியம் என்பது தங்களுக்கான ஒன்று என்ற முன்முடிவில் இருந்தியங்குபவர்கள்
முன்பு விடுதலை இயக்கங்கள் வளரத் தொடங்கிய காலத்திலும் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் வன்முறைகளை எதிர் கொண்டனர். கோயிலுக்குள் நுழையக் கூடாதவர்களாக தடைபட்டிருந்தனர். பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாத மக்களாய் தள்ளி வைக்கப்பட்டிருந்தனர். இத்தகய சந்தர்ப்பங்களின்போது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் தலையிட்டனர். ‘பிரிந்து நின்றால் சிங்கள தேசியம் எம்மை பிரித்து ஆளும். சாதி பிணக்குகள் தேசியத்துக்கு பங்கம் விளைவிக்கும். தேசியத்துக்காய் ஒன்று சேர்ந்து போராடுவோம்’ என்றனர். எல்லாம் சரிதான் ஆனால் அதன் பின் அந்த ஒடுக்கப்பட் மக்களுக்கு நீதி கிடைத்ததா? அன்று அந்த ஒடுக்கப்பட மக்களின் பிரச்சனை எப்டி கையாளப்பட்டது? அவர்களது துன்பமும் துயரமும் பேசாமல் இருந்ததின் மூலமா தீர்வை நோக்கி நகர்ந்தது? என்ற கேள்விக்கெல்லாம் இவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.
ஈழத்தில் சாதி இல்லை என்பது பம்மாத்தான மகா பொய். அதேபோல் எமது தேசியப் பிரச்சனையில் இந்தியா மற்றும் -ரோ என்பன எமக்கு கிடைத்த சாபக்கேடுதான் அதில் மாற்றுக்கருத்திலை. ஈழவிடுதலையை குழப்புவதற்கு இலங்கை இந்திய அரசாங்கங்கள் செய்தவை நாம் எல்லோரும் அறிந்தவையே. விடுதலை போராட்ட இயக்கங்களை கலைத்தது சகோதர படுகொலைகளை தூண்டிவிட்டது இந்திய அரசாங்கம் என்றால் இலங்கை இனவெறி அரசாங்கம் தமிழ் முஸ்லிம் உறவை குழப்புவதற்க்காக இன உணர்வை தூண்டிவிட்டு வன்முறைகளையும் இனப்படுகொலைகளையும் செய்து அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்களின் இரத்தம் குடித்துக்கொண்டிருந்தது.
ஆனால் அதிகமாக தேசிய விடுதலைப்போராட்டங்களில் தம் உயிரைக் கொடுத்துப்போராடியது ஒடுக்கபட்ட மக்களின் பிள்ளைகளும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளும்தான். அப்படியிருக்க இவர்களது பிரச்சனையை பேசாமல் – அவர்களுடைய விடுதலையை கையில் எடுக்காமல் கடந்து சென்று விடுவதானது யாரை வாழவைப்பதற்க்கு என்ற கேள்வி எழுவது நியாயமானது இல்லையா?
ஒரு பிரச்சனையைப் பேசாமலேயே இருந்துவிடுவதால் இன்னுமொரு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும் என்பது கற்பனா வாதமே ஒழிய உண்மையல்ல. விடுதலை என்ற பொருள் எல்லா மக்களுக்குமனதே. அதுவே நிரந்தர விடுதலையாகவும் தீர்வாகவும் அமைய முடியும். இந்த தேசியத்தையே நாம் வேண்டி நிக்கிறோம் ஒழிய அதை கண்டுகொல்லாமல் விடுவதால் பயன் பெறப்போவது மக்கள் அல்ல.
சாதி – தீண்டாமை என்பது வெறும் வார்த்தை விளையாட்டுக்களால் மட்டும் முடிந்து விடக்கூடிய விடயமல்ல. உயிரும் உணர்வும் மாணமும் வாழ்வும் சிதைக்கப்பட்டு கிடக்கின்ற மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை இது. இப்பிரச்சினையை வரலாற்று ரீதியாக அனுகுவதும் புரிந்துகொள்வதும் பேசுவதும் செயற்படுவதும் எம் ஒவ்வொருவரினதும் சமரசங்களற்ற கடமை.
புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து ஈழம் சென்று வருகிறவர்கள் சொல்லும் செய்தி அடிவயிற்றில் அருவெறுப்பை ஏற்படுத்தும் படியான சம்பவங்களாக இருக்கின்றன. வாழ வழியின்றி எதிரியால் விரட்டியடிக்கப் பட்ட தருணங்களில் கூட இவர்களது தீட்டாமை விட்டொழிந்த பாடில்லை. இந்த நிலையில் அதிகாரம் என்பது இத்தகைய ஆதிக்க அடக்குமுறை சார்ந்தோரை நோக்கி நகரும்போது ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படியானதாக இருக்கும் என்று நாம் சொல்லி தெரியத்தேவையில்லை. ஏற்றத்தழ்வான சமூக அமைப்பில் அதிகாரத்தில் உள்ள அதிகார வர்க்கம் சாதியத்தை கட்டி பாதுகாக்கவே விளையும்.
முகநூலில் வந்து குவியும் வக்கிரங்களையும் இனத்துவேசக் கருத்துக்களையும் பார்க்கும் போது ஜனநாயகத்தையும் மனிதாபிமான நாகரீகத்தையும் விரும்பும் எவராலும் சகித்தக்கொள்ள முடியாது. இத்தகையானவர்கள் தங்களது சிந்தனைக்கு லாடம் கட்டிவிட்டு அக்கம் பக்கம் எதையும் பாரக்காமல் வீசி அடித்துக்கொண்ருக்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கு பிற்போக்குத் தேசியம். அதற்கு முன் எது வந்தாலும் வெட்டி வீசுவோம் என்ற தோரணையில் இருக்கிறது கதை. திறந்த உரையாடலுக்கோ விவாதத்துக்கோ இவர்கள் தயாரில்லை. ஏன் என்றால் இவர்களால் மக்களின் பிரச்சனைகளை அணுக முடியாது. முற்போக்கான அரசியல் தீர்வை நோக்கி மக்களைக் கொண்டுபோவதற்க்கான எந்த அடிப்படை நோக்குமற்றவர்கள் இவர்கள். வெளியில் வந்தால் இவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற பயமாகக்கூட கூட இது இருக்கலாம்.
நான் ஒரு முகநூல் பதிவு பார்த்துப் பயந்துபோனேன். அந்தப்பதிவில் இப்படி வருகிறது. தனது கருத்துக்கு முரணானவர்கள் என்றால் அவர்களை எந்த கீழ்தரமாய் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் எதை பயன்படுத்தியும் தாக்கலாம் என்கிறது அந்தப் போஸ்ட். இங்கு வெட்டு குத்து தாக்கு என்பது சக போராளிகளை நோக்கியே. மாற்றுக்கருத்துள்ள எவரும் இவர்களுக்கு எதிரிதான். ஜனநாயகத்தின் பக்கம் இவர்கள் தலைவைத்துப்படுக்கக் கூட தயாரில்லை. மாற்றுக்கருத்துள்ளவர்களின் சாதி மதம் பிரதேசம் பால் எதைவேண்டுமானாலும் எடுத்து தாக்குவதற்க்குத் தயார். நல்ல வேளை இவர்களிடம் ஆயுதங்களில்லை. இது என்ன வகையான அரசியல்? மக்களும் மக்களது பிரச்சினைகளும் எங்கு தள்ளிவைக்கப் படுகிறது? இப்படியான நடவடிக்கைகளினால் இன்று எம் மக்கள் எவ்வளவை இழந்து நிற்;கிறார்கள்? இவர்கள்தான் எல்லா ஒடுக்குமுறைகளுடனும் கூடிய தேசியத்தை வேண்டி நிற்பவர்கள். இவர்களுக்கு மக்களின் ஒடுக்கப்பட்ட உணர்வுகள் பற்றி எந்த அக்கறையுமில்லை. மக்களுக்காக மறந்தும் வாய் திறந்திட மாட்டாரகள் இவர்கள்.
