உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 2

827 . Views .

இராணுவத்தை  உக்ரேனில் இறக்கமுதல் பூட்டின் ஒரு நீண்ட உரையை வழங்கினார். உலகெங்கும் பிரசுரமான இந்த யுத்த முன்னெடுப்பு உரையில் தனது வாதத்தை பின்வருமாறு ஆரம்பித்திருப்பார் பூட்டின் .

‘… நவீன உக்ரேன் முற்றிலும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது. அல்லது இன்னும் துல்லியமாக சொல்வதானால், போல்ஷிவிக், கம்யூனிஸ்ட் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது என்ற உண்மையைச் சொல்லித் தொடங்குவேன். இதற்கான செயற்பாடு 1917 புரட்சியைத் தொடர்ந்து ஆரம்பித்தது. லெனினும் அவரது கூட்டாளிகளும் இதை நடைமுறைப்படுத்திய விதம் ரஷ்யாவின் மேல் கடுமையான போக்குக் கொண்ட அடிப்படையில் நிகழ்ந்தது. வரலாற்று ரீதியாக ரஷ்ய நிலமாக இருந்த பகுதிகளைப் பிரித்து, துண்டித்தனர். அங்கு வாழும் கோடிக்கணக்கான மக்களிடம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை.’

‘…1917 அக்டோபர் புரட்சி மற்றும் அதைத் தொடர்ந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, போல்ஷிவிக்குகள் ஒரு புதிய அரசை உருவாக்கத் தொடங்கினர் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இந்த விசயத்தில் அவர்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. 1922 ஆம் ஆண்டில், ஸ்டாலின் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷிவிக்குகள்) பொதுச் செயலாளர் மற்றும் இன விவகாரங்களுக்கான மக்கள் ஆணையர் ஆகிய இரு பதவிகளையும் ஆக்கிரமித்தார். தன்னாட்சி கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்ப அவர் பரிந்துரைத்தார். அதாவது குடியரசுகள் தம்மோடு இணையும் பொழுது அவர்களுக்கு பரந்த அதிகாரம் உள்ள எல்லை மாறாத நிர்வாக அலகு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’

‘…லெனின் இந்த திட்டத்தை விமர்சித்தார். மற்றும் அந்த நேரத்தில் அவர் “சுதந்திர பகுதிகள்” என்று அழைத்த தேசிய இனங்களுக்கு  சலுகைகளை பரிந்துரைத்தார். லெனினின் கருத்துக்கள் – அதாவது ஒரு கூட்டமைப்பு அரசு (கண்பிடரேசன்) , மற்றும் நாடுகளின் பிரிந்துபோகும் உரிமை உட்பட்ட சுயநிர்ணய உரிமை பற்றிய முழக்கம்,  -ஆகியன சோவியத் அரசமைப்பின் அடித்தளமாக மாறியது. ஆரம்பத்தில் அவை 1922 இல் சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கம் பற்றிய பிரகடனத்தில் உறுதிப்படுத்தப்பட்டன. பின்னர், லெனினின் மரணத்திற்குப் பிறகு, 1924 சோவியத் அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டன.’

மேற்சொன்ன வாதத்தின்படி அகண்ட சார் மன்னராட்சிக் காலத்தில் முடியாட்சியின் கீழ் இருந்த அனைத்துப் பகுதிகளும் இணைந்ததுதான் ரஷ்யா என்பது பூட்டினின் கருத்து. உக்ரேன் முதன்முறையாக முறையான சுதந்திர நாடாக எப்போது மாறியது என பூட்டின் சுட்டுவது சரியே. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் உண்மை சரிபார்ப்பாளராக இருக்கும் – இரண்டுமுறை புளிஸ்டர் பரிசு பெற்ற – கிளென் கெஸ்லர் பூட்டின் பேச்சை மறுத்து 23/02/22 ல் எழுதிய கட்டுரையையில் பூட்டினின் தவறான கருத்துக்களில் ஒன்றாக இதையும் நிறுத்தி இருப்பார். வலது சாரிய ஊடகவியலாளர்களின் போதாமை – மற்றும் நேர்மையற்ற திரிபுகளுக்கு கிளென் கெஸ்லர் எழுத்துகள் நல்ல உதாரணம். விசுவாசத்துக்குத்தான் புலிஸ்டர் பரிசு! உக்ரேனிய கலாச்சாரம் மொழி ஆகியன பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த ஒன்று என்பதுதான் அவரது மறுப்பு வாதம். இதைத்தான் ‘ஸ்ட்ரோமான்’ வாதம் என ஆங்கிலத்திலும், ‘விதண்டாவாதம்’ என தமிழிலும் சொல்லுகிறோம். உக்ரேன் தேசியக் கோரிக்கை சார்ந்த புள்ளி அல்ல பூட்டின் பேசியது – அது எவ்வாறு சுதந்திர நாடாக மாறியது என்பதையே பூட்டின் சுட்டினார். அது ஒரு வரலாற்று உண்மை. பூட்டின் சொல்கிறார் என்பதால் அதை மறைக்க முடியாது. இதற்கு பதில் எழுதிய பகுதியில் பிராக்கெட்டில் இதை கிளென் கெஸ்லர் ஏற்றுக் கொண்ட வேடிக்கையையும் கட்டுரை படிப்பவர்கள் பார்க்கலாம். ‘உண்மையில், சோவியத் யூனியனுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு, முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு சுதந்திர உக்ரேனிய அரசு சுருக்கமாக இருந்தது’ என்பதை ஏற்றுகொள்ளும் கிளென் கெஸ்லர் வேறு எந்த உண்மையைச் ‘சரிபார்திருக்கிறார்’ எனத் தெரியவில்லை.

