உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க 

உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க” என்ற இந்த பாடல் வரிகள் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளாகும். 34 வருடத்திற்கு முன்னர் வெளிவந்த இப்பாடல் வரிகள் இன்று எந்தவித குற்றமும் செய்யாமல் சிறையில் அடைபட்டிருக்கும்  தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொருத்தமான வரிகளாகும். “வெளிய உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லிங்க” என்ற அடுத்த வரியும் துமிந்த சில்வாவுக்கும் சாலப் பொருந்தும். குற்றம் செய்யாதவர்கள் உள்ளேயும் குற்றம் செய்தவர்கள் வெளியேயும் உள்ள நிலைமையாக  மாறிப் போய்விட்டது இலங்கையின் சட்ட நீதி நிர்வாகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலையுடன் தொடர்புடைய கைதியான துமிந்த சில்வா அண்மையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்  விடுதலை செய்யப்பட்டமையானது  பலத்த சலசலப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. நீதித்துறை மீதான நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளது. மறுபக்கத்தில் இலங்கையின் சட்ட திட்டம் அனைத்தும் சரி அதனை முற்றுமுழுதாக மதிக்க வேண்டும் என்பதும் எம் கருத்தல்ல

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 34 ஆம்  அதிகாரம் பிரிவு ஒன்றின் படி ஜனாதிபதி கட்டற்ற ஒரு மன்னிப்பை வழங்கலாம். ஆனால் பொது மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில் ஜனாதிபதி சில சட்ட முறைகளை பிரயோகிக்க வேண்டும், எதேச்சாதிகாரமாக பிரயோகிக்க முடியாது 

அதாவது மன்னிப்பு வழங்கும் குற்றவாளி மரணதண்டனைக்  கைதி எனில் முதலில் ஜனாதிபதி அவ்வழக்கை  விசாரித்த நீதிபதியின் அறிக்கையை பெற வேண்டும். பின்னர் சட்டத்துறை தலைமை அதிகாரி , நீதி அமைச்சர் போன்றவர்களுக்கும்  அவ் அறிக்கையை சமர்ப்பித்து அவர்களின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செய்தாரா என்பது கேள்விக்குறியே ? ஏனெனில் துமிந்தவின் விடுதலைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்திருக்கிறார். 

துமிந்த சில்வாவுக்கு எதன் அடிப்படையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விளக்கம் அளிக்க வேண்டும் என இலங்கை சட்டதரணிகள் சங்கம் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. எந்த வித சட்ட நிபுணர்களுடனும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த ஜனாதிபதியின் இம் முடிவானது நாட்டில் சட்டம் என்று ஒன்று எனக்கில்லை,நான்தான் சட்டம் என்ற அவரின் மனநிலையையே காட்டுகின்றது. கோத்தபாய அரசு மக்களுக்கான அரசாக இல்லை. மாறாக தமது அதிகாரத்தை பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்யும் அரசாகவே காணப்படுகின்றது

இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒரு புள்ளி என்னவெனில் இலங்கை வாழ் மக்களின் நலனுக்காக -குறைந்த பட்சம் தான் இனத்துவேசத்தை தூண்டி ஆதரவு தேடும் சிங்கள மக்களுக்காக ஜனாதிபதி சட்டத்தை வளைக்கவில்லை. மாறாக தமது சொந்த அரசியல் நலனுக்காக, தமது சொந்த அரசியல் சகபாடியை விடுதலை செய்வதற்க்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற பெயரில் துமிந்தவை விடுதலை செய்துள்ளார். இதே ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற பெயரில் பயங்கரவாத தடை சட்டத்தால் கைது செய்து தற்பொழுது சிறையில் வாடும் எத்தனையோ தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யலாம். குறைந்த பட்சம் குற்றம் சுமத்தப்படாமல், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்யலாம். ஆனால் தமது அரசியலுக்கு அவை எந்த விதத்திலும் பயன்படாது என்பதனால் அது பற்றி அவருக்கு கவலை இல்லை.

