Gotta go home பேராட்டமும் , வெகுஜன போராட்டத்தை கட்டியெழுப்ப தவறிய தமிழ் தலைவர்களும்

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ் அமைப்புக்களும், தங்களைத் தாங்களே  தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களும்  இதுவரை தெளிவாக ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் ‘ராஜபக்ஷவைத் தவிர வேறு எந்த பேயுக்கும் ஆதரவு’ என்ற நிலைப்பாட்டுடன், இந்தத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிரான போரை வழிநடத்திய முன்னாள் ஜெனரல் சரத்பொன்சேக்கா, வலதுசாரி யூ.என்.பி தலைமை மற்றும் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான கூட்டணிக்கு கூட ஆதரவு அளித்துள்ளனர். தமிழ்த் தலைவர்களின் முழு ஆதரவைப் பெற்ற அந்த சக்திகளுக்கு, ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் இருந்ததில்லை. அத்தோடு ‘இதயத்தால் இணைந்த’ அவர்கள் தமிழர்களுக்கு எந்தச் சலுகையும் கொடுக்கவில்லை அல்லது தமிழர்கள் மத்தியில் இருக்கும் இந்த சிங்கள தலைமைகளால் இலகுவாக நிறைவேற்ற கூடிய  முக்கியமான கோரிக்கைகளை கூட  நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் தற்போதைய வெகுஜன எதிர்ப்பு இயக்கம் ராஜபக்ச குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மிகப்பெரிய உறுதியை வெளிப்படுத்தியுள்ளது. அத்தோடு போராடடத்தில் ஈடுபடுகின்ற  சில பிரிவினர் தமிழர்களின் சில கோரிக்கைகளை ஆதரிக்க முன்வந்துள்ளனர். ஆயினும் இன்னும் எமது தமிழ்த் தலைவர்கள்  இந்த Gota Go Home  போராடடத்துக்கு  முழு ஆதரவை வழங்க மறுப்பது மட்டுமல்லாமல், பிரதான தமிழ் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சில பிரிவினர் தமிழர்களை போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தீவிரமாக கேட்டுக்கொள்கிறார்கள். அவர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட இரண்டு முக்கிய காரணங்கள்: “இது அரசாங்கத்தை மாற்றுவதற்கான சிங்கள மக்களின் போராட்டம், இதில் தமிழர்கள் ஈடுபட வேண்டியதில்லை” மற்றும் “தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஒரு சிங்களவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அதனால் தமிழர்கள் வீதிக்கு வந்து  போராட மாட்டார்கள்”.

தமிழர்கள் கொடூரமான ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்டபொழுது தென்பகுதியில் பெரும்பான்மை  அனுதாபம் காட்டவில்லை .இது தமிழ் மக்கள் மத்தியில் கசப்பான வடுவாக இருக்கின்றது. 2009 இல் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக பச்சைக் கொலை செய்யப்பட்ட்டபோது  போது  தமிழர்களுக்கு எவருமே உதவ முன்வரவில்லை.கொலைகளை நிறுத்தும் படி இங்கிலாந்து மற்றும் பல மேற்கு உலகத்தின் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இரவு பகலாக  வீதிக்கு வந்து போராடிய  போது பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்த போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி என்று தங்களை தாங்களே  அழைத்துக்கொள்ளும் சிங்கள இனவாத  ஜேவிபி அப்போது ராஜபக்சே ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் உள்ள ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகள் போரை மறைமுகமாக ஆதரித்தன. தமிழ் சமூகத்தினுள் இருந்த பல புலிகளுக்கு எதிரான பிரிவினரும் மௌனம் காத்ததுடன், போராட்டக்காரர்களை புலி ஆதரவாளர்கள் எனக் கூறி புறங்கையால் ஒதுக்கிவிட்டனர்.