ரஷ்யாவின் பெட்டோகிராட்டில் 1917ம் ஆண்டு பெபிரவரி மாதம் ஆரம்பித்த புரட்சி அலை ரஷ்யப் பேரரசின் கீழ் இருந்த அனைத்துப் பகுதிகளிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மக்கள் முன்வைத்த பல சனநாயாக, பொருளாதார கோரிக்கைகள் முதன்மைப்பட்டது. இந்த புரட்சி தொடர்ந்ததன் பலனாக எட்டு மணிநேர வேலைநாள் உட்பட பல பல உரிமைகளை தொழிலாளர்கள் – விவசாயிகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்கள் பெறக்கூடியதாக இருந்தது. அதிகாரத்தில் இருந்த தற்காலிக அரசு வேறு வழி இன்றி பல்வேறு காலாச்சார, மொழி உரிமைகளை வழங்கவும் நிர்பந்திக்கபட்டது. பல் தேசியங்களின் சிறைக்கூடமாக இருந்த ரஷ்யப் பேரரசின் கீழ் இருந்த பல தேசிய இனங்களின் தேசியக் கோரிக்கையை புரட்சி மேலும் வலுப்படுத்தியது. ரஷ்ய பேரரசுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரோ- கங்கேரியப் பேரரசுகளின் ஆதரவில் இயங்கி வந்த வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகள் இச்சமயத்தில் பலப்பட்டனர். இதே சமயம் உக்ரேனிய சோவியத்தும் வேகமாக வளர்ச்சி பெற்றது. இருப்பினும் இந்த சோவியத்துக்குள் போல்சுவிக்குகளுக்கு பெரும் ஆதரவு இருக்கவில்லை. உக்ரேனிய சுதந்திரத்துக்கு ஆதரவு கொடுப்பதா இல்லையா என்ற நிலைபாட்டை தமக்கு ஆதரவு இருக்கா இல்லையா என்ற அடிப்படையில் லெனின் தலைமையில் இயங்கிய போல்சுவிக்குகள் எடுக்கவில்லை. மாறாக தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமை உட்பட்ட சுய நிர்ணய உரிமையை அவர்கள் முற்றாக ஆதரித்து வந்தனர். புரட்சி வெற்றி பெற்றால், தாமாக இணையும் பட்சத்தில் மட்டுமே இந்த நாடுகள் சோவியத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் மற்றபடி முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதும் போல்சுவிக் கொள்கையாக இருந்தது. தற்காலிக அரச அதிகாரத்தை வைத்திருந்த முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளுக்கு இது உவப்பானதாக இருக்கவில்லை. இதையும் மீறி யூன் மாதம்(1917) உக்ரேனிய மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் உக்ரேன் சுதந்திர நாடாக இல்லாமல் ரஷ்யாவின் பகுதியாகவே தொடரவேண்டி இருந்தது. அக்டோபர் புரட்சியை தொடர்ந்து போல்சுவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதோடு இந்த நிலைமை மாறி விட்டது. போல்சுவிக்குகளின் தேசியம் சார் நிலைப்பாட்டின் காரணாமாக அவர்களுக்கு எதிராக இருந்தவர்கள்கூட ‘அனைத்து அதிகாரமும் சோவியத்துக்கே’ என்ற கோரிக்கைக்கு ஆதரவு வழங்கினர். அந்த அடிப்படையிலேயே அக்டோபர் புரட்சி நடந்தேறியது.

இதன்பின் போல்சுவிக்குக்ள தமது கொள்கைகளை உடனடியாக நிறைவேற்றத் தொடங்கினர். சில மாதங்களில் – ஜனவரி 1918ல் உக்ரேன் சுதந்திர நாடக அறிவிக்கப்பட்டது. நவீன உக்ரேனின் வடிவம் இவ்வாறுதான் உருவாகியது. லெனின் தலைமையில் இது நடந்தமையால் லெனின் வழங்கிய சுதந்திரம் என குறிக்கப்படுகிறதே தவிர இது ஒரு தனிநபர் சார்ந்த விசயமில்லை. இது தொழிலாளர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோசலிச கொள்கை நடைமுறை. பின்லாந்து உட்பட பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. எஸ்டோனியாவில் தற்போதுகூட ‘லெனின் தந்த சுதந்திரம்’ என மக்கள் பேசிக்கொள்வதை நேரில் பார்த்திருக்கிறேன். இந்த அடிப்படையில்தான் உக்ரேன் தனி நாடாகியது லெனின் செய்த வேலை எனவும் – உகேரனை ‘விளாடிமிர் லெனின் உக்ரேன்’ என அழைக்க வேண்டும் எனவும் பூட்டின் சாடுகிறார். உக்ரேன் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டத்தில் இருந்து கடுமையான யுத்தம் வெடித்தது. சோவியத்துக்கு எதிரான யுத்தம் ஒருபக்கம் – அனார்கிஸ்டுகள் மறுபக்கம் (அவர்களின் அரசு அற்ற ஒழுங்கை நிறுவிக்காட்ட ஒருபகுதியை போல்சுவிக்குகள் ஒதுக்கி குடுத்த வரலாறு அதிகம் பேசப்படாத ஓன்று) – ஜேர்மனி,போலந்து ஆக்கிரமிப்பு ஒருபக்கம் – வெள்ளை காவற்படையின் தாக்குதல் ஒருபக்கம் என பல சிக்கலான அடிபாடுகள் மத்தியில்தான் போல்சுவிக்குகள் பலத்தோடு உக்ரேனிய சோவியத் தனது பலத்தை நிறுவியது. இதைத் தொடர்ந்து சோவியத் குடியரசுகளின் கூட்டமைவில் (USSR) உக்ரேன் இணைத்து கொண்டது.

