சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கத் தவறிவிட்டது.
மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் விவசாயிகளின் கோபம் மிகவும் வலுவாக இருந்தது. மோடி ஆட்சியின் தவறான நிர்வாகத்தால் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாகக் கிட்டத்தட்ட 47 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், குடியிருப்பு பற்றாக்குறை, நோய் தோற்று ஆகியவை மோடி ஆட்சிக்கு எதிரான அலையை உருவாக்கும் காரணமாக அமைந்தது. மக்கள் மத்தியில் இத்தகைய கோபம் இருந்தபோதிலும், நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சோசலிஸ்டுகளாகிய நாம், வலதுசாரி சக்திகளின் வெற்றியின் பின்னணியில் உள்ள காரணிகளை புறநிலையில் இருந்து பகுப்பாய்வு செய்வது மிகவும் முக்கியமானது. அதே சமயம், ஆதாரமற்ற குட்டி முதலாளித்துவ வாதங்களுக்கு நாம் பலியாகாமல் இருப்பதும் முக்கியம்.
குட்டி முதலாளித்துவ தாராளவாதிகளின் வாதங்களுக்கு மறுப்பு
தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தேர்தல் மோசடி குற்றசாட்டுகள் எழும்பத் துவங்கின. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியதுடன், இனி தேர்தல் ஆணையத்தை நம்புவதாக இல்லை என்றும் கூறியது. இந்தக் கருத்தையும் ஒரு சில தாராளவாதிகள் ஆமோதித்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு புகார்கள் வருவது இது முதல் முறை அல்ல. உண்மையில், வாக்குப்பதிவுகள் நடைபெறும் பொது மின்னணு இயந்திர முறைகேடு ஒரு நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது, பல அரசியல் கட்சிகளும் வாக்குச் சீட்டுப் பயன்பாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று கோருகின்றன. சில சமயங்களில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறுவது உண்மை தான். ஆனால், பாஜக வெற்றிபெற்றதற்கு காரணமே இது தான் என்று கூறுவது முற்றிலும் தவறான நிலைப்பாடு ஆகும். அது சரியான பகுப்பாய்வு செய்ய உதவாது.
பாஜகவின் வெற்றிக்குப் பலவீனமான மற்றும் பிளவுபட்ட எதிர்க்கட்சிகளும் காரணம் என்று கூறப்பட்டது. கோவா மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர்களின் வாக்குகள் எதிர்க்கட்சிகளிடையே பிளவுபட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும் அக்கட்சியின் கோவா தேர்தல் பொறுப்பாளருமான ப.சிதம்பரம் கூறினார். தாராளவாதிகளும் இதை வழிமொழிந்தனர்.
சில இடதுசாரிய தலைவர்கள் உட்பட பல அரசியல் விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரும் வாக்கு பதிவைக் கணக்கிடுதல், வாக்கு பிளவைக் கணக்கிடுதல் ஆகியவற்றிற்குள் தங்களை சுருக்கிக்கொண்டனர்.
உத்தரப் பிரதேசம் (உபி)
இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய மாநிலம் ஆகையால் நாட்டின் அரசியல் நிலையை மாற்றக்கூடிய மாநிலமாக அது கருதப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரசும் பெரிதும் புறக்கணிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி அதன் முக்கிய வாக்கு வங்கியான ஜாதவ்களின் வாக்குகளையும் கணிசமாக இழந்தது. முன்னரே தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பலர் பாஜகவுக்கு வாக்கு அளிக்கத் துவங்கியதை போல் தற்போது ஜாதவ்களும் பாஜகவுக்கு வாக்களிக்கத் துவங்கியுள்ளனர்.
அனைத்து பேரணிகளிலும், மோடியும் அமித் ஷாவும், ஆதித்யநாத்தின் அரசு குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பி மாநிலத்தில் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றியது என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் விமர்சகர் டாக்டர் ஷில்ப் ஷிகா சிங்கின் கூற்றுப்படி, மாநில அரசின் இலவச ரேஷன் விநியோகம், கிராமங்களில் கழிப்பறைகள் கட்டுதல் மற்றும் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துதல் போன்ற காரணிகள் பெண்களை சாதி மற்றும் மத வேறுபாடுகளை தாண்டி ஈர்த்துள்ளது.
ஆளும் பாஜகவின் பெண்களின் வாக்குத் தளத்தைக் காங்கிரஸ் வசம் இழுக்கும் முயற்சியில் பிரியங்கா காந்தி வத்ரா ‘லட்கி ஹூன், லட் சக்தி ஹூன்’ (நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்) பிரச்சாரத்தைத் தொடங்கினார், இதன் வழியாகப் பெண்களுக்கு 40 சதவீத சட்டமன்ற பதவிகள் வழங்கப்படும் என்றும், மாணவிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் வழங்கப்படும் என்றும், பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால், இது எதுவும் காங்கிரசுக்கு பயன் அளிக்கவில்லை.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் உ.பி.யில் சுமார் 10 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில், வீடுகள் கட்ட, 1.2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது; நகர்ப்புற பகுதிகளில் ரூ.2.5 லட்சம் விநியோகிக்கப்பட்டது.