இவர்கள் பெண்கள் மீதான வன்முறையையும் வன்மத்தையும் பொதுவெளியில் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நடந்த சாதாரண சம்பவத்தை இவர்கள் தமிழ் தேசியத்துடனும் தமிழ் கலாச்சாரத்துடனும் தொடர்பு படுத்தி நாகரீகமற்ற வன்முறை கலாச்சரத்தை வளர்க்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சிங்கள விளையாட்டு வீரன் ஒருவனை தமிழ் பெண் இரசிகை ஒருவர் கட்டிப்பிடித்துவிட்டார். இது எவ்வளவு உலக மாக பிரசனை? இந்தப் பெண்ணை எப்படி விமர்சிக்கிறார்கள் என்று பாருங்கள். நடத்தை கெட்டவள் என்றும் கலவி இன்பம் கொள்ள துடிக்கும் பெண் என்றும் -இவளை நடு ரோட்டில் வைத்து வெட்டி வீசவேண்டும் என்றும் இவள் போன்றவர்களினால்தான் தமிழ் தேசியமும் தமிழ் கலச்சாரமும் நாசமாகிறது என்றும் முழங்குகிறார்கள். அதிலும் இப்படியான பெண்ணை வெட்டி கொத்தி விட்டாலே பாதி தேசியமும் கலாச்சாரமும் வாழ்ந்து விடுமாம். இப்படியான தேசியத்தைதான் வென்றெடுக்க வேண்டுமாம். உங்கள் ஊத்தை பிற்போக்குத் தனத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளில் பூசி நாறடிக்காதீர்கள்.
இப்படியான பிற்போக்கு வாதிகளின் கையில் அதிகாரம் கிடைத்தால் எப்படியானதாக இருக்கும். சவுதியில் பெண்ணின் நடத்தை குறித்து தலையை வெட்டுவதற்க்கும் இதற்க்கும் என்ன வேறுபாடு உண்டு?.; சிங்கள அரசின் ஆட்சியில் குறைந்த பட்சம் இந்த அவல நிலை இல்லைதானே என மக்கள் நினைக்கக்கூடும். இந்த காட்டுமிராண்டி ஆட்சி நடத்தவா நாடு கேக்கின்றீர்கள?.
ஒரு ஆணை கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் மிக சாதாரணமான நிகழ்வு. அது அவர் அவர் விருப்பம் சார்ந்தது. இதற்க்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு?
பெண் பாடசாலை செல்வதையே கலாச்சார சீர் கேடாக நினைத்த சமூகத்தில்தானே நாம் எல்லோரும் பிறந்து வளர்ந்தோம். இந்தப்படிப்பை வைத்துதானே இன்று மேற்க்கத்தேய நாடுகளில் விற்று வயிறு வளர்க்கிறோம். இந்த உரிமைகள் எல்லாம் என்ன சும்மா கிடைத்தவையா என்ன? பெரியார் போன்ற எத்தனை சமூகவிடுதலைப்போராளிகளின் தியாகங்கள் அவை. இந்த சிற்றறிவுகூடவா பலருக்கு இல்லை. என்ன மாதிரியான அகந்தை இது.
பரதநாட்டியம் படிப்பதற்க்கு ஈழத்தமிழர்கள் தங்களது பொண் குழந்தைகளுக்காக அள்ளிக்கொட்டும் பணம் பல ஆயிரங்கள்? பரதம் ஆடுவது தப்பில்லையாம் மரியாதையானதாம். ஆனால் கனடாவில் வாழும் தமிழ் பெண்கள் சினிமாப்பாட்டுக்கு ஆடினால் கலாச்சார மீறலாம். மேலாதிக்க மன நிலையின் ஒரு அம்சமாகத்தானே அன்றும் இன்றும் பரந்து உள்ளது.
இந்த இடத்தில் தான் எமது பிற்போக்குத் தேசிய வாதிகள் வெறுக்கும் இன்னும் ஒருவரைப்பற்றிப் பேச வெண்டியிருக்கிறது.’ ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையில்லாத உலகில் சுதந்திரத்தைப்பற்றி பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது’? என்று கேட்ட கிழவன்தான் பெரியார். பெரியார் சுயமரியாதைக்காகவும் சாதிய வன்முறையிலிருந்து விடுதலைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் கடைசிவரை சமரசங்களின்றி போராடியவர்.