இங்கு பூட்டின் சொல்லும் இன்னொரு புள்ளியும் சரியே. தேசிய கோரிக்கை சார்பில் ஸ்டாலினுக்கும், லெனினுக்கும் இடையில் கடுமையான முரண்பாடு இருந்தது. தேசியக்கோரிக்கை முன்வைக்கும் தேசிய இனங்களின் முழுச் சுதந்திரம் அந்த இனத்து கலாச்சார- மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என லெனின் கருதினார். முதலாளித்துவத்துக்கு ‘முற்போக்கு’ முகம் உண்டு என்ற அடிப்படையில் தேசத்தை வளர்க்க முதலாளித்துவம் வேண்டும் என்ற அடிப்படையில் லெனின் சுய நிர்ணய கோட்பாட்டை பிடித்துக் கொண்டு நிற்றார் என சிலர் வாதிடுவர். தேசிய முதலாளிகளுக்கு ஒரு ‘பங்கு’ இருக்கு என்ற அடிப்படையில் சுய நிர்ணயக் கோரிக்கையை எங்கல்ஸ் முன்னிறுத்தவில்லை. அவரை பின்பற்றி இந்த கோரிக்கையை பலப்படுத்திய லெனினும் அந்த அடிப்படையில் முன்வைக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சுய வளர்ச்சி அவர்களுக்கு முதனையாக இருந்தது. அந்த அடிப்படையில் சுதந்திரத்தை ஆதரித்தும்- அதை விட்டுக்கொடுக்காது அவர்கள் தாமாக இணைந்து கொள்ளும் அடிப்படையிலான கண்பிடரேசன் என்ற உடன்பாடு ஏற்படுத்துவது பற்றியும் பேசி வந்தவர் லெனின். இதற்கு மாறாக அதிகாரப்பரவலாக்கம் போதும் – அது காலாச்சார மற்றும் மொழி சுதந்திரங்களை வழங்க போதும் என ஸ்டாலின் கருதினார். அந்த அடிப்படையில் ஒன்றுபட்ட மொஸ்கோ தலைமையில் இயங்கும் பிடறேசனை முன்வைத்தார் ஸ்டாலின். பின்பு ஸ்டாலின் தான் முன்வைத்த நிலைப்பாடு படி அனைத்து குடியரசுகளையும் ரஷ்யாவின் பகுதிகளாக இணைத்துக்கொண்டுவிட்டார் என்ற உண்மையையும் – பிறகு வந்த சோவியத் யூனியன் என்பது போல்சுவிக் கொள்கைக்கு நேரெதிரான நிலைப்பாடு அடிப்படையிலேயே இருந்தது என்பதையும் பூட்டின் வசதிக்காக மறைத்து விட்டார். உண்மையில் 1924ம் ஆண்டின் பிறகு உக்ரேனிய மக்களின் கலாச்சாரம், மொழி, தேசிய கோரிக்கை என்பன ரஷ்ய சாவுனிச சர்வாதிகாரத்தால் முடக்கப்பட்டது என்பது உண்மையே. இத்தருனத்தில் இதற்கு எதிராக எழுந்த ‘இடதுசாரிய எதிர்ப்பு’ உக்ரேனில் வேகமாக பலப்பட்டது. 1923ம் ஆண்டுவரை உக்ரேனிய சோவியத்தின் தலைமையில் இருந்த கிறிஸ்டியன் ரகொவ்ஸ்கி ஸ்டாலினால் நீக்கப்பட்டார். (போல்சுவிக் கொள்கைகளுக்கு நேரெதிராக நின்ற ஜோர்ஜி பியட்கோவ் என்ற அனார்கிஸ்ட் நீக்க்கப்பட்டு ரகொவ்ஸ்கி நியமிக்கப்பட்டிருந்தார். பின்பு வேறு வழியின்றி ஸ்டாலினை எதிர்க்க இடதுசாரிய ஏதிர்ப்பில் இணைந்து கொடவர்களில் அவரும் ஒருவர். பின்பு இந்த இருவரும் ‘ட்ரொட்ஸ்கிஸ்ட்’ என குற்றம் சாட்டப்பட்டு ஸ்டாலினால் கொல்லப்பட்டார்கள்). ட்ரொட்ஸ்கியின் ஆதரவோடு இயங்க முயன்ற இந்த இடதுசாரிகள் வேட்டையாடப்பட்டதும் – மக்கள் உரிமைகள் முடக்கப்பட்டதும் ஸ்டாலின் ரஷ்யா மேல் வெறுப்பு வளர உதவியது. பின்பு பாசிச சக்திகள் இங்கு வளர்ச்சி பெற இந்த வெறுப்பு உதவியது என்பது மிகையில்லை. இதையும் வசதிக்காக பூட்டின் மறைத்து விட்டார். இத்தருணத்தில் சுதந்திர உக்றேனை – உக்ரேன் சோவியத் சார்ந்த பலர் ஆதரித்தனர். ட்ரொட்ஸ்கி இதற்காக கடுமையாக வாதிட்டதையும் நாம் பார்க்க முடியும்.