மேற்கு உலகின் ஒவ்வொரு நாட்டிலும் மனிதஉரிமைகளை காக்கும் தூண் எனப் பிரச்சாரம் செய்கின்ற  வெகுஜன ஊடகங்கள் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த படுகொலைகளை  புறக்கணித்தன. ஒரு பெட்டி செய்தி கூட போடவில்லை. இந்தப் பிரச்சினையில் ஐநா நிறைவேற்றிய முதல் தீர்மானம், போரை முடிவுக்குக் கொண்டுவந்த இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகும். பிரித்தானியாவில் ‘Stop the War Coalition’ என்றழைக்கப்படும் அமைப்பும் கூட, இந்த போர் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கைகளை மீறி, தனது மாநாட்டில் ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற மறுத்தது. இலங்கை அரசு போர்ப் பகுதியில் தமிழர்களைச் சுற்றி வளைத்து சிறு நிலப்பகுதிக்குள் விரட்டி அடிக்கத் தொடங்கிய காலத்தில் இது நடந்தது. அதே நேரம்  புலம்பெயர் தேசங்களிலும், இலங்கையிலும் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் தலைவர்களும் 2009 இல் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்து என்ற  வெகுஜனப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. பிரித்தானிய பாராளுமன்றமும் ஐ.நாவும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று கூறி பலர் போராட்டக்காரர்களுக்கு எதிராக வாதிட்டனர். யுத்தம் முடிவடைந்த பின்னர், இந்த சோகோல்டு தமிழ் தலைவர்கள்  ஐ.நா. மற்றும் மேற்கு பாராளுமன்றங்களை கெஞ்சுவதே  தமிழர் விடுதலை பெரும் ஒரேஒரு வழி முறையாக  சொல்லபடுகிறது.

தமிழர் பகுதிகளில் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்த இலங்கையில் யாரும் முன்வரவில்லை. அவர்களைத் தடுத்து நிறுத்தியது இராணுவ அடக்குமுறை பயம் அல்ல, மாறாக அவர்களின் அரசியல். ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) மட்டுமே இலங்கையில் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்ற ஒரே அமைப்பு என்பதை மிகைப்படுத்தாமல் இங்கு குறிப்பிட வேண்டும் – மேலும் போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. ‘Stop the Slaughter of Tamils’’ பிரச்சார இயக்கத்தின்  இணை நிறுவனர்களாகவும் ஆனார்கள், ‘Stop the Slaughter of Tamils’’ பின்னர் ‘Tamil Solidarity ’ ஆக மாறியது. இன்னும் சில சிறிய ட்ரொட்ஸ்கிச அமைப்புகள் போர் மற்றும் கொலைக்கு எதிராக வலுவாக நின்றிருந்தன. ஆனால் அவர்கள் இந்த படுகொலைக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிவிட்டனர்.

தமிழ்த் தலைவர்கள் மற்றும் பிற வலதுசாரி தனிநபர்களின் முழுமையான பாசாங்குத்தனத்திற்கும் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இலங்கையின் தற்போதைய நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட/ பாதிக்கப்படப்போகின்றவர்கள்  தமிழ் மக்கள்தான் என்ற உண்மையை இந்த ‘சோகோல்டு ’தமிழ் தலைவர்கள் மறைத்து விடுகின்றார்கள். எரிபொருள், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை தமிழர்கள் ஏற்று பட்டினி கிடக்க வேண்டுமா? இந்த நெருக்கடியால் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையா? தற்போதைய பொருளாதாரச் சீரழிவு பற்றிக் குரல் கொடுக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு உபதேசம் செய்வது ஏன்? பிறகு எப்படி அடுத்த தேர்தலில் வாக்களிக்கச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? ‘சிங்களப் பாராளுமன்றம்’ எனப்படும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தலைவர்கள் அமர்ந்து இன்னும் பெரும் சம்பளம் வாங்குவது ஏன்? 

‘தெற்கு அரசியலில்’ தமிழர்களுக்கு எந்தவிதமான வகிபாகமும்  இல்லை என்று வாதிடுபவர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதற்காக இலங்கை பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதை மட்டும் குறிக்குமா? பாராளுமன்றம் முன்னெடுக்கும் கொள்கைகள் எதிலும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கு கருத்து இருக்க வேண்டாமா? பிறகு ஏன் உங்களுக்கு தேர்தல் கட்சி தேவை? மேலும் ஏன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்? ஒரு சில தலைவர்களை தவிர பாராளுமன்றத்துக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டதமிழ்  ‘தலைவர்களிடம்’ ஒரு  பொதுவான ஒரு விஷயம் இருந்தது. சமீப காலமாக சில மாற்றங்கள் ஏற்பட்டாலும்,அவர்கள் தொடர்ந்து தெற்கில் தங்களுடைய பாரம்பரிய வலதுசாரி கூட்டாளிகளுடன் நின்று தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளைத் தாக்கும் கொள்கைகளுக்கு வாக்களித்தனர். பல தசாப்தங்களாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரலாறு இதுதான். அவர்களுக்கான தமிழ்த் தேசியச் சொல்லாடல்கள் அவர்களின் வலதுசாரி அரசியல் நிலைப்பாடுகளை மறைப்பதற்கு ஒரு மறைப்பாக மட்டுமே செயல்பட்டன.

