யுத்த காலத்தில் மக்கள் சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?

யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். ‘தேசிய ஒற்றமை’ என்ற பெயரில் அரச பக்கம் திரள மக்கள் பல தளங்களில் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இவற்றை மறுத்து யுத்த மறுப்பு செய்ய முன்வருவோர் சமரசமற்ற நிலைப்பாடு எடுக்கவேண்டும். உண்மையில் அதையும் தாண்டிச் செல்ல வேண்டும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது மக்கள் தம் தம் அரசுகளின் பக்கம் திரட்டப்பட்டனர். இந்த சமயத்தில் முற்போக்கு சக்திகளாக தம்மை அதுவரை கருதி வந்த சக்திகள் பலதும் ‘விசேட யுத்த சூழ்நிலை’யைக் காரணம் காட்டி அரச ஆதரவில் இறங்கின. சோவியத் யூனியன் மேற்கு அரசுகோடு உடன்படிக்கையை ஏற்படுத்திய பின் சோவியத் யூனியனின் எல்லை காக்கும் கருவியாக குறுகியது அப்போதைய மூன்றாம் அகிலம். சோவியத் யூனியனின் தலைமையில் இயங்கிய மூன்றாம் அகிலத்தில் பங்கு பற்றிய அனைத்து கம்யுனிச கட்சிகளும் தமது தமது அரசுகளின் ஆதரவு நிலைப்பாடு எடுத்தன. இந்திய கம்யுனிச கட்சி காங்கிரசில் கரைந்தது. காந்தியத்தின் வாலாகச் சுருங்கியது. இந்த மோசமான நிலைபாடு ‘மார்க்சிய’ நிலைப்பாடு அல்ல. ஸ்டாலினின் அதிகாரம் மேலோங்கிய பிறகு ‘ஒரு நாட்டில் சோசலிசம்’ என்ற ரஷ்ய தேசியவாதம் முதன்மைப்பட்ட பின் வந்த ஸ்டாலினிய கொள்கைகள் இவை. தவிர இவைக்கும் புரட்சிர மார்க்சியத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாசிசத்தை எதிர்க்க வேறு வழி இல்லை என அன்றும் இன்றும் சொல்லப்பட்டு வருகிறது. இன்னொரு வழி இருந்தது. முதாலம் உலக யுத்த கால கட்டத்தில் அந்த வழியை முன்னெடுத்தனர் லெனின் தலைமையில் இயங்கிய போல்சுவிக்கினர்.

முதாலம் உலக யுத்த முன்னெடுப்பின் போதும் மக்கள் அரச – அதிகார சக்திகள் பக்கம் திரள பணிக்கப்பட்டனர் – முற்போக்கு சக்திகள் என சொல்லிக் கொண்டாரும் அந்தப் பக்கமாக உருண்டு பிரண்டனர்.

இந்த சமயத்தில் சமரசமற்ற யுத்த மறுப்பை முன்வைத்தார் லெனின். அதை நடைமுறைக்கு சாத்தியமற்றதாக பலர் பார்த்தனர். லெனினைக் குறுங்குழு வாதி எனச் சாடினார்கள். லெனின் இரகசியமாக ஜெர்மன் பாசிசத்துக்கு வேலை செய்வதாகக்கூட பின்பு பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. சமீபத்தில் வெளியான கிங்ஸ்மென் படம்கூட இந்த பழைய வதந்தியின் அடிப்படையில் லெனினை வில்லனாக சித்தரிக்கிறது. அப்படி என்னதான் லெனின் கேட்டார்? பிரச்சாரிகள் புலம்பியதுப்போல் ஜேர்மனிய தங்கத்தை வாங்கிப் பதுக்கிய சூட்டில் அவர் பேசவில்லை. மாறாக உழைக்கும் மக்கள் சார்பில் கோரிக்கையை வைத்தார்.

எந்த நிபந்தனையும் இன்றி யுத்தத்தை நிறுத்து என்றனர் பொல்சுவிக்குகள். ஒரு தேசத்தின் தொழிலாளர்கள் இன்னொரு தேசத்தின் தொழிலாளர்களை எதற்காக கொலை செய்ய செய்யவேண்டும்? இதனால் யாருக்கு லாபம்? என்ற எந்த சிக்கலும் இல்லாத மிகச் சாதாரன கேள்வியில் இருந்து பிறந்ததுதான் லெனின் நிலைப்பாடு. ஆனால் என்ன செய்வது என்ற நிலை மிக ‘சிக்கல்’ வாய்ந்த பெரும் பெரும் உரையாடல்/அடிபாடு/மோதலாக மாறியது.

எல்லா யுத்த காலங்களிலும் இடதுசாரிகள் மத்தியிலும் அடிபாடுகள் – பிளவுகள் நிகழ்வதை நாம் பார்க்கிறோம். தொழிலாளர் சர்வதேசமான இரண்டாம் அகிலத்தின் முடிவைக் கொண்டு வந்து சேர்த்தது முதலாம் உலக யத்தம். மூன்றாம் அகிலத்தின் முடிவை கொண்டுவந்தது இரண்டாம் உலக யுத்தம். முதலாம் உலக யுத்த காலத்தில் பாராளுமன்றத்தில் பங்கு பற்றிய இடதுசாரிகள் யுத்தத்தை எதிர்த்து வாக்குப் போடவேண்டும்- பிரச்சாரிக்க வேண்டும் என லெனின் கோரிக்கையை முன்வைத்தார். அவ்வாறு தட்டையாக முடிவெடுக்க முடியாது – தொழிலாளர் பாதுகாப்பு அவசியம் எனச் சொல்லி பெரும்பான்மை இடதுசாரிகள் இடதுசாரியத்தில் இருந்து விலத்திச் சென்றுவிட்டனர். யுத்த மறுப்பு சக்திகள் சிறுபான்மையாக சுருங்கின. இந்த சக்திகள் இரகசிமகாக சுவிட்சலாந்தின் சிம்மர்வால்ட் என்ற இடத்தில் சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. யுத்த எதிர்ப்பு மாநாடு நடப்பது தெரிய வந்தால் அரச சக்திகளால் வேட்டையாடப்படும் நிலை இருந்தமையால் இந்த மாநாடு இரகசியமாக நடத்தப்பட்டது. சிம்மர்வால்ட் மாநாட்டில் கலந்து கொள்ள பல புரட்சிகர சக்திகளுக்கு அழைப்பு விடப்பட்டிருந்த போதும் பலர் கலந்துக்கொள்ள மறுத்துவிட்டனர். இரண்டு பஸ்களில் எடுத்து செல்லக் கூடிய சிறுதொகை புரட்சியாளர்களே இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். முதாளித்துவ யுத்தத்தை எதிர்க்கும் இந்த மாநாட்டிலும் பெரும் பூகம்பம் வெடித்தது. சிம்மர்வால்ட் இடதுசாரிகள் என லெனின் /ட்ரொட்ஸ்கி ஆகியோர் தம்மை பிரித்துக் கொள்ளவேண்டிய நிலை உருவாகியது. யுத்த மறுப்பை சமரசமற்ற எல்லைக்கு கொண்டுசெல்ல பலர் தாயாராக இருக்கவில்லை. யுத்த எதிர்ப்பு போராட்ட நடவடிக்கைக்களை செய்வது என்ற உடன்பாட்டுக்கு வந்தனர். ட்ரொட்ஸ்கியின் தலைமையில் சிம்மர்வால்ட் மாநாடு ஒரு அறிக்கையை ஏற்றுக் கொண்டது. யுத்த எதிர்ப்பு போராட்டத்துக்கு இணங்கிய அடிப்படையில் இந்த அறிக்கைக்கு லெனின் உடன்பட்டார். இருப்பினும் இடதுசாரிகள் தாம் வைத்த கோரிக்கையையும் வெளியிட்டனர் – இதற்கு ட்ரொட்ஸ்கியின் ஆதரவு இருந்தது. யுத்த எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்த பொழுதும் அதை எதிர்த்து வாக்களிக்க பலர் தயாராக இல்லாத நிலை பெரிதாக பின்பு வெடித்தது.