ரஷ்யப் புரட்சி ரஷ்யப் பேரரசை உடைத்தது உண்மைதான். பேரரசை உடைக்கும் நோக்கில் நடந்தது அல்ல புரட்சி. மாறாக புரட்சி வழங்கிய சுதந்திரம் தேசிய உரிமை கோரிகைகளை பலப்படுத்தியது. பலர் சுதந்தித்தை (கலாச்சார மொழி உரிமைகள உட்பட்ட) அனுபவிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியது. ரஷ்யா தனது நலனுக்காக ஏனைய தேசங்களை சுரண்டுவதைப் புரட்சியாளர் எதிர்த்தனர். ‘பெரும் ரஷ்ய தேசியவாதத்தை’ கடுமையாக எதிர்த்து வந்தவர் லெனின்.

போல்சுவிக்குகளின் கொள்கை நிலைப்பாடு இன்று பூட்டின் உட்பட பலருக்கும் ‘புரியாத புதிராக’ இருக்கிறது. ஒரு புரட்சிகர தொழிலாளர் அரசு என்ன செய்யும் – மக்கள் சார் சனயாகம் என்றால் என்ன என்பதை இவர்களால் கற்பனை பண்ண முடியாத விசயமே இது. போல்சுவிக்குககள் தம் அதிகாரத்தை நிலைநாட்ட எதைச் செய்யவும் தயாராக இருந்தார்கள் எனவும் அதனால்தான் ரஷ்யாவுக்கு அவமானகரமான இத்தகைய நடைமுறைகளை ஏற்றுக்கொண்டனர் எனவும் ஒரு ‘விளக்கத்தை’ வைத்திருக்கிறார் பூட்டின். புரட்சி பற்றிய சரியான தெளிவற்ற ரஷ்ய பெரும்தேசிய பார்வையில் அதிகாரப்போட்டியாக தெரிகிறது. மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நடந்த புரட்சியின் விளைவுகள் இவை என்பதை பார்ப்பது – ஏற்றுக் கொள்வது வலதுசாரிகளுக்கு கடினமான விசயம்தான்.

பூட்டின் கோபம் ஸ்டாடலினோடு இல்லை – மாறாக லெனினோடு. தனது பேச்சில் அவர் பின்வருமாறு வாதிட்டிருப்பார்.

‘உண்மையில், ஸ்டாலின் முழுமையாகச் செயல்படுத்தியது லெனினுடையது அல்ல, மாறாக அவருடைய சொந்த அரசாங்கக் கொள்கைகளைத்தான். ஆனால் அவர் மூல ஆவணங்களில், அரசியலமைப்பில் பொருத்தமான திருத்தங்களைச் செய்யவில்லை. சோவியத் ஒன்றியத்தின் அடிப்படையிலான லெனினின் கொள்கைகளை அவர் முறையாகத் திருத்தவில்லை. அந்த நேரத்தில் அது தேவையில்லை என்று தோன்றியது. ஏனென்றால் சர்வாதிகார ஆட்சியின் நிலைமைகளில் எல்லாம் நன்றாக வேலை செய்வதாகத் தோன்றியது. மேலும் வெளிப்புறமாக அது அற்புதமானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், மிக உயர்ந்த ஜனநாயகமாகவும் தோன்றியது.’

 

பூட்டின் பேச்சு உண்மையில் பெரும் ரஷ்ய தேசிய உணர்வை உலுப்பி யுத்தத்துக்கு மக்களைத் தயார்படுத்தும் நோக்கு கொண்டது. இந்த பேச்சு ஒருவகையில் முரன்னகைக்கு இடமானதாக இருக்கிறது. லெனினைக் கடுமையாக தாக்கும் பூட்டின் லெனினது கொள்கை அடிப்படையில் உக்ரேனின் பகுதிகளாக இருக்கும் பகுதிகளுக்கு சுய நிர்ணய உரிமை கோருகிறார். உண்மையில் லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) மக்களின் சுதந்திரம் பற்றி பூட்டின் பேசுவதன் போலித்தன்மையை அவரது பேச்சே சிறப்பாக எடுத்துக்காட்டி நிற்கிறது. உக்ரேனிய மற்றும் மேற்கு அரசுகளோடு மோதுவதற்கு மட்டுமே இந்தே இடங்கள் குடியரசாக அறிவிக்கப்பட்டிருக்கிறனவே தவிர இந்த இடங்களின் பூரண சுதந்திரம் பூட்டினின் நோக்கம் இல்லை. கிரிமியவைப் போல் இந்தப் பகுதிகளையும் ரஷ்யாவோடு இணைத்துக் கொள்ளும் நோக்கம்தான் பூட்டினுக்கு உண்டு.