போராட்டம்

புலம்பெயர் தலைவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள். எந்தவொரு போராட்டத்தையும் ஆதரிப்பதை விட – அல்லது உண்மையான எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதைக் காட்டிலும்- மேற்கத்திய அரசாங்கங்களின் பின்னால் வால் பிடிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். பொதுவாக தமிழகத்தில் தமிழ் சகோதர, சகோதரிகள் மோடிக்கு எதிராக நின்ற போதிலும் அவர்கள் தங்களை மோடி ஆட்சியின் நண்பர்களாகவே கருதுகின்றனர். டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது சிலர் ‘தமிழர்களுக்காக ட்ரம்ப்’ கூட கட்டினார்கள். இதுதான் ஈழத் தமிழர்களிடம் இருக்கும் கீழ்த்தரமான அரசியல் தலைமை. பெரும்பாலானவர்கள் கற்பனையான நிலையில் வாழ்கின்றனர். சில வசதி படைத்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் இப்போது அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள். புலம்பெயர் இளைஞர்களின் அரசியல் இடத்தை அவர்கள் ஆக்கிரமித்து, தொழிலாள வர்க்க இளைஞர்களை விளிம்பிற்குத் தள்ளுகிறார்கள். எவ்வாறாயினும், அதன் விளைவாக ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் தமிழர்களின் போராட்டத்தை கட்டியெழுப்புவதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று யாரும் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் உண்மையில், அவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் தீவிர போராட்டத்தை வளர்ப்பதற்கு எதிராக நிற்கின்றனர்.

தமிழ்த் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இதுவரை கோட்டாபய ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் அல்லது தமிழ் மக்கள் வெளியிவந்து போராடுமாறு  அழைப்பு விடுக்கவில்லை. அவர்களில் பெரும்பாலோர் மக்கள் மயப்படுத்தப்படட போராடடத்தில்  நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல, எந்தவொரு கோரிக்கைகள் தொடர்பாகவும் தமிழர்களின் வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு எதையும் செய்ததில்லை.

கோட்டாபய அரசுக்கு எதிராக தமிழர் பகுதிகளில் பாரிய கோபம் நிலவுகிறது. இப்போது சீரழிந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளால் இந்த கோபம் மேலும் அதிகரித்து இருக்கின்றது. ஆயினும் இதுவரையில் தமிழர் பகுதிகளில் எந்தவிதமான மக்கள் மயப்படுத்தபட போராட்டங்களின் முன்னெடுப்புகளும் இல்லை(மலையகப் பகுதிகளில் வெகுஜனப் போராட்டங்கள் நடைபெற்றன).தமிழ் மக்கள் மீதான இனவாதத்தாக்குதல் இன்றி தற்போதைய  GOTA GO HOME போராட்டம் வளர்ச்சியடையும் பட்சசத்தில் ‘சோ கோல்டு ’தமிழ் தலைவர்கள் எவ்வளவுக்கு போராட்டத்தை பின் இழுத்தாலும் அவர்களையும் மீறி இது வடக்கு கிழக்குக்கு பரவப்போகின்றது. இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்பு அலையானது ஒரு வலுவான, வெற்றிகரமான இயக்கமாக மாற இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும். இதுவரை இந்த போராட்டங்களின் மையம் கொழும்புதான். வடக்கில் மட்டுமன்றி இலங்கையின் பல பிரதேசங்களில்  இன்னும் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளைக் காணவில்லை. எவ்வாறாயினும், தலைநகரில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

