-சு. கஐமுகன் gajan2050@yahoo.com
தமிழ் தலைமைகளுக்கே தமிழ் மக்களின் மீது அக்கறையும் கரிசனமும் வராத போது தீடிரென்று மஹிந்த ராஜபசவுக்கு தமிழ் மக்களின் மீது அன்பு பெருக்கெடுத்து ஆறாக பாய்கின்றதாம்.
விக்கினேஸ்வரன் இனவாதி இல்லை என்கிறார், தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சரியான வீதி இல்லை என்கிறார். முகாம்கள் மூடப்பட்டுள்ளதா?, மக்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்களா? எனக் கவலைப்படுகிறார். முகாம்களை உருவாக்கியதே அவர்தான் என்பது அவருக்கே மறந்து விட்டது போலும்.
யாழிலும் எனக்கு உறவினர்கள் இருக்கின்றனர் என சொந்தம் கொண்டாடுகிறார். பின்னர் ஏன்தான் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உறவுகளை கடத்தியும் காணாமல் போகச் செய்தும் பின்னர் கொலையும் செய்தார் என்றுதான் தெரியவில்லை.
ஒருவேளை உறவுகளுக்கிடையில் ஏதேனும் குடும்ப பிரச்சினைதான் காரணமோ தெரியவில்லை. கோத்தபாயவிடம்தான் கேட்க வேண்டும். மேலும் சடலங்களைக் கண்டு மகிழ்பவன் நான் அல்ல என்கிறார். 2006 முதல் 20009 வரையான இவரின் ஆட்சியில் கொன்று குவிக்கப்பட்ட மக்களின் சடலங்களைக் கூட இல்லாமல் எரித்துச் சாம்பலாக்கியவர் அப்படித்தான் பேசுவார்.
சுயநல அரசியல் அல்லாது மக்கள் சார்ந்து இயங்குகின்ற அமைப்புக்கள் அல்லது இயக்கங்கள் போல் மக்களுக்கு வேலை வேண்டும், சரியான வீதி வேண்டும் என்கிறார். வடமாகாண முதலமைச்சர் இனவாதி இல்லை என்று முதலமைச்சருக்கு குலை அடிக்கிறார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலைக்கு இவரின் ஊழல் ஆட்சியும், மோசமான குடும்ப அரசியலும் ஒரு காரணம் என்பது எமக்கு தெரியாதா?
கைகளில் பல்வேறு நிற மாந்திரீக நூல்களைக் கட்டிக் கொண்டு குலுக்கி குலுக்கி உளறுகிறார் மஹிந்த. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு படி மேலே சென்று “ஒரு இனம் மகிழ்ச்சி அடையும் அதேவேளை மற்றுமொரு இனம் வேதனை அடைவதை ஏற்றுக் கொள்ளமுடியாது” என்கிறார்.
இப்படியே போனால் 2009 இல் மிகப் பெரிய இனப் படுகொலையை செய்தது இவர்தானா என எமக்கே சந்தேகம் வந்துவிடும். அந்தப் படுகொலையை கண்டித்து வெளியக விசாரணையையும் கோருவார் போல!
இவ்வாறு மகிந்த, தான் மக்கள் சார்பானவன். இன, மத, மொழி பேதங்களை கடந்தவன் என திடீர் வேடம் போடுவதன் காரணம் தான் என்ன? 2009 இல் நடந்தது இனப் படுகொலை அல்ல மாறாக அது பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் மட்டுமே என்றவர்தான் மகிந்த.
மக்கள் எவருமே அதில் இறக்கவில்லை, தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்று எம் காதில் பூ சுத்த முயன்றவர்தான் அவர். இப்பொழுது மாறி வாசிக்கிற இசைக்கு தாளம்போட சிலர் தயாராக இருப்பது கேவலம்.
ஒரு புறம் இனவாதப் பேச்சுக்களை பேசி இனவாதத்தை தூண்டியும் மறுபுறம் மக்கள் சார்பான மக்களின் வாழ்வாதரப் பிரச்சினைகளை பற்றி பேசியும் அனைத்து இன மக்களையும் மீண்டும் தன் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றார் மகிந்த.
