இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியது. அது தவிர, மக்கள் போராட்டங்களில் “Go Gotta Go” என்ற வாசகமே அதிகளவாக உச்சரிக்கப்படும் போராட்ட கோஷமாக தற்பொழுது மாறியுள்ளது. கோட்டாபயவின் தோல்வியை வெளிப்படையாக, அதுவும் அவரின் ஆதரவராளர்களே விமர்சிக்கும் நிலைமை தற்பொழுது வந்துவிட்டது. நானாக இப்பதவிக்கு வரவில்லை நீங்கள்தான் என்னை கொண்டுவந்தீர்கள் என்று சொல்லித் தப்பிக்கும் நிலைக்கு எப்பவோ வந்துவிட்ட கோத்தா பய , அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக, “தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது” எனத் தனது விசேட உரையில் அண்மையில் கைவிரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியாக பதவியேற்றபோது இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்றுவேன் என சூளுரைத்த கோத்தாபய, தற்பொழுது நாட்டைப் பிச்சை எடுக்கும் நாடுகளில் ஒன்றாக மாற்றிவிட்டார். இது உண்மையில் ஆசியாவின் மிகப் பிரமாண்டமான அதிசயம்தான்.1970 களில் காணப்பட்டதைப் போன்ற ஒரு பற்றாக்குறையை தற்போது 2022 இல் ஏற்படுத்தியுள்ளார் கோத்தா பய. இரண்டுக்குமிடையிலான வேறுபாடு என்னவெனில், 1970 இல் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு கோடியே முப்பது லட்சம், தற்பொழுது பாதிக்கப்பட்டிருக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு கோடிக்கும் மேல்.
விலைஉயர்வு, உணவுப்பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு , மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சி, மருந்துப்பொருட்களின் தட்டுப்பாடு என, நிதி அமைச்சரின் தவறான நிதி முகாமைத்துவம், தவறான அரசியல் பொருளாதார தீர்மானம், மற்றும் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்ட ஜனாதிபதியின் நடைமுறைகளாலும்தான் நாடு இன்று மிகுந்த நெருக்கடியைச் சந்தித்துள்ளது. மேலும், நெருக்கடி நிலைமையின் காரணமாக இலங்கை மத்திய வங்கி புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசினால் ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இதனால் தடைப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. இந்த நாட்டை வளமான ஒரு நாடாக்குவேன் என வாக்குறுதி வழங்கி ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு குடும்பக் கட்சி தன்னால் முடிந்த அளவு நாட்டை கொள்ளை அடித்துவிட்டு இன்று அந்நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள கூட பணம் இல்லாத நிலைக்கு நாட்டை கொண்டுவந்து விட்டனர்.
கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு சென்றுள்ள விலைவாசிகளின் உயர்வு அனைத்து இன மக்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக மலையக மக்களின் நிலைமை பெரும் துயரமாகியுள்ளது. ஏற்கனவே பெருந்தோட்ட மக்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை, நாள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை, வெறும் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்திற்கே அவர்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலைமையில் கோதுமை மாவையே அதிகமாகப் பயன்படுத்தும் இம்மக்களிற்கு கோதுமை மாவின் விலை அதிகரிப்பானது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 69 லட்சம் மக்களின் ஆணையை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியவரால் தமிழ் சிங்கள முஸ்லீம் மட்டுமல்ல மலையகம் உட்பட அனைத்து இன மக்களுமே பாதிப்படைந்து வருகின்றனர். இம்மக்களின் கசப்பான பழிச்சொற்களாலே காற்று இன்று நிரம்பியுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஏழு மூளைகளைக் கொண்டவர் என புகழப்படுகின்றார். ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி,மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பார்க்கும்பொழுது ஏழில் ஒன்றையேனும் பசில் பயன்படுத்தியிருக்கலாமே என எண்ணத் தோன்றுகிறது. இப்படித்தான் இல்லாததை இருப்பதுபோல் காட்டுவதில் இலங்கை அரசியல்வாதிகள் விண்ணர்கள். ஒன்றே கேள்விக்குறியான நிலையில் – யாரோ ஒன்றுக்கு பதில் ஏழு மூளை இருக்கிறது என்று அடித்துவிட்டார்கள். பாவம் இந்த மக்கள் இன்னும் என்னென்ன கொடுமைகளையெல்லாம் பார்க்கப் போகிறார்களோ தெரியவில்லை?
இவ்விடத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா அண்மையில் தெரிவித்தவைகளைக் கருத்திற் கொள்வது நல்லது. “கடந்த 2005 முதல் 2014 வரை ஆட்சியாளர்கள் பில்லியன் ரில்லியன் கணக்கில் கொள்ளையடித்ததன் காரணமாக நாம் இந்த நிலைமையை அனுபவிக்கின்றோம். நாட்டு நிர்வாகத்தின் பேரில் சூறையாடும் நோக்கில் கடன் எடுத்தால்தான் இன்று இந்த நிலைமை. பெரும் செலவில் மாத்தளை விமான நிலையத்தை அமைத்தார்கள்.அங்கு ஒரு விமானமும் போவதில்லை. அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்தார்கள். அங்கு ஒரு கப்பலும் போவதில்லை. இப்படிக் கோடிக்கணக்கில் செலவழித்தார்கள் அதே நேரத்தில் தமது பைகளையும் நிரப்பிக்கொண்டனர். தற்பொழுது கடனை செலுத்த முடியாமல் நாடு திண்டாடுகிறது.நாடு கடனில் மூழ்கி தத்தளிக்கின்றது.” – எனத் தெரிவித்திருந்தார்.
