போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக!

புட்டின் உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியுள்ளார் – போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக!

  • பிப்ரவரி 24 ஆம் தேதி தொழிலாளர்களின் சர்வதேசக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை.

 

மொழிபெயர்ப்பு ரேஷ்மி

பிப்ரவரி 24, வியாழன் அன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைனில் “சிறப்பு இராணுவ நடவடிக்கை” மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். சோசலிஸ்டுகள் மற்றும் பரந்த தொழிலாள வர்க்க இயக்கம் புடினின் இராணுவ படையெடுப்பை கண்டிக்க வேண்டும், இது பல அப்பாவி பொதுமக்களுக்கு மரணத்தையும் பரவலான அழிவையும் கொண்டுவரும். சி.டபிள்யூ.ஐ (CWI – Committee for a Workers’ International) அனைத்து முதலாளித்துவ போர்களையும் தொழிலாளர்களுக்கு எதிராகத் தொழிலாளர்களை நிறுத்தும் பிற்போக்கு தேசிய பேரினவாதத்தையும் உறுதியாக எதிர்க்கிறது. இப்போது உக்ரேனில் இராணுவ பதட்டங்கள் அதிகரிப்பதற்கு காரணமான நேட்டோ மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ சக்திகளையும் சி.டபிள்யூ.ஐ எதிர்க்கிறது. இதற்குப் பலியாகப்போவது மாஸ்கோ, கியேவ் மற்றும் வாஷிங்டனில் உள்ள முதலாளிகளோ ஆளும் வர்கமோ அல்ல, உக்ரேன், ரஷ்யா மற்றும் அதற்கு அப்பால் உள்ள தொழிலாள வர்க்கம் தான் போருக்குப் பலியாகப் போகிறது.  

சர்வதேச தொழிலாளர் இயக்கம், ஆளும் வர்க்கங்கள் மற்றும் முதலாளித்துவ சார்பு அரசியல் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக, போருக்கு எதிராக அணிதிரள வேண்டும். உக்ரேனில் போர் தொடர்பாக முதலாளித்துவ சார்பு சக்திகளின் அழுத்தங்களுக்குச் சோசலிஸ்டுகள் இணங்காமல் இருக்க வேண்டும். தொழிலாளர்கள், இளைஞர்களின் போராட்டங்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் வர்க்க நலன்களை ஒதுக்கி வைக்கும் முயற்சிகளை சோசலிஸ்டுகள் எதிர்க்க வேண்டும்.  

நாங்கள் சொல்கிறோம்: உக்ரைனில் போரை நிறுத்துங்கள்; ரஷ்ய படைகளை திரும்பப் பெற்று குண்டுவெடிப்பை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்; கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ படைகளை திரும்பப்  பெறுங்கள்; இனப் பாகுபாடு மற்றும் அழிப்பு வேண்டாம்; அனைத்து சிறுபான்மையினருக்கும் சுயநிர்ணய உரிமை மற்றும் முழு ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவு; போர்வெறியர்கள், வறுமை, வேலையின்மை, இனப் பாகுபாட்டு போர்களை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான பொதுவான போராட்டம் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு ஆதரவு.

போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் இத்தருவாயில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த மோதலில், இரு தரப்பினராலும், முடிவில்லாத பிரச்சாரம் மற்றும் எதிர் பிரச்சாரம் வைக்கப்படுகின்றது.

கியேவ் மற்றும் கார்கோவ் நகரங்கள் உட்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாகச் செய்தி பதிவுகள் வெளியாகியுள்ளன. ரஷ்யப் படைகள் ஒடெசாவில் இருப்பதாக உக்ரேனிய அரசாங்கம் கூறியது, இது மாஸ்கோவால் மறுக்கப்பட்டது. உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பை மட்டுமே அவர்கள் குறிவைத்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள், உள்கட்டமைப்பு, விமான தளங்கள் மற்றும் பெரும் படைகளை தாக்கியதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. உக்ரைனின் வடக்கு எல்லையிலிருந்து பெலாரஸ், ரஷ்யாவுடனான அதன் கிழக்கு எல்லை மற்றும் கிரிமியாவிலிருந்து தெற்கே ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தியதாக மேற்கத்திய பத்திரிகைகள் கூறுகின்றன.

