குற்றவாளிகளை விடுதலை செய்யும் குற்றவாளி

1,113 . Views .

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக (அமைச்சரவை) – இருந்தபோது, இராணுவத்திற்கு மிகப்பிடித்தமான நபராக இருந்தார். இராணுவம் இழைக்கும் அத்தனை அநீதிக்கும் தான் பொறுப்பு எடுத்துக் கொள்வது போன்ற உறுதிப்பாட்டை வழங்கி எந்த பாரதூரமான செயலுக்கும் அஞ்ச வேண்டாம் என்று அவர் வழங்கிய அனுமதியே அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இறுதி யுத்தகாலத்தின் போது அவர் இராணுவத்திற்கு வழங்கிய உரையில் குறிப்பிட்ட “தமிழ் ஆண்கள் அனைவரும் கடலுக்கு; தமிழ் பெண்கள் அனைவரும் உங்களுக்கு…” என்ற கூற்று மிகப் பிரபல்யமானதாக இருந்தது. தமிழர்கள் உளவியல் கோட்டாபய ராஜபக்ச மீது அச்சமும், வெறுப்பும் கொண்டிருந்தார்கள். அவருக்கு தமிழர்களின் உயிர் பொருட்டாக ஒருபோதும் இருந்ததில்லை. இலங்கைத் தீவில் தமிழர்கள் இருக்கத் தேவையில்லை என்பதை பல்வேறு செயற்பாடுகள் மூலம் உணர்த்தி வருபவர் கோட்டாபய.

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், கோட்டாபயவை நேர்காணல் செய்த சசிகுமார் என்ற இந்திய ஊடகவியலார், கோட்டாபயவின் எட்டுக் கொள்கைகள் பற்றி விரிவாக ‘இந்தியப் பாதுகாப்பு ஆய்வு’ ஏட்டில் எழுதியிருகிறார்.

  1. இலட்சியத்தில் உறுதியாக இருப்பது
  2. உலகம் சொல்வதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது
  3. பேச்சுவார்த்தைக்குச் செல்வதை தவிர்ப்பது
  4. அரசியல் தலையீட்டை தவிர்ப்பது
  5. இராணுவத்திற்கு முழுச்சுதந்திரம் கொடுப்பது.
  6. சாதகமான செய்திகளை மட்டும் வெளியிடுவது
  7. இளைய இராணுவ தளபதிகளுக்கு ஊக்கமளிப்பது
  8. போரின் போக்கு குறித்து அண்டை நாடுகளுக்கு அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருப்பது.

அவரது இலட்சியம் கொலை வெறியோடு புலிகளை முடக்குவது –தமது குடும்பம் அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பது என்பது மட்டுமே தவிர சிங்கள் மக்கள் நலன் சாந்து இயங்கியதில்லை.

மேற்சொன்ன எட்டுக் கொள்கைகளை வைத்தே தமிழர்களின் போராட்டம் மோசாமான முறையில் அழித்தொழிக்கப்பட்டது. இதற்கு சமரசம் செய்யாமல், மனித உரிமைகளின் பக்கம் சாயாமல் செயற்பட்டதாலே யுத்தத்தை முடிக்க இயன்றதாக அவரது ஆதரவாளர்கள் அவரை தன்னிகரற்ற தலைவராக கொண்டாடுகிறார்கள்.

இன்று யுத்தம் முடிவடைந்து பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. கோட்டாபய இலங்கை நாட்டின் வலிமையான ஜானதிபதியாக ஆகியிருக்கிறார். சர்வ அதிகாரங்களை வாய்க்கப் பெற்று, சிங்கள பெளத்த தேசியத்தை வலிமையாக முன்னிறுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். நாட்டை இராணுவமயப்படுத்தலும் அதிகரித்து வருகிறது. அண்மையில் இலங்கையின் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காகப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் தமிழர்களோ, இஸ்லாமியர்களோ இடம்பெறாத ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டு, சிறுபான்மையினர் செறிந்து வாழும் இடங்களில் தொல்பொருள் ஆய்வுகளைச் செய்து வருகிறது. வடக்கு-கிழக்கு தமிழர் பகுதிகளில் பல ஆலயங்களின் தொன்மையைச் சிதைக்கும் நடவடிக்கையில் தொல்பொருளியல் திணைக்களம் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. தமிழர்களின் தொன்மையான நிலங்கள் அவர்களுக்கு உரியதல்ல என்பதை நிறுபிக்கவே இவ்வாறான முயற்சிகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தீவீரத்துடன் ஈடுபடுகிறது. ராமாயண காவியத்தில் வரும் ராவணனை சிங்கள மன்னனாக உருவகித்து, தங்களுடைய மூத்த முப்பாட்டனாக முன்னிறுத்த முயல்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். சிங்களக் கூட்டு மனதில் சிங்கள தேசியத்தை வற்றாமல் எரியச் செய்யவேண்டிய தேவை கோட்டாபயவுக்கு நிரம்பவே உள்ளது. ‘சுனில் ரத்நாயக்க’ ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமையும் இந்தப் பின்னியில் வைத்தே பார்க்க வேண்டும்.

