யுத்தத்துக்கு நியாயங்கள் கிடையாது.

909 . Views .

வன்முறை என்பது எப்பொழுதும் அதிகாரம் சார்ந்து வரும் ஒன்றல்ல. அதிகார சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து ‘வன்முறை’ வெளிப்பட வாய்ப்புண்டு. ‘தீவிரவாத’ நடவடிகைகள்கூட ஒருவகையில் எதிர்வினை வெளிபாடே. இத்தகைய வன்முறை நடவடிக்கைகள்கூட நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இருப்பினும் புரட்சிக்கர எழுச்சிகளின்போது அதிகாரத்தை தமது கையில் எடுக்க மக்கள் பல வலுக்கட்டாயமான நடைமுறைகளை முன்னெடுக்க நிர்பந்திக்கப்படுவர். தமது கையில் இருக்கும் அனைத்து வகை ஆயுதங்களையும் பாவித்து (ஊடகம் உட்பட) அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் சக்திகளை வீழ்த்த மக்கள் தம் அதிகார பலத்தை பாவித்துத்தான் ஆகவேண்டும். காந்தியம் – அகிம்சை என இன்னொரு மாற்று இருப்பதாக சொல்வது பெரும் பொய். அதிகாரக் கதிரையில் இருப்பவரின் இடமாற்றுக்கு இத்தகைய ஏமாற்று வித்தைகள் உதவலாம். மக்கள் தமது கையில் அதிகாரத்தை பறித்தெடுப்பது என்பது முற்றிலும் வேறு விடயம். காந்தியத்தின் உள்கிடக்கையான சமரசம் – இனவாதம் – ஏகாதிபத்திய ஒன்றிணைவு முதற்கொண்டு பல்வேறு கோளாறுகள் சிலருக்கு உவப்பாக இருக்கலாம். மக்கள் விடுதலை பேசுவோருக்கு அது கசப்பே.

காந்தியம் வன்முறைக்கு எதிரானது என அதை ‘மாற்றாக’ நிருத்துவது இன்னுமொரு பெரும்பொய்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது பிரித்தானிய அரசின் நலனுக்காக – ஆயிரக்ககணக்கான இந்திய உயிர்கள் விரையம் செய்யப்பட்டதை ஊக்குவித்த காந்தியம் இந்தியாவில் இருந்த பிரித்தானிய  நிர்வாகத்தின் மேலான வன்முறையை கடுமையாக எதிர்த்தது. இத்தகைய திட்டமிடல்கள் குறுகிய எல்லைதாண்டி நகர முடியாதவை.