ரஷ்ய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, உக்ரைனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு தொலைக்காட்சியில் உரையாற்றினார், “போர் அனுபவமுள்ள அனைவரையும்” ஆயுதம் ஏந்தி  இந்தச் சூழலை எதிர்க்க அழைப்பு விடுத்தார்.

நிலம், வான்வெளி, கடல் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளை உக்ரைனுக்கு வழங்கப்போவதாக நேட்டோ தெரிவித்தது. 

அவரது நடவடிக்கைகளை நியாயப்படுத்த, புட்டின் ஒரு உரையில், ரஷ்யா உக்ரைனை “ஆக்கிரமிக்காது” என்று கூறினார்.

நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை புட்டின் கண்டித்துள்ளார். யூகோஸ்லாவியாவில் தலையிட்ட, அதன் முறிவுக்கு வழிவகுத்து, மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் பேரழிவுகரமான போர்களை நடத்திய மேற்கத்திய சக்திகளின் பாசாங்குத்தனத்தை அவர் தாக்கினார்.

ரஷ்யாவின் எல்லைகளில் விரிவடைந்துள்ள, அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமையிலான நேட்டோவின் இரத்தம் தோய்ந்த வரலாற்றை ஆதரிக்கவில்லை என்றாலும், சோசலிஸ்டுகள் மற்றும் தொழிலாளர் இயக்கம், ஒட்டுமொத்தமாக, உக்ரேனில் ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டை எதிர்க்க வேண்டும். நிச்சயமாக, உக்ரேனில் உள்ள ரஷ்ய இனத்தவர்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர், மேலும் டொனெட்ஸ்கிலிருந்து பிரிந்த ரஷ்ய சார்புப் பகுதி சமீபத்திய நாட்களில் உக்ரேனிய இராணுவ ஷெல் துப்பாக்கிச் சூட்டிற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர், ஆனால் ரஷ்ய இராணுவ போரின் பொது இதை மேற்கொள்ள முடியாது. புட்டின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் அல்லது ரஷ்யாவின் உழைக்கும் மக்களின் நலன்களுக்காகச் செயல்படவில்லை. அவரது எதேச்சாதிகார ஆட்சி முதலாளிகளின் நலன்களுக்கு அடிபணிந்தும் தொழிலாளர் நலன்களுக்கு விரோதமாகவும் உள்ளது. புட்டினுக்கு பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஏகாதிபத்திய லட்சியங்கள் உள்ளன. அவர் சமீபத்தில் கஜகஸ்தானில் நடைபெறும் போராட்டங்களுக்கு எதிராக அவ்வாட்சிக்கு ஆதரவு அளிக்கப் படைகளை அனுப்பினார் மற்றும் சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை அதிகாரத்தில் வைத்திருக்கத் தலையிட்டார். டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்களும், உக்ரைனின் அனைத்து ரஷ்ய இன மக்களும் மாஸ்கோவிற்கு வெறும் பகடை காய்களே.

நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம்

ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் உட்பட உக்ரைனின் எல்லையில் 100,000 ரஷ்ய துருப்புக்கள் குவிந்ததால் தற்போதைய நெருக்கடி 2021 இன் இறுதியில் தொடங்கியது. நேட்டோ எல்லைகளை நோக்கி விரிவடைவதை புட்டின் கண்டித்தார், தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த ரஷ்ய தேசியவாதத்தைத் தூண்டினார். இதையொட்டி, ரஷ்யாவின் அனைத்து கோரிக்கைகளையும், தீவிரமான பேச்சுக்களையும் நிராகரித்து, அதே நேரத்தில், அப்பகுதியில் உள்ள உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கிய பைடனின் நிலைப்பாடு, ரஷ்ய ஆக்கிரமிப்பை ஊக்குவித்து. உக்ரைனில் ரஷ்யாவின் இருப்பை உறுதிப்படுத்தவும், ‘தரவுகளை உருவாக்கவும்‘, உக்ரைனை பலவீனப்படுத்தவும், பிளவுபடுத்தி உடைந்த நாட்டை நேட்டோவில் சேருவதைத் தடுக்கவும் இதுதான் வாய்ப்பு என்று புட்டின் முடிவு செய்திருக்கக்கூடும்.

நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கம் தங்கள் சொந்த போர்க்குணமிக்க அரசாங்கங்களின் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும். மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று குவித்த கோவிட் கொள்கைகளுக்குத் தலைமை தாங்கி, இப்போது ஊரடங்கு காலத்தின் பொருளாதாரச் செலவைத் தொழிலாளர்களிடமிருந்து பெற முயற்சிக்கும் இந்த முதலாளித்துவ சார்பு அரசாங்கங்களின் நோக்கங்களில் தொழிலாள வர்க்கம் ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும்? மேற்கத்திய சக்திகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆளும் உயரடுக்கு மற்றும் முதலாளி வர்க்க நிலைப்பாட்டிலிருந்து செயல்படுகின்றன. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக, கடந்த மூன்று தசாப்தங்களாக நாம் கண்டது போல், சிறிய நாடுகளை ஆக்கிரமிக்க அது தயங்கவில்லை.

உக்ரைனின் உழைக்கும் மக்களுக்கு ரஷ்ய இராணுவ அச்சுறுத்தல்கள், வற்புறுத்தல் மற்றும் தாக்குதல்கள் இல்லாமல் வாழ உரிமை உண்டு என்றாலும், அவர்கள் ஜெலென்ஸ்கி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது. புட்டினின் இராணுவ நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, ஜெலென்ஸ்கி இராணுவச் சட்டத்தைசெயல்படுத்தினார். பிப்ரவரி மாதம் 23ம் தேதி அறிவிக்கப்பட்ட 30 நாள் அவசரகால நிலை நடைமுறையில் இருந்தபோதே இதுவும் செயல்படுத்தப்பட்டது. இது அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டங்களை தடை செய்வது உட்பட ஜனாதிபதிக்கு நீண்டகால அதிகாரங்களை வழங்குகிறது. இந்த நிலைமைகளின் கீழ், தொழிலாளர்களின் உரிமைகள் ரத்து செய்யப்படும். 2014ல் நடந்த சதியால் மேற்கத்திய சார்பு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. அதிலிருந்து, உக்ரைன் வலதுசாரி, சர்வாதிகார அரசாங்கங்களால் ஆளப்பட்டு வருகிறது, இதில் தீவிர வலதுசாரி தேசியவாதிகள் மற்றும் பாசிசக் கூறுகள் உள்ளன, அவை ஜனநாயக உரிமைகளைக் குறைக்கின்றன மற்றும் தொழிலாளர் இயக்கங்களுக்கு எதிராக உள்ளன.

சோசலிஸ்டுகள் மற்றும் பரந்த தொழிலாளர் இயக்கம் உக்ரைன் மற்றும் அதன் பிராந்தியத்தில் நடக்கும் போரை எதிர்க்க வேண்டும், இதில் தொழிலாள வர்க்க மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து இடங்களிலும் ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்க ஒற்றுமை அவசியம். ஜனநாயக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட தற்காப்பு உட்பட உக்ரேனில் நடக்கும் உண்மையான சமூக ஒற்றுமைக்கான எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க வேண்டும். உக்ரைன், ரஷ்யா மற்றும் பிராந்தியம் முழுவதிலும் சுதந்திரமான தொழிலாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இதில் துணிச்சலான சோசலிச கொள்கைகளுடன் சுதந்திரமான தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன கட்சிகளை கட்டமைப்பதும் அடங்கும். ஒரு சோசலிச வேலைத்திட்டம், உள்நாட்டு போர் வெறியர்கள், முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்க்க, அனைத்து தேசிய மற்றும் இன எல்லைகளுக்கு அப்பால் தொழிலாளர்களை ஒன்றிணைக்க முடியும்.