ரஷ்யப் புரட்சியின் பின் அனைத்து யுத்த நடவடிக்கைகளையும் எந்த நிபந்தனையும் இன்றி நிறுத்தினார் லெனின். இருப்பினும் மற்றவர்கள் நிறுத்தவில்லை. சோவியத் மேல் நடந்த படையெடுப்பை நிறுத்த – வெள்ளை காவற்படை என்ற பெயரில் திரண்ட முதலளித்துவ சக்திகளின் எதிர்புரட்சிகர யுத்தத்தை தடுக்க உலகின் மிகப்பெரும் படையைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் பொல்சுவிக்குகள். இந்தப் பொறுப்பை எடுத்த ட்ரொட்ஸ்கி பாவித்த மிகப்பெரும் ஆயுதம் – துண்டுப் பிரசுரம். நீண்ட இரும்பு ரயிலில் சோவியத் யூனியனின் மூலை முடுக்கெல்லாம் சென்றார் அவர். அந்த ரெயிலில் அவர் எடுத்துச் சென்றது துண்டு பிரசுரம் அடிக்கும் இயந்திரங்களையே. அழிவுகள் இன்றி தொழிலாளர் ஆட்சியை நிறுவுவதும் – யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தம் தம் நாட்டில் புரட்சியை நடத்த முன்வர வைப்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. உங்களுக்குமானதுதான் புரட்சி – உங்கள் அரசுகளின் லாபத்துக்காக எங்களோடு அடிபடாதீர்கள் என்பது அவர்களின் கோசமாக இருந்தது. இந்த திட்டமிடலால்தான் சோவியத் தப்பியது. இராணுவ பலத்தால் அல்ல. அக்காலத்தில் ட்ரொட்ஸ்கி எழுதியவைகள் இன்றும் பல இராணுவ அதிகாரிகளுக்கு பாடத்திட்டமாக வைக்கப்படுள்ளது. அமெரிக்காவில் இரகசிய இராணுவ பயிற்சிக்கு சென்ற பாகிஸ்தான் இராணுவ தளபதிக்கு திட்டமிடல் சார்ந்து ட்ரொட்ஸ்கியை படிக்கும்படி அவர்கள் பணித்ததை அவர் பதிவு செய்துள்ளார்.

மார்க்சியர் என தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் பலர் இன்றும் தடுமாறி நிற்கின்றனர். ‘எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக யுத்தத்தை நிறுத்து’ என்ற கோரிக்கையை ஏன் முன்வைக்க முடியாது? ரஷ்யா தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி இரானுவத்தைப் பின்வாங்க வேண்டும். உக்ரேன் மேற்கு அரசுகள் தமது தாக்குதல்ககளை உடனடியாக நிறுத்த வேண்டும். படைகளை பின்வாங்க வேண்டும். இதைச் சொல்வதில் என்ன பிரச்சினை?

மேற்கு செய்வது அநியாயம். நேட்டோவை கொண்டுப்போய் ரஷ்ய எல்லையில் நிறுத்தினால் தனது பாதுகாப்புக்காக ரஷ்யா தாக்குதல் செய்ய உரிமை இருக்குத்தானே எனச் சிலர் கேட்கின்றனர். ரஷ்யாவின் பாதுகாப்பு என இவர்கள் பேசுவது – அல்லது ‘ரஷ்யா’ என இவர்கள் குறிப்பிடுவது ரஷ்ய அரசையே என்பதைக் கவனிக்க. ரஸ்ய மக்களை அல்ல. எந்த ஒரு அரசுக்கும் எந்த மக்களையும் குண்டு போட்டு கொலை செய்யும் உரிமை கிடையாது. எந்த ‘நிபந்தனைகளை’ வைத்தும் யுத்த முன்னெடுப்பை நியாயப்படுத்த முடியாது. சில யுத்தங்களில் ஒரு பக்கம் தாமாக யுத்தத்தை நிறுத்தினால் அவர்கள் படுகொலை செய்யப்படும் அபாயம் இருக்கலாம். இந்த சமயத்திலும்கூட மக்கள்தான் தமது பாதுகாப்பு கமிட்டிகளை அமைத்துப் போராட முன்வர வேண்டும். அத்தகைய தருனங்களில்கூட ‘அரசு’ மக்களை கைவிட்டு விடுகிறது. இரண்டாம் உலக யுத்தம் தொடங்கும் காலப்பகுதியில் ஸ்பெயினில் மாட்ரிட் நகரை பிணக்குவியலில் மிதக்கவைக்கும் நோக்கோடு சூழ்ந்த பாசிச்ஸ்டுகளை எதிர்க்க எந்த அரசு முன்வந்தது? ‘எம்மைத் தாண்டிதான் அவர்கள் செல்ல வேண்டும்’ – ‘எமது பிணங்களில் நின்றுதான் பாசிசம்  வெல்லும் ‘ என கம்யுனிஸ்டுகள் –சோசலிஸ்டுகள் – தொழிற்சங்கவாதிகள் – இடதுசாரிகள் தடுத்து நின்றனர். ‘அவர்கள் கடந்து செல்ல விடோம்’ எனக் கூறி தெருவில் ‘கவசமாக’ தம்மை நிறுத்திய இந்த போராளிகள் கொத்து கொத்தாக கொல்லப்படும் பொழுது ‘அரசுகள்’ என்ன செய்தன? யுத்த நிறுத்தமும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மக்கள்தான் முன்னெடுக்க வேண்டி இருக்கிறது.