மக்கள் மத்தியில் இருந்து எழும் போராட்ட நடைமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை அரசுகள் முன்னெடுக்கும் வன்முறைகளும் யுத்தங்களும். ‘மக்கள் நலனுக்கு’ – ‘தேசிய நலனுக்கு’ எனச் சொல்லித்தான் இந்த யுத்தங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் எந்த ஒரு யுத்தத்திலும் மக்கள் நலன் மேம்பட்டதில்லை. ‘பாதுகாப்பு’ கருதி எனவும் பாசிசத்துக்கு எதிராக எனவும் சனநாயகத்தை நிலைநாட்ட எனவும்- தற்காப்பு நடவடிக்கையாக – மற்றும் தத்துவார்த்த அடிப்படையிலும்கூட யுத்தம் நியாயப்படுத்தப்படுகிறது. இதுவும் வெறும் புரட்டே. மேற்கு நாட்டு அரசுகள் ‘தத்துவார்த்த’ அடிப்படையில் பாசிசத்தை எதிர்க்க யுத்த முன்னெடுப்புச் செய்யவில்லை. உண்மையில் ஜெர்மானிய- இத்தாலிய பாசிச சக்திகளோடு ‘உடன்படிக்கையை’ ஏற்படுத்திக் கொள்ளவே இவர்கள் விரும்பினர் – செயற்பட்டனர். தமது நேரடி லாபம் மற்றும் அதிகாரம் பாசிச சக்தியால் கேள்விக்குள்ளான பொழுது வேறு வழியின்றி எதிர்த்தனர். பாசிசத்துக்கு எதிரான யுத்தம் மக்கள் மத்தியில் இருந்துதான் முதல் எழுந்தது. ஜெர்மனி முதற்கொண்டு பாசிச கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் – மக்கள் கிளர்ச்சி இயக்கங்கள் உருவாகின – போராடின. இவை எதற்கும் இந்த அரசுகள் ஆதரவு வழங்கவில்லை. பின்பு தாம் யுத்தத்தில் இறங்கிய பின் இந்த சக்திகளை தம் வசமாக்கி கொள்ளவும் பாவிக்கவும் செய்தனர். சார் மன்னரின் கொடிய ஆக்கிரமிப்பில் இருந்து ரஷ்ய, உக்ரேனிய மற்றும் பெரும்பகுதி கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ரஷ்யப் புரட்சி விடுதலை செய்த பொழுது என்ன நடந்தது. இருபத்தி ஒரு நாடுகள் ரஷ்யா மேல் படை எடுத்தன. தொழிலாளர்கள் தமது அதிகாரத்தை நிறுவுவது தமது லாப நோக்குக்கு ஏதிர் என்ற தெளிவுதான் முதலாளித்துவ ‘தத்துவார்த்த’ யுத்த நிலைப்பாடு. அத்தருணத்திலும் பின்பு இரண்டாம் உலக யுத்த ஆரம்ப காலகட்டத்திலும் உக்ரேனிய தீவிர வலது சாரிய ‘வெள்ளை காவற்படை’க்கு முற்று முழுதான ஆதரவை வழங்கின மேற்கு அரசுகள். பாசிச சக்திகள் உட்பட தீவிர மக்கள் விரோத – எதிர் புரட்சிகர சனநாயக சக்திகள் இவை.

இதன்பின்பு நடந்த ‘பனியுத்த’ கால கட்டத்தில் அமெரிக்கா தலைமையில் மிகப்பெரும் சனநாயக மறுப்பு சக்திகள் உருவாக்கப்பட்டன – வளர்க்கப்பட்டன. ஏராளமான மக்கள் சார் புரட்சிகர சக்திகள் வேட்டையாடப்பட்டன. மக்கள் நேசித்த தலைமைகள் பல சுட்டுத் தள்ளப்பட்டன. மக்கள் புரட்சிக்கு தலைமை தாங்கிய பலர் படுகொலை செய்யப்பட்டனர். ரோசா லக்சம்பேர்கை பாசிச சக்திகள் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த வலராறு ஆற முதல் சேகுவேரா கோரமாக கொலை செய்யப்படார். பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய 638 தடவை முயற்சி செய்து தோல்வி அடைந்ததை அந்த அரசே இன்று ஏற்றுக் கொள்கிறது. இவை ஒரு சில உதானரங்கள மட்டுமே.

தற்போது சிரியாவில் இருந்து சூடான் வரை பெரும் கொலைக்கார மக்கள் விரோத சக்திகளின் நட்புச் சக்தியாகவே இயங்கி வருகின்றன மேற்கு அரசுகள்.

உலகெங்கும் நடந்த சனாயாக மறுப்பு மற்றும்- கோர யுத்தங்கள் அனைத்தின் பின்னும் லாப நோக்கமும் முதலாளித்துவமுமே இருக்கிறது. மேகம் மழையைக் காவித்திரிவது போல முதலாளித்துவம் யுத்தத்தை காவித் திரியும் ஓன்று என பிரஞ்சு இடதுசாரி ஒருவர் ஒருமுறை கூறி இருப்பார். ஆயுத முனையில்தான் முதலாளித்துவம் தப்பி வந்திருக்கிறது.