சி.டபிள்யூ.ஐ சிறுபான்மையினரின் கலாச்சார, மொழி மற்றும் பிற ஜனநாயக உரிமைகளை ஆதரிக்கிறது, மேலும் நாடுகளின் சுயநிர்ணய உரிமை, அவை விரும்பினால் பிரிந்து செல்வதற்கான உரிமையையும் ஆதரிக்கிறது. ஆனால் இவ்விடயம் நேட்டோ சக்திகள் மற்றும் மாஸ்கோவால் ‘சுய நிர்ணயம்’ என்ற தவறாக வரையறுக்கப்பட்டுள்ளது. பைடன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு உக்ரேனுக்கான சுயநிர்ணயம் என்பது மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் அதை மேலும் கொண்டுவருவதாகும். புட்டினைப் பொறுத்தவரை, சுயநிர்ணயம் என்பது டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் உக்ரேனில் உள்ள பிற இடங்களில் ரஷ்ய முதலாளித்துவ மேலாதிக்கத்தைக் குறிக்கிறது.

புட்டினின் போர் நோக்கம் என்ன?

இந்தப் படையெடுப்பில், உக்ரைனில் புட்டினின் நோக்கங்கள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் உக்ரைனுக்கு எதிராகப் பெரும் இராணுவ சக்தியைக் கொண்டுள்ளார். 215,000 இராணுவத்தைக் கொண்ட உக்ரைன் இராணுவத்தை தகர்க்க விரும்புவதாக அவர் கூறினார்.

“ரஷ்யர்களுக்கு மேலாதிக்கம் உள்ளது, அவர்கள் திறம்பட செயல்பட முடியும், நேரம் கொடுக்கப்பட்டால், அவர்கள் எங்கும் செல்ல முடியும்… அவர்கள் விரும்பிய அளவுக்கு விரைவாகப் பிரதேசத்தைக் கைப்பற்ற முடியும்” என்று ஒரு மேற்கத்திய உளவுத்துறை மூத்த அதிகாரிபைனான்சியல் டைம்ஸிடம் கூறினார். அவர் தொடர்ந்தார் “…உக்ரேனியர்கள் எந்த அளவிற்கு சண்டைபோட்டு புட்டினின் மூக்கை உடைப்பார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று.”

“இது ஒரு குறுகிய கால நடவடிக்கையாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது… இது ஒரு அதிகபட்ச அணுகுமுறைபோல் தெரிகிறது, ஆனால் டான்பாஸை திரும்பப் பெறுவதற்கான ஒரு ஏமாற்று உத்தியாக இது இருக்கலாம்” என்று மாத்தியூ பவுலேக் ஃபைனான்சியல் டைம்ஸ்க்கு (லண்டன்) கருத்து தெரிவித்துள்ளார். “இவை அனைத்தும் முடிந்தவுடன் உக்ரைனின் வரைபடம் எப்படி இருக்கும்?”

 

புட்டின் உண்மையில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மீதான ரஷ்ய கட்டுப்பாட்டை ஒருங்கிணைத்து, மேலும் டான்பாஸ் பகுதிக்குள் தள்ளுவதற்கும், கிரிமியாவிற்கு ஒரு நிலப் பாலத்தைஉருவாக்குவதற்கும் உத்தேசித்திருக்கலாம். இருப்பினும், இந்தப் பிரதேசங்களுக்குக் கடுமையான மற்றும் பெரும் விலை கொடுக்கக்கூடிய போராட்டமாக இருக்கக்கூடும்.