செயல்

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பலம் வாய்ந்த தமிழ் இளைஞர் குழுவாக இருந்த தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), (தற்போது கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில்), அரசியல் உள்ளடக்கம் இல்லாத அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற வழமையான கோரிக்கையைத் தவிர வேறு எதுவும் அவர்களின் அறிக்கையில் இல்லை. ஆனால் வழமையான உள்ளடக்கமாக சர்வதேச சமூகம் எமது கோரிக்கைகளை அங்கிகரிக்கவேண்டும் என்ற வசன பபிரயோகத்தை பயன்படுத்த அவர்கள் மறக்கவில்லை. வடக்கு கிழக்கில்  உள்ள இளைஞர்கள் பல விடயங்களில் தலைமையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் சிலர், வெளியில் வந்து போராட்டம் நடத்தினால், இலங்கை அரசுக்கு ஆதரவானவர்களாகவோ அல்லது சிங்கள ஆதரவாளர்களாகவோ கருதப்படுவார்கள் என்று நினைக்கும் அளவுக்கு மிரட்டப்படுகிறார்கள். இதற்கிடையில், புலிகளுக்கு எதிரான இலங்கை அரச விசுவாசிகள்  மீண்டும் இலங்கைக் கொடியை உயர்த்தியுள்ளனர்.

இந்த நிலைமை இலங்கையில் நிலவும் உச்சக்கட்ட தேசிய இனங்களுக்கு இடையேயான  பிளவையும் பிரதிபலிக்கிறது. முற்போக்குவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள், கொழும்பு மேல்தட்டுக்கள், மற்றும் மார்க்சிஸ்ட் அமைப்புகள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவரும் இணைந்து இந்த கட்டத்தில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் போதிக்கின்றனர். ‘நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் அல்லது சிங்களவர்கள் அல்ல, நாங்கள் இலங்கையர்’ என்ற முழக்கம் அவர்களில் பலருக்கு மிகவும் முற்போக்கானதாகத் தெரிகிறது. ‘அபி ஸ்ரீலங்கன்’ (நாம் இலங்கையர்கள்) என்பது சிங்கள தேசியவாதிகளிடமிருந்து உருவான கோஷம், இது ராஜபக்சேக்களால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இலங்கையில் உண்மை நடைமுறை  வேறு. இலங்கையில் அத்தகைய சமத்துவம் இல்லை. முழு நாடும் ராஜபக்சேவை வெறுக்கும் போது கூட, ‘சிறந்த முற்போக்கு ‘ என்று அழைக்கப்படுபவர்களால்  அவரையும் ஒரு போர்க்குற்றவாளி என்று கூறுவதைத் தடுப்பது எது? தேசிய உரிமைக் கோரிக்கையை விட்டு விடுங்கள், -இன்னும் பலர்  குறைந்த பட்சம் கொலைகள் நடந்ததை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்? தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் ஏன் கவனமாக தவிர்க்கப்படுகின்றன?

போராட்டக்காரர்கள் இதுவரை தமிழர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் எந்தவித விரோதத்தையும் காட்டவில்லை. உண்மையில், ரமழானில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும் போராட்டத்திற்கு வந்த முஸ்லிம்களுக்கு அக்கறையோடு  வசதிகளை ஏற்பாடு செய்த சம்பவங்கள் உள்ளன. போராட்டக்காரர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் பானங்களை ஏற்பாடு செய்தனர். ஒவ்வொரு வெகுஜன இயக்கமும் மனிதகுலத்திலிருந்து சிறந்ததைக் கொண்டுவருகிறது. சூடானில் இருந்து சிலி முதல் மியான்மர் வரை, சுய-ஒழுங்கமைத்தல், ஒருவரையொருவர் பாதுகாத்தல், சமூகத் தேவைகளை ஒழுங்கமைத்தல் போன்றவற்றின் பல உதாரணங்களைக் காண்கிறோம்.