இருப்பினும் ‘சனநாயகத்தின் பெயரில்’ நடக்கும் யுத்தத்திற்கு மக்கள் ஆதரவு எப்படி கிடைக்கிறது. மக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகிறார்கள்? ‘(முதலாளித்துவ) சனாயகம் ஒரு அரசை நிறுவுவதற்கு மிகமோசமான வழிமுறை. ஆனால் இருப்பதுக்குள் இதுவே சிறந்தது’ என பழைய பிரித்தானிய வலதுசாரி பிரதமர் சேர்ச்சில் பேசிய வசனம் மிக பிரபலமான ஓன்று. மக்கள் மத்தியில் இருக்கும் ‘பெரும்பான்மையிச’ போக்கு – ‘குறைதீமை ஆதரவு’ போக்கு என்பன இந்த முதலாளித்துவ அரசுகள் பெரும் தீமைகளை நடைமுறைப்படுத்த உதவி வந்திருப்பதுதான் உலக வரலாறு. ‘அதற்கு இது பரவாயில்லை’ என்ற தர்க்கம் பேசுவோர் ‘அதைவிட’ மோசமான ஒன்றையே பரிசாகப் பெற்று வந்திருக்கின்றனர். மக்களுக்கு என ஒரு தனிவழி உருவாகுவது அனுமதிக்கப்படுவதில்லை.

அரசு தனது கைவசம் வைத்திருக்கும் பலமான நிருவனனகள் அனைத்தும் ‘தேசிய நலன்’ என்ற அடிப்படையில் கடுமையான பிரச்ச்சார/அதிகார கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன. ஊடகங்கள் மற்றும் மக்கள்கூடும் தளங்கள் அனைத்திலும் பிரச்சாரம் ஒருபுறம் நடக்க மறுபுறம் சட்ட நடவடிக்ககைகள் முடுக்கி விடப்படுகின்றன. உள்நாட்டில் எதிர்ப்பை வன்முறை கொண்டு அடக்கிய நிலையில்தான் வெளிநாட்டு படையெடுப்பு நிகழ்கிறது. பெரும் பொய் சொல்லி ஈராக் மேல் படை எடுத்த பொழுது அந்த யுத்தத்துக்கு எதிரான சக்திகளை முடக்க பிரித்தானிய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தெருவில் இறங்கி யுத்தத்துக்கு எதிராகப் போராடினர். ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டன முடக்கப்பட்டன. போராட்ட இயக்கங்களுக்குள் பொலிஸ் ஊடுருவல் நிகழ்ந்தது. மக்கள் மத்தியில் ‘பயக்கெடுதி’ உருவாக்குவதிலும் வலதுசாரிகள் வல்லவர்கள். ஈராக் 45 நிமிடத்தில் லண்டனை தாக்கும் என்ற பொய்ப் பிரச்சாரம் யுத்தத்துக்கு முன் கட்டவிழ்த்து விடப்பட்டது. தற்போது ரஷ்யா லண்டன் மேல் அணுஆயுத பிரயோகம் செய்யல்லாம் என்ற தொனிப்பட ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடத் தொடங்கி இருக்கிறார்  லண்டன் மேயர் சிடிக் கான். தங்களுக்கான பாதுகாப்பு பற்றிய நெருக்கடி உருவாகும் பொழுது – மக்கள் தமது தமது அரசுகளுக்கு ஆதரவாக திரள்வது நிகழ்கிறது. அரசின் நடவடிக்கைகள் மற்றும் அவர்தம் பிரசாரங்களை முற்றாக ஏற்று கொண்ட அடிப்டையில் இது நிகழ்வதில்லை. மாறாக அவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு நெருக்கடியை தாண்டிச் செல்ல நிகழும் தற்காலிக பெரும்பான்மை குழுத் திரட்சி இது. ஆனால் யுத்தம் முடிய இந்த நிலை வேகாமாக மாற்றம் காணுவதையும் நாம் பார்க்க முடியும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இங்கிலாந்து பிரமர் சேர்ச்சில் தோற்கடிக்கப் பட்டதும் அவ்வாறே. இருப்பினும் யுத்த சந்தர்ப்பத்தை பாவித்து ‘பெரும் தேசிய சாவுனிசத்தை’ வளர்க்கும் அனைத்தையும் அரச அதிகாரம் செய்கிறது. தேசியக் கோடி – தேசிய கீதம் – தேசிய மொழி – தேசியக் கலாச்சாரம் என ‘தேசிய’ பெரும்பான்மை ஒன்றுகூடலை ஊக்குவிப்பதன் மூலம் தமது இருத்தல் – தமது நடவடிக்கைக்கு முழு ஆதரவையும் அரசு தக்க வைத்துக்கொள்கிறது. இதற்குள் எழும் எல்லாவகை சிறுபான்மையும் அதிகாரம் கொண்டு முடக்கப்படுகின்றன – அல்லது தேசத் துரோக குற்றச் சாட்டு வைத்து புறக்கணிக்கப் படுகின்றன.