உக்ரைன் இராணுவத்திற்கு எதிராக ரஷ்யா பெரும் இராணுவ சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் கோட்பாட்டளவில் முழு நாட்டையும் ஆக்கிரமிக்க முடியும். புட்டின் அது தனது நோக்கம் இல்லை என்று கூறுகிறார். அவ்வாறு செய்தால் அது புட்டின் எடுக்கும் மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கையாக இருக்கும். அது பெரும் அளவில் அழிவைக் கொண்டுவரும். உக்ரைனை எந்தக் காலத்திற்கும் ஆக்கிரமிக்க முயற்சிப்பது பெரும் செலவை ஏற்படுத்தும் மற்றும் இறுதியில் வெற்றிபெற முடியாது. ரஷ்யப் படைகள் நவீன ஆயுதங்களை ஏந்திய பெருமளவில் விரோதமான மக்களை எதிர்கொள்ளும். புட்டின் “ஆட்சி மாற்றத்திற்கு” செல்லக்கூடும் என்றும், “உக்ரேனிய ஆயுதப் படைகளைச் சமாளிப்பதற்கும், அரசு கைப்பற்றப்பட்ட பிறகு எதிர்ப்புப் போராளிகளிடமிருந்து கொரில்லா போரை அடக்குவதற்கும் உக்ரேனில் 600,000 படைகள் தேவைப்படும்” என்றும் மேற்கத்திய உளவுத்துறை கூறுகிறது.

புட்டின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்கை “விடுதலை” செய்யும் நேரத்தில் அங்கேயும் உள்நாட்டிலும் தற்காலிக ஆதரவை பெறலாம். உக்ரைன் மீதான படையெடுப்பு, ரஷ்யாவில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் அதிகரித்து வரும் கோபத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் என்று அவர் நம்புகிறார். ஆனால் எந்தவொரு நீண்ட கால இராணுவ நடவடிக்கையும், குறிப்பாக உக்ரேனியர்களாக இருக்கும் பகுதிகளில், பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்படுவது உள்நாட்டு மனநிலையை புட்டினுக்கு எதிராக மாற்றும்.

உக்ரைனில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு ரஷ்யாவை நேரடியாக எதிர்கொள்ளும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று நேட்டோ சக்திகள் கூறியுள்ளன – இது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நேட்டோ மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் நன்மை தராது. ஆயினும்கூட, பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உக்ரைன் நெருக்கடி ஒரு பரந்த போருக்கு இட்டுச் செல்வதைப் பற்றிப் பயப்படுகிறார்கள். மேற்கத்திய அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் வெறித்தனமான பிரச்சாரத்திற்கு பல மாதங்கள் உட்பட்ட பின்னர் அவர்களுக்கு இந்த அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற சக்திகள் மோதலுக்கு இழுக்கப்படும் ஆபத்து உள்ளது. “ரஷ்ய விமானப்படை உக்ரேனியர்களை போலந்து வான்வெளிக்குள் துரத்தக்கூடும் என்று மேற்கத்திய படைகளின் தலைவர்கள் கவலைப்படுகிறார்கள். அது ரஷ்யர்களுக்கும் நேட்டோ உறுப்புநடன போலந்துக்கும் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கும்” என்று கிதியோன் ராச்மேன் எச்சரிக்கிறார் (பைனான்சியல் டைம்ஸ், 24/02/22).

உலகின் முக்கிய ஏகாதிபத்திய இராணுவ சக்தியான நேட்டோ அல்லது ரஷ்யாவின் சிறிய ஆனால் மிருகத்தனமான ஏகாதிபத்திய சக்தி – இந்த மோதலில் இரு தரப்பையும் ஆதரிப்பதில் தொழிலாள வர்க்க மக்களுக்கு ஆர்வம் இல்லை.

