வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்

862 . Views .

கின்ஸ்டோன் கவுன்சில்லுகும் யாழ் மாவட்டத்திற்குமான சமூக, அரசியல், கலாச்சார தன்மைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் நடைபெறும் நிகழ்வில் உரையாற்ற வடமாகாண முதலமைசர் அழைக்கப்படுள்ளார்.

முதலமைச்சரின் இவ் விஜயமானது புலம்பெயர் மக்களிடத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிற்போக்கு தனமான பிரித்தானியாவின் பழமைவாத கட்சியின் தலைமைத்துவதிலேயே கிங்ஸ்டன் கவுன்சில் நிர்வாகம் செயற்படுகிறது.

இவ்வாறான நிகழ்வுகள் மூலம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடத்தில் இந்த கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒருவித முயற்ச்சியாகவே கருதப்படுகிறது.

இங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை மறுத்தும் , நசுக்கியும் செயற்படும் இவ் அரசாங்கம் தமிழ் மக்களின் நலன் பேண வடமாகாண முதலமைச்சருடன் எவ்விதமான அரசியல், சமூக , கலாச்சார பரிமாற்றங்களை செய்ய போகின்றார்கள் என்பது மக்களிடம் ஒரு கேள்வியாகவே உள்ளது.

இந்த வகையான பரிமாறல்கள் மூலம் பொருளாதார முதலீடுகளை தமிழர் பிரதேசங்களில் ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம் முன் வைக்கப்படுகிறது. அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை விட்டு விட்டு போரினால் பாதிக்கப்பட்ட வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த அணிதிரள்வோம் என்ற கோஷம் புலத்தில் மக்களிடத்தில் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இதுவே பிரித்தானியவின் தற்போதைய ஆளும் வர்க்கத்தின் குரலாகவும் பலமுறை வெளிப்பட்டுள்ளது. ஈழத்தில் நசுக்கப்பட்டு இருக்கும் மக்களின் ஜனநாயக குரலாக ஓங்கி ஒலிக்கும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தி அரசியல் நீக்கம் செய்வதற்கான சந்தர்ப்பமாக அதிகார மையங்கள் செய்யற்படுகின்றன.

பல கோடி ரூபாய்களை செலவிட்டு போரை நாடத்திய சிங்கள பேரினவாத அரசு, போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத்தேவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை.

இவ்வாறு சிறுபான்மையின மக்களின் வாழ்வாதரங்களை முடக்குவதன் மூலம் ஜனநாயக உரிமைகளுக்கான அவர்களுடைய உணர்வை அழிக்க முற்படுகின்றது சிங்கள பெளத்த பேரினவாதம்.

இது இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாகவே நோக்கப்படுகிறது. புலம்பெயர் மக்களின் நேரடியான பொருளாதார முதலீடுகள் இலங்கையில் முற்று முழுதாக நிராகரிக்கபட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இலங்கை பொருளாதாரத்தில் பெரும் அந்நிய செலவாணி ஈட்டி தருவது தேயிலை ஏற்றுமதி ஆகும், ஆனால் மலையக மக்களின் வாழ்வில் இவ் நல்லிணக்க அரசாங்கமும் அதன் நூறு நாள் வேலை திட்டமும் இவ்வாறான நிலையினை ஏற்படுத்தியது என்பது எல்லோருக்கும் தெளிவானதே.

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் இலங்கைக்கு திருப்பி வருவதற்கான பாதுகாப்பான சூழல் இல்லை எனக்கூறும் முதலமைச்சரும், இலங்கையில் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டன நீங்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி செல்லலாம் எனக்கூறும் பிரித்தானிய ஆளும் வர்க்கமும் இணைய போகும் புள்ளி என்னவென அறிய மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.