கின்ஸ்டன் கவுன்சிலுடனான ஒப்பந்ததை வெற்றிக்கரமாக நடாத்திய வட மாகாண முதல்வர் 23-10-2016 ல் -லண்டன் ஹாரோ என்ற இடத்தில் மக்களைச்சந்தித்தார். இந்தச் சந்திப்பு எல்லா தமிழ் பேசும் மக்களுக்குமானதா ? பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் தமது உயரடுக்கு மிடுக்கை தமிழ் பாரம்பரியமாக நிறுவ முயன்றது போல் தான் தெரிந்தது.
எல்லா மக்களையும் உள்வாங்க விரும்புபவர்கள் -பரதநாட்டியமும் ‘மங்கள’விளக்கேற்றலும் என இந்து மத அடையாளங்களுடன் மட்டும் விழாவை ஆரம்பித்தது தவறு. எழுதி வாசிக்கபட்ட” ஞானத்தோற்றம், காவல் கோட்டை, தாடிவைத்த தற்கால வள்ளுவனே, தலைவனே, தெய்வமே, வீர வேங்கை” வகையறாக் கவிதைகளைச் செவிமடுத்தப்படி மேடையில் நடுநாயகமாக செய்வதறியாது அமர்ந்திருந்தார் முதலமைச்சர். வேட்டியும், நஷனலும், உத்தரியமும், பட்டுப்புடவையுமாக வந்தவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்க – இலங்கை பிரத்தானியா ஆகிய ஆளும் வர்க்கங்களினால் நசுக்கப்படும் பெரும் தொகையான இளையோர் கால் கடுக்க நின்று கொண்டிருந்தனர்.
கோயில் குருக்கள் போல் தோற்றமளித்த வடமாகாண முதல்வர் தனது உரையை ஒரு காதாபிரசங்கம் போல் நடாத்தி முடித்தார். நன்றி மறவாமை ,ஆணவத்தை ஒழித்தல், பிறரை மதித்தல், ஒற்றுமையாக வாழவேண்டும், மனிதாபிமானம் போன்றவற்றை எல்லாம் உள்ளடக்கியிருந்தது அவரது உரை. இவற்றுக்காகவோ இவரை முதல்வராக்கினோம் என்று பலர் முணுமுணுக்க தொடங்கினர். ‘பழைய குருடி கதவை திறடி’ என்ற மேற்கோள்களும்- வர்க்க பேதங்கள் கொண்டிருந்தாலும் நாம் எல்லோரும் ஒரு தாய்வயிற்றுப்பிள்ளை தான் என்ற பிற்போக்குத்தனங்களும் அவர் நாவில் நர்த்தனமாடியது – அங்கு கூடியிருந்த பல இளையோருக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
மிகவம் கவனமாக எழுதப்பட்டு வாசிக்கப்பட உரையில் கூட இவ்வாறான பழமைவாத சொல்லாடல்களை முதல்வர் தவிக்க வில்லையே என்பது உறுத்தி நிற்கின்றது. சமூதாயத்திலுள்ள வர்க்கப்பேதங்கள் களையப்பட வேண்டியவையே ஒழிய ஒருதாய் வயிற்றுப்பிளைகள்தான் என்று ஏற்றத்தழ்வுகளை மறைப்பது ஏற்க்க கூடடிய ஒன்றல்ல. சிலர் பெரிய நிலைக்கு வந்தவுடன் தாங்கள் ஏறிவந்த ஏணிகளை உதைத்து விடுவதாகவும் அவற்றை மதிப்பதில்லையாம் என்றும் முதல்வர் குற்றம் சாட்டினார். எந்த ஏணி பற்றி பேசுகிறார் ? எந்த ஏனியிலும் ஏற முடியாமல் படுகொலை செயப்பட்டு பாதளத்துக்குள் கிடக்கிறார்கள் நமது மக்கள். நல்லிணக்க ஏனியில ஏறி எதிர் கட்சி பதவி தந்தவருக்கு நன்றியோடிருப்பது மக்கள் அல்ல.
மக்களின் உணர்சிகள் என்னும் ஏணிமூலம் பதவிகளில் உட்காந்த நீங்கள் இன்று மக்களை உணர்ச்சிவசப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், சுயநிர்னைய உரிமைகளைப் பேசாதீர்கள், என்று முடக்குவது நியாயமா? தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆரம்ப காலங்களில் பரவலாக விமர்சித்து சாடிய நீங்கள் இப்போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணக்க அரசியல் மூலம்தான் தீர்வைப்பெறலாம் என்கின்றீர்கள். இது எழுக தமிழ் நிகழ்வுக்குப்பின் உங்கள் மேல் பூசப்பட்ட ‘தமிழ் தேசியவாதி’ ,’பிரிவினைவாதி’ என்ற விம்பங்களை உடைப்பதாற்க்கான முயற்சிகளாக தென்படுகிறது.
