ஸ்டான் சுவாமிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்துக்கும் என்ன பிரச்சனை?

ன்றி- https://madrasreview.com/

கெளரி லங்கேஷ்க்கும் ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ..

கோவிந் பன்சாரேவுக்கும்  ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ..

நரேந்திர தபோல்கருக்கும்  ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. அதே பிரச்சனை தான்..

யாரெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று பார்ப்பனீயத்தையும் அதன் பொருளாதாரக் கொள்கைகளையும் கேள்வி கேக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சட்ட ரீதியாவோ சட்டத்துக்கு புறம்பாகவோ காவு வாங்கப்படுகிறார்கள்..

இந்தியாவின் கனிம வளங்களில் 40% ஜார்கண்ட் மாநிலத்தில் தான் உள்ளது. ஆனால் அதே ஜார்கண்ட் மாநிலத்தில் 39.1%  மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். கார்பரேட் நலன்களுக்காக நசுக்கப்படும் இந்த ஆதிவாசி மக்களுக்காக ஸ்டான் சுவாமி குரல் கொடுத்து வந்தார்.

1996 இல் Uranium Corporation India Limited சசிபா என்ற இடத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக அமைக்கவிருந்த கழிவுத் தொட்டிகளால் (tailing dam) மக்கள் வெளியேற்றப் படும் அபாயத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட Jharkhand Organisation Against Uranium Radiation (JOAR) போராட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய அரசியல அமைப்புச் சட்டத்தில் ஆதிவாசிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் உட்பட, இயற்றப்பட்டுள்ள பல சட்டங்கள் நிஜத்தில் அமல் படுத்தப்படாமல் மத்திய மாநில அரசாங்களால் புறக்கணிப்பட்டு வருவதை ஒட்டி பல போராட்டங்களை ஸ்டான் சுவாமி முன்னெடுத்தார்.  2010 ஆம் ஆண்டு ‘Jail Mein Band Qaidiyon ka Sach’என்ற புத்தத்தை எழுதி வெளியிட்டார். அதில் ஆதிவாசி இளைஞர்கள் எப்பாடி மாவோயிஸ்டுகள் என்று போலியாக குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கு கூட உட்படுத்தப்படாமல் சிறையில் தள்ளப்படுவதைப் பற்றி விரிவாக எழுதினார். இவை அனைத்தும் கனிம வளங்களை கார்பரேடுகளுக்கு விற்க நினைத்த மத்திய-மாநில அரசாங்கங்களுக்கு ஒரு இடைஞ்சலாக இருந்து வந்துள்ளது. இதுவே இவர் குறிவைக்கப்பட காரணம்.

மராட்டியத்தில், சித்பவனப் பார்பனர்களின் தலைமையிலான பேஷ்வாக்களை எதிர்த்து 1818’இல் போரிட்ட ஆங்கிலேயர் படைகளில் தாழ்த்தப்பட்ட மஹர் சாதியை சேர்ந்த மக்கள் இணைந்து போஷ்வாப் படைகளை பீமா கோரேகான் என்ற இடத்தில் வெற்றி பெற்றார்கள். பேஷ்வாக்களிடம் தாங்கள் அனுபவித்த ஒடுக்குமுறையையும் , போரில் செய்த தியாகங்களையும் நினைவுகூரும் பொருட்டே ஒவ்வொரு ஆண்டும் பீமா கோரேகானில் தாழ்த்தப்பட்ட மக்கள் கூடுகின்றனர்.

போர் நடந்து 200 ஆண்டுகள் நினைவாக 2018 இல், ”எல்கார் பரிஷத்” என்ற மாநாடு கூட்டப்படுகிறது. நாடு  முழுவதும் இருந்து கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் பங்கு பெற்ற அந்த மாநாடு ஆர்.எஸ்.எஸ் இன் தாய் மடியான சித் பவனப் பார்ப்பனர்களுக்கு எரிச்சலூட்டுகிறது.. டிசம்பர் 31, 2017 அன்று மாநாடு நடைபெறுகிறது. ஜனவரி 1, 2018, பீமா கோரேகானில் மக்கள் கூடிய நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் கலவரத்தில் ஈடு படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களின் கடைகள், உடைமைகள் குறிவைக்கப்பட்டு சூறையாடப் படுகின்றன.  ஆர்.எஸ்.எஸ் கலவரத்தில் ஈடுபட்டதற்கான பல்வேறு நேரடி சாட்சியங்கள் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தான்  தேவேந்திர ஃபட்நாவிஸ் தலைமையிலான மாநில பாஜக அரசாங்கத்தின் கோவம் திரும்பியது. 300 க்கும் மேற்பட்ட தலித் மக்கள் மும்பையில் மட்டுமே கைது செய்யப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர்களை வேட்டை ஆடத் துவங்கியது மஹாராஷ்ட்ர அரசு.

இந்த நிலையில் தான் ”Forum for Integrated National Security” என்ற பெயரில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் Think Tank ஒன்று எல்கார் பரிஷத் மாநாட்டை ஒருங்கிணைத்தவர்கள் மாவோயிஸ்டுகள் என்றும், அவர்கள் மக்களை தேசத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்த ஒருங்கிணைப்பதாகவும் மார்ச் மாதம் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. இந்த Think Tank அறிக்கையின் சாராம்சத்தை பூனே காவல் துறையும் நீதிமன்றத்தில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி அச்சுபிசகமால் அப்படியே ஒப்பித்தது.