மக்கள் மத்தியில் தகவல் பரிமாற்றம் செய்ய இருக்கும் அனைத்து வழிமுறைகளும் இதற்கு பாவிக்கப்படுகின்றன. யுத்தக் கால கட்டத்தில் ஊடகங்கள் என்ன பேசுகின்றன என்பதை அரச கொள்கையே தீர்மானிக்கிறது. அரச ஆதரவு அற்ற ஊடகவியலாளர் குரல் நசுக்கப்பட்டு ஆதரவுக் குரல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வெறும் பிரச்சாரம் மட்டுமே தகவலாக வழங்கப்படுகிறதே தவிர உண்மை நிலவரங்கள் அல்ல. சமூக வலைத்தளங்கள் மக்கள் தமது சக்தியை காட்ட உதவும் என முன்பு பலர் பேசி வந்ததன் போலித்தனத்தை இப்போது நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது. உக்ரேனுக்கு எதிரான  – ரஷ்ய ஆதரவு தகவல்கள் அனைத்தும் இரும்புக்கரம் கொண்டு அதிகம் முடக்குவது இந்த சமூக வலைத்தலங்கலாகவே இருக்கிறது. வலது சாரியப் பொய்கள் – கருத்துக்கள் அனுமதிக்கப் படுகின்றன. பல உன்மைகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இவை அனைத்துமே மக்களின் வரிப்பணத்தில் நிகழ்வதையும் நாம் அவதானிக்க வேண்டும். முதலாளித்துவம் தமது லாபத்தை பாதுகாக்க மக்களின் பணத்தைதான் செலவு செய்கின்றது. தமது லாபத்தில் சிறுபங்கை அவர்கள் இழக்கத் தயாராக இருப்பர். ஆனால் அதுவும் தற்காலிகமே. அனைத்துச் செலவுகளும் மக்களின் தலையிலேயே கட்டப்பட்டுவிடுகிறது. சொந்தக் காசில் சூனியம் வைப்பது எனச் சொல்வது இதைத்தான். மக்கள் தங்கள் காசில் தங்கள் அழிவுக்கு உடன்பட்டு போகும் நிலைதான் யுத்தம்.

