உக்ரேனிய நெருக்கடி பின்னணி பற்றிய தகவல்கள்

1,091 . Views .

உக்கிரேனிய நெருக்கடி பல்வேறு கேள்விகளை முன்தள்ளி உள்ளது.

“வளங்களுக்கான யுத்தம் – தொடரும் பொருளாதார நெருக்கடி – வரப்போகும் உலக நடைமுறைகள் பற்றிய கேள்விக்குறி – மக்கள் முன்னெடுக்க வேண்டிய தேசிய கோரிக்கை சார் நிலைப்பாடு என்ன ? போன்ற பல கேள்விகள் முதன்மைப்படுள்ளன. இவை பற்றி மேலதிகமாக ஆய்வு செய்யமுன் இந்த நெருக்கடியின் பின்னனி நிலவரங்கள் பற்றிய சில புள்ளிகளை பின்வரும் கட்டுரை பதிவு செய்கிறது. மேலதிக ஆய்வுகளுக்கு எதிர் இனையத்தை தொடர்ந்து வாசியுங்கள்.  ” 

– எதிர் ஆசிரியர்குழு –

 

உடைவின் பின்பும் பழைய சோவியத் யூனியன் நாடுகள் பலவற்றின் வளங்கள் மேல் தனது கட்டுப்பாட்டைத் தொடர்ந்து நிலைநாட்டி வந்திருக்கிறது ரஷ்யா. மொஸ்கோ ஆதரவு அரசுகளை இந்த நாடுகளில் ஊக்குவிப்பதன் மூலம் தமது பொருளாதார நலன்கள்சார் உடன்படிக்கைகளை மொஸ்கோ உருவாக்கி வந்துள்ளது. பழைய சோவியத் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஏற்பட்ட வெறுப்பு – மற்றும் நல்வாழ்வுக்கான எதிர்பார்ப்பு காரணாமாக பல நாடுகளிள் ஐரோப்பிய நாடுகள்மேல் ஒரு கவர்ச்சி இருந்தது. முன்புபோல் இல்லாவிட்டாலும் இது இன்றுவரை தொடரும் ஒரு போக்கு. வறுமையில் இருந்து மீள – நல்ல வருவாய் உள்ள வேலைகளைப் பெற ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதுதான் சரி என அந்த நாடுகளின் லாப நோக்குள்ள வலதுசாரிய/முதலாளித்துவ சக்திகள் தொடர் பிரச்சாரம் செய்வதும் இதற்கு வலுச் சேர்ப்பதாக இருந்து வந்திருக்கிறது. இருப்பினும் தற்போது இந்த நிலை மாறத் தொடங்கி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் என்பது அதில் இருக்கும் பலமான நாடுகள் (ஜேர்மனி போன்ற) சிறிய நாடுகளின் வளங்களைச் சுரண்டும் பொறிமுறை என்பதை பலர் இன்று நன்கறிவர். இதனால்தான் கிழக்கு ஐரோப்பா – மற்றும் தெற்கு ஐரோப்பா எங்கும் ஒன்றியத்துக்கு பலத்த எதிர்ப்பு உருவாகி வருகிறது. போலந்து, ஹங்கேரி, இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகளில் ஒன்றியத்துக்கு ஆதரவு மிக நலிவடைந்து விட்டது.  மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதார நலனை நிலைநாட்டப் படாதபாடு பட்டு வருகின்றன.  

 

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இருந்த நிலை இன்று இல்லை. அமெரிக்காவும்,மேற்கு நாடுகளும் உலக பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்திய காலம் இன்று இல்லை. சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஒருபக்கம் – ரஷ்ய ஊடுருவல் ஒருபக்கம் என ஏற்படும் நெருக்கடியை தனித்துநின்று எதிர்கொள்ளும் சக்தி இன்று ஐரோப்பாவுக்கு இல்லை. அமெரிக்கப் பொருளாதார ஆதிக்கம் சரியத் தொடங்கி விட்டது என்பதை தற்போதைய உலக பொருளாதார நெருக்கடி நிலை எடுத்துக் காட்டி உள்ளது. இந்த நெருகடியால்- ‘அமெரிக்கா முதல்’ என்ற அடிப்டையில் உலக தளத்தில் இருந்து விலகி இயங்கும் முறையை டிரம்ப் காலத்தில் நாம் பார்த்தோம். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் முதலாளித்துவத்துக்கு எதிரான சோவியத் யூனியனின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி லாப நோக்கை பாதுகாக்க உருவான நேட்டோ (NATO -North Atlantic Treaty Organization) தற்போது பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. நேடோ உடன்படிக்கை நாடுகளுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள போட்டி – பொருளாதார நலன்சார் நெருக்கடி என்பவை நேட்டோ இராணுவ முதலீடு தொடர்வது பற்றிய கேள்வியை எழுப்பி இருக்கிறது. அமெரிக்கா நேட்டோவுக்கு பண முதலீடு செய்யாது என டிரம்ப் வெருட்டியதும், அப்போதைய ஜெர்மனியின் சான்சிலர் அஞ்செலா மெர்கல் கடுமையாக கோபப்பட்டதையும் அறிவோம். தற்போது பைடன் தலைமையில் ‘அமெரிக்கா திரும்பிவிட்டது’ என மீண்டும் பழையமாதிரி பலத்துடன் இயங்குவது போன்ற பாவனை செய்கின்றன மேற்கு நாடுகளும் அமெரிக்காவும். டிரில்லியன் கணக்கில் உள்நாட்டில் முதலீடு செய்து பொருளாதார சரிவை தடுக்க முயலும் பைடன் அரசின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பண ஒதுக்கீட்டை எவ்வாறு செய்யப் போகிறார் என்பது தொங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான கேள்வி.  