தடைகள்

உக்ரைனிற்கு ஆயுதங்களை வழங்கி அண்டை நாடான நேட்டோ உறுப்பு நாடுகளில் தங்கள் படைகளை அதிகரிப்பதைத் தவிர, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் புட்டினின் நடவடிக்கைகளுக்கு முன்னால் இராணுவ அடிப்படையில் பெரும்பாலும் வலிமையற்றவர்களாகவே உள்ளனர். அவர்கள் தற்போது தனிப்பட்ட முதலாளிகளுக்கு எதிராகப் புதிய தடைகளை விதிக்கும் அளவிற்கு நடவடிக்கைகளில் சுருங்கியுள்ளனர். ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் Nord 2 எரிவாயு குழாய் பெர்லினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலக சந்தைகளுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப இணைப்புகளை துண்டிப்பது உட்பட வலுவான தடைகள் விதிக்கப்படும் அது ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அச்சுறுத்தப்படுகின்றன. சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கம் முதலாளித்துவ அரசுகளின் தடைகளை எதிர்க்க வேண்டும், இது ரஷ்யாவில் உள்ள தொழிலாள வர்க்க மக்களை விரைவில் அல்லது பின்னர் கடுமையாகப் பாதிக்கும். இது உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடாக இருந்தாலும், பல இயற்கை வளங்களைக் கொண்ட ரஷ்யா, இத்தாலியை விடச் சிறிய ஜிடிபிஐக் கொண்டுள்ளது மற்றும் இங்கிலாந்தில் உள்ள மக்களின் சராசரி வாழ்க்கைத் தரத்தில் கால் பங்கிற்கும் குறைவாக உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், மாஸ்கோ மேலும் விதிக்கப்பட வாய்ப்புள்ள தடைகளைத் தணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 2014 இல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோது இறைச்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் ஏற்றுமதிகள் தடைசெய்யப்பட்ட பின்னர் பொருளாதாரம் மிகவும் தன்னிறைவு பெற்றுள்ளது. சைபீரியாவின் பவர் ஆஃப் சைபீரியா எரிவாயுக் குழாய் சீனாவிற்கு ரஷ்ய அரசின் பல்வகைப்படுத்தலுக்கு ஒரு உதாரணம் ஆகும், பவர் ஆஃப் சைபீரியா 2 ஏற்கனவே புட்டினால் அங்கீகரிக்கப்பட்டது.

கணிசமான நிதி இருப்புக்களை உருவாக்க எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியின் வருவாயையும் ரஷ்யா பயன்படுத்தியுள்ளது. இது சுமார் $500 பில்லியன் வெளிநாட்டு நாணய இருப்பு மற்றும் சர்வதேச தரத்தின்படி மிகக் குறைந்த தேசிய கடன் அளவுகளைக் கொண்டுள்ளது.

ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை ஒப்புக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் கூடுகிறது ஆனால் இது இரு தரப்பிலும் ஆபத்தை ஏற்படுத்தும். ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் மற்றும் நிலக்கரியில் 40% மற்றும் அதன் எரிவாயுவில் 20% வழங்குகிறது. ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால், அது ரஷ்ய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% குறைக்கப்படும் மற்றும் எண்ணெய் மதிப்பு 1.2% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் மாற்று ஆதாரங்களைத் தேடுகின்றன. ஆனால் விநியோகங்களில் மீதான தடை வணிகங்கள் மற்றும் வீடுகளுக்கான எரிபொருளுக்கு அதிக விலை கொடுக்க வழிவகுக்கும், இது ஐரோப்பிய மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் ஆழமான பிரச்சினைகளை துரிதப்படுத்தும். கார் உதிரிபாகங்கள் உட்பட உலகளாவிய உற்பத்திக்கான முக்கிய கூறுகளின் விநியோகராகவும்  ரஷ்யா உள்ளது, மேலும் இந்த விநியோகங்களைக் குறைப்பது தொழில் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.