கோரிக்கைகள்

இயக்கம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது மற்றும் என்ன நிறுவன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது இயக்கத்தின் உயிர் மற்றும் வலிமைக்கு முக்கியமானது. அனைவரின் நலன்களையும் உள்ளடக்கிய கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை முன்வைப்பதன் மூலம் மட்டுமே ஒற்றுமையை உருவாக்க முடியும். இவை பெரிய படிகள் என்றாலும் இதன் ஆரம்ப புள்ளிகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இளைஞர்கள் மத்தியில் இது போன்ற விவாதம் உடனடியாக தொடங்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக, இலங்கையில் உள்ள சில பெரிய ‘மார்க்சிச’ அமைப்புகள் இடையூறாக நடுவில் நிற்கின்றன. உதாரணமாக ஜே.வி.பி தனது பழைய வழிகளை மாற்ற மறுக்கிறது. ஒற்றையாட்சி இலங்கை அரசைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களது பிரச்சாரங்களில் பெரும்பாலானவை பௌத்த தேசியவாத உணர்வைத் தூண்டுவதை மையமாகக் கொண்டுள்ளன. இலங்கையின் பெரும்பான்மையான இடதுசாரிகள் தமிழ்ப் போராளிகளை (குறிப்பாக விடுதலைப் புலிகள்) ‘பயங்கரவாதிகள்’ அல்லது ‘பாசிசவாதிகள்’ என்று கருதுகின்றனர், மேலும் கடந்த காலப் போராட்டத்தின் மீது எந்த அனுதாபத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிறு எரிகின்றார்கள். இதன் விளைவாக, பொதுவாக தமிழர்களால் வெறுக்கப்படும் மிக மோசமான சமூக விரோதிகளுடன் மட்டுமே அவர்கள் இணைந்து கூட்டணி அமைக்கின்றார்கள்.

முன்னாள் மாற்று இயக்க போராளிகள், போலியான ‘புத்திஜீவிகள்’, சில கலைஞர்கள் –ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான எதிர்ப்பையே இன்றும் முதன்மை அரசியலாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மிகச்சிறிய பகுதியினரே. பெரும்பான்மை மக்கள் அவர்களை வெறுப்பது -அவர்கள் அடிக்கடி கூறுவது போல் தமிழ் தேசியவாதிகளால் அவர்கள் ‘துரோகிகள்’ என்று சுட்டப்படுவதால் மட்டுமல்ல. முக்கியமாக அவர்களின் கூட்டு அரசியல், மற்றும் சுய-மைய முதன்மை, அரசியற் போதாமை போன்ற காரனங்கலாலேயே இவர்கள் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  

ஆனால் இந்த தன் முனை விரும்பிகள் மற்றும்  தமிழ் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினருடன்தான் ‘சிங்கள இடதுகள்’ சேர்ந்து வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். இது அவர்கள் பரந்த தமிழ் மக்களை சென்றடைவதில் கூடுதல் சிக்கல்களை உருவாக்குகிறது. விடுதலைப் புலிகளின் கொடி தொடர்பாக தீண்டாமையைக் கடைப்பிடித்துவரும் இவர்கள் இலங்கைக் கொடியைப் பிடித்து திரிகின்றனர். தமிழ் சமூகத்தில் அவர்களால் ஒரு செயலூக்கமான நிலையை அடைய முடியவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம். 

விடுதலைப் புலிகளின் கொடி இரத்தக் கறைபடிந்ததாக இருந்தாலும், போருக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறையினர் பலராலும் அது போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. போரின் முடிவில் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் எவ்வளவு கொடூரமாக கொன்று குவித்தது என்பது இதற்கு மேலும் வலுச் சேர்க்கிறது. கடந்த காலங்களில் சிங்கள மக்களுக்கு எதிரான தாக்குதல், நாட்டை பிளவுபடுத்துதல் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்றவற்றுடன் இந்த கொடியும் தொடர்புபட்டது. இந்தக் காயங்கள் ஆற வேண்டும். உண்மையில் இது   தமிழ் போராளிகளுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கியது. பௌத்த சிங்கள இனவாதிகள் இதை தமக்கு சாதகமாக்குகின்றார்கள். 

கடந்த கால இராணுவ வாதத்திற்கும், செய்த தவறுகளுக்கும் எதிராக இருக்கும் முரண்பாடுகளை தமிழ் இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதேபோன்று, சிங்கள இளைஞர்கள் தமிழர்களின் அவலநிலையையும் அவர்களின் கோரிக்கைகளையும் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். மேலும் கடந்த கால போராட்டங்களின் சில மரபுகளை இன்னும் பேணுவது ஏன் முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜே.வி.பி மற்றும் அவர்களின் தமிழ் சமூகத்தின் கூட்டாளிகள்   சமரச அரசியலை செய்பவர்கள். அவர்கள் எல்லாப் போராட்டங்களுக்கும் முற்றிலும் எதிரானவர்கள். சிலர் தங்களை ‘மார்க்சிஸ்ட்’ என்றும் ‘இடது’ என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தைகளுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும். அவர்களின் செயல்களையும் அவர்களின் கூட்டணிகளையும் பாருங்கள். உண்மையான ஒன்றுபட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் அவர்களுடன் கூட்டணியை நாட வேண்டாம்.