யுத்தத்தில் ஒருபோதும் நடுநிலை என்ற பேச்சுக்கு இடமிருந்ததில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதையோ அல்லது எதிர்பதையோ தவிர்த்துக் கொண்டன இந்தியாவும் சீனாவும். சீனா நடுநிலை எடுத்துக் கொண்டுள்ளது என சிலர் இதை வர்ணித்தனர். உண்மையில் இது ‘ரஷ்ய அதரவு நடுநிலை’ என ஒருவர் இந்த நடுநிலையை சிறப்பாக வர்ணித்திருப்பார். அரச ஆதரவு ஊடகங்கள் மக்கள் வரிப்பணம் கிடைத்து ஊதி பெருப்பதும் நிகழ்கிறது. யுத்தத்தின்‘ மற்றப் பக்க பிரகுச்சாரங்கள் மக்கள் மத்தியில் சென்றுவிடக்கூடாது என்ற கரிசனையில் ரஷ்ய ஊடகங்கள் அனைத்தும் மேற்கில் தடை செய்யப்பட்டுவிட்டது. மேற்கின் ‘ஊடக சுதந்திரத்தின்’ எல்லை இதுதான். இலங்கையில் கோர யுத்தத்தின் போது அனைத்து ஊடகங்களையும் எவ்வாறு இலங்கை அரசு கட்டுப்படுத்தியது என நாம் அறிவோம். அத்தருணத்தில் ‘ஊடகச் சுதந்திரம்’ பக்கம் நிற்பதாக மேற்கு பாவனை செய்தது. யுத்தக் குற்றம் – மனித உரிமை பற்றி எல்லாம் பேசினார்கள். ‘உலகம் முழுக்க அநியாயம் செய்யும் உங்களிடம் பழைய காரைக் கூட நான் வாங்க மாட்டேன் – இதில் நீங்கள் எங்களுக்கு மனித உரிமைப் பாடம் எடுப்பதை எப்படி வாங்குவது’ என பின்பு டயான் ஜெயதிலக இலங்கை அரசுசார்பில் ஐ.நாவில் பேசியது இந்த நியாயத்தைத்தான். உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயம் என ரஷ்ய பொரிந்து தள்ளிக் கொண்டுருப்பதும் இது பற்றியே. இதில் உண்மை உண்டு. நியாயம் என்பது சார்புத்தன்மை கொண்டது. அதிகாரங்களின் சார்பில் இயங்குவது. மக்கள் சார் நியாயம்  – நீதி என்பன இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பொது நியாயம் என்பது போலி.

அரச அதிகாரத்தோடு சமரசம் செய்யும் மிதவாதிகள் பொது நியாயம் பேசுவர். யுத்தத்தில் ஈடுபடும் எல்லாச் சக்திகளும் தமது தமது நியாயமே சரி என்கின்றன.

‘யுத்தத்திலும் காதலிலும் எல்லாம் சரியே’ என்ற புகழ்பெற்ற பழமொழி ஓன்று உண்டு. இது தவறு. பொது நியாயம் இனி இல்லை யுத்தம் வெல்வதற்கு எதையும் செய்யலாம் என்பதே இந்தக்கதை. தோற்பது தவறு – வெல்வதுதான் ஒரே வழி –அதற்காக எது செய்தாலும் சரி – என்ற குறுக்கத்தை யுத்தம் ஏற்படுத்தி விடுகிறது. யுத்தம் ஆரம்பிக்க இருந்த காரணங்கள் யுத்த காலத்தில் மாறி விடுகின்றன.

யுத்தம் தனக்கான இயக்கத்தை கொண்டது. எதிர்பாராத விளைவுகாளால் (unintended consequences) நிரம்பியதே யுத்தம்.

எல்லா அநியாயங்களையும் நியாயப்படுத்துவதே யுத்தம். யுத்தத்தில் இறங்கும் பொழுது அரைகுறையாக என்றாலும் எதிரியிடம் மனிதாபிமானம் இருக்கும் மன்னிப்பு இருக்கும் என எதிர்பார்ப்பு எல்லா பக்கமும் இருக்கும். ‘யுத்த விதிமுறைகள்’ படி யுத்தம் நடக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் எந்த யுத்தமும் அப்படி நடப்பதில்லை. யுத்தம் உக்கிரமடைய அனைத்து விதிகழும் வீதியில் வீசப்பட்டு விடுகின்றன. பழைய கால யுத்த விதிகள் –மரபுகள் – முறைகள் என நிறையப் பேசிய மாகாபாரத கதையில் யுத்தம் தொடங்கும்போது எவ்வாறு விதிகள் வீசி எறியப்பட்டன என எழுதப்பட்ட ‘அழகிய’ பகுதிதான் பகவத் கீதை. இதை ‘அகிம்சையின் பாடப்புத்தகம்’ எனப் பிரச்சாரிக்கும் அநியாயம் -கொடுமை. கலாச்சாரம் சார்ந்து இயங்குபவர்கள் – விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவோர் என அனைவர் மேலும் தாக்குதல் நடக்கும் என நாம் எதிர்பார்க்கவில்லை என ரஷ்ய அதிகாரிகள் புலம்புகின்றனர். எந்த விதிமுறைகளின்படி யுத்தம் நடக்கப்போகிறது என்ற கற்பனையில் அவர்கள் தாகுதல்களைத் தொடங்கினர் எனத் தெரியவில்லை.