ஆனால் பெரியார் பெண்ணின் ஆடையிலிருந்து பெண்ணின் கர்ப்பப் பை வரை ஒடுக்குமுறைக்கு ஆண் பயன்படுத்திய அனைத்தையும் எதிர்த்தவர். ஆனால் சில புலம்பெயர்ந்த பெண்கள் பெரியாரை மகிந்த ராஜபக்சவுக்கு ஒப்பிட்டு பதிவிடுகின்றனர். காரணம் தேசியமாம். சும்மா இப்பிடியெல்லாம் பொசுக்கிவிடுவதற்க்கு என்ன கொக்கா அவர்….
பெரியாரை விமர்சிபவர்கள் பெரியார் சொன்ன ஒரு வரியைக் கூட படித்திராத பிற்போக்குத் தேசிய வாதிகள். தமிழ் நாட்டில் பதவிக்காக பெரியாரையும் தமிழ் இனவாதத்தையம் கையில் எடுத்தாகிவிட்டது. பின் பெரியாரின் பிள்ளைகள் என்றவர்கள் பெரியாரை பலியிட்டுத்தான் ஆகவேண்டும். இந்த மோதலில் குளிர் காய்கிறது இந்துத்துவா அமைப்புக்கள். இவர்களுக்கு பெரியாரை தாக்க கிடைத்த மிக அற்புதமான தருணம் இது. அதை அவர்கள் எந்த வகையிலும் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் எங்கள் ஈழ வெங்யாங்கள் ஏன் பெரியாரை திண்டு ஏப்பம் விடுகின்றன என்று எனக்குப்புரியவில்லை. ஏன் இது அவர்களுக்கே புரிந்திருக்காது. காரணம் பெரியார் யார் என்றே இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பெரியாரின் சுதந்திர உணர்வை எல்லோராலும் இலகுவாக பெற்றுவிட முடியாது. அதற்கு அநீதியை எங்கு கண்டாலும் சீற்றம் கொள்ளும் போர் குணம் வேண்டும். கேவலம் கலியாணம் என்ற சொல்லுக்காக எல்லா சமரசங்களையும் செய்து கொள்ளும் அவர்களால் எப்படி அதைப் புரிந்துகொள்ள முடியும்? சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல் எதிர்ப்புணர்வை மாற்றிக்கொண்டு தப்பிப்பிழைப்பதே இவர்களின் வழக்கம்.
பெரியார் எங்குமே தன்னை ஏற்றுக்கொள்ளும் படிக் கூறியது கிடையாது. இவர் ஒரு சமூக விடுதலைப்போராளி. பெரியார் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்று அவரே சொல்ல மாட்டார். ஒரு போராளியின் போராட்த்தை இந்த கால சமூக நிலையோடு பொருத்திப்பார்த்தே புரிந்தக்கொள்ள வேண்டும். பெரியாரிடம் போய் கார்ல்மாக்ஸின் மூலதனம் ஏன் படிக்க வில்லை என்று கேட்டுக்கொண்டிருப்பது எங்கள் அறிவீனத்தின் பலகீனமே. அதைப்படித்து இருந்தால் இன்னுமொரு தளத்தில் அவர் பயணித்திருப்பார் என்று ஆருடம் வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.
பெரியாரை விமர்சிப்பவர்கள் குறைந்த பட்சம் அவரது ஒரு நூலையாவது படித்திருக்க வேண்டும் அத்தடன் அவர் வாழ்ந்த கால கட்டத்தை புரிந்து கொண்டு விமர்சிக்கவும் வேண்டும். ஏல்லோரும் விமர்சிகப்பட வேண்டும் என்றால் – ஆம் விமர்சிக்கப்பட வேண்டியவர்களே. எவரையும் துதிபாடி வணங்கிச்செல்லும் பழக்கமற்றவர்கள் நாம். பெரியாரும் அப்படியே செய்தவர்.