 

ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இந்த பகுதிகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. டான்பாஸ் பகுதி இராணுவத்தின் தலைமை முதற்கொண்டு அதன் முழுக் கட்டுப்பாடும் ரஷ்யர்கள் கையில்தான் உண்டு. அங்கு வாழும் உக்ரேனியர் பல நெருக்கடிக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். அங்கு வாழும் ரஷ்ய இனத்தவர்கள் பலர் தம்மை ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்களாகக் கருதுவதில்லை. அந்தப் பகுதி நிர்வாகங்கள் ரஷ்ய அரசை மீறி ஒரு முடிவுகளை எடுக்க முடியாது. ரஷ்ய அரசு பேசும் பெயரளிவில் சுதந்திரம் என்பது உக்ரேனுக்கு எதிராக தமது கட்டுப்பாடுகளை நிறுவுவதற்கே.

இதே சமயம் அங்கு வாழும் மக்கள் மேல் கொடிய அடக்குமுறைகளை உக்ரேனிய அரசு செய்து வந்திருக்கிறது. பிரிவினைக் கோரிக்கை முன்வைத்த அனைவரும் ‘தீவிரவாதிகள்’ எனக் குற்றம் சாட்டப்பட்டு கடுமையாயன அடக்குமுறைக்கு உள்ளாகி வந்துளார்கள். ரஷ்ய மொழி கலாச்சார அடையாளங்கள் முடக்கப்பட்டு வந்திருகின்றன. ரஷ்ய இனத்தவர் இங்கு பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இந்த பகுதியில் வாழும் உக்ரேனிய மக்களும் கடுமையான தாக்குதல்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இப்பகுதிகள் பிரிந்து போவதை கடுமையாக எதிர்த்து வருகிறது உக்ரேனிய அரசு. அங்கு நடந்த கருத்துக் கணிப்பு முதற்கொண்டு – தற்காலிகமாக உருவாகி இருக்கும் நிர்வாகம்வரை எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை உக்ரேனிய அரசு. உக்ரேனைப் பிரிக்க ரஷ்யா செய்யும் சதி இது என்பது அவர்கள் நிலைப்பாடு. இதை அனைத்து மேற்கு நாடுகளும் ஆதரித்தே வந்துள்ளன.

இந்த இரு அரசுகளின் நலன்களின் மத்தியில் மாட்டிக்கொண்டு திணறும் அப்பகுதி மக்களுக்கு தேசிய உரிமை இல்லையா? அங்கு வாழும் மக்கள் – ரஷ்யர்கள் – உக்ரேனியர் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் இணைந்து தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக்கொள்ள முடிவெடுக்க முடியாதா? உக்ரேனுக்குள் அதிகாரப் பரவல் நிலையை ஏற்றுக் கொள்வதா? பிரிந்து சென்று தனி நாடாக இயங்குவதா? ரஷ்யாவோடு சேர்ந்துகொள்வதா? என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு. அதிகாரத்தின் நெருக்கடியின் காரணமாக – அல்லது ஒரு இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் முடிவுகளை எடுக்கும்படி அப்பகுதி மக்களை நிர்பந்திப்பது சனநாயகம் அல்ல. பிரிந்துபோகும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமை அப்பகுதி மக்களுக்கு உண்டு. அவர்கள் மேல் தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் ஒடுக்குமுறை காரணத்தால் சுதந்திரம் கோரிய நடவடிக்கைகள் அங்கு பலப்பட்டு உள்ளன.

உக்ரேனின் சுய நிர்ணய உரிமை பற்றி பேசம் மேற்கு அரசுகள் இப்பகுதி மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. ஒரு நாடு இருத்தலுக்கான உரிமையை மறுக்க முடியாது. பூட்டின் சொல்வதுபோல் உக்ரேன் ஒரு நாடே இல்லை எனப் பேசுவது கொடிய அடக்குமுறையை கட்டவிழ்க்கும் நோக்கிலேயே. இதே சமயம் அந்த நாடு இருத்தலுக்கான உரிமை என்பது அந்த நாடு மற்றைய தேசிய இனங்களை முடக்குவதற்கான அதிகாரத்தை வழங்குவதாக இருக்க முடியாது.