இழந்த ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மகிந்த போடும் அவதாரங்களே இவையன்றி மக்கள் மீதான கரிசனையல்ல. அண்மையில் சென்ற பாதயாத்திரை கூட இந்த அவதாரங்களில் ஒன்றுதான். மைத்திரியையும் ரணிலையும் விரட்டி அடிப்போம், கொழும்பை கைப்பற்றுவோம் என அங்கு எழுப்பப்பட்ட வீரவசனங்கள் இவற்றுக்கு சான்று பகிர்கின்றன.
மேலும் யாழ்ப்பாணத்திற்கும் செல்வோம், மலேசியா போன்று அங்கு கறுப்பு கொடி காட்டினாலும் அங்கு செல்வோம் என ஒரு வித மமதையுடன் கூறுகிறார் மகிந்த. அதவாது முடிந்தால் தடுத்துப் பார் என்பதையே அவர் சூசகமாகத் தெரிவிக்கின்றார்.
பல்வேறு வர்த்தகர்களின் பேரில் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள தனது கறுப்பு பணத்தை மீண்டும் எடுத்து வந்து ஒரு அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச. அதன் ஒரு அங்கமாகவேஅண்மைக் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பொழுது குறிப்பாக ஜப்பானில் இருந்து 500 மில்லியனும், கொரியாவிலிருந்து 400 மில்லியனும் கொண்டு வரப்பட்டது.
இது பற்றி மகிந்த தரப்புகளிடம் கேட்ட பொழுது அவை மக்களால் சன்மானமாக வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மஹிந்தவுக்கு மில்லியன் கணக்கில் அன்பளிப்பு வழங்குபவர்கள் ஜப்பானிலும் கொரியாவிலும் இருக்கிறார்களா என்பது சந்தேகத்துக்குரியதே. இத்தகைய கறுப்பு பணம் மூலம் தமிழ் மக்களும், பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல் தலைமைகளும் வாங்கப்படும் பட்சத்தில் மீண்டும் மகிந்தவின் கை ஓங்கும் என்பதே நிதர்சனம்.
தமிழ் மக்களுக்கு முறையான அரசியல் தீர்வொன்றை முன்வைக்காமல் அவர்களின் 30 வருட போராட்டத்தை நசுக்கியவர், இனப் படுகொலையை செய்த இந்த கொலைகாரன் எந்த வித கூச்சமும் இன்றி தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீரும் வடிக்கின்றார். 2009 இன் பின்னர் கூட முறையான அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தும் அதனை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஊழலையும் இனத்துவேசத்தையும் வளர்த்து நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு சாய்த்ததுதான் மஹிந்தவின் வரலாறு.
மஹிந்தவின் கண்ணீரின் காரணத்தை அறிந்து மக்கள் தான் அவரை அரசியலில் இருந்து புறந்தள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் தன்னுடைய அரசியல் சுய இலாபத்துக்காக மீண்டும் ஒன்றல்ல பல முள்ளிவாய் கால்களை கொண்டு வரவும் தயங்க மாட்டார் மகிந்த என்னும் முன்னாள் இலங்கை மன்னர்.
மஹிந்தவோ அல்லது அவரது குடும்பம் சார்ந்த யாரோ அல்லது அவர் சார் வேறு ஒருவரோ மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் இருக்கவேண்டும் என்றால் நாம் ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பு அமைப்பு களத்தில் கட்டி எழுப்பியாக வேண்டும். மஹிந்தவை எதிர்க்க என ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதால் எமக்கு எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை. ரணில் பக்கம் இருந்து கூட மகிந்த இனவாதத்துக்கு ஆதரவுண்டு.
நாம் தெற்கிலும் எமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிப் பலப்படுத்த வேண்டுமே தவிர இன்னுமாரு இனவாத ஒடுக்குமுறை ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதால் விடுதலை நோக்கி நகர்ந்துவிட முடியாது.
ஆனால் இத்தகைய போலியான கருத்தை வைத்து இணக்க அரசியலை செய்து வருகிறது தற்போதய தமிழ் “தலைமை”. மக்கள் விழித்தெழ வேண்டும். எமது பலத்தை நாம்தான் காட்டவேண்டும். தற்போது நடக்கும் அரசியல் கூத்துக்களுக்குள் போராட்ட கருத்துக்கள் புதைக்கப்பட்டு விடாது செயற்படுவது அவசியம். இளையோர் போராட்ட அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும்.