‘மார்க்சிஸ்ட் கட்சி’ என்று அழைக்கப்படுபவர்கள் தேசியக் கொடியை ஏந்தி, அவர்களின் நிகழ்வுகள் மற்றும் அணிவகுப்புகளில் அவர்களைப் பிடித்துக் கொள்ளும் ஒரே நாடு இலங்கை மட்டுமே. தேசியக் கொடியை ஏந்தி, பௌத்த துறவிகளுக்கு முக்கிய இடம் கொடுத்துக்கொண்டு ​​சிறந்த தமிழ் இளைஞர்களை தங்கள் பக்கம் வெல்வது இவர்களுக்கு சாத்தியமில்லை.  ஜே.வி.பி.யானது சிங்களப் பேரினவாதத்தில் இருந்து ஒருபோதும் தீவிரமாக விலகவில்லை. இந்த ஜே.வி.பி மரபு உடைக்கப்பட வேண்டும்.

தமிழ் சொலிடாரிட்டி 

கடந்த காலத் தவறுகள், கொடிப்பிரச்சினைகள் மற்றும் சிங்கள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பல திறந்த விவாதங்களை தமிழ் சொலிடாரிடி (TS) ஏற்பாடு செய்துள்ளது. TS யாருடனும் அவர்களின் இனத்தின் அடிப்படையில் வேலை செய்யவில்லை, ஆனால் அவர்களின் அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றது. TS முக்கியமாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒழுங்கமைக்கப்பட்டாலும், அது பல சிங்கள ஆர்வலர்களுடன் மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. TS ஒரு சோசலிச அமைப்பு அல்ல, ஆனால் அது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சோசலிஸ்ட் கட்சி மற்றும் இலங்கையில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பல சோசலிச அமைப்புகளுடன் இணைந்து  நெருக்கமாக செயல்படுகிறது. TS தமிழ் சமூகத்தின் மத்தியில் ஐக்கியமான போராட்டத்தின் அவசியத்தையும், ஒற்றுமையைக் கட்டியெழுப்பும்போது நெகிழ்வான அணுகுமுறையைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது.

ஜே.வி.பி போன்ற அமைப்புகளால் சிங்கள தொழிலாள வர்க்கத்தினரிடையே தமிழர் உரிமைகளுக்காக ஒருபோதும் வாதிட முடியவில்லை. ஒரு சிறிய மாவோயிஸ்ட் அமைப்பு உட்பட, இந்த மார்க்சிய அமைப்புகள் என்று அழைக்கப்படுபவை எதுவும், தேசியப்  இன பிரச்சினையில் லெனினிசக் கருத்துக்களையும் கொள்கைகளையும் ஏற்கத் தயாராக இல்லை. தமிழர் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டால் சிங்கள தொழிலாள வர்க்கத்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் -ஒரு போலியான பயம் அவர்களுக்கு உண்டு. இந்த அமைப்புகளின் பக்கம் திரும்பும் பல இளைஞர்கள் மிகவும் வெளிப்படையாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மை. பழைய தலைமை அவர்களின் பழைய வழிகளில் நீடிக்கிறது. இளைஞர்கள் அவற்றை நிராகரித்து ஒரு வலுவான மாக்சிய இயக்கத்தை  உருவாக்க முன்வர வேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவு அளிக்கிறது. கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் பாரிய நடவடிக்கைகளுக்கு (அதில் சிறிய இனவாத கூறுகள் இருந்தாலும்)ஆதரவளிப்பதாக TS கடந்த காலத்தில் வாதிட்டது . இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ‘தூய்மையான’ இயக்கங்களை உருவாக்குவது சாத்தியமற்றது என்பதை தமிழ் சொலிடாரிடி  முழுமையாக அறிந்திருக்கிறது. உதாரணத்திற்கு இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கான ஒன்றிணைந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கை தேசியக் கொடியை ஏந்தியவர்கள் தடையாக இருக்கக்கூடாது. இலங்கையில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான எந்தத் தாக்குதலையும் தமிழ் சொலிடாரிட்டி  ஆதரித்ததில்லை. மற்றும் ஐக்கியப் மக்கள்  போராட்டங்களைக் கட்டியெழுப்ப தமிழ் சொலிடாரிடி முன்னிற்கின்றது.