 

ரஷிய ஆதரவு அரசதிகாரம் உக்ரேனில் தொடர்ந்து இருந்தமை மேற்குலக நலனை முன்னெடுப்பதற்கு தடையாக இருந்து வந்துள்ளது. சவூதி அரேபிய முதற்கொண்டு பல்வேறு நாடுகளில் மிக மோசமான சனநாயக மறுப்பு அரசுகளை நட்புக் சக்திகளாக கருதும் மேற்கு முதலாளித்துவ அரசுகள், தமது நலனுக்கு எதிரான அரசுகளை ‘சனயாக மறுப்பு’ அரசுகள் எனக் கூறி எதிர் பிரச்சாரம் செய்வது ஒன்றும் புதிதில்லை. கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஆபிரிக்காவரை பெரும்பான்மை அரசுகள் சனநாயக மறுப்பு அரசுகளே. ஆனால் தமது நலனுக்கு எதிராக ஒரு அரசு திரும்பும்போது மட்டுமே ‘சனநாயக உரிமையைத் தூக்கிப் பிடிப்பது மேற்கின் வழமை. அதுவும் ‘அரச அதிகார’ மாற்று உருவாக்க மட்டுமே செய்வர். அரசு தமது சார்பாக மாறியபின் சனநாயக மறுப்பு பிரச்சாரம் ஓய்ந்துவிடும். கொடிய சர்வாதிகார கசகிஸ்தான்  அரசின் பணத்தில் குளிர் காயும் முன்னாள் பிரிந்தானியப் பிரதமர் டோனி பிளேயரோ – பிரித்தானிய அரசோ அங்கு சனயாக மறுப்பு நடப்பதைக் கண்டு கொள்வதில்லை. தமக்கு சார்பற்ற கிழக்கு நாடுகளின் ‘சனநாயக புரட்சி’க்கு மட்டும் ஆதரவு கொடுத்து வந்தனர். கடந்த இரண்டு சகாப்தத்தின் போது நடந்த ‘நிறப் புரட்சி’ என வர்ணிக்கப்படும் (நிறங்களைக் கொண்டு குறிப்பிடப்படும் புரட்சிகள்) புரட்சிகள் கிழக்கில் நடந்தபொழுது அதற்கு மேற்கின் ஆதரவு இருந்தது. இவற்றைப் புரட்சி என்று சொல்வது கடினம். மேற்கு ஆதரவு பொப்புலிச முதலாளித்துவ சக்திகள் ( சில சமயங்களில் பில்லியனர்கள்) மக்களின் நியாயமான அபிலாசைகளை பயன்படுத்தி அரச அதிகாரத்தை கைப்பற்றிய நடவடிக்கை இவை என வர்ணிப்பது மிகையில்லை. இருப்பினும் இந்தப் புரட்சிகள் வெறுமனே முதலாளித்துவ மேற்கின் சதி என ஒதுக்கித் தள்ளிவிட்டு செல்வதும் தவறு. சனநாயகம் – வாழ்வாதார நிலை அதிகரிப்பு ஆகியன நோக்கி குறை தீமைக்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் மக்கள் வழங்குவதை உலகெங்கும் நாம் பார்க்கலாம்.  