 

உக்ரேனிலும் இதுதான் நிலைமை. ஆனால் உக்ரேனிய அரசு ‘பாசிச அரசு’ எனவும் ரஷ்ய யுத்தம் நாசிகளுக்கு எதிரான யுத்தம் எனவும் இந்த யுத்தத்தை நியாயப்படுத்தும் வாதம் மிகப்பெரும் தவறு. உக்ரேனிய அரசுக்குள் பாசிசச சக்திகள் இருக்கின்றன. உக்ரேனிய இராணுவத்துக்குள் ஆயுதம் தாங்கிய பாசிச பிரிவு இயங்கி வருகிறது. உக்ரேனிய சமூகத்தில் ‘பாசிச சக்திகளுக்கு’ குறிப்பிட்ட ஆதரவு இருக்கிறது. இவை பற்றிய அக்கறை மேற்கு அரசுகளுக்கு இல்லை – மேற்கு ஊடகங்கள் இது பற்றிப் பேசுவதில்லை. ஆனால் பூட்டின் சொல்வது போல் நடப்பது பாசிசத்துக்கு எதிரான ‘விசேட நடவடிக்கை’ அல்ல. மாறாக மக்களை கொல்லும் கொடிய யுத்தத்தையே ரஷ்யா முன்னெடுத்துள்ளது.

ஒட்டுமொத்த உக்ரேனிய அரசும் பாசிஸ்ட் இல்லை – ஒட்டுமொத்த உக்ரேனிய சமூகமும் அவ்வாறு இல்லை. பெரும்பான்மை மக்கள் மத்தியில் பாசிச சக்திகளுக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது. அங்கிருக்கும் சிறுபான்மை பாசிச சக்திகள் வளர்ச்சி அடைய ரஷ்ய அடக்குமுறையும் காரணமாக இருந்து வந்திருக்கிறது.

இந்த சக்திகள் எதிர்க்கப்பட வேண்டியவையே. இந்த யுத்தம் அதைச் செய்யவில்லை. ரஷ்யாவுக்குள்ளும் பாசிச சக்திகள் உண்டு. பூட்டினின் அராஜக சனநாயக மறுப்பு நடவடிக்கை பலவற்றுக்கு ரஷ்யாவுக்குள் அவர்கள் ஆதரவு உண்டு. அவர்களை நொருக்குவதை விட – இடதுசாரிகள் மற்றும் சனநாயகவாதிகளை முடக்குவதையே முதன்மையாக செய்து வருகிறது ரக்ஷ்ய அரசு. உக்ரேனில் இருப்பதை விட அதிக பலமான பாசிச பிடி அவுஸ்திரியாவில் உண்டு. கிரேக்கத்து கோல்டன் டவுன் மிக முக்கிய சக்தியாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஜெர்மனியில் இயங்கும் பாசிச சக்திகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இவற்றுக்கு எதிராக அந்த நாடுகளில் பூட்டின் குண்டு போட வேண்டும் எனக் கோரிக்கை வைக்க முடியுமா? மோடியை பாசிஸ்ட் என வர்ணிப்பவர்கள் பூட்டின் டெல்லியில் குண்டு போட வேண்டும் எனக் கோருகிறார்களா? பூட்டினின் வெற்றுப் பிரச்சாரத்தை தலையில் தாங்கி தமது நிலைப்பாட்டை ஒரு போராட்ட சக்தி எடுக்க முயல்வது மாபெரும் தவறு. உண்மையில் பூட்டின் சொன்னார் என்பதற்கு மாறாக – தாது தமது ‘பெரும் தேசிய’ நிலைப்பாட்டை மறைத்து இயங்க சில அமைப்புக்கள் இந்தப் பிரச்சாரத்தை பாவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தியக் கம்யுனிச கட்சிகள் இந்திய தேசியத்தை தாண்டி நகராதவை. எதிர்பார்த்தது போலவே அவர்கள் மோசமான நிலைபாட்டை எடுத்துள்ளனர்.

 

உக்ரேனில் ‘அமைதி’ உருவாகுவது ‘முதன்மை’ என்கிறது இந்திய கம்யுனிசக் கட்சி. ரஷ்ய படையெடுப்பு ‘துரதிருஷ்டவசமானது’ என சொல்கிறது இக்கட்சி. இவர்கள் சொல்லும் பரிந்துரை என்ன? ‘பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள். ரஷ்யா கோருவதுபடி நேட்டோ நீட்சியை நிறுத்துங்கள். இந்திய அரசு உக்ரேனில் இருக்கும் இந்தியர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்’. இதைச் சொல்வதற்கு மார்ச்சின் பெயரில் ஒரு கட்சி தேவையா?  ‘பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உடன்படிக்கைக்கு வாருங்கள்’ என்பதைத்தான் மாவோயிச கட்சியும் முன்வைக்கிறது. யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்பதைச் சொல்ல – ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக அழுத்திச் சொல்ல இவர்கள் தயாராக இல்லை. உக்ரேனிய எல்லைக்குள் ரஷ்ய படைகள் இருக்கக் கூடாது எனச் சொல்லும் எம்.எல் கட்சி எந்த எல்லைகள் பற்றி பேசுகிறது? கிரிமியாவையும் இணைத்தே எல்லைகளை வரையறுக்கிறது உக்ரேன். டான்பாஸ் பகுதிகளை இணைத்தே உக்ரேன் என்கிறது மேற்கு. இவர்கள் எதைச் சொல்கிறார்கள்?