எழுக தமிழ் உங்கள் தலைமையில் நடாத்தி முடிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியத்தின் அடுத்த தலைவர் நீங்கள் தான் என்று தமிழ் மக்கள் பலர்பராவலாக நம்பியிருந்தனர். சிங்களப்பேரின வாதிகளும் உங்களை விமர்சித்தனர். ஆனால் நீங்களோ மிகவும் சாதாரணமாக ”கனடாவுக்கு வீசா கிடைக்காத படியால்தான் இந்தப்பதவியில் இருக்கிறேன்” என்று பூரிப்புடன் கூறிக்கொள்கின்றீர்கள். தமிழ் மக்களின் அறுபது வருட காலத்துக்கும் மேலான போராட்டத்தில் ஒரு முக்கிய தருணமான உங்களின் வெற்றியும், நியமனமும் தமிழ் தலைமைகளால் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்பட்டடது என்பது விசித்திரமாகவுள்ளது. விசா கிடைத்திருந்தால் நான் இங்கிருந்திருக்க மாட்டேன் என்று கூறும் முதல்வர் எம்க்களின் தேசிய அபிலாசைகள் பற்றிய தீர்வுத்திட்டத்தில் தொலைநோக்குப்பார்வையுள்ளவராக இருப்பார் என்பது முரணாகவேயுள்ளது இனமுரண்பாடுகளை தீர்ப்பதற்க்கு பெருபான்மை மக்களிடம் எமது பிரச்சனைகளை கலந்துரையாட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.அது வரவேற்கப்பட வேண்டிய கருத்தே. ஆனால் இதுபற்றி முதல்வர் சொன்ன கருத்து வேடிக்கையானது.
தமிழ் தலைமைகளில் எம்மூவருக்கே ( முதல்வர் ,சம்மந்தன், சுமந்திரன்) சிங்கள மொழி தெரியும். ஆகவே தாங்கள் இப்போதுதான் இதற்க்கான உரையாடல்களை தொடங்கியிருக்கிறோம் என்கிறார்.
இதற்க்கு முன்னர் ஊடகளியலாளர்கள், இட துசாரிய இயக்கங்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் இவ்வாறான கலந்துரையாடல்ளை பெரும்பான்மை சமூகத்திடம் நிகழ்த்த முயற்சிக்கவேயில்லையா? இவ்வாறான உரையாடல்களை நிகழ்த்தி பெரும்பான்மை சமூகத்திடம் கொண்டு செல்ல முற்பட்டவர்களுக்கு சிங்களப்பேரினவாத அரசு “சிங்கள புலி “பட்டம் கொடுத்து அச்சுறுத்தி கொலை செய்து இவ்வரான கலங்துரையாடல்களை முடக்கியது கொழும்பில் வாழ்ந்துவந்த முதல்வர் ஐயாவுக்கு தெரியவே இல்லையா?அல்லது சிங்கள பேரினவாத அரசுக்கு ஆங்கிலம் தெரியாதா? எஸ் டபிள்யு பண்டரனயகவில் இருந்து -யெயவர்த்தனா வரை ஒரு பயலுக்கும் சிங்களம் தெரியாது. அவர்களின் முதல் மொழி ஆங்கிலம்தான். ஆக நீங்க சொல்ல வருவது என்ன? சிங்கள மக்களிடம் பேசும் வேலையை இந்த மும்மூர்த்திகள் செய்கிறார்களா? அப்படி நடப்பதாக தெரியவில்லை. தெற்கில் இருக்கும் சிங்கள இடதுசாரிகள்தான் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றி பேசி வருகிறார்கள். அதை இவர்கள் புறக்கணித்து வருவது எதனால் ? சிங்களத்தில் பேசித்தான் அரசியல் செய்ய முடியும் எனச் சொல்வது இலங்கை அரசின் மொழி அடக்குமுறையை ஏற்றுக்கொள்ளுவதற்குச் சமம்.