சந்திரிக்காவின் அரசியலுடன் நமக்கு முரண்பாடு இருக்கின்ற போதிலும் அவரது இக்கருத்தானது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஏனெனில் நாட்டுக்கு தேவையில்லாத ‘அபிவிருத்தி’ திட்டங்களில் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்பட்டதோடு அல்லாமல் தலைவர்கள் தமது சொந்த கஜானாவை நன்றாக நிரப்பிக் கொண்டனர். தற்பொழுது அவர்கள் பாணுக்கும் பாலுக்கும் எரிவாயுவுக்கும் வரிசையில் நிற்பதில்லை, அவர்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவதில்லை, அவர்கள் பால்மா , கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் தமது வயிற்றைக் கட்டுவதில்லை. மின்சார கட்டணத்தின் உயர்வு அவர்களைத் தாக்குவதில்லை. அவர்கள் ஏற்கனவே அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டை நன்றாக சூறையாடிவிட்டனர். அதன் பிரதிபலன்களைதான் தற்பொழுது சாதாரண மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். அதற்காக சந்திரிக்கா சொன்ன அனைத்துக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை, 2014 இற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் சுத்தமான சூசப்பிள்ளை என்ற அர்த்தமுமில்லை, ஆனால் நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிக்கு அவர் சொன்ன காரணங்கள் ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கவையே.
இதற்கு அணி சேர்க்கும் விதமாக அண்மையில், ஊர் பற்றியெரிகையில் ஊர்கோலம் போனாராம் இளவரசர் என்பதுபோல் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. மக்களோ வரிசையில் நிற்க அமைச்சரோ மாலைதீவுக் கடலில் பெல்டி அடிக்கிறார். மகிந்தரின் மகனார் மாலைதீவில் அடிக்கும் பெல்டியில் இலங்கையின் பொருளாதாரம் நிமிர்ந்து விடும் என நம்புகிறார் போலும். தற்போதைய நெருக்கடியை தீர்க்க இலங்கை அரசு மேற்கொள்ளும் “கடும்” நடவடிக்கைகளை நாமலின் பெல்டி நன்றாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
மறுபுறத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் செல்வாக்கானது 17 சதவீதத்தால் அதிகரித்து காணப்படுவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு தற்பொழுது சேடம் இழுத்துக்கொண்டிருக்கின்றது என்பதை புரிந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி இதுதான் சாட்டு என்று உள்ளே புகுந்து, ஆட்சியைக் கலைத்து ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை நடத்துகின்றது. தமது போராட்டங்களில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக முன் வைக்கின்றார்களே தவிர தற்போதைய நெருக்கடிகளை தீர்ப்பதற்கான தமது அரசியல் பொருளாதார திட்டங்களை முன்வைத்ததாக தெரியவில்லை. நாடு சின்னாபின்னாமாகி சீரழிந்தாலும் பரவாயில்லை ஆட்சியைக் கைப்பற்றுதலே ஐக்கிய மக்கள் சக்தியின் தலையாய நோக்கமாகக் காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் மட்டும் தற்பொழுது மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தீர்ந்துவிடுமா? நிச்சயமாக இல்லை. அவர்களின் நோக்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்று ஆட்சியைக் கைப்பற்றுதலேயன்றி மக்களுக்குமான தீர்வை வழங்குவதல்ல. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி , சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன என அனைத்துக் கட்சிகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளில் பெரியளவில் எந்த வேறுபாடுமில்லை என்பதை இவர்களின் கடந்தகால வரலாறு சொல்லும்.
முஸ்லீம் மக்களின் ஜனாஸாக்களை எரித்தமையினாலேயே நாட்டிற்கு இந்த சாபக்கேடு என ஒரு சாராரும், தமிழ் மக்களை கொன்றழித்தமையினாலேயே நாட்டிற்கு இந்த சாபக்கேடு என இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர். குடும்ப ஆட்சியின் சாபக்கேட்டைத்தான் நாடு தற்பொழுது அனுபவித்துக்கொண்டிருக்கின்றதே தவிர ஜனாஸாக்களை எரித்தமையோ அல்லது தமிழ் மக்களை கொன்றழித்தமையோ காரணம் அல்ல. ஆகவே இது வெறுமனே தமிழ் அல்லது முஸ்லீம் அல்லது சிங்கள மக்களின் தனிப்பட்ட பிரச்னை அல்ல என்பதை புரிந்து கொண்டு அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தைக் கட்டியெழுப்பினால்தான் “கோ ஹோம் கோத்தா” வினை சமூக வலைத்தளத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் சாத்தியப்படுத்தமுடியும். ராஜபக்ச சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.