2002-இல் போரினால் பாதிக்கப்பட்ட தங்களது மிருசுவில் என்ற கிராமத்தை பார்க்கச் சென்ற கிராமவாசிகள் அங்கிருந்த இராணுவதினரால் படுகொலை செய்யப்பட்டனர். அங்கிருத்து அதிஷ்டவசமாகத் தப்பிய நபர் ஒருவர் இராணுவ பொலிசாரிடம் இவ்விவகாரத்தை கொண்டு செல்ல, வேறுவழியின்றி விசாரணைகள் ஆரம்பமாகியது. நீண்ட இழுபறியின் பின்னர் 2015-இல் ‘சுனில் ரத்நாயக்க’ என்ற இராணுவ வீரர் மட்டும் குற்றவளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் கிளர்ந்து எழுந்தார்கள். ‘யுத்தத்தின் கதாநாயகர்கள் ஒருபோதும் சிறை செல்ல அனுமதிக்க இயலாது, தான் ஜனாதிபதியானால் அவரை உடனடியாக விடுதலை செய்வேன்’ என்று கோட்டாபய அப்போதே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தேர்தலில் சிங்கள மக்களின் பெருவாரியான ஆதரவுடன் கோட்டாபய ஜனாதிபதியாகிய பின்னர் பொது மன்னிப்பின் கீழ் சுனில் ரத்நாயக்கவுக்கு விடுதலை அளித்தார். இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மற்றொரு பாரிய அநீதியாகும். அரசியல் கைதிகளாக எந்த விசாரணைகளும் இன்றி பல வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பல தமிழர்களுக்கு இன்றுவரை எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை. அவர்களை விடுதலை செய்வதன் மூலம் சிங்கள தேசியவாதிகளை பகைக்க வேண்டிவரும் என்பதை கோட்டாபய நன்கு உணர்ந்தவர்.

ஆனால், இன்று பதினாறு தமிழ் அரசியல் கைதிகளை கோட்டாபய ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருக்கிறார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விடயம் வரவேற்புக்குரியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதன் பின்னால் உள்ள அரசியலையும் சேர்த்தே புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.

பௌத்தர்களின் புனித நாளான பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, 93 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். சிறிய குற்றங்களை செய்த 77 நபர்களுக்கும், பதினாறு அரசியல் கைதிகளுக்கும், துமித்த சில்வாவும் இதற்குள் அடங்குவார்கள். இங்கே துமிந்த சில்வாவை தனியாக நோக்க வேண்டியுள்ளது. அவருக்கான விடுதலைக்காகவே மிகுதி 93 நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது. தமிழ் அரசியற் கைதிகள் எந்த குற்றமும் செய்யாதவர்கள் – எந்தக் குற்றச் சாட்டும் இன்றி நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாவர்கள். முறைப்படி – சட்டப்படி இவர்கள் எப்பவோ விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். துமிந்த சில்வா அப்படியல்ல. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின்’ கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்தான் துமிந்த சில்வா.

கொழும்பு புறநகர் பகுதியான முல்லேரியா பகுதியில் 2011-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8-ஆம் திகதி, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவுக்கும் துமிந்த சில்வாவிற்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருந்தனர். துமிந்த சில்வா பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிர்பிழைத்தார். பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன், துமிந்த சில்வாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்து, துமிந்த சில்வா கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். வழக்கின் தீர்வில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு, 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08-ஆம் திகதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த பல வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்சமயம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். துமிந்த சில்வா ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர். அவருக்கு தனியாக பொது மன்னிப்பு வழங்குவதால் ஏற்படும் வீண் சர்ச்சைகளை தவிர்க்கவே மேலும் பலருக்கும் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் அரசியல் கைதிகளும் உள்ளடங்குவார்கள். வெறுமே பதினாறு கைதிகள் மட்டும் ஏன் தேர்வு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள் என்பதும் சந்தேகத்திற்கு உரியதே. இதன் பின்புலம் காலப்போக்கில் இன்னும் தெளிவாகத் தெரியக்கூடும். எந்த குற்றச் சாட்டும் இன்றி சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏனைய அரசியற் கைதிகளை ஏன் விடுதலை செய்யவில்லை? அவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

“துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் எதேச்சாதிகாரமாக மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளின் மற்றுமோரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது…” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ‘மிச்செல் பச்செலட்’ தெரிவித்துள்ளார். மரண தண்டனை வழங்கப்படுவது தவறுதான். ஆனால் துமிந்த சில்வாவின் விடுதலை பின் இருக்கும் கொலைகார அரசியல் பற்றி இவர்கள் கண்டுகொள்ளவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்கிறோம் என்று கூறிக்கொண்டு, அவர்களின் முதுகுக்கு பின்புறமாக துமிந்த சில்வாவை விடுவிற்க பாரிய நாடகத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு நாடகம் மூலம் வழங்கியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு இழைக்கப்பட்ட ‘அநீதிக்கு’ இன்று நியாயம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், நல்லாட்சி அரசாங்கம் வேண்டுமென்றே துமிந்தவை தண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார். இங்கு கவனிக்க வேண்டியது துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு குற்றவளியாக தண்டனை வழங்கப்பட்டது. இருந்தபோதும் துமிந்த சில்வா மட்டுமே விடுவிக்கப்பட இருக்கிறார். விடுவிற்கப்போடுகிறார். துமித்த சில்வா நிரபராதி என்றால் மிகுதி ஐய்வரின் நிலை என்ன? இது முழுமையான மோசடி மன்னிப்பு நாடகம் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

 

-அனோஜன் பாலகிருஷ்ணன்-

அனோஜன் பாலகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்தில் நன்கு அறிமுகமான எழுத்தாளர்         . அவரது பல சிறுகதை தொகுதிகள் தமிழ் நாட்டில் வெளிவந்துள்ளது. அகழ் என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார்.