வெறும் கண்துடைப்புக்காவே தமிழ் கைதிகள் பதினாறு பேரை விடுதலை செய்தார் கோத்தபாய. ஏனெனில் விடுதலை செய்யப்பதிட்ட பதினாறு பேரில் பதினான்கு பேர் சட்டப் பிரகாரம் இன்னும் சில மாதங்களில் விடுதலை செய்யப்பட விருந்தவர்களே ஆவார். பெரும்பாலான கைதிகள் தமது தண்டனைக்கு உரிய காலத்தை ஏறக்குறைய முடித்து விட்டனர். அரசியல் கைதிகள் பலர் பத்து முதல் இருபத்தைந்து வருடதிற்கும் மேலாக சிறையில் வாடுகின்றனர்.அவர்களை  விடுதலை செய்திருக்கலாம் ஆனால் கோத்தபாய அரசு மறந்தும் கூட அவ்வாறு செய்யவில்லை. மாறாக கண்துடைப்புக்கு சிலரை விடுதலை செய்து தமது முக்கிய இலக்கான துமிந்தவை விடுதலை செய்துள்ளது. துமிந்த சில்வாவுக்கான மரணதண்டனை சரி என்று இக்கட்டுரை கூறவில்லை மாறாக சட்டத்துக்கு புறம்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதையே அழுத்திக் கூறுகின்றது. 

கொலை குற்றவாளியான துமிந்தவை விடுதலை செய்ய முடியுமென்றால் – மரணதண்டனைக்குரிய கைதியான துமிந்தவை விடுதலை செய்யமுடியும் என்றால் எந்த வித குற்றமும் செய்யாமல் பல வருடங்களாக சிறையில் வாடும் கைதிகளை, பயங்கரவாத தடை சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது ?. தனது  அதிகாரத்தின் மூலம் விடுதலை செய்யப்படவேண்டியவர்களை விடுதலை செய்யாமல் அதிகாரத்தை துஷ்ப்பிரயோகம் செய்துள்ளார் ஜனாதிபதி கோத்தாபாயா.  

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கோசத்தை முன்வைத்து ஆட்சியைக் கைப்பற்றிய  கோத்தபாய இன்று அச்சட்டத்தையே தூக்கி கடாசி வீசியுள்ளார். வெறுமனே இனத்துவேசத்தை தூண்டி மக்களை தன் பக்கம் திருப்புவதற்காகவே இவ் வெற்றுக் கோஷங்கள் எழுப்பப்பட்டனவே தவிர உண்மையான தேசத்தின் மீதான, மக்களின் மீதான கரிசனையினால் அல்ல என்பது இதிலிருந்து புலனாகின்றது. 

கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிகா துமிந்தவின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து பக்க கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோத்தபாயாவுக்கு அனுப்பியிருந்தார். (கொழும்பு டெலிகிராப் தளத்தில் “A Coward and  A Puppet” என்ற தலைப்பில் அக்கடிதம் வெளியாகியுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் அதனைப் படிக்கலாம்). அதில் “மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் உங்களுக்குத் தந்தது இலங்கை மக்களுக்கு பயனளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கே மாறாக நீங்கள் வெறும் கைப்பாவையாக மாறி இந் நாட்டை அடிமைகளின் தேசம் ஆக்குகிறீர்கள், சட்டத்தை மீறி சட்டவிரோதமான ஒரு நாடாக்குகிறீர்கள்” எனத் தெரிவித்திருக்கின்றார். ஹிருனிகாவின் அரசியலுடன் முரண்பாடு இருந்தாலும் கோத்தபாயவை நோக்கி அவர் வைத்திருக்கும் கேள்விகள் நியாயமானவை

துமிந்த போன்ற கைதிக்கு சட்டப்பிரகாரம் பொது மன்னிப்பு வழங்குதல் என்பது சாத்தியக் குறைவான ஒரு விடயமாகும் எனினும் ஜனாதிபதி தானே சட்டம் என்பதன் அடிப்படையிலேயே இம் முடிவை எடுத்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்திற்கு விதை போட்ட முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இவ் அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் தன்னால் ஆணை பெண்ணாகவோ அல்லது பெண்ணை ஆணாகவோ மாற்ற முடியாதே தவிர மற்ற எதுவும் செய்யமுடியும் என இறுமாப்பாக கூறி இருந்தார். தன்னிச்சையாக செயற்படுவதன் மூலம் தன்னை ஒரு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தொடர்ச்சியாகவும், நவீன துட்டகைமுனுவாகவும் பிரகனப்படுத்த விரும்புகிறார் கோத்தபாய.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தமைக்கு எதிராக தெற்கில் எந்த விதமான எதிர்ப்பும் எழவில்லை மாறாக மரண தண்டனைக்கைதி துமிந்தவுக்கு எதிராகவே எதிர்ப்பலைகள் எழுந்தன,ஆகவே இனியும் தாமதிக்காது எஞ்சியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அதற்காக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தெற்கு மக்களுடன் இணைந்து ஒரு போராட்டத்தை கட்டி எழுப்ப வேண்டும். அதுவே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவும் ஒரு பலமான ஒரு மக்கள் சக்தியாக உருமாறும்