அனைவருக்கும் சிறந்த உரிமைகளும் சலுகைகளும் 

கோட்டாவின் ஆட்சியையும் அவரது குடும்ப ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த முக்கிய கோரிக்கையானது அனைவருக்கும் சிறந்த நிலைமைகளை கொண்டு வருவதுடன் இணைக்கப்பட வேண்டும். இது IMF, உலக வங்கி, இந்திய மற்றும் சீன அரசுகள் அல்லது எந்த வலதுசாரி சக்திகளுக்கும் ஆதரவானது இல்லை. தொலைநோக்கு திட்டங்களுடன் கூடிய புதிய வெகுஜன சக்திகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்று TS உறுதியாக நம்புகிறது, அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுகின்றோம்.

இடது சக்திகள்  மாத்திரம் ஒன்றிணைவதன் மூலம் மாத்திரம் அது  நிச்சயமாக கட்டமைக்கப்படாது. இது பரந்த எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஒன்றுபட்டு வருவதன் அடிப்படையில் இருக்க வேண்டும். இது அனைவரின் கோரிக்கைகளையும் ஏற்றக் கொள்ளும் அடிபடையிலேயே சாத்தியம். சாதி, பால், மதம் மற்றும் இன அடிப்படையிலான அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் எதிர்க்கப்படுகின்றன என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் இது இருக்க வேண்டும். பரந்துபட்ட சிங்கள மக்கள் என்ற பெயரில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய குற்றங்களை இழைத்துள்ள போதிலும் அதற்கான பொறுப்பு அரசிடம் மட்டுமே உள்ளது.

வலதுசாரி ஆட்சிகள் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எழுப்பப்படும் தமிழ் ‘அச்சுறுத்தல்களால்’ சிங்கள மக்கள் ஏமாந்துள்ளனர். வெகுஜன இயக்கங்கள் இந்த அரசாங்கங்களின் கடந்தகால குற்றங்களில் இருந்து விலகி, ராஜபக்சக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரவேண்டும். ராஜபக்சக்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் செய்த மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு தீவிரமான இயக்கமும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் ஆதரிக்க வேண்டும். உழைக்கும் மக்களால் வழிநடத்தப்படும் ஒரு சோசலிச அரசாங்கத்தால் மட்டுமே இதை வழங்க முடியும். ஒரு தொடக்கமாக, உழைக்கும் மக்கள் மற்றும் வெகுஜன இயக்கத்தின் பிரதிநிதிகளின் அரசாங்கம், நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு புரட்சிகர அரசியலமைப்புச் சபையைக் கூட்டுவது நிகழ முடியும். அத்தகைய சபை அனைவருக்கும் அனைத்து உரிமைகளையும் சிறந்த நிலைமைகளையும் வழங்குவதற்கான வேலையைத் தொடங்க முடியும்.

முஸ்லிம் மக்களின் சிறப்பு (அல்லது தேசிய) உரிமைகள் உட்பட தேசிய உரிமைகளுக்கான கோரிக்கைகள் கட்டுப்படுத்தப்படக்கூடாது. தமிழர்கள் தாமாக முன்வந்து இலங்கையின் அங்கமாக இருக்குமாறு கோரலாம். ஆனால் அவர்கள் மீது கட்டாயப்படுத்த முடியாது. கூட்டாட்சி உரிமைகள் அல்லது சுயாட்சி மட்டுமல்ல, தமிழர்களின் பிரிந்து செல்லக்கூடிய  சுயநிர்ணய உரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தின் அடிப்படையில், மற்றும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்ட நிலையில், தமிழர்கள் தாமாக முன்வந்து, அனைவருக்கும் வளங்களைத் திட்டமிட கண்பிடறேசனின் ஒரு பகுதியாக இணைய முடியும். அத்தகைய ஒற்றுமையைக் கொண்டுவருவது முற்றிலும் சாத்தியம் மட்டுமல்ல, முழு தெற்காசியப் பிராந்தியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், இது சோசலிச தெற்காசிய சோசலிச நாடுகளின் கூட்டமைப்புக்கு முன்னோடியாக இருக்க முடியும்.