இந்துத்துவா சித்தாந்தம், ராமர் கோவில் கட்டுதல் மற்றும் இந்து ராஷ்டிரா ஆகிய திட்டங்கள் கூட உ.பி.யில் உள்ள பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரை ஈர்த்துள்ளன.
பஞ்சாப்
பஞ்சாபில், பாரம்பரிய கட்சிகளிலிருந்து மக்கள் மாறியுள்ளதை காண முடிகிறது. ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் தனது தளத்தை விரிவுபடுத்தி, மகத்தான வெற்றியைப் பெற்றது, ஆளும் காங்கிரஸை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்தது, சிரோமணி அகாலி தளத்தை (எஸ்ஏடி) ஒற்றை இலக்கத்திற்குத் தள்ளியது.
2012 மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் தேர்தல் களத்தில் முதன்முதலில் நுழைந்த ஆம் ஆத்மி கட்சி, 2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சியாக மாறி, தற்போது 92 இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 1966 இல் பஞ்சாப் மறுசீரமைப்பிற்குப் பிறகு எந்தக் கட்சியும் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகின்றது.
கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தனிநபர் வருமானத்தில் சரிவைக் கண்டு வரும் பஞ்சாப், ஆம் ஆத்மி வாக்குறுதியளித்த டெல்லி மாதிரி வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளது. பஞ்சாப் வாக்காளர்கள் இப்போது தங்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உறுதியளிக்கும் ஒரு கட்சியை விரும்புகிறார்கள், வெறும் இலவசங்களை வழங்கும் கட்சியை அல்ல.
முடிவுகள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் செயற்குழு கூடி, கட்சித் தலைவர் உடனடியாக அமைப்பைச் சீரமைக்கவும், வலுப்படுத்தவும் சரியான நடவடிக்கைகளை எடுப்பார் என்று முடிவு செய்தது.
உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா
2017ல் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த மணிப்பூர் மற்றும் கோவாவில், பாஜக அதன் செல்வாக்கை மேம்படுத்தியுள்ளது. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 32 எம்.எல்.ஏக்களுடன் மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை தாண்டியதுடன், 40 இடங்களைக் கொண்ட கோவா சட்டமன்றத்தில் 20 தொகுதிகளைக் கைப்பற்றியது.
உத்தரகாண்டில், கதிமா தொகுதியில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தாலும், பாஜக பெரும் அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மணிப்பூரில் ஒக்ராம் இபோபி சிங் நடத்திய காங்கிரஸ் ஆட்சியின்போது, சட்டவிரோத கொலைகள் பொதுவான நிகழ்வுகளாக இருந்தன, அவை இப்போது கடந்த கால நிகழ்வாக மாறியுள்ளது. 2017 இல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அது நிறுத்தப்பட்டாலும், சரியான நேரத்தில் ஆட்சியை அமைத்தது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. வடகிழக்கு பிராந்தியத்தின் மற்ற சிறிய மாநிலங்களைப் போலவே, மணிப்பூரும் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இது வாக்காளர்களுக்குப் பாதுகாப்பான உணர்வை அளிக்கின்றது.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில், இந்து மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள இடங்களில் பாஜக சிறப்பாகச் செயல்பட்டது. பெரும்பாலும் தெற்கு கோவாவில், காவி கட்சி 12 கத்தோலிக்க கிறிஸ்தவ வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், அக்கட்சியின் வாக்குகள் அதிகரிக்கவில்லை என்றாலும், பாஜகவின் இடங்கள் 13ல் இருந்து 20 ஆக உயர்ந்துள்ளது.
உத்தர பிரதேசத்தைப் போலவே உத்தரகாண்டில், எல்.பி.ஜி., சுத்தமான குடிநீர், தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்குச் சுத்தமான கழிப்பறைகள் கட்டுதல், இலவச உணவுப்பொருள் (ரேஷன்) வழங்குதல் போன்றவை வாக்காளர்களை கவர்ந்துள்ளன.
இவை அனைத்தும் மக்கள் முன்னர் எவ்வாறான அவல நிலையில் இருந்தார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைகின்றது. வாழ்க்கைத் தரத்தில் ஒரு சிறிய உயர்வு அவர்களை ஒரு மத சார்பு அதிகாரத்துவ கட்சிக்கு வாக்களிக்கும் நிலைக்குத் தள்ளுகிறது.
மாற்று
இந்திய இடதுசாரிக் கட்சிகள் இன்னும் தொழிலாள வர்க்க ஆதரவைக் கொண்டிருந்தாலும், அது அவர்களுக்குப் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பதற்காக – உண்மையான சோசலிச மாற்றுக்காக – ஒரு புதிய வெகுஜன தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசரத் தேவை உள்ளது.