சுய நிர்ணய கோரிக்கையைக் கோருவதற்கு ‘வரையறைகள்’ இருக்கவேண்டும் எனச் சிலர் பேசுவர். ‘வரலாற்று ரீதியாக’ எழுந்த தேசிய கலாச்சாரம் இருக்கவேண்டும் என்றும் பேசுவர். வரலாற்றில் நீண்ட காலமாக ‘தேசிய’ குழுக்களாக இயங்கிய பல இனங்களுக்கு தேசிய உரிமை மறுக்கப்பட்டுவரும் நிலையிலேயே இருக்கிறது உலகு. முதலாளித்துவத்தோடு தோன்றிய தேசிய அரசுகள் – குறிப்பாக நவ காலநித்துவ நாடுகளில்- பல்வேறு தேசியம் சார் பிரச்சனைகளை தீர்க்கவில்லை. அப்படியிருக்க புதிதாக தோற்றமுறும் தேசிய கோரிக்கைகளை முதாளித்துவ அரசுகள் சரியாக அணுகும் என எதிர்பார்ப்பது தவறு. பல்முனை ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு இன மக்கள் புதிய அடையாளங்களை- கலாச்சார விழுமியங்களை நோக்கி நகர்த்தப்படுவர். அது தம்மைத் தாமே ஆட்சி செய்யும் தேசியக் கோரிக்கையாகக்கூட பரிமாணம் கொள்ள முடியும். வரையறை போதாது – வரலாறு இல்லை என அந்த கோரிக்கை முடக்கப்படுவது அவர்தம் விடுதலை வேட்கையை அதிகரிக்குமே தவிர குறைக்காது – இல்லாமல் செய்யாது. அந்த மக்களின் காலாச்சார – பொருளாதார வளர்ச்சி –அந்த மக்களின் சுதந்திரத்தை மறுத்த நிலையில் தொடர்வது கடினம். ஸ்பெயினின் பாஸ்க் பகுதி முதற்கொண்டு பல்வேறு பகுதிகளில் ‘பொருளாதார’ முன்னேற்றத்தால் தேசியக் கோரிக்கையை பின்னடையச் செய்யும் முயற்சிகள் நடந்து வந்திருக்கின்றன. முதலாளித்துவ லாப நோக்கு அடிப்படையில் நிகளும் இந்த நடவடிக்கைகள் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் தேசிய சனநாயக கோரிக்ககைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதில்லை. இதனால் தேசிய கோரிக்கை மங்கலாம் –மறைந்து போவதில்லை.

தேசியக் கோரிக்கை என்பது ‘கூடிக் குறையும்’ தன்மை உடையது என மார்க்சியர் சுட்டிக் காட்டுவதுண்டு. எப்போது இது கூடுகிறது – எப்போது குறைகிறது என்பதை பல்வேறு புறக்காரணிகள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக அடக்குமுறை அதிகரித்தல், பொருளாதார நெருக்கடி நிலை உருவாகுதல் போன்ற காலப்பகுதியில் தேசியக் கோரிக்கை வலுப்படுமே தவிர தேயாது என்பதை வரலாறு முழுக்க நாம் பார்க்கலாம். தேசியக் கோரிக்கை முதன்மைப்பாடாத சமயத்தில் – பல்தேசிய தொழிலாளர் ஒன்றுபட்ட போராட்டம் மேலும் வலுப்பட கூடிய நிலையில் – ‘வலிந்து’ தேசியக் கோரிக்கையை மக்கள்மேல் திணிக்கவேண்டிய அவசியம் இல்லை. இணைத்த போராட்டம் மக்களுக்கு அதி கூடிய உரிமைகள் – மற்றும் பொருளாதார வெற்றியை தரும் பட்சத்தில் தேசிய கோரிக்கை பின்தள்ளப்படுவதை மக்கள் தாமகாவே அனுமதிப்பார். முதலாளித்துவ தேசிய அரசுகளின் தோற்றத்தின்பின்கூட இந்தப் போக்கு இருப்பதை வரலாற்று மாணவர்கள் அறிவர். இல்லை என்றால் பிரெஞ்சு தேசம் என்ற ஓன்று சாத்தியப்பட்டிருக்க முடியாது. இதே சமயம் தேசியக் கோரிக்கையை மறுத்த நிலையில்தான் தொழிலாளர் ஒன்றுபடுதல் நிகழவேண்டும் எனக் கோருவதும் ஒருவகையில் அடக்குமுறைக்கு ஒப்புதல் வழங்குவதே. அடக்குமுறையையும் எதிர்த்தபடி ஒன்றுபடுதலைக் கோர சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல் அத்தியாவசியமாகிறது.

