பொறுமை போதும் பொங்கி எழு!

1,195 . Views .

-சு. கஐமுகன் [email protected]

அடுத்த வருசத்துக்குள் தீர்வாமே? என்ன கதை இது?
MS10282016D_3

1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன் வைத்த தீர்வைக் கிழித்தெறிந்த ரணில் விக்கிரமசிங்க, 2016 ஆம் ஆண்டு மைத்திரி அரசுடன் இணைந்து சாத்தியமான தீர்வை முன்வைப்பார் என நம்பிக்கொண்டிருப்பது இலவு காத்த கிளியைப் போன்றது.

கடந்த கால வரலாற்றை–கொள்கைகளைப் பார்ப்பது, அவர்களின் எதிர்கால நடவடிக்கைளை, ஓரளவுக்கேனும் அறிய உதவும். சம்பந்தர் ஐயா நல்லிணக்கம் என்னும் பொறிமுறைக்குள் அகப்பட்டுக்கொண்டு விட்டார்.

தனக்கென்று ஒரு வரம்பு வைத்துக்கொண்டு அதற்குள் நின்று பேசுகிறார். வரம்புக்கு வெளியே காணப்படும் தீர்வை-மக்கள் எதிர்பார்க்கும் தீர்வைப் பெறப்போவது எங்கனம் என்றுதான் தெரியவில்லை.

மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், எதிர்க் கட்சித் தலைவர் என்னும் பதவியைப் பெற்றுக் கொண்டு அதனால் தமக்கென்று ஒரு வரம்பையும் நிர்ணயித்துக் கொண்டு அதனை மீறாமல் நல்லாட்சி அரசுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கின்றார் சம்பந்தன் அய்யா.

இதை விட மோசமான அரசியல் எதுவும் கிடையாது. 30 வருட ஆயுதப் போராட்டத்தின் நீட்சிதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாமல் ஆயுதப் போராட்டத்தினால் ‘என்னத்தைக் கண்டனிங்க?’ என்று வவுனியா தமிழரசு கட்சிக் கூட்டத்தில் கேட்கின்றார் சுமந்திரன்.

இதே கேள்வியை மக்கள் திருப்பிக் கேட்டால் ‘நீங்கள் என்னத்தைக் கிழிச்சனிங்கள்’ என்று அதற்கு பதில் பொறுமையாக இருங்கள் என்றுதான் வருகின்றது.

நல்லிணக்கம் என்னும் பொறிமுறைக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பொறுமை காக்கத்தான் சொல்வார்கள், ஏனெனில் மக்கள் பொங்கி எழுந்தால் அவர்களின் இருப்பிடம் காலியாகிவிடுமல்லவா?.

அத்துமீறி மாணவர்கள் சுடப்பட்ட போதும் அழகாக ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு விட்டு பொறுமை காக்கத்தான் சொல்வார்கள். எதற்கும் அவசரமாகத் தீர்வு கண்டுவிடமுடியாது பொறுமையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கீரிமலையில் கலந்து கொண்ட நிகழ்வில் தெரிவித்தார்.

இதைத்தான் சுமந்திரனும் வவுனியாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கூறினார். ஆகமொத்தம் நல்லிணக்கம் இங்கு நன்றாக வேலை செய்கின்றது என்று மட்டும் நன்றாக புரிகிறது.

இதை ஏன் இவர்கள் எல்லோரும் தேர்தலுக்கு முன்னம் கூறவில்லை என்பதுதான் எமது கேள்வியாக உள்ளது. ஆக மொத்தம் மக்களைப் பேக்காட்டி விட்டு தேர்தல் அரசியல் எனும் புள்ளியிலேயே இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கும்மி அடிக்கின்றனர் என்று தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

தமிழர்களை துன்புறுத்தும் இரகசிய முகாம்கள்-விடுவிக்கப்படும் கைதிகள் மீண்டும், மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படல் அல்லது கண்காணிக்ப்படல்-வடக்கில் அதிகப்படியான இராணுவப்பிரசன்னம்-தமிழர்களின் நிலஅபகரிப்பு-திடீர் புத்த சிலை முளைப்பு-மக்களை குருவி சுடுவது போல் சுடுவதற்கு பொலிசாருக்கான அத்துமீறிய அதிகாரம் என எண்ணற்ற பிரச்சினைகள் தமிழர் பிரதேசங்களில் தலைவிரித்துக் காணப்படுகின்றது.

இவை அனைத்தையும் சகித்துக்கொண்டு நல்லிணக்கம் என்னும் போர்வைக்குள் சமபந்தர் ஐயா நசுங்கி இருப்பாராயின், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் உங்களுக்கும் என்னய்யா வித்தியாம்?, குறைந்தது ஆறு வித்தியாசங்களைக் கூட கண்டு பிடிக்கமுடியாமல் உள்ளது.

இத்தனை பிரச்சனைகள் இருந்தும் சரியான தீர்வுத்திட்டத்தை நோக்கி நகராமல் எதற்காக அதிகாரத்தில் இருக்கின்றனர்?

தேர்தலுக்கு முன் 2016 இற்குள் தீர்வு கிடைத்துவிடும் என்றார்கள். தேர்தலின் பின் பொறுமை காக்க வேண்டும் என்கிறார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் நீட்சியான கூட்டமைப்பு தமிழர் போராட்டத்தினைச் சரியான பாதையில் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்றால் இல்லை என்பதே ஆணித்தரமான பதிலாகும்.

அதற்குச் சான்று பகிர்வனவே மேற்கூறிய சம்பவங்கள். இனி வரும் அரசியல் யாப்பும் தமிழர்களுக்கு எதுவித நிரந்தர தீர்வையும் முன்வைக்க போவதில்லை.

மக்கள் சார்பான யாப்பைக் கொண்டு வர விரும்பாமல் ஒற்றை ஆட்சி பாதுகாக்கப்படவேண்டும் எனவும், சிங்கள பெளத்த மேலாதிக்கம் இருக்க வேண்டும் எனவும் விரும்பும் மைத்திரி அரசு-இராணுவ விசாரணை கூடாது என கருதும் மைத்திரி அரசு-இராணுவ முக்கிய அதிகாரிகளை யுத்தக் குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்ற முனையும் மைத்திரி அரசு-நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கொண்டிருக்கும் உறவானது, வெறுமனே கூட்டமைப்பை நலினப்படுத்துவதற்கான முயற்சியேயன்றி இதன் மூலம் தமிழர்க்களுக்கென்று நிரந்தரத் தீர்வு ஏதும் கிடைக்கப் போவதில்லை.

தீர்வை நோக்கிய சாத்தியமான பாதைகளை நோக்கிக் கூட இவை நகரப் போவதில்லை.

தமிழ் சமூகத்தின் தற்போதைய அரசியல் சமூக சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் போராட்ட முறைகளை நகர்த்தாமல்-தமது சுயலாபங்களுக்காக பேரினவாதத்தின் பொறிமுறைக்குள் சிக்குண்டு கிடப்பது எவ்வளவு மோசமானது. படுபிற்போக்குத்தனமானது.

இதை இன்றே உணர்ந்து நாம் நடவடிக்கை எடுக்கா விட்டால் எதிர்கால சந்ததி மேலதிக வலிகளைச் சுமக்க வேண்டி வரும். எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சரியான அரசியல் நோக்கி இன்றே ஒன்றுபடுவோம்