யுத்தம் என்றால் யுத்தம்.  மனித உரிமையின் பதுகாவலனாக நடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தன்னைத் தானே கட்டுப்படுத்தும் – தோற்கும் உக்ரேனியர்கள் –மனித உரிமைக்காக பதுங்கி போவர் என அவர்கள் எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. ஒன்றியத்தை தொடக்கி வைத்தபோது அன்றய இடதுசாரி பிரெஞ்சு பிரதமாராக இருந்து பிரான்சுவா மித்திரோன் பேசிய பேச்சு பலருக்கும் இன்று மறந்துவிட்டது. ‘தேசியவாதம் என்றால் யுத்தம்’ என அவர் தனது பேச்சைத் தொடங்கி எவ்வாறு ஐரோப்பாவின் ஐக்கியம் யுத்த வரலாறை முடிக்கும் எனப் பேசியது அன்றே காற்றோடு கரைந்துவிட்டது. ஆயுத மயப்படுத்தலை எந்த முதலாளித்துவ அரசுகளும் நிறுத்தி வைக்கவில்லை. யப்பான் உட்பட பல நாடுகள் சில வரம்புகளை அமெரிக்க நிழலில் ஏற்படுத்திக்கொண்டனவே தவிர ஆயூத மயப்படுத்தல் நிற்கவில்லை. யுத்தம் இன்றிய சமாதனா உலகுக்கு ஆசைப்படுவோர் செய்யும் வேலையா அது? சமூக நலனுக்கும் சமதானத்துக்கும் என ஒதுக்கிய செலவை விட ஆயுத மயப்படுதளுக்குத்தான் சமூக பணம் – எமது பணம் -அதிகமாக ஒதுக்கப்பட்டு வரப்பட்டிருக்கிறது.

யுத்தத்தில் எந்த பக்கமும் வெல்வதில்லை. எல்லா யுத்தங்களும் எல்லாக் காலங்களிலும் தோல்வியையே சந்திக்கின்றன. உக்ரேனிய ஆக்கிரமிப்பால் ரஷ்யா வென்றுவிடப்போவதில்லை – ரக்ஷ்ய பின்னடைவால் உக்ரேனிய மக்கள் வென்று விடப்போவதில்லை. யுத்தத்தின் போது ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள யுத்தத்துக்கு பின் இருந்த லாபநோக்கு சக்திகள் உதவப் போவதில்லை. உக்ரேனிய மக்களின் வீரம் – அவர்தம் மன உறுதி என்றெல்லாம் புலம்பும் அமெரிக்காவும் – ஐரோப்பிய ஒன்றியமும் –உக்ரேனிய மக்களின் வாழ்வாதார உயர்வுக்காண திட்ட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கப்போதில்லை. உக்ரேனிய வளங்களை கட்டுப்படுத்தும் தமக்கான உரிமை கிடைத்த கையோடு உக்ரேனிய மக்கள் கைவிடப்படுவர். யுத்த அழிவின் அடையாளங்களோடு வறுமையில் இருந்து அல்லல்பட விடப்படுவர். யுத்த வெற்றியின் பங்கு எங்கே என அந்த மக்கள் கேட்க கூடும். அதற்கு பதிலாக லாப நோக்கு உக்ரேனிய அரசின் இரும்புக்கரமே அவர்களுக்கு பதிலாகக் கிடைக்கும்.