 

இது போன்ற ஒரு புரட்சிதான் உக்ரேனில் 2014ல் நடந்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக உடன்ட்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையை உக்ரேனிய அரசு 2013ல் முடக்கியது. இதைத் தொடர்ந்து உக்ரேனில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. பாராளுமன்ற கட்டிடங்களை போராடியவர்கள் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து – மேற்கு ஆதரவு எதிர்கட்சி அப்போதைய சனாதிபதி யானுகோவிச் ஆட்சியை கவிழ்த்தது. இந்த ஆட்சி கவிழ்ப்பு ஒரு சதிக்கவிழ்ப்பு (coup) என்றது ரஷ்யா. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. மாறாக ரஷ்ய எதிர்ப்பு எதிர்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த நடைமுறைக்கு எதிராக பலத்த எதிர்ப்பும் உக்ரேனில் இருந்தது. குறிப்பாக ரஷ்யர்கள் செறிந்து வாழும் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ‘புரட்சிக்கு’ எதிரான புரட்சி போராட்டங்கள் நடந்தேறின.  

 

உக்ரேனில் ரஷ்யா தனது நலனை இலகுவில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என தெரிந்ததும் இரவோடு இரவாக பேசி (போராட்ட சக்திகள் பங்கு பற்றாத) ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையில் ஒரு உடன்படிக்கை உருவானது. இருப்பினும் இந்த உடன்படிக்கையையும் தாண்டி ஒட்டு மொத்தாமாக ரஷ்ய ஆதரவு சக்திகள் அரச அதிகாரத்தில் இருந்து துடைத்தெறியப்படும் நடவடிக்கை தொடர்ந்தது. இதை தொடர்ந்து மார்ச் மாதம் (2014) ரஷ்ய படைகள் உக்ரேனில் நுழைய அனுமதி வழங்கியது ரஷ்ய பாராளுமன்றம். ரஷ்ய பாராளுமன்றம் சனாதிபதி பூட்டினது ஊதுகுழல் போல் இலங்கும் ஒன்று என்பதும் -பூட்டினுக்கு எதிரான பலத்தை அங்கு யாரும் காட்ட முடியாது என்பதையும் இங்கு கூற வேண்டும். உக்ரேனுக்கு இராணுவத்தை அனுப்பும் நடவடிக்கை பூட்டின் அரச நடவடிக்கையே அன்றி ஒட்டுமொத்த ரஷ்ய மக்களின் ஆதரவின் அடிப்படையில் நடந்த ஓன்று அல்ல. இருப்பினும் உக்ரேனிற்குள் இருக்கும் ரஷ்ய மக்களின் நலன் சார்ந்த பயம் ரஷ்ய மக்களுக்கு இருந்தது. ரஷ்ய எதிர்ப்பு சக்திகள் மத்தியில் இருந்த ரஷ்ய எதிர்ப்பு இனவாத நடைமுறையும் ரஷ்ய தேசியவாதம் பலமாக பூட்டின் பக்கம் திரள காரனாமாக இருந்தது. ரஷ்யப் பெரும்தேசிய அடிப்படையில்தான் தனது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டி வந்திருக்கிறார் பூட்டின் என்பது அவதானிக்கத் தக்கது.  

 

உக்ரேனிய டானியச்க் (Donetsk), லஹின்ச்க் (Luhansk) பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை ரஷ்ய ராணுவம் முன்னெடுத்தது. இந்த பகுதிகளில் தனிநாடு கோரியவர்கள் சுதந்திர ரஷ்ய ஆதரவுடன் குடியரசுகளை அறிவித்துக்கொண்டனர் ( Donetsk People’s Republic (DPR) and Luhansk People’s Republic (LPR)). கிறேமியாவை ஊடுருவிய ரஷ்ய படை அந்த பகுதியை கைப்பற்றியதைத் தொடர்ந்து அப்பகுதி தனிக்குடியரசாக அறிவிக்கப்பட்டது. பின்பு ஒரு வாக்கெடுப்பின் உதவியுடன் ரஷ்யாவுடன் இப்பகுதி இணைத்துக்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து ‘அமைதி’ காப்பது என்ற அடிப்படையில் ஜெர்மனி – பிரான்ஸ் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து மின்ஸ்க் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது (Minsk Agrement). ‘வெளிநாட்டு’ சக்திகள் உக்ரேனில் நிலை கொள்ளாது என்பது இந்த உடன்படிக்கையில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. ரஷ்யாவும் மேற்கும் ( குறிப்பாக ஜெர்மனி) தாது நலன்களை நிலைநாட்டுவதில் குறியாக இருந்தனரே அன்றி மக்கள் சனநாயக கோரிக்கை – அவர்களை முன்னேற்றம் பற்றி எந்த அக்கறையும் எடுக்கவில்லை. ‘புரட்சி’ இருபகுதியினராலும் கவிழ்க்கப்பட்டது.  