இருப்பினும் எம்.எல் கட்சி முன்வைக்கும் நிலைப்பாட்டை விட மோசமான நிலைப்பாடு சி,பி.எம் மின் நிலைபாடு என்பதை சுட்டுவது அவசியம். ‘இந்தியத் தேசிய’ நிலைபாடு தாண்டி சி.பி.எம் நகர்ந்ததில்லை என்பதை மீண்டும் மீண்டும் நாம் சுட்டிக் காட்டவேண்டி இருக்கிறது. இலங்கையில் கோர யுத்தம் நிகழந்த பொழுதுகூட மிக மோமான நிலைப்பாட்டையே அவர்கள் முன்னெடுத்தார்கள். இலங்கையில் இடதுசாரியக் கட்சியாகப் பாவனை செய்யும் கட்சிக்கும் இந்த நிலைப்பாடே. உக்ரேன் நெருக்கடி பற்றி இந்த கட்சிகள் வெளியிட்ட அறிக்கைக்கும் இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கைக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை அவதானிக்க வேண்டும். சொற்கள் பாவனை கூட ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கலாம். இலங்கை ஜே வி பி ஒரு இனவாத – தேசியவாத குறுங்குழுவாத கட்சி என்பதை வரலாறு தொடந்து நிருபித்து வருகிறது. முன்பு உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை தாக்கிப் பேசிய இந்தக் கட்சி ராஜபக்ச அரசு முன்னெடுக்ககூடிய நிலைபாட்டை தாண்டி செல்லத் தயாராக இல்லை.

இலங்கை யுத்த களத்தில் மௌனமாக இருந்த போதும் -பின்பு ஜே.வி.பி உடன் உடைத்துக் கொண்டு வெளியேறிய முன்னணி சோஷலிச கட்சியினர் முன்வைக்கும் நிலைப்பாடு ஓரளவாவது ஏற்றுக்கொள்ள கூடியதே. இருப்பினும் அவர்கள்கூட உக்ரேனிய தேசிய இனங்கள் பற்றிய விசயத்தில் கைவைக்க விரும்பவில்லை. இந்த யுத்தத்துக்கு காரணம் ரஷ்யா மட்டுமே எனச் சொல்ல முடியாது என்கிறது இக்கட்சி. யுத்தத்துக்கு காரணமான நிலவரங்கள் பற்றியதல்ல இக்கூற்று. ‘ரஷ்யா யுத்தத்தை நிறுத்து’ என்ற தனித்த கோசம் வைப்பது அரூபக் கோரிக்கை என்பதே இவர்கள் கருத்து. நேட்டோவின் நெருக்கடி காரணத்தால்தான் ரஷ்யா படை எடுத்தது என்ற அடிப்படையில் இது வாதிக்கப்படுகிறது. இது மறைமுகமாக பூட்டின் யுத்த நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது. நேட்டோவை எதிர்ப்பது என்பதற்காக – ரஷ்யாவுக்கு யுத்தம் செய்யும் உரிமை  -மக்கள் மேல் குண்டுபோடும் உரிமை இருக்கிறது என வாதிக்க முடியாது. நேட்டோவை அவ்வாறு எதிர்க்க முடியாது. பல்வேறு நேட்டோ நாடுகளில் அந்த அமைப்புக்கு ஆதரவு மங்கி வந்துள்ளது. இந்த யுத்தம்தான் அதைப் பலப்படுத்த மீண்டும் மேற்கு நாடுகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய மக்கள ஐரோப்பிய ஒன்றியத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது சனநாயக கோரிக்கைகள் சார்ந்த விசயமாகவும் இருக்கிறது. எந்த நிபந்தனையும் அற்று பூட்டின் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் எனச் சொல்வதில் ஏன் இவர்களுக்கு இத்தனை தயக்கம்?

இதற்காகத்தானா உக்ரேனிய அரசு நாசி அரசு என்ற வாதம் இவர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த இயக்கங்களில் புரையோடிக் கிடக்கும் ‘பெரும்தேசிய’ நிலைப்பாடுதான் இதன் பின்னணி. இலங்கை அரசும் ஈடுபடும் ஒரு யுத்தம் எழுந்தால் இவர்கள் அரசின் பக்கம் திரளத் தயங்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் இயங்குவதன் தர்க்க முடிவு அதுதான் தோழர்கள். இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தில் இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை லங்கா சம சமாஜ கட்சி. ஏகாதிபத்திய யுத்தத்தின் இன்னொரு கருவியாக நாம் இருக்கப்போவதில்லை என அறிவித்த அவர்கள் யுத்தத்தை மறுத்து வாக்களித்தனர்- கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். காந்திப்போல் – இந்திய கம்யுனிஸ்டுகள் போல் காங்கிரசில் கரைந்து பிரித்தானிய அரச நலனுக்காக சாவதை அவர்கள் மறுத்தனர். அதே சமயம் சுபாஸ் சந்திரபோஸ் போல ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்ற அடிப்படையில் பாசிசத்தோடு கை கோர்த்துக்கொள்ளவில்லை. கம்யுனிஸ்டுகள் முன்னெடுத்த ‘பொதுசன முன்னணிக்கு’ மாறாக ‘ஐக்கிய முன்னினி’ நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்தனர். பாசிசத்துக்கு எதிரான பொது முன்னணி என்ற பெயரில் முதாளித்துவ அரச ஆதரவு நிலைக்கு நகர்ந்து தமது சுயாதீன பலத்தை இடதுசாரிகள் உடைத்து சிதறிய காலத்தில் ல.ச,ச கட்சி தனது பலத்தை தற்காத்துக் கொண்டது. பாசிசத்தை எதிர்த்த போராடச் சக்திகள் – மற்றும் தொழிலாளர்கள் ஒன்றுபடும் ஐக்கிய முன்னணி பற்றி பேசிய கட்சிகள் தமது கட்சிப்பலத்தை முதலாளித்துவ சக்திகளிடம் சரனாகதியாக்கவில்லை. இது வெறும் கோசம் சார்ந்த விசயமில்லை. யுத்தத்தின் பின்பு ல.ச.ச.கட்சி பலமாக நின்றது. இலங்கைத் தொழிலாளர் பல்வேறு உரிமைகளை வென்றெடுக்க இது உதவியது. பின்தங்கிய எந்த நாட்டிலுமே இல்லாதவகையில் இலங்கையில் இலவச சுகாதார /கல்விச் சேவைகள் உறுதி செய்யப்பட்டன. இதற்கு எதிர்நிலையான சுரண்டலை எதிர்கொண்டது இந்திய தொழிலாளர் வர்க்கம். இந்த வரலாற்றுக்கு இந்திய கம்யுனிஸ்டுகளும் பொறுப்பே. ல.ச.ச.கட்சியின் சரிவின் பின் மீண்டும் பழைய நடைமுறையே இன்று இலங்கை இடதுசாரிகள் மத்தியில் முதன்மையாகி வருகிறது. முன்னிலை சோஷலிச கட்சி தோழர்கள் இந்த நிலையை மாற்ற முன்வர வேண்டும். அவர்கள் சேர்ந்து இயங்கும் சில உதிரி ஸ்டாலினிஸ்டுகள் எந்த விளக்கமும் இல்லாத அலட்டல்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஸ்டாலினிஸ்டுகள் – கம்யுனிஸ்டுகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் தனி நபர்களும் – சிறு அமைப்புக்களும் உண்மையில் எந்த ஒரு நிலைப்பாடும் சரியாக எடுப்பதில்லை. உலக நிலவரங்களோ அல்லது தாம் வாழும் நாடுகளில் இருக்கும் நிலவரங்களோ கூட அவர்களுக்கு சரியாகத் தெரிவதில்லை. எல்லாவற்றையும்  ‘இரகசியச் சதி’- ‘முதலாளித்துவ சதி’ எனக் குறுக்குவது அவர்தம் வழமை. ‘யுக்ரேன் யுத்தத்தில் வென்றால் இனவெறி பாசிசமே ஆட்சியைத் தீர்மானிக்கும்’ என இவர்கள் பயம்காட்டி ‘பெரும் ரக்ஷ்ய தேசிய ஆதரவாளர்களாக குறுகி நிற்கிறார்கள். ரஷ்யாவில் ‘கயுனிசம் முடிந்து கனகலாமாகி விட்டது’ என்ற செய்தி இவர்களுக்கு இன்னும் எட்டவில்லை.