இலங்கை இறையாண்மையை காக்க என்று சொல்லி – சிங்கள மக்களின் உரிமைகளுக்காக என பிரமை காட்டி தமிழ் மக்களுக்கு எதிராக அரசு செய்த யுத்தத்தால் சிங்கள மக்களுக்கு என்ன பலன் கிடைத்துள்ளது. இராணுவப் பலம் கொண்டு தெற்கிலும் போராட்ட சக்திகளை நொறுக்கும் சர்வாதிகார ஆட்சியும்- மேலதிக வறுமையுமே அவர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது.

உக்ரேன் ‘மக்களைக் கவசமாக’ பாவிக்கறது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளது ரஷ்யா.

எந்த யுத்தம் மக்களை கவசமாக பாவிக்காது நிகழ்ந்துள்ளது. மக்களை இல்லாத பகுதியை தேர்ந்தெடுத்து மோதும் ‘பக்குவமான யுத்தம்’ எங்கும் நிகழ்ந்ததில்லை.

மக்கள் மேல் தாக்குவதையே அரசுகள் செய்கின்றன. ‘தேர்ந்தெடுத்த’ இலக்குகள் மேல் தாக்கி – உயிரிழப்பற்ற ‘நவீன யுத்தத்தை’ தாம் செய்ய இருப்பதாக அறிவுத்துக் கொண்ட புஷ்-பிளேயரின் ஈராக் யுத்தம் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் உயிரை அனாவசியமகா பழிவாங்கி மாபெரும் அழிவுகளை உருவாக்கி விட்டது அறிவோம். தாம் செலவு செய்ததற்கும் அதிகமான லாபத்தை முதலாளிகளும் நிருவனங்களும் அள்ளிச் சென்றுவிட்டன. மக்களுக்கு யுத்தம் இன்னும் தொடர்கிறது.

எல்லா யுத்தத்திலும் பாவிக்கப்படும் மிகப்பெரும் ஆயுதமாக இருப்பது மக்களே.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உக்ரேனில் இருந்து வெளியேறுவதை தடை செய்து விட்டது அரசு. எவ்வித ஆயுத பயிற்சியும் இல்லாத இளையோரின் கையில் யுத்தத்துக்கு தகுதியற்ற ஆயுதத்தை திணித்து யுத்தம் செய்ய பணித்துள்ளது உக்ரேனிய அரசு. ரஷ்ய படைகளை தாக்கும்படி அவர்கள் சொல்லவில்லை. ரஷ்யர்களை தாக்குங்கள் என தெளிவாக அறிக்கைகளை வெளியிடுகிறது அரசு. தலைநகர் கியேவில் வாழும் ரஷ்யர்கள் ரஷ்ய படையெடுப்புக்கு காரணம் இல்லை. பிரிவைக் கோரும் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழும் உக்ரேனிய ரஷ்ய இனத்தவர்கள்கூட ஓட்டுமொத்தமாக ரஷ்ய ஆதரவாளர்கள் இல்லை. உக்ரேனிய ரஷ்யர்கள் வேறு – ரஷ்ய ரஷ்யர்கள் வேறு. ஆனால் ஒட்டுமொத்த ரஷ்யர்களையும் தாக்கும்படி பிரச்சாரம் செய்கின்றன உக்ரேனிய அரச சக்திகள். இந்த அரசில் பங்கு பற்றிய பாசிச சக்திகள் பல ரஷ்யர்களை கொல்லும் ஆய்தம் தாங்கிய சக்திகளாக வெளிப்படையாக இயங்கி வருகின்றன. இதை எவையுமே சனநாயக காவலர்களாக காட்டிக்கொள்ளும் மேற்கு பொருட்படுத்தவில்லை. மாறாக மக்கள் அயுதமேடுத்து ரஷ்யர்களை தாக்குவதை பெருமையடன் செய்தியாக வெளியிடுகின்றன. ஆயுதப் பயிற்சி இல்லாத இளசுகளின் கையில் அயுதம் செல்வதும் – இளசுகள் யுத்தம் செல்வதும் ‘வீரமாக’ வர்ணிக்கப்படுகிறது. ஆய்தம் தாங்கியவர்களை மக்கள் – இராணுவம் என பிரித்து பார்த்து தாக்க முடியாது – மக்கள் மத்தியில் இருந்து ஏவுகணை அடித்தால் அங்குதான் திருப்பி தாக்குவோம் என ரஷ்யா கருதுகிறது. மகளை விட்டு விட்டு தனியா வந்து தம்மோடு அடிபடும் உக்ரேனிய இராணுவம் என்று எதிர்பார்த்தா ரஷ்யா யுத்தத்தை தொடங்கியது? சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உக்ரேனிய தேசியத்தை உக்கிரமாக வளர்த்து வருகிறது உக்ரேனிய அரசு – இது நீண்ட காலத்திற்கு அவர்கள் தம் அதிகாரத்தை நிலைநாட்ட உதவம்.