 

ரஷ்யாவோடு ஏற்படுத்திக் கொண்ட எந்த உடன்படிக்கையையும் பின்பற்றும் நோக்கு ஜேர்மனிக்கோ – ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ இருக்கவில்லை. தற்போதைய நெருக்கடிக்கு காரணம் ரஷ்யா தனது படையை உக்ரேனிய எல்லைகளில் குவித்தமையே என்றும் – ரஷ்யா தான்தோன்றிதனமாக உக்ரேனில் படை எடுத்துள்ளது எனவும் மேற்கு ஊடகங்கள் விடாது பிரச்சாரம் செய்து வருகின்றன. உக்ரேனிய வளங்களுக்காக ரஷ்யா உக்ரேனை ஊடுருவி உள்ளது இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளையும் ஊடுருவும் எனவும் பிரச்சாரிக்கப்படுகிறது. யுத்தம் என்பது வளங்களைக் கட்டுப்படுத்த நடப்பதுதான் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது ஏன் ரஷ்யா தனது படைகளைக் குவித்தது என்பதை மேற்கு நாடுகள் பேசுவதில்லை. தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அவர்கள் இரகசியமாக மட்டுமே செய்து வருகிறார்கள். மக்களுக்கு இது பற்றிய தெளிவுகள் உருவாக்கும் நடைமுறைகளை பெரும் ஊடகங்கள் முன்னெடுப்பதை இவர்கள் அனுமதிப்பதில்லை. ரஷ்ய ஊடகங்கள் தமது சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளை –வரலாற்றை- பேசி வருவதால் அந்த ஊடகங்களை ஒன்றியம் தடை செய்துள்ளது. ஈராக் யுத்தத்தின் போது யுத்த கொடுமைகளை ஓரளவாவது வெளிக்காட்ட முன்வந்த அல்ஜசீரா ஊடகம் மேல் அமெரிக்கா குண்டுத் தாக்குதல் நடத்தியதும்  -ஊடகவியலாளர்களை கொன்றதும் நாமறிந்த ஒன்றே. இதனால்தான் இவர்களின் சனநாயக பேச்சு வெறும் கபட நாடகம் என ரஷ்ய ஊடகங்கள் விடாது சுட்டிக்காட்டி வருகின்றன. இந்தக் கபட நாடகம் ஐரோப்பிய மக்களுக்கு தெரியவரக்கூடாது என்பதில் இவர்கள் மிக கவனமாக இருக்கிறார்கள். உண்மை பேசலாம் – அதை நாலு சுவற்றுக்குள் பேசுங்கள் – அல்லது பலகலைக்கழக கொரிடோரில் பேசுங்கள் – பத்து பேர் படிக்கும் அகடமி ஜேர்னல்களில் எழுதிக்கொள்ளுங்கள் -பொதுசன உடகங்களில் அதை செய்ய விடமாட்டோம் என்பதுதான் முதலாளித்துவ மேற்கின் ‘சனநாயக’ நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. இதில் மாற்றம் வரப்போவதில்லை.  

 

ஐரோப்பிய ஒன்றியம் -தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நாட்டிக் கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருவதுபற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. அமெரிக்காவில் பைடன் சனாதிபதி தேர்தலை வென்ற கையோடு ரஷ்யாவையும் சீனாவையும் அமரிக்க நலனின் முதன்மை எதிரியாக அறிவித்ததை அறிவோம். சீனாவை கட்டுப்படுத்த – ஜப்பான் – அவுஸ்திரேலியா – இந்தியா – வியற்நாம் நாடுகளை இணைத்து பசுபிக் சுற்றிவளைப்பை செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவும் முழுமையாக இதுவரை இருந்ததில்லை. சீனாவுடன் தனிப்பட்ட ஒப்பந்தங்களை ஏற்படுத்தவே  ஓன்றியம் நடவடிக்கைகள் எடுத்துவந்தது. சமீபத்தில் ஆகுஸ்(Aukus) உடன்படிக்கை சார்பாக பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட நெருக்கடியை உதாரணமாக சுட்டலாம். உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பாவில் தனது நடவடிக்கையை துரிதப்படுத்தி இருந்தது ஜேர்மனி. ஐரோப்பாவுக்கு இலகுவில் எடுத்து வரக்கூடிய நிலைமை – ஊதியம் குறைந்த உற்பத்தி சாத்தியம் ஆகிய காரனங்களால் கிழக்கு ஐரோப்பா மிகவும் முக்கிய உற்பத்தி தளமாக கருதப்பட்டது. இதனால் ஜேர்மனியின் கிழக்கு நோக்கிய பயணம் துரித கதியில் நடந்து வந்தது. உக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டை முற்றாக துடைத்து எறிய வேண்டிய தேவையும் இதனால் இவர்களுக்கு இருந்தது. உக்ரேன் மட்டுமின்றி ரஷ்ய ஆத்தரவு உள்ள முன்னாள் சோவியத் நாடுகள் பலவற்றை மாற்றும் நடவடிக்கைகள் சமீபத்தில் நடந்து வருவதைப் பார்க்கலாம்.  