இதற்கு எதிர்மாறாக பூட்டினை விட மோசமான நாசியைக் காட்ட முடியாது என்கிறார் இந்திய மார்க்சிய-லெனினிச கட்சியின் முக்கிய தலைமை உறுப்பினரான கவிதா கிருஷ்ணன். (இதற்கு முன் இவர்களுக்கு மோடிதான் அதிகூடிய நாசி). ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்க மறுக்கும் இந்திய கம்யுனிஸ்டுகளை சமீபத்தில் சாடி இருந்தார் இவர். இருப்பினும் அவர் வைக்கும் வாதம் மாவோசிய குளறுபடி புரிதலை வெளிக்காட்டும் ஒன்றாக இருக்கிறது.  ஈராக் யுத்தத்துக்கு எதிராக ஈராக்குக்கு ஆதரவு கொடுத்தோம், அதே போல் ஏன் இடதுசாரிகள் உக்ரேனை ஆதரிக்க கூடாது என அவர் கேட்கிறார். இது ஒரு கொடுமையான கேள்வி. ஈராக் அரசுக்கு ஆதரவு கொடுத்தது யார் என தெரியவில்லை. ஏகாதிபத்திய அரச தாக்குதலை எதிர்க்க உள்நாட்டு அரசுக்கு ஆதரவு என்ற குறுகிய பார்வை தர்க்கம் இது. கவிதா கிருஷ்ணன் அடையாள அரசியலை பாவித்து இடது சாரிகளைத் தாக்குபவர் – மாவோயிஸ்ட் இல்லை –என அவரைத் தாக்கும் சில மாவோயிஸ்டுகள் உங்கள் நிலைப்பாட்டு சரியா என்ற கேள்வியையும் கேளுங்கள். ஒரு பக்கம் ‘பாசிஸ்ட்’ நாசி’ என கண்ட பாட்டுக்கு குற்றச் சாட்டுகள் – மறு பக்கம் சொல்லப்படும் தீர்வு – வெறும் ‘பேச்சுவார்த்தை’. என்னே கரிசனை.

இந்த சொற்களை இவர்கள் சரியான அர்த்தத்தில் பாவிப்பதில்லை. ‘திட்டும்’ ஒருவகை வசைச்சொல்லாக மட்டுமே பாசிஸ்ட் என்பதை பாவித்து வருகின்றனர்.

மோடி ‘பாசிஸ்ட்’ – ஆனால் மோடிதான் உக்ரேனில் இருக்கும் மாணவர்களை பாசிஸ்டுகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்! இவர்தம் முன்னுக்குப்பின் முரணான நிலைபாடுகளுக்கு எல்லையே கிடையாது. உதாரனங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

தூர நோக்குள்ள –தெளிவான பார்வை உள்ள தலைமைகள் இந்தியாவில் உருவாக வேண்டும். காங்கிரசின் வாலாக இயங்கும் முறைமை மாறவேண்டும். அப்படியாயின் உலகப் பார்வை உள்ள நிலைப்பாடு நோக்கி நகரவேண்டும். உலகம் எங்கும் இடதுசாரிகள் பூட்டின் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருகிறார்கள் என தனக்குத் தானே கற்பனை செய்து கொண்ட கவிதா கிருஷ்ணன் ‘உலக இடதுசாரிகளை’ தாகுகிறார். இவர் சொல்லும் இந்த உலக இடதுசாரிகள் யார்? யாராவது கேட்டுச் சொல்லுங்கள். நேட்டோவும் அமெரிக்காவும் தூண்டியதால்தான் ரஷ்யா தாக்கியது – இல்லை என்றால் இந்த யுத்தம் நடந்திருக்காது என்ற பாவனையில் பேசும் அமெரிக்க சனநாயக சோசலிஸ்டுகள் – ‘இடதுசாரி ஊடகம் என படம் காட்டும் ஜாக்கோபின் ஊடகம் – ஆகியவற்றைத் தாக்கித்தான் கவிதா கிருஷ்ணன் பேசுகிறார் என ஊகிக்க வேண்டி இருக்கிறது. அப்படியாயின் அமெரிக்க சோசலிஸ்டுகள் எனத் தெளிவாக எழுதுங்கள். அமெரிக்கா உலகமல்ல.  உலகெங்கும் உள்ள பழைய கம்யுனிசக் கட்சிகள் இந்திய கம்யுனிச கட்சிகளைவிட சிறந்த நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். கிரேக்க கம்யுனிச கட்சியும் ‘என்ன செய்வது’ ‘எத்தகைய சுலோகனை முன்னெடுப்பது’ எனபதில் முழுக் குழப்பமான நிலையில் இருந்த பொழுதும் இந்திய இலங்கை ‘கம்யுனிச’ தலைமைகளை விட பல மடங்கு மேலான நிலைப்பாட்டையே முன்னெடுத்திருப்பதைப் பார்க்க முடியும். உலகின் எந்த இடது சாரிய அமைப்பும் (உதிரிகள் தவிர) முழுமையான ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு எடுக்கவில்லை. ஆக அவர் பேசும் ‘உலக இடதுசாரிகள்’ யார் என்று தெரியவில்லை.

