“போதும் எங்களை விட்டுவிடுங்கள், நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது நவீன துட்டகைமுனு கோத்தபாயவின் நிலைமை. ஜனாதிபதி கோத்தபாயாவுக்கும் அவரது கட்சிக்கும் வாக்களித்தோம் என மனப்பூர்வமாக ஒத்துகொள்பவர்களை காண்பது இப்போது அரிதாகி வருகிறது. ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் நான் பாஸா இல்லை பெயிலா என்று தனது ஆட்சியே பதில் சொல்லும் என்றார். ‘சேர்’ பெயிலாகி விட்டார் என்பதற்கு தற்போதைய ஆட்சியே வேறு என்ன சான்று வேண்டும்.
பெரும்பான்மையான சிங்கள பெளத்த வாக்குகளை பெற்று பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் முழுதாக முடிந்த நிலையில் உங்கள் ஆட்சி போதும் என மக்கள் கடுமையாக வி்மர்சனம் செய்யத் தொடக்கி விட்டனர். கோத்தாபயவும் அவர் சகபாடிகளும், இம்மண்ணின் மீட்பர்களாகவும் மோசஸாகவும் நடித்து வாக்குளைப் பெற்றனர். ஆனால் அவர்களால் மீட்க மட்டுமல்ல ஆரம்பத்தில் இருந்த நிலைமையில் நாட்டை தக்க வைத்திருக்கக் கூட முடியாத நிலையில்தான் உள்ளனர். ராஜபக்சவுக்கு சார்பான தொலைக்காட்சி நிலையங்கள் கூட தமது TRP( Television Rating Point) ரேட்டிங் எனப்படும் மதிப்பீட்டை தக்கவைத்துக் கொள்ள ராஜபக்சவுக்கு எதிரான செய்திகளை, மக்களின் அரசுக்கு எதிரான உணர்வுகளை ஒளிபரப்பும் நிலைக்கு வந்துள்ளனர். இதுக்கு மேலேயும் தாம் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது என உணர்ந்த செய்தி ஊடகங்கள் தமது நம்பகத்தன்மையைக் காப்பாற்ற இந்த தடாலடியான முடிவை எடுத்துள்ளன.
எரிவாயுப் பற்றாக்குறை, கடன்சுமை அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பொருள் தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு, பால்மா தட்டுப்பாடு, மின் வெட்டு, சுற்றுலாத் துறை வீழ்ச்சி, விலைவாசி உயர்வு எனக் கோத்தபய செய்து கொண்டிருக்கும் சாதனைகள் இதுவரை இலங்கை கண்டிராத புதுப் புது சாதனைகளாக இருக்கின்றன. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கூட இவ்வாறான நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டதில்லை. ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடி மேலும், கோவிட் காரணமாக சுற்றுலாத்துறையில் உருவான வீழ்ச்சி, மத்தியகிழக்கு மற்றும் பிற இடங்களில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து வரும் வெளிநாட்டுப்பணத்தின் வீழ்ச்சி போன்றன காரணிகளால் உருவான அந்நியச் செலாவணியின் வீழ்ச்சியும் இலங்கையின் பொருளாதாரத்தை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை தக்க வைக்க தற்பொழுது போராடவேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாத நிலைமை, விவசாயிகள் உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை, மின்சாரம் இன்மையால் தமது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமை – இதனால் பயிர்கள் அழிவடையும் நிலை என பல அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் மக்கள். இதுதவிர எரிபொருள் நெருக்கடியால் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கள், அதுவும் குறிப்பாக பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் பொதுப்போக்குவரத்தை நம்பி தமது வாழ்வாதாரத்தை நகர்த்தும் உழைக்கும் சாதாரண மக்களுக்கு இது மிகப் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. சாதாரண மக்கள், சூர்யவம்சம், படையப்பா படத்தில் வருவது போல ஒரே பாட்டில் பணக்காரனாய் மாறினால்தான் தற்போதைய சூழலில் இலங்கையில் வாழமுடியும் என்ற நிலையே உருவாகியுள்ளது.