பீமா கோரேகான் கலவரத்தில் ஈடுபட்ட ஹிந்துத்வவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வலுத்துக் கொண்டிருந்த நேரத்தில்,  நாடு முழுவதும் உள்ள பல்வேறு அறிவு ஜீவிகளின் வீட்டில் பூனே காவல் துறை சோதனையில் ஈடுபட்டது. எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றாமல் நடைபெற்ற இந்த சோதனையில், பீமா கோரேகான் கலவரத்தை விசாரிப்பதற்காக மஹாராஷ்ட்ர அரசாங்கம் நியமித்திருந்த ஆணையத்திடம் அளிப்பதற்காக சேகரிக்கப்பட்டிருந்த ஆவணங்களை எல்லாம் காவல் துறை எடுத்துச் சென்றது.  மறுபடியும் ஜூன் மாதம் இதே போல் காவல் துறை சோதனையில் ஈடுபட்டது. இதில் ஐந்து செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரோனா வில்சன் என்பவரின் கணினியில் இருந்து பல ஆவணங்கள் கைபற்றப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஜூன் 7 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்கிறார். அடுத்த நாள் அர்னப் கோஷ்வாமி யின் ரிபப்ளிக் டிவி  மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்ட ஒரு கடிதம் இந்த அவணங்களில் இருந்து போலீசிற்கு சிக்கியுள்ளதாக தலைப்புச் செய்தி வெளியிட்டது. நீதி மன்றத்திடம் கூட ஒப்படைக்கப்படாத அந்த கடிதம் அர்னப் கோஷ்வாமிக்கும் மட்டும் கிடைத்தது.  வில்சன் கணினியில் இருந்து கிடைத்த ஆவணங்களில் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லக்கா போன்ற பல மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக ரிப்பப்ளிக் டீவி இன்னொரு செய்தியையும் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து தான் சுதா பரத்வாஜ், நவ்லக்கா, வரவர ராவ் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்படுள்ள சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்து சிக்கிய ஆவணத்தில், மாவோயிஸ்டுகள் பாரீஸ் நகரத்தில் சந்தித்து, எப்படி இந்திய அரசாங்கத்தை கவிழ்கலாம் என்று திட்டம் தீட்டியதாகவும் அதற்கும் ரஷ்யா மற்றும் சீனாவில் இருந்து ஆயுதம் வாங்கத் திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பூனே காவல் துறை குற்றம் சாட்டியது.

இதே காலகட்டத்தில் தான் ஸ்டான் சுவாமியின் இல்லம் இரண்டும் முறை காவல் துறை அதிகாரிகளால் சோதனை இடப்படுகிறது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. நவம்பர் 2019இல் மஹாராஷ்ட்ராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உத்தவ் தாக்ரே முதல்வராகிரார். உடனே ஜனவரி 2020 இல் இந்த வழக்கு National Investigating Agency’விடம் ஒப்படைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து NIA இரண்டு முறை ஸ்டான் சுவாமியிடம் விசாரணை மேற்கொள்கிறது. அக்டோபர் 2020 இல் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் கணினியில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் போலியனாவை என்றும், அவை வெளியில் இருந்து கணினியில் உரிமையாளர்களுக்கே தெரியாமல் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. ஆனாலும் NIA இவை எவற்றையும் கணக்கில் கொள்ள மறுக்கிறது.

ஸ்டேன் சுவாமியில் உடல் நிலை மோசமடைந்த சூழலில் அவருக்கான பிணையை விசாரித்த NIA சிறப்பு நீதிமதி, தனி மனித சுதந்திரத்தை விட சமூக நலனே முக்கியம் (”Community interest outweighs right of personal liberty”) என்று காரணம் கூறி பிணையை நிராகரித்தார்.  எந்தச் சமூகத்தின் நலன் என்று தான் தெரியவில்லை!

ஸ்டான் சுவாமியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ் ஒரு பக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. வழமையாக ஹிந்த்துவ இயக்கங்கள் பிற மதத்தவர்கள் மீது சொல்லும் ”மதம் மாற்ற”அவதூறை இவர் மீதும் பரப்பிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ராகுக் காந்தி ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தங்கள் ஆட்சிக் காலங்களில் UAPA, NIA போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றியும் கூர் தீட்டியும் வந்துள்ளனர். ஏன் 2019 NIA சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு திமுகவும் கூட ஆதரவாகத் தான் வாக்களித்தது.

ஒரு ஆர்.எஸ்.எஸ் Think Tank கட்டிவிட்ட கதையை, அதிகாரப்பூர்வமாக்கி, நாட்டின் முன்னனி செயற்பாட்டாளர்கள் பலரை கைது செய்து அதில் ஒருவரை கொலையும் செய்திருக்கிறது இந்த அரசு.

 

References:

1.https://scroll.in/article/892850/from-pune-to-paris-how-a-police-investigation-turned-a-dalit-meeting-into-a-maoist-plot

2.https://scroll.in/article/892586/a-month-before-police-raids-security-think-tank-report-alleged-maoist-link-to-bhima-koregaon-events

  1. https://cjp.org.in/fr-stan-swamy-the-jharkhand-priest-who-made-people-his-religion/