‘உக்ரேனிய மக்கள்’ எனக் குறிப்பிடும் மேற்கு அரசியல் தமது பேச்சுக்களில் ரஷ்ய மக்கள் எனக் குறிப்பிடுவதில்லை. ‘ரஷ்யா’ பழிவாங்கப்படும் – ரஷ்யாவுக்கு தண்டனை கிடைக்கும் என புலம்புவர்கள் செய்வது பெருபாலும் ‘ரஷ்ய மக்களுக்குக்கு’ எதிரான நடவடிக்கையே. ரஷ்ய அரசின் நடவடிகையால் பழிவாங்கப்படுவது ரஷ்ய மக்களே. ஒட்டுமொத்த ரஷ்ய மக்களின் ஆதரவுடனா பூட்டின் யுத்த முன்னெடுப்பு செய்தார் ? ரஷ்யாவுக்குள் இருக்கும் யுத்த எர்திர்ப்பு குரல் முடக்கப்படுவதற்கு மேற்கு துணை போகிறது. அனைத்து ரஷ்ய மக்களையும் எல்லா தளங்களிளுக் குறிவைத்து தாக்குவது – ரஷ்ய வெறுப்பு வளர்ப்பது ரஷ்யாவுக்குள் பூட்டினின் பலத்தை வளர்க்கவே உதவுகிறது.

தடைகள் அரசுகளின் யுத்த தந்திரமே தவிர மக்கள் மேம்பாட்டுக்கு அவை உதவுவதில்லை.

தடைகள் மக்களையே பழிவாங்குகிறது. அரச சக்திகள் முதலாளிகள் எப்படியாவது தப்பி விடுகின்றனர். மேற்கு ரஷ்யா மேல் போடும் தடைகளால் அதிகம் பாதிக்கப்படுவது மக்களே தவிர அரசு அல்ல. இந்தத் தடைகள் யுத்தத்தை மேலுக் உக்கிரப்படுத்தி இருக்கின்றனவே தவிர குறைக்கவில்லை. தடைகளால் அழிவை நிறுத்த முடியாது. யுத்தம் சமூகத்தில் பெரும் பிளவை உருவாக்குகிறது. இந்த பிளவின் பகுதியாக அரசுகள் தமது இருப்பை நிலைநாட்டிக் கொள்ள ‘தேசிய ஒற்றுமையை’ வளர்க்கின்றன. இதனால் மக்கள் யுத்த முனைப்பின் பகுதிகளுக்கு அலை அலையாக திரட்டப்படுகின்றனர்.

இந்த நிலையில் யுத்த மறுப்பு செய்யும் சக்திகள் எல்லா பகுதியாலும் தாக்கப்படுகின்றன. இந்த வெப்பத்தை தாங்க தாம் ‘நடுநிலையில்’ இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மக்கள் எடுக்கவேண்டிய நிலைப்பாடு என்ன? போராட்ட சக்திகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?