இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் சீனாவிடம் அடைக்கலம் வைக்க முடிந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில் பெரும் வெற்றி ஈட்டிய ராஜபசக்களின் செல்வாக்கு தற்பொழுது தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அந்நிய செலவாணியின் வீழ்ச்சி, என ஓட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்துள்ளது. எரிபொருள், உரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. வெளிநாடுகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திணறுகிறது இலங்கை. இந்து சமுத்திரத்தின் முத்து இப்போது கடனில் தாண்டுவிடும் முத்தாகி விட்டது. இலங்கை கடன் கொடுக்க முடியாது திவாலாகும் நிலை சாத்தியம் என கூறப்படுகிறது.
முதலில் மஹிந்த ராஜபக்ச நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்றார்கள். அதன் பின்னர் கோத்தபாய கொண்டு செல்வார்கள் என்றார்கள். இப்பொழுது பசில் நாட்டின் பொருளாதாரத்தை நிமித்தப் போகிறார் என்கிறார்கள். இவர்கள் எவரிடமுமே மக்கள் சார்பான நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கை இல்லை. இனத்துவேசத்தை வளர்த்து விடுவதை அரசியல் கொள்கையாவும் -சீனாவிடம் கடனை வாங்குதலை பொருளாதாரக் கொள்கையாகவும் மட்டுமே கொண்டிருக்கின்றனர். பசில் அல்ல அதன் பின்னர் நாமல் வந்தாலும் இந்தப் பாதையில் பயணித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ,சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் எந்த விதமான காத்திரமான வேலைத்திட்டமும் இல்லை என்பதே நிதர்சனம்.
பசில் நிதியமைச்சர் ஆனவுடன் பங்குச் சந்தை ஆகா ஓகோ என வளரப் போகிறது என்றெல்லாம் ஆருடம் கூறினார்கள். பசில் நிதியமைச்சர் ஆன தொடக்கம் பங்கு சந்தையில் எதுவித மாற்றமும் நிகழவில்லை. ஆக இவர்கள் இல்லாத ஒன்றை ஊதிப் பெருப்பித்து இருப்பது போல் காட்டுகின்றனரே தவிர உண்மையான பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. அண்மையில் இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளது. அண்மையில் 20845 கோடி ரூபா பெறுமதியான , பணம் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியையே அரசின் இந் நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது. அரச வருமானம் அரசின் அன்றாட நடவடிக்கைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு உள்ளது
தமது அதிகாரத்தை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளுதலே – குடும்ப ஆட்சியை விஸ்தரித்தலே, ராஜபக்ச குடும்பங்களின் நோக்கமாக உள்ளது. அடுத்த 2024 ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டா, தானே போட்டியிடுவது அல்லது பசிலை நிறுத்துவது, அதன் பின் வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமலை நிறுத்துவது என தமது அதிகாரத்தை தக்க வைப்பதிலேயே ராஜபக்ச குடும்பம் மும்முரமாக நிற்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸநாயக்க , பிரியங்கர ஜயரத்ன போன்றோர் தம்மால் சுயாதீனமாக இயங்கமுடியவில்லை என வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்கள். ராஜபக்ச குடும்ப அரசு அனைத்து அதிகாரத்தையும் தமக்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது
மறுபக்கத்தில் பொருளாதார நெருக்கடியில் திணறும் இவ்வரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆளும் கட்சியும், ஆட்சியை கைபற்றிக் கொள்வதற்கும் எதிர்கட்சியும் என இரு கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது என்பது போல், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படப்போவதில்லை. இங்கு மக்கள் பிரச்சனை என்பது இரண்டாம் பட்சமே.
நாட்டின் தேசிய வளங்கள் ஒவ்வொன்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகின்றது. கொழும்புத் துறைமுக நகர் சீனாவுக்கு ,திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கும் , கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவிற்கும் என மோடிக்கு நிகராக நாட்டை கூறு போட்டு விற்கின்றனர். தமது சொந்த சொத்துக்கள் போல் வளங்களை விற்பனை செய்வதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு உருவாக்கி உள்ளது. சீனா அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தமது அரசியல் அதிகாரப் போட்டியை நடத்தும் களமாக மாறிக்கொண்டிருக்கின்றது இலங்கை. தனது தலையை வெட்ட தானே தலையைக் கொண்டு போய்க் கொடுக்கும் ஆடு போல் செயற்படுகின்றது தற்போதைய கோத்தபாய அரசு
சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து அண்மையில் 70 கோடி டொலர் கடனாகப் பெற ஒப்பந்தம் கைச்சாத்தானது. அது தவிர மேலும் பல கோடி டொலரை கடனாகப் பெற இலங்கை அரசு உத்தேசித்துள்ளது. அது தவிர ஏற்கனவே வறுமை நாடான பங்களாதேஷிடமிருந்து கூட 20 கோடி டொலரை கடனாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க கடனுக்கு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது இலங்கையின் பொருளாதாரம்.
‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க முடியாது’ என 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஜே ஆரின் பாணியைப் பின்பற்றும் கோத்தபாயவும் சிறிய மாற்றத்துடன் இதே கருத்தை தான் கொண்டிருக்கின்றார். அதாவது ஜே ஆர் யாழ்ப்பாண மக்களைப் பற்றி மட்டும்தான் கருத்திற்கொள்ளவில்லை கோத்தபாயவோ ஒரு படி மேலே சென்று ஒட்டு மொத்த இலங்கை மக்களைப் பற்றியே கருத்திற் கொள்ளவில்லை என்பது அவரின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுகின்றது. இவ்வரசை நம்பி வாக்களித்த 69 லட்சம் மக்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் இவ் அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.
கொரோனா பெரும்தொற்று பரவும் இந்த மோசமான காலகட்டத்தில் கூட அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தமது குடும்பத்தை விஸ்தரிப்பதையும் மட்டுமே நோக்காக கொண்டு இயங்கும் இவ்வரசை மக்கள் இனியும் நம்பிக்கொண்டிருக்காமல், மக்கள் சார்பான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுடன் இயங்கும் அமைப்புகளுடன் இயங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.