இலங்கை வரலாற்றில் அறியப்பட்ட காலம் தொட்டு சிறுபான்மையினரை ஒடுக்குவதன் மூலம் -பெரும்பான்மைச் சிங்கள மக்களிடம் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வளர்த்து -அதன் மூலம் தங்கள் செல்வாக்ககை நிலைநிறுத்தி தங்கள் ஆட்சி ஆதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ளும் முகமாகவே – சிங்கள தலமைகள் செயற்படுகின்றன. எண்ணிக்கையில்சிறுபான்மையாக இறுப்பினும் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கை சிறுபான்மை உரிமைகளையும் தாண்டிச் செல்லும் தேசிய அபிலாசைகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்த மக்களுக்கான தீர்வைக்கொடுத்து விட்டால் தங்களது ஆட்சி அதிகாரம் நிலைகுலைந்துவிடும் என எண்ணும் சிங்கள தலைமைகள் எமக்கான தீர்வை ஒருபோதும் முன் வைக்கப்போவதில்லை என்பது உள்ளங்கனி நெல்லிக்கனி போல தெளிவாக உள்ளது. பின்பு எதற்க்கு இந்த சிங்களப் பேரினவாத அதிகார சக்திகளுடன் கலந்தரையாடல் வேடம்? இதற்கெல்லம் கட்டியம் கூறுவது போல் ஒரு படி மேலே போய் சிங்கள தலமைகள் தீர்வைப்பற்றி பேசாமல் இருப்பதற்கு இலங்கை இராணுவம் மேல் கொண்டப் பயமும் காரணம் என்கின்றீர்கள். என்ன திரிபு ஐயா இது? பாகிஸ்தான் போல இலங்கையில் தனிப்பட்ட அதிகாரத்தை இன்னும் இராணுவம் கைப்பற்றவில்லை. அப்படி முயற்சிகள் நடந்தால் அதற்கு எதிர் நடவடிக்கைகள் எல்லா எடுக்க வேண்டும்? பணிந்து போவது என்ன நியாயம்? அந்தப் பணிவுக்கு வக்காளத்து வாங்குவது என்ன நியாயம்?
ஆக மொத்தத்தில் எத்தனை திருத்தச்சட்டங்களை சிங்கள தலைமைகள் கொண்டு வந்தாலும் அவை பெரும்பான்மை மக்களையும், சிங்கள இராணுவத்தையும், சர்வதேசத்தையும் மகிழச்சிப்படுத்துவதற்க்கானதாகவே இருக்கப்போவது வெளிப்பாடு.நெருக்குதல்கள் மூலமே எமது உரிமைகளை வென்று எடுக்கலாம் என்று கூறிய முதல்வர் இவ்நெருக்குதல்களை சர்வதேசம் மூலம்தான் இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்க முடியும் என்கின்றார். அத்தோடு சர்வதேசம் ஆட்சி மாறியப்பின்பு தனது நெருக்குதல்களை குறைத்து நிலைப்பாடுகளை மாற்றியுள்ளது என்றும் கூறுகிறார். மேலும் எல்லா அரசாங்கமும் தங்களின் நலன் சார்ந்தே இயங்கும் என்றும் பொடிபோடுகிறார். தமிழ் மக்களின் தலைவராக விழிக்கப்பட்டவர் ஏன்இவ்வாறு பிதற்றுகிறார் என்பது புரியவில்லை. ஏனிந்தக் குழப்பம் ? எல்லா பக்கத்தையும் அணைச்சுக்கொண்டு வெட்டி ஓடும் அரசியல் என்பது இதுதானோ? சர்வதேச அரசின் வியாபர நலன்களுடன் ஒன்றினையும் சிங்கள அரசின் நலன்கள் எமது அபிலாசைகளுக்கு நேர் எதிரானவை. எப்பிடிப் பிரட்டிப் பிரட்டிக் கதைச்சாலும் அது ஒட்டாது – ஒன்றுபடாது.
சுன்னாகம் தண்ணீர் பிரச்சனை பற்றி கருத்து தெரிவித்த போது தண்ணீரில் 2007 ஆண்டு காலம் தொடக்கம் எண்ணெய் கலந்து கொண்டிருந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை என்கிறார். காரணம் அவருக்கு தெரியவில்லையா அல்லது பெரும் முதலாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறாரா? நீரில் எண்ணெய் கலந்துள்ளது ஆனால் ஆது பாதிக்கப்படும் அளவு இல்லை அதைப்பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை என்கிறார். ஆயினும் நைட்ரோனின் அளவு அதிகமாகவுள்ளது அதுதான் அந்த நீர் குடிப்பதற்க்கு ஏற்றதாயில்லை என்று திருவாய் மலர்ந்தார். இப்பரச்னையை விளக்கமாக அவர் பாஷையில் கூறுவதென்றல் “எல்லாம் அவனுக்கே வெளிச்சம்…??”
எங்களுக்கும் எல்லாம் வெளிச்சமாக தெரிய தொடங்கியிருக்கிறது. இந்த வெளிச்சத்தில் எழும் மக்கள் குரல் இலகுவில் மங்காது.
நடேசன்