இந்தப் புள்ளிகளை போராட்டச் சக்திகள் நுணுகி அறிந்து கொள்வது அத்தியாவசியம். சுய நிர்ணய உரிமை என்பது இறுகிய கொள்கை நிலைப்பாடு அல்ல என்று சொல்வதைப் பலர் மிகத் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இயங்கியல் புரிதல் அறியா பல்கலைக்கழக ‘கல்வியாளர்’ ஒருபோதும் இதைப் புரிந்து கொள்ளப்போவதில்லை. மார்க்சியர் பேசும் சுய நிர்ணய உரிமை என்பது வெறும் ‘சோடினைக்காக’ பேசும் ஒன்றல்ல. அதே சமயம் ‘மார்க்சியர்’ என தம்மை சொல்லிக்கொள்ளும் பலர் தேசியம் சார்ந்த விடயத்தில் வலதுசாரிகளைவிட மோசமான நிலைபாடுகளை எடுப்பதையும் நாம் பார்க்க முடியும். உதிரிகளாக ‘தன்முனைப்புச்’ செய்ய பயணி வருபவர்கள் மட்டுமல்ல – இந்திய இலங்கை ஸ்டாலினிச, மாவோசிய கட்சிகளும் இதில் அடக்கம். ஜே.வி.பி ஒரு நல்ல உதாரணம். சிலர் ‘உள்ளக சுய நிர்ணய உரிமை’ என்றுகூட திரிக்கிறார்கள். ஒரு மார்க்சிய கட்சி இப்படி பேசுவதும் பின்பு தம்மை ‘லெனினிஸ்ட்டாக’ காட்டிக் கொள்வதும் மிகவும் நகைப்புக்குரியதே. ஸ்டாலின் எழுதிய ஒரே ஒரு கட்டுரைதான் (அதுவும் லெனின் உதவியுடன் எழுதிய கட்டுரை) இன்றுவரை இவர்களது பைபிள். அக்கட்டுரை வழங்கும் இறுகிய வரைமுறைகள் மிகவும் தவறான வழிகாட்டலையே செய்து வந்திருக்கின்றன. இவர்கள் அதிலிருந்து மீண்டு வெளியில் வரவேண்டும். தற்போதைய நிலவரங்களை ஆய்வு செய்தாவது தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். ஸ்டாலின் தவறு என்றால் அதை ஏன் லெனினும் மற்றைய போல்சுவிக்குக்ளில் அனுமதித்தனர்? புரட்சிக்கு பின்பு எவ்வாறு ஸ்டாலின் தேசிய இனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் கமிசார் ஆனார் என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. இதை வைத்து ஸ்டாலின் கொள்கை என்பது லெனின் கொள்கையின் நீட்சியே என்று ஒட்டுமொத்தமாக மார்க்சிய நிலைப்பாட்டைத் தாக்கி பல ‘கல்வியாளர்’ தமது மலிந்த ‘ஆய்வுகளை’ செய்திருப்பதையும் பார்க்கலாம். சிக்கலான வரலாறை இலகுபடுத்தி புரிய முயல்வதன் பக்க விளைவுகளில் ஓன்று இது. போல்சுவிக்குகளின் கொள்கை நிலைப்பட்டை எடுத்துச் செல்ல – பல்வேறு தேசிய கோரிகை அமைப்புக்கள் (மேன்சுவிக்குகள் உட்பட) எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருந்தது – பின் லெனின் எவ்வாறு மேல் எழத்தொடங்கிய ஸ்டாலின் நிலைபாட்டை கடுமையாக எதிர்த்தார் போன்ற விபரங்களை இவர்கள் தவற விட்டு விடுகிறார்கள். ட்ரொட்ஸ்கி மேலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதுண்டு. பொல்சுவிக் அதிகாரத்துக்குள் இருக்கும் பொழுது ஏன் ட்ரொட்ஸ்கி தவறுகள் பலத்தை எதிர்க்கவில்லை  என்ற கேள்வி அவர் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டபின் பலராலும் முன்வைக்கப்பட்டது. அக்டோபர் புரட்சி நடப்பதற்கு முன் சிநோவியேவ் முதலான முன்னனி போல்சுவிக் தலைவர்கள் முதாளித்துவ பத்திரிகைகளுக்கு திட்டங்களை கசியவிட்ட பொழுது அதை ‘மறைத்துப்’ பேச நிர்பந்திக்கபட்டார் ட்ரொட்ஸ்கி. இது போல் அக்கால கட்டத்தில் சில நடைமுறைகள் முன்னெடுக்க முடியவில்லை – சில சுதந்திரமான் உரையாடல் சாத்தியப் படவில்லை என்ற கேள்வி போல்சுவிக் அரசு எவ்வாறு வளர்ச்சி கண்டது என்பதோடு தொடர்புடையது. சனநாயகம் மறுத்த சர்வாதிகார போக்காக வளர்ச்சி அடைத்து கொண்டிருந்த நிர்வாகம் சார்ந்த விசயம் இது. இதற்குள்ளும் மிகப்பெரும் இடதுசாரிய எதிர்ப்பை கட்டி நிமிர்த்திய ட்ரொட்ஸ்கி மேல் குற்றம் சுமத்தி ‘மௌனித்து’ இருந்தவர்களுக்கு வக்காலத்து வாங்குவது முரண் நகை. ட்ரொட்ஸ்கி சர்வதேச வாதி இல்லை என சிலர் பேசுவது போன்ற கதைதான் இது.

இன்று உலகெங்கும் ட்ரொட்ஸ்கிய அமைப்புக்கள் சுய நிர்ணய கோரிக்கையை ஆதரிப்பதையும் கம்யுனிச கட்சிகள் அதை மறுப்பது – அல்லது மறைப்பது – செய்வதையும் புரிந்து கொள்ள மேற்கண்ட வரலாற்றுப் புரிதல்கள் அவசியம். சுய நிர்ணயக் கோரிக்கை என்பது கறாரான வரையறைகள் மூலம் தீர்மானிக்கப்படுவதில்லை எனபதை நாம் புரிந்து கொள்வது மிக அவசியம். ஒரு சிறு நகரம் கூட அந்த கோரிக்கையை முன்னெடுக்க முடியும். ஒன்றரை மில்லிய மக்கள் வாழும் நகரமான டானியச்க் நகரம் கூட அந்த கோரிக்கையை முன்வைக்க முடியும்.