கோவிட்டும் – உக்ரேனிய யுத்தமும் வெளிக்கொண்டுவந்திருக்கும் இன்னொரு உண்மை –தொழிலாளர்களுக்கு சரியான சர்வதேச நிலைப்பாடு அவசியம் என்பது. இலங்கை முன்னிலை சோஷலிசக் கட்சி கூட சர்வதேச மக்கள் இயக்கம் தேவை என்கிறது. இதற்கு இலங்கை மக்கள் தலைமை தாங்க வேண்டும் என்று கூறிவிட்டு அவர்கள் ஒதுங்கிக்கொள்கிறார்கள்!! அதற்கான நடவடிக்கைகள் என்ன. உலக தொழிலாளர் வர்க்கம் ஓன்றுபட வைக்கும் நிலைப்பாடு என்ன? இது பற்றி இடதுசாரிகள் இனியாவது சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

இடதுசாரிகள் மத்தியிலேயே இந்த நிலை என்றால் குட்டி முதலாளித்துவ மனநிலை –இடைநிலை- குழுக்களின் கதை பேச பிரயோசனம் இல்லாத ஓன்று. தனிமனித அவலங்கள் – என குறுகிய பார்வையை –அறமுறை (மதம் உட்பட்ட) அடிப்படையை –தாண்டி அவர்கள் நகரவில்லை. தம்மைப் பொதுவாக இடது பக்கம் நிறுத்த முனையும் பல அமைப்புக்கள் – பழைய சமூக சனநாயக கட்சிகள் என்பனவும் இதில் அடக்கம். ஈராக் யுத்த காலத்தில் யுத்த எதிர்ப்பு இயக்கம் ஓன்று பிரித்தானியாவில் கட்டப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய தலைமைகள் இலங்கை யுத்தத்தை கண்டிக்க முன்வரவில்லை. இதை நாம் அச்சமயம் கடுமையாக எதிர்க்க வேண்டி இருந்தது. தற்போதைய நெருக்கடியின் போதும் இந்த ‘யுத்த மறுப்பு’ தலைமைகள் மோசமான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். ‘பேசித் தீர்த்தல்’ என்ற தீர்வுக்கு வெளியில் சிந்திக்க முடியாத நிலையிலேயே இவர்களும் பலவேறு அமைப்புக்களும் நிற்கின்றன. பிரித்தானிய அரசு ‘அமைதி’ காக்க உதவவேண்டும் – மின்ஸ்க் 2 உடன்படிக்கை அடிப்படையில் பேசித்தீர்க்க வேண்டும் என்ற மிதவாத நிலைபாட்டையே இவர்கள் முன்வைத்துள்ளனர். இது தவிர நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்க நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் இவ்வறிக்கை கோருகிறது. இந்த போதாத – அரைகுறை நிலைப்பாட்டுக்கு கூட ஆதரவு கொடுக்க முடியாத ‘பிரித்தானிய தேசிய’ நிலைப்பாட்டின் சிறைக்குள் சிக்கி கிடக்கிறார்கள் தொழிலாளர் கட்சி (லேபர் கட்சி) ‘இடதுசாரிகள்.

ஜெரமி கோர்பின், ஜோன் மக்டோனால்ட், முதற்கொண்டு 12 பாராளு மன்ற உறுப்பினர்கள் மட்டும் இதில் கையெழுத்திட உடன்பட்டனர். வேறு யாருக்கும் ‘முதுகெலும்பு’ இருக்கவில்லை. இருப்பினும் இதில் கையெழுத்திட்டவர்கள் பெரும் நெருக்கடிக்க்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவர் என லேபர் கட்சி தலைவர் அறிவித்தததைத் தொடர்ந்து இவர்கள் முதுகெலும்புகளும் சட சட என வளையத் தொடங்கி விட்டன. ஜெரமி கோர்பின், கிலோவ்டியா வெப் என்ற இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர மிகுதி அனைவரும் இந்த அறிக்கையில் கையெளுத்திடுவதில் இருந்து பின்வாங்கிக் கொண்டனர். இந்த கேவலமான சரணாகதியை ஜோன் மக்டோனல்டும் செய்து இருப்பது பலருக்கு கடுமையான வெறுப்பை உருவாக்கி இருக்கிறது. இதை தாரிக் அலி கடுமையாக தாக்கிப் பேசி இருப்பது சரியே. நாளைக்கு பூட்டின் இங்கிலாந்து பாராளுமற்ற ‘நண்பராக’ மாறினால் அதன் பின் செல்ல தயங்க மாட்டார் லேபர் கட்சி தலைவர் ஸ்டாமர் என அவர் சுட்டிக் காட்டுவதும் சரியே. இருப்பினும் இவரும் – இவர் போன்ற மேலோட்ட இடதுசாரிகளும் நேட்டோவை எதிர்ப்பது மட்டுமே தமது கடமை என தமது நோக்கை சுருக்கி கொண்டுள்ளனர். இந்த அடிப்படையில் உலக வர்க்க ஒற்றுமையை கட்ட முடியாது.

‘யுத்தம் வேண்டாம். வர்க்க யுத்தமே வேண்டும்’ என்ற கோரிக்கையை வைக்கும் அமெரிக்க சனநாயக சோஷலிச அமைப்பினர் யுத்த மறுப்பை முளுமையாகச் செய்ய மறுத்த நிலப்பாட்டைத்தான் எடுத்துள்ளனர். யுத்தத்தை நிறுத்தும்படி ரஷ்யா நோக்கி பேச இவர்கள் தாயாராக இல்லை. அமெரிக்க அரசை எதிர்க்கிறோம் என்ற பாவனையில் ரஷ்ய பெரும்தேசியத்துக்குள் விழும் அபாயகரனமான நிலைபாட்டையே இவர்கள் முன்வைத்துள்ளனர். ரஷ்யாவுக்குள் இருக்கும் பல சோசலிஸ்டுகள் யுத்தத்தையும் – உக்ரேனிய ஆக்கிரமிப்பையும் கடுமையாக எதிர்த்து வருவதை இவர்கள் அறிவர். இருப்பினும் அந்த நிலைபாட்டை தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டோடு இணைக்க இவர்கள் தயாராக இல்லை.