பரந்த அளவில், உக்ரைன் மோதலை இன்னும் மிகப்பெரிய இராணுவ சக்தியாக இருக்கும் அமெரிக்காவின் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார சக்திக்கும், சீனாவின் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் இராணுவ சக்திக்கும் இடையே நிலவும் போட்டியின் கோணத்திலிருந்து பார்க்க வேண்டும். பைடன் சமீப வாரங்களில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார் (ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டுவர மின்ஸ்க் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் யோசனையை நிராகரித்தார், இதை ஜெர்மனியும் பிரான்சும் முன்வைத்தது), ஏனெனில் அவர் சீனாவிற்கு வலுவான சமிக்ஞையை அனுப்ப விரும்பினார். உண்மையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், தைவான் மீதான உரிமைகோரல்கள் மற்றும் சீனாவுடன் அதனை மீண்டும் ஒஒருங்கிணைப்பதைகருத்தில் கொண்டு, உக்ரைனை காட்டிலும் புட்டினை அதிகம் ஆதரிக்கிறார்.

2000 மற்றும் 2017 க்கு இடையில் 151 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய தொகையைப் பெய்ஜிங்கின் உத்தியோகபூர்வ நிறுவனங்களிடமிருந்து கடனாக ரஷ்யா பெற்றுள்ளது. பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, சீனா ரஷ்யாவின் தடைகளுக்கு “பெரும்பாலும் வளம் சம்பந்தமான ஒப்பந்தங்கள் மற்றும் பல அரசுக்குச் சொந்தமான வங்கிகளின் வழியாகக் கடன் வழங்குவதன் மூலம் அதன் சொந்த பொருளாதார மற்றும் நிதி நலன்களுக்குச் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க முயல்கிறது”. பெய்ஜிங், புட்டினை ஆதரிப்பதற்கும் சீனாவின் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் உலகளாவிய வர்த்தக இணைப்புகள் தொடர்பாகவும், சொந்த நலன்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தத் தொடர்ந்து முயற்சிக்கும்.

உக்ரேனில் நடக்கும் போர், உலக அளவில் விரோதமான இராணுவ முகாம்களின் வளர்ச்சியின் மற்றொரு ஆபத்தான விரிவாக்கமாகும். சோசலிஸ்டுகள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய பணி, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும், உள்நாட்டில் அவர்களது போர்வெறி ஆளும் வர்க்கத்தையும் எதிர்ப்பதாகும்; ஒரு சோசலிச சமுதாயத்திற்கான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகவும், அனைத்து தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மையினரின் வற்புறுத்தல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டும்.

 

  • உக்ரைனில் போரை நிறுத்து
  • ரஷ்ய படைகளை திரும்பப்பெற்று குண்டுவீச்சை நிறுத்து 
  • கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ படைகளை திரும்பப்பெறு 
  • போருக்கு எதிராகத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்பு
  • ஆயுதத் தொழிலை அபகரித்து உற்பத்தியைச் சமூக பயன்பாட்டிற்காகப் பொது உடைமையாக மாற்று 
  • முதலாளித்துவப் போர்களுக்கு நாங்கள் விலை கொடுக்கமாட்டோம் – மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகளைக் கட்டுப்படுத்து, ஜனநாயகத் தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தின் கீழ் மின்சார துறைகளை தேசியமயப்படுத்து
  • முதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் செல்வம் மற்றும் சொத்துக்களை தேசியமயப்படுத்து – தொழிலாள வர்க்கத்தின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டுடன் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை பொது உடைமையாக்கு
  • உக்ரைன், ரஷ்யா மற்றும் பிராந்தியத்தில் சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன தொழிலாளர் கட்சிகளை கட்டியெழுப்ப ஆதரவு
  • இனப் பிளவு மற்றும் இன அழிப்பு வேண்டாம்; அனைத்து சிறுபான்மையினரின் சுயநிர்ணய உரிமை மற்றும் முழு ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவு
  • வறுமை, வேலையின்மை, இனப் பிளவுகள் மற்றும் போர்களை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான பொதுவான போராட்டங்களுக்கும், தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும் ஆதரவு. சோசலிச சமுதாயத்தை உருவாக்க ஆதரவு!