கோத்தபாய தேர்தலின் போது இலங்கையை செழிப்பான சுபீட்சமான நாடாக மாற்றுவேன் என வாக்குறுதி வழங்கி, Vistas of prosperity (சுபீட்சத்தின் காட்சிகள்) என்ற தொனிப்பொருளில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். ஆனால் இன்று சுபீட்சமான நிலைமை எங்கும் காணப்படவில்லை. விமானங்களே ஓடாத விமான நிலையம், இலாபமீட்டாத துறைமுகங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், கோபுரங்கள், மைதானங்கள் என பல கட்டுமானங்கள் மூலம் கோத்தாவின் குடும்பங்கள் தனிப்பட்ட ரீதியில் சுபீட்சத்தின் நிலைமையை அடைந்திருக்கலாம் ஆனால், சாதாரண மக்கள் பாலுக்கும், பாணுக்கும், அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு சென்றுவிட்டனர்.
1970 களின் நிலைமையை, 2019 இல் ஆட்சிக்கு வந்து வெறும் இரண்டு வருடங்களில் தோற்றுவித்திருக்கின்றார் ஜனாதிபதி. இது கொரோனாவால் வந்தவினையல்ல மாறாக முதலாளித்துவ லாபநோக்கால் – மற்றும் எமது மேதகு ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் தமது தனிப்பட்ட நலன்களை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டங்களினால் வந்த வினைதான் இது. இத்திட்டத்தின் மூலம் ஆளும் கட்சி மட்டுமல்லாது எதிர்கட்சி அரசியல் தலைவர்களும் நல்ல லாபம் பார்த்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே தற்போதைய ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிதான் சிறந்த கட்சி என்ற முடிவுக்கு மறந்தும் வந்துவிட வேண்டாம்.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் முறையற்ற உரக் கொள்கையினை அமுல்படுத்தி நாட்டை இன்னும் பின்னுக்குத் தள்ளினார் கோத்தபய. மாற்றுத் திட்டம் எதுவுமில்லாமல் இரசாயன உரங்களை தடை செய்தமை, பின்னர் விவசாயிகளின் போராட்டத்தினால் அதன் நெருக்கடியிலிருந்து மீள இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து தரமில்லாத, உரங்களை இறக்குமதி செய்தமை, போன்றவற்றின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை இன்னும் இன்னும் நலிவடையச் செய்தார் ஜனாதிபதி. உர இறக்குமதியின் போது நடைபெற்ற ஊழலில் கோத்தாவின் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது. ஆக நாடுதான் நலிவடைகிறதே தவிர கோத்தாவும் அவரது அமைச்சர்களும் சுபீட்சமாகத்தான் உள்ளார்கள். இதைத்தான் தனது தேர்தல் பிரசாரத்தில் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவோம் எனக் கூறினாரோ தெரியவில்லை.
கோத்தபயவின் இராணுவ மனநிலையும் நாட்டின் இன்றைய பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும். பசுமை விவசாயத்திற்கு தலைமை தாங்குவதற்காக இராணுவத் தளபதி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவ் இராணுவத் தளபதி ஏற்கனவே கோவிட் நோயைத் தடுக்கும் தேசிய மையத்தின் தலைவராக இருந்தபோது அவர் கோவிட் பெருந்தொற்றை தவறாகக் கையாண்டிருந்தார் என பரவலாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஒரு சுகாதாரப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு இராணுவத் தளபதியை நியமித்தமைக்காக கோத்தபய கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார். சுகாதாரப் பிரச்சனைகளையோ அல்லது விவசாயப் பிரச்னைகளையோ கையாள அது சார்ந்த அறிவு உள்ள நபர்களை நியமிக்காமல் அனைத்துக்கும் இராணுவ தளபதிகளை நியமிப்பதும் இராணுவத்தை நம்பி இருப்பதும் கோத்தபயவின் இராணுவ மனநிலையை எடுத்துக் காட்டுகின்றது. ஒரு பிரச்சினை எழும்போது அது சார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்காமல் தன்னிச்சையாக அல்லது இராணுவத்தின் உதவியுடன் முடிவுகளை எடுக்கும் – நாட்டை மேலும் இராணுவமயப்படுத்தும் நடவடிக்கை தொடர்கிறது.