மூன்றாம் உலக யுத்தம் இது என்ற பயக்காட்டலும் பொதுவாக முன்வைக்கப் படுகிறது. யுத்த முனைப்பு பரவும்தன்மை கொண்டது என்பது உண்மையே. இருப்பினும் இது மூன்றாம் உலக யுத்தம் என்று கூறி பயக்கெடுதி உருவாக்குவது தொழிலாளர்களை அந்த அந்த அரசுகள் நோக்கித் தள்ளும் வேலையையே செய்கிறது. அத்தகைய யுத்தம் வெடிக்கும் சாத்தியம் இல்லை என்பதல்ல புள்ளி- தற்போதைய உலக நிலவரம் அத்தகைய சாத்தியத்தை முன்வைத்திருப்பது உண்மையே. ஆனால் மூன்றாம் உலக யுத்த முனையில் இல்லை நாம். அந்த முறையில் திட்டமிடலை முன்னெடுக்கும் நிலையில் இல்லை நாம். சீரியசான ஒரு அமைப்பு – போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் அமைப்பு சமகால நிலைமையைச் சரியாக கணிக்க வேண்டியது கட்டயாம். மூன்றாம் உலக யுத்தம் வரப் போகிறது என இவர்கள் உண்மையில் கருதினால் எடுக்க வேண்டிய நடைமுறை வேறு விதமானது. அமெரிக்கா தனது துருப்புகளை போர்க்களத்தில் இறக்க மறுப்பதுடன் மூன்றாம் உலக யுத்தம் நின்றுவிடப் போவதில்லை. விமான பறப்புத்தடை நடப்பதை ஏற்க மறுத்த பைடனைப் பாராட்டி எழுதுகிறார் அமெரிக்க சோசலிஸ்ட் பேன் பேரக்ஸ். இது மட்டும் உலக யுத்தத்தை நிறுத்தி விடுமா என்ன? முதலாளித்துவம் எதிர்கொண்ட எல்லா பெரு நெருக்கடிகளும் பெரும் யுத்தங்கள் மூலமே எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது. அம்முறையில் மதிப்பு (value) அழிக்கப்படுவதுதான் முதலாளித்துவ அடுத்த சுழற்ச்சி வளர்ச்சிக்கு உதவி வந்திருக்கிறது. அத்தகைய யுத்தத்தை நோக்கி முதலாளித்துவம் செல்லுமாயின் வரப்போகும் அழிவு என்பது பழைய யுத்தங்களில் ஏற்பட்டதை விட அதிகமாக இருக்கும். மார்க்ஸ் குறிப்பிட்டத்தைப் போல மனித குலத்தையே அழிக்கும் வல்லமை உள்ளது முதலாளித்துவம். அப்படி ஒரு நிலை வருமாயின் தமது தேசியி அரசுகள் யுத்தத்தில் பங்கு பற்றக் கூடாது என்ற குறுகிய ஒற்றை பார்வையை மட்டும் முன்வைக்க முடியாது. ஒன்றுபட்ட சர்வதேச தொழிலாளர் இயக்ககம் வலுப்படுவது அங்கு முதன்மை படுகிறது. இதன் பண்புகள் என்ன? அத்தகைய இயக்கத்தின் சர்வதேச பார்வை எப்படி இருக்க வேண்டும் என்ற எந்த தெளிவும் அற்ற முறையில்தான் போலினா கோட்ஸ், பிராங்கோ மர்செட்டி சைமன் பிராணி, முதற்கொண்டு பலர் எழுதி வருகின்றனர்.

பொதுவாக எல்லா ‘எதிர்ப்பு சக்திகளும்’ முன்வைக்கும் எதிர்ப்பு மிக குறைபாடு கொண்டதகாவே இருக்கிறது. இரண்டு விசயத்தில் அனைவரும் கவிழ்ந்து விழுந்து விடுகிறார்கள். ஓன்று – யுத்தத்தை நிறுத்துவது எவ்வாறு? யுத்தசமயத்தில் போராட்ட சக்திகள் முன்னெடுக்கவேண்டிய கோரிக்கை என்ன?. இரண்டு – ஒடுக்கப்படும் தேசியம்சார் கோரிக்கையை எவ்வாறு அணுகுவது?

முதலாவது கேள்விக்கு அனைவரும் ஒத்த குரலில் சொல்வது ஒரே ஒரு வசனம்தான் “diplomatic solution”. இதை ‘இராஜதந்திர வழிமுறை’ என தமிழில் சொல்வது பொருத்தமில்லை. ‘பேசித் தீருங்கள்’ என்ற அர்த்தத்திலேயே இது பாவிக்கப்படுகிறது. ரஷ்யாவை பொறுத்தவரை நடந்துகொண்டிருக்கும் யுத்தம் ஒருவகை பேச்சுவார்த்தைதான். யுத்தம் எவ்வாறு ஆரம்பிக்கிறது என்ற தெளிவு இல்லை என்பது ஒருபுறமிருக்க இதைத் தவிர வேறு தீர்வு இல்லை என நினைப்பதும் – தீர்வை மோதும் அரசுகளின் கைகளிலேயே மீண்டும் திணிக்க முயல்வதும் அயோக்கியத்தனம்.

‘நிறுத்து போரை’ ‘நிறுத்து படுகொலைகளை’ என்ற கோரிக்கைகளை நாம் இந்த அரசுகள் நோக்கி வைக்க முடியும். தீர்வையும் அவர்களிடம் இருந்து கோருவது மடத்தனம்.