 

இதை எதிர்க்க ரஷ்யாவுக்கு எந்த பலமும் இல்லை. ‘பெரும் நாடாக’ தன்னைப் பாவனை செய்து வரும் ரஷ்யா பொருளாதார அடிப்படையில் ஒரு சிறிய நாடே. இத்தாலிய நாட்டு பொருளாதாரத்துக்கு சமமான நாடே ரஷ்யா. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற வல்லரசுகளுக்கு நிகராக அவர்களிடம் இருக்கும் ஒரே பலம் இராணுவப் பலம் மட்டுமே. இந்தப் பலத்தை வைத்து தமது பழைய பிராந்தியக் கனவை நிலைநாட்டி வைக்க முயன்று வருகிறது ரஷ்யா. சமீபத்தில் கசகிஸ்தானில் தனது துருப்புகளை இறக்கி தன் சார்பு அரசை நிறுவியதை நாம் பார்த்தோம். மக்கள் சனயாக அக்கறை எதுவுமே ரஷ்ய அரசுக்கு கிடையாது. சீனாவினது நிலைப்பாடும் இதுவே. தமது நலன் என்ற  தாண்டி  ‘உள்நாட்டு சனநாயக’ நடவடிக்கையில் இந்த அரசுகளுக்கு அக்கறை இல்லை. முதலாளித்துவ சனநாயாக வாக்குறுதியுடன் தலையிடும் மேற்கு அரசுகளின் பக்கம் சனநாயாக அபிலாசை உள்ள மக்கள் திரள்வதை தடுக்க இவர்கள் படாத பாடுபட வேண்டியிருப்பதும் இதனால்தான். வன்முறை மூலம் தமது பலத்தை நிறுவி நிற்பது இவர்களுக்கு தற்காலிகமாக இருப்பதும் இதனால்தான். ஜேர்மனிய – ஐரோப்பிய  ஒன்றிய நுழைவை முறியடிக்க – நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை முறியடிக்க சிறுபான்மை மக்களின் ‘தேசிய நலன்’ என்ற போர்வையில் ரஷ்யா உக்ரேனின் எல்லைகளில் தனது படையை திரட்டியது. உக்ரேன் பறிபோகப்போகிறது என்ற ஏக்கத்தில் மேற்கு பிரச்சாரத்திலும் ரஷ்யாவை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நடவடிக்கையில் இறங்கியது. மின்ஸ் உடன்படிக்கையை நிறைவேற்றுவோம் எனச் சொல்லி – அதன் நோக்கில் நடவடிக்கை எடுத்து இருப்பின் ரஷ்ய படையெடுப்பு நிகழ்ந்து இருக்குமா என்ற கேள்வியை மேற்கு ஊடகங்கள் கேட்கப்போவதுமில்லை – தப்பி தவறி யாரும் கேட்டால் அதற்கு சரியான பதிலை அவர்கள் கூறப்போவதுமில்லை. ‘பூட்டினுக்கு விசர்’ ‘அதிகார வெறி பிடித்தவர்’ என வாதத்தை தனிநபர் சார்ந்து சுருக்கி விடுவதில் கில்லாடிகள் இந்த வலதுசாரிய ஊடக வியலாளர்கள். யுத்தத்துக்கு ரஷ்யா காரணம் – அல்லது நேட்டோ விரிவாக்கம் காரணம் என இரு பக்கமாக நின்று அடிபட்டு – அவரவர் அரசுகளுக்கு மக்கள் ஆதரவு வழங்குவது இவர்கள் எல்லோருக்கும் உவப்பான ஒன்றுதான். யுத்தத்துக்கு காரணம் இந்த முதலாளித்துவ லாபத்துக்காண போட்டி என்பதை அனைத்து தரப்பும் மறைத்து விடுகின்றன. நிஜமான எதிரி நமது கண்ணில் படாது வைத்துக்கொள்ள இது உதவுகிறது. எதிரியின் விம்பங்களை பார்த்து நாம் புகைந்து கொள்கிறோம் – உயிரை கொடுத்து போராடவும் தாயராகி விடுகிறோம். இதுதான் இன்று உக்ரேனின் ஆயிரக்கணக்கான உயிர்களின் நிலவரம்.