முறையான பொருளாதாரக் கொள்கைகளினை அமுல்படுத்துவதற்குப் பதிலாக பணத்தை அச்சடித்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு விடலாம் என நம்புகிறார் கோத்தபய. கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் அச்சிடப்பட்டுள்ளது. எனினும் அந்நியச் செலவாணி பற்றாக் குறையால் அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருட்களைக் கொள்வனவு செய்யமுடியாத நிலையிலேயே காணப்படுகிறது இலங்கையின் பொருளாதாரம். இந்தியா, சீனா, கட்டார், பங்காளதேஷ் என எல்லா நாடுகளிடமும் கையேந்திக் கொண்டு திரிகிறது இலங்கை. இன்னும் ஒருபடி மேலே சென்று கடும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள ரஸ்யாவிடமே 30 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது இலங்கை அரசு. உக்ரைன் மீதான யுத்தத்தின் காரணமாக உலகமே ரஷ்ய அரசை கடுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும் இலங்கை ரஸ்யாவிடமே கடன் கோருகின்றது என்றால் உக்ரைன் ரஷ்ய யுத்தம் தொடர்பான இலங்கை அரசின் “நடுநிலையான” நிலைப்பாட்டை புரிந்து கொள்ளுங்கள். உக்ரைன் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தாலும் ரஷ்யாவிற்கு எதிராக இலங்கை அரசு வாயே திறக்காது என்பது இதிலிருந்து புலனாகின்றது. அண்மையில் ஐ. நாவில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இலங்கை நடுநிலைமை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளும்கட்சியில் பாரியளவில் உள்ளக முரண்பாடும், உட்கட்சி பூசலும் தற்பொழுது எழுந்துள்ளது. கட்சிக்குள்ளேயே பல அமைச்சர்கள் இரு அணியாக திரண்டு சண்டை போட்டு வருகின்றனர். அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் தடாலடியாக அவர்கள் பதவியிலிருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். அண்மையில் கூட கம்மன் பில, விமல் வீரவன்ச போன்றோர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். கட்சிக்குள்ளிருக்கும் பல அமைச்சர்கள் மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்பதுபோல் அமைதியாக அடக்கி வாசிக்கத் தொடங்கிவிட்டனர். அரசின் இத்தகைய தன்னிச்சையான செயல்பாடுகளானது இவ்வாட்சியானது ராஜபக்சக்களால் ராஜபக்சக்களுக்காக ராஜபக்சக்களே நடத்தும் ஒரு ஆட்சியாக மாறிப்போயுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. என்னதான் ராஜபக்சக்கள் மூடி மூடி மறைத்தாலும் மொட்டுக்கட்சியின் செல்வாக்கு மிக வேகமாக சரிந்து கொண்டிருக்கின்றது என்பது கண்கூடு.
தமது அரசியல் சரிவுகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இவ் அரசு இனவாதப் பிரச்சாரம் மற்றும் தமிழ் முஸ்லீம் மக்களிற்க்கிடையிலான பிளவுகளை ஏற்படுத்தும் – ஏற்படுத்தியது – ஏற்படுத்துகின்றது. ஆகவே இப்பொறிக்குள் சிக்காமல், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் கோத்தபய அரசுக்கு எதிராக தமிழ் சிங்கள முஸ்லீம் உட்பட அனைத்து மக்களும், தொழிற்சங்கங்களும் மாணவர்களும் ஒரு அமைப்பாக திரண்டு தமது பாரிய எதிர்ப்பை கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பணியிடங்கள் போறவற்றில் வெகுஜன எதிர்ப்பை திரட்ட வேண்டும். நமது பலத்தை நாமே கட்டியெழுப்பினால்தான் இவ் அழிவில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். கோமாவிற்குள் சென்று கொண்டிருக்கும் தேசத்தை மீட்டெடுக்க இதுதான் தற்போதைய ஒரே வழியாகும்.