மக்கள் திரட்சி யுத்தத்தை நிறுத்த முடியும். வியட்னாம் யுத்தம் அமெரிக்க தோல்வியாக மாறியதற்கு மக்கள் திரட்சி காரணமாக இருந்ததை அமெரிக்க சோசலிஸ்டுகள் நன்கறிவர். ஆனால் வெற்றுத் திரட்சி மட்டும் போதாது. ‘இரானுவமயமாக்கலுக்கு எதிர்’ என்ற ஒற்றை புள்ளியில் மட்டும் திரளுங்கள் என உலக தொழிலாளர் நோக்கி கோரிக்கை விட முடியாது. யுத்தம் மக்களை உடைக்கும் ஓன்று. தம் தம் அரசின் இராணுவ பலம் வலுப்பட வேண்டும் என அந்த அந்த நாட்டு மக்கள் அந்தரப்படும் ஒரு நிலையை யுத்தம் உருவாக்குகிறது. ஜெர்மானிய அரசு தன்னை ஆயுத மயப்படுத்தும் நடவடிக்கையை இந்த தருணத்தில் இலகுவாகச் செய்யக்கூடியதாக இருப்பதும் இதனால்தான். தேசிய அடிப்படையில் பிளவுபடும் இந்த மக்களை ஒன்றுபடுத்துவது எவ்வாறு? இரஷ்ய மக்களும் உக்ரேனிய மக்களும் ஒன்றுகூடி போராட வரவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவேண்டும்தான். ஆனால் அந்த ஒற்றுமை எவ்வாறு உருவாகும். அடிவாங்கி செத்துக் கொண்டிருக்கும் உக்ரேனிய தொழிலாளர் ரஷ்யர்களை நோக்கி ஒற்றுமைக்காக ஓடுவது எவ்வாறு சாத்தியம்?

தேசிய உரிமை உட்பட அந்த அந்த மக்களின் அனைத்து சனநாயக உரிமைகளையும் உள்வாங்காமல் உலக இயக்கம் எனப் பேசுவதில் அர்த்தம் இல்லை. ரக்ஷ்ய அரசின் குண்டுத்தாக்குதலை நிறுத்து என்ற உரத்த குரலை வைக்காமல் உக்ரேனிய தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கோருவதில் நியாயமில்லை. உக்ரேனியர்களுக்கு அனைத்து சனநாயக உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என ஒரு முதலாளித்துவ சக்தி சொல்கிறது என்பதற்காக சனநாயகத்துக்கு எதிராக நாம் எம்மை நிறுத்த முடியாது. முதலாளித்துவ சனநாயகத்தையும் தாண்டிய உரிமைகளை பற்றி பேசுபவர்கள்நாம் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துப் பேச வேண்டிய நாம் எதிர்த்து நிற்க முடியாது. யுத்தவெறி அரசுகளுக்கு எதிரான ஆதரவை திரட்ட வேண்டும். அது எந்த ஒரு சனநாயக உரிமைகளையும் முடக்கிய நிலையில் நிறைவேற முடியாது. மக்கள் இயக்கங்கள் மக்தியில் இதற்கான உரையாடலும் விவாதங்களும் வலுப்பட வேண்டும். இந்த அடிப்படையில் சரியான சர்வதேச நிலைப்பாடு உள்ள ஒரு தளத்தில் திரட்சி உருவாக்கப்படவேண்டும். அத்தகைய தளம் – காஸ்மீருக்கு ஒரு நிலைப்பாடு – உக்ரேனுக்கு ஒரு நிலைப்பாடு – கிரிமியாவுக்கு ஒரு நிலைபாடு என முன்னுக்கு பின் முரணான டிப்லோமடிக் இயக்கமாக இருக்க முடியாது. அவரவருக்கு என்ன நிலைப்பாடும் இருக்கலாம் – ஆனால் நாம் எல்லாம் யுத்த எதிர்ப்பு- என்ற மேலோட்டமான அடிப்படையிலும் இது கட்டப்பட முடியாது. அத்தகைய ஆரம்பம் தொடங்க முதலே தேசிய அலைகளால் உடைக்கப்பட்டுவிடும்.

அரசுகளைவிட மக்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்ற நிலைப்பாடை யுத்தநிலை மாற்றிப் போட்டு விடுகிறது என்பதை இன்று நாம் உக்ரேனில் கண்கூடாக பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இருப்பினும் சமூக தளங்கள் அனைத்தையும் தமது கையில் வைத்திருக்கும் அதிகார சக்திகள் தேசிய ஒற்றுமை பிரச்சாரம் மூலம் மக்களை தம் வசம் வைத்திருக்க முயல்வர். இதை உடைக்க நாம் வேலை செய்யவேண்டும். தொழிலாளர்களின் சுயாதீன இயக்கத்தை வலியுறுத்துவது இதற்கு மிக முக்கியம்.  அரச ஆட்சியின் ஒரு பகுதியாக நின்று கொண்டு – அல்லது வலதுசார் கட்சிகளின் வாலாக நின்றுகொண்டு மற்றத் தொழிலாளர்களுக்கு ‘என்ன செய்ய வேண்டும்’ என்ற பாடம் எடுக்க முடியாது. அமெரிக்க சனநாயக சோசலிஸ்டுகள் அங்குள்ள டேமொக்ராட் கட்சி தாண்டி தனித்துவ அமைப்பு சார்ந்து இன்னும் சிந்திக்க முடியவில்லை. இங்கிலாந்து சோசலிசட் ஜோன் மக்டோனல்ட் போன்றவர்கள் லேபர் கட்சிக்குள்தான் சாகும்வரை இருப்போம் என்ற விடாப் பிடியுடன் நேட்டோ எதிர்ப்பு செய்ய முடியாது முடங்கி விடுகின்றனர். இந்த முறையில் தொழிலாளர் ஒற்றுமை கட்டப்பட முடியாது. அகில உலக தொழிலாளர் தளத்தை கட்டுவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு பல சோசலிஸ்டுகள் வந்துள்ளதை நாம் வரவேற்கிறோம். இந்த புத்தி தாமதமாக வந்திருப்பினும் இப்போதாவது வந்துள்ளதே என்பது சந்தோசமே. ஆனால் இந்த நடவடிக்கை இலகுவானதல்ல . ஒற்றைப் பார்வையோடு சாதிக்க கூடிய ஒன்றல்ல. குறிப்பாக தேசிய கோரிக்கை சார்பில் சரியான நிலைபாடு இன்றி இது சாத்தியமே இல்லை. இங்குதான் அனைத்து அமைப்புக்களும் குறிப்பான போதாமையை வெளிகாட்டி நிற்கின்றன. இது பற்றி பேசாமல் மேலதிக திட்டமிடல் பற்றி நாம் பேசமுடியாது.