 

போராட்டச் சக்திகள் இந்த கோரிக்கைகளுக்கு எதிர் நிலையில் நின்றுகொண்டு தொழிலாளர் உரிமை எனப்பேசுவது தவறு. டான்பாஸ் பகுதியில் ‘மக்கள் குடியரசை’ உருவாகுவதற்கு பதிலாக ரஷ்ய அரசை உருவாக்குவதே நோக்கம் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அம்மக்களின் தேசிய உரிமையை மறுக்க முடியாது. அந்த உரிமை ஒட்டுமொத்த உக்றேநியர்களால் தீர்மானிக்கப்படும் ஒன்றல்ல. அங்கிருக்கும் மக்கள் மட்டுமே அதை தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள். (டான்பாஸ் பகுதிகள் பிரிந்து போவதா என்ற கருத்து கணிப்பீடு ஓட்டுமொத்த உக்ரேனில் நடத்தி தீர்மானிக்க முடியாது).

இந்த சிக்கலில் வர்க்க ஒற்றுமையை முன்தள்ளுவது எவ்வாறு? அதிகாரங்களுக்குள் சிக்கி இருக்கிற மக்கள் நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது எவ்வாறு போன்ற கேள்விகள் கேட்கப்படலாம். போராட்ட சக்திகள் முன்வைக்கும் வழிமுறைகள் பல ‘நடைமுறைக்கு சாத்தியமற்றவை’ என புறந்தள்ளப்படுவதற்கு காரணாம் மக்கள் சார் அமைப்புக்கள் பலவீனமாக இருப்பதனாலேயே. அதிகார சக்திகளின் பிடி இறுகி இருக்கும் நிலையில் எந்த தீர்வும் ‘நிரந்தர’ தீர்வாகவோ – மக்களின் அபிலாசைகளை முழுமையாக தீர்த்து வைப்பதாகவோ இருக்கப்போவதில்லை. முதாளித்துவத்தின் அடிப்படையில் தேசிய கோரிக்கை நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை இருப்பதை ( உலகின் பல பகுதிகளில்) இதன்லால்தான் மார்க்சியர் சுட்டிக் காட்டுகின்றனர். இஸ்ரேலிய மக்களை கடலில் கொண்டுபோய் தள்ளி விட்டு விட்டு பாலஸ்தீனர்கள் தேசத்தை நிறுவிக்கொள்ள முடியாது. உக்றேனியர்களைகே கொன்று குவித்து அந்தப் பிணக் குவியலில் ஏறி நின்று டான்பாஸ் விடுதலை எனக் கூச்சலிட முடியாது. இதே சமயம் யுத்த முனையில் நிற்கும் உக்ரேனியர்கள் ரஷ்யர்களுடன் இணையுங்கள் என்ற ‘கட்டளையும்’ வழங்க முடியாது. ‘ஒற்றுமை’ என்பது இந்த அடிப்படையில் நிகழ முடியாது.

ஒற்றுமை என்பது ஒன்றுபட்ட போராட்ட நோக்கில் இருந்து – கொள்கை அடிப்டையில் இருந்து எழ வேண்டும். உக்ரேனியர்களின் மேலான ரஷ்ய அரசின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி ரக்ஷ்ய தொழிலாளர் ஒன்றிணைய வேண்டும். ரஷ்ய பகுதிகளில் இருக்கும் முற்போக்கு சக்திகள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் அதற்கு வேலை செய்யவேண்டும். உங்கள் அரசு எங்களைத் தாக்குவதற்கு எதிராக திரளுங்கள் என்ற கோரிக்கையை உக்ரேனிய தொளிலாளர் அமைப்புக்கள் முன்வைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை அத்தகைய கோரிக்கையாலர்களை ஒன்றிணைக்கும் சாத்த்தியத்தை எற்படுத்துகிறது. டான்பாஸ் பகுதி மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் எந்த அரசினதும் கட்டுப்பாட்டின் கீழும் இல்லாது தமது சுதந்திரத்தை நிலைநாட்ட உதவுவோம் என்ற அடிப்படையில் இயங்கும் உக்ரேனிய தொழிலாளர் பாதுகாப்பு படை ரஷ்ய போராளிகளையும் உள்வாங்க முடியும். இந்த சக்தி எந்த அரசையும் விட பலமான சக்தி. இதுதான் முதாளித்துவ வள நலன்களை முதன்மைப்படுத்தாத – மக்கள் நலனுக்காக வளங்களை திட்டமிடும் மாற்று அதிகாரத்தை உருவாக்கும் வல்லமை உள்ள சக்தி. இந்த அடிப்படையில் தமது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காது – எந்த சனநாயக உரிமைகளையும் விட்டுக்கொடுக்காது வளங்களைப் பகிர்ந்து கொள்ள – தாமாகவே அனைத்து மக்களும் முன்வரும் வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தகைய திட்ட மிடலை முன்னெடுக்கும் அரசையே சோஷலிச அரசு என்கிறார் லெனின். தேசங்களின் சம நிலையைக் காபாற்றியபடி ஓன்று கூடுதல் ஒரு கண்பிடரேசனாக பரிணமிக்க முடியும் என்றார் லெனின். நிரந்தரத்தீர்வு பற்றி சிந்திப்பவர்கள் இந்தத் திசையில் பயணிப்பதை தவிர வேறு வழியில்லை.