
மீள் நிர்மானத்திற்கு உள்ளாகும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு
ஜனவரி 18 2025இல் நடைபெற்ற தமிழ் சொலிடாரிட்டி தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தயாரிக்கப்பட்டு 22 மார்ச் 2025 இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னோக்கு அறிக்கை
1.மாறும் உலகு
இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் NPP கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றிருக்கின்றது. தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய கட்சிகளின் ஆசனங்கள் கணிசமாக குறைந்திருக்கும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறோம். உலக மற்றும் பிராந்திய மாற்றங்கள் மேலும் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
இந்த ஆண்டு உலகம் முன் எப்பொழுதும் பார்த்திராத பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளப் போவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் உறுதித்தன்மை அற்று இருக்கின்றது. இந்த பொருளாதார மந்த நிலையும், உறுதியற்ற தன்மையும் இந்த நாடுகளை கடும் போட்டிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வரிப் போர் நடத்துவதை நோக்கி அவர்களை தள்ளியிருக்கின்றது. இதுவரை உலக பொருளாதாரத்தில் ஆதிக்கத்தை செலுத்தி வந்த அமெரிக்கா 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் வரவு செலவுத் திட்டத்தில் 13% அதாவது ஏறத்தாழ 169 பில்லியன் டொடர்களை தனது கடனுக்கான வட்டியாக மாத்திரம் செலுத்தி இருக்கின்றது. அதேபோல ஒவ்வொரு நாடுகளும் தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிக்கப்பட்ட ஒரு பகுதியை தமது கடனுக்கான வட்டியாக திருப்பி செலுத்துவதற்கு செலவிடுகின்றன. இது அந்த நாடுகளின் கல்வி சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களின் முதலீடுகளில் பெரிய தாக்கத்தை செலுத்தும். அத்தகைய அத்தியாவசிய தேவைகளை வெட்டுவதன் மூலம் லாபத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசுகள் முன்னெடுக்கின்றன. இத்தகைய சேவை குறைப்புக்களால் அரசுகள் உள்நாட்டு எதிர்ப்புகளை எதிர் கொண்டு வருகின்றன.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா,பிரித்தானியா,பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா ஆகியவை தமது நாடுகளின் பொருளாதாரங்களை தற்காத்துக் கொள்வதற்கான போட்டியில் தமது நலன் சார்ந்து பிரிந்தும் சேர்ந்தும் இயங்கி வருகின்றன. இதனால் உலகின் சிறிய பொருளாதரங்கள் மேலும் நலிவடைந்து 2025இல் பல நாடுகள் வங்குரத்து நிலையை அடையக் கூடும் நிலை உருவாகி இருக்கிறது. இந்தப் பொருளாதாரப் போட்டியின் விளைவாக பல்வேறு இடங்களில் முரண்பாடுகள் கூர்மைப்படுவதற்கான சாத்தியம் கூடி இருக்கின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு, கிழக்காசியா ஆகிய இடங்களில் போர் சூழல் உக்கிரமாவதற்குரிய சாத்திய கூறுகளே இருக்கின்றது.
தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்து உலக பொருளாதாரத்தின் அதிகாரமிக்க பிராந்தியமாக ஆசியா இருக்கின்றது. சீனா மற்றும் இந்தியா இதன் மத்திய புள்ளிகளாக இருக்கின்றன. வளரும் பொருளாதாரங்கள் –மற்றும் எதிர்கால உலக பொருளாதாரம் இந்த பிராந்திய வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் தங்கி இருக்கின்றது. இந்தப் பிராந்தியத்தின் முரண்பாடுகள் எதிர்கால உலக பொருளாதாரத்தை – ஏன் எதிர்கால உலகை தீர்மானிக்கப் போகின்றது. இதனால் நாங்கள் தர்க்கரீதியாக இந்த நாடுகளின் உறவை அணுக முடியாது.அதாவது பிராந்தியத்தில் இந்தியாவும் சீனாவும் எதிரி நிலை என நாங்கள் இருவரையும் சமப்படுத்துவதன் மூலம் மட்டும் நிலவரங்களை சரியாக புரிந்துகொள்ள முடியாது. இவர்களுக்கிடையில் ஊஞ்சல் ஆடுவதன் மூலம் எமது நலன்களை பாதுகாக்க முடியும் என்ற இலகு படுத்திய தர்க்கம் தவறானது.
தற்போதைய உலகம் பல்துருவங்களாகப் பிரிந்து இருக்கின்றது. தமது தமது நலன்கள் இடைவெட்டும் பகுதிகளில் இவர்கள் இணைந்தும் முரண்படும் பகுதிகளில் எதிர்த்தும் நிற்பார்கள். ட்ரம்பின் டொலர் முதல் கொள்கைக்கு எதிராக பிரிக்ஸ்(BRICKS) நாடுகள் தமக்குள் ஒரு பொது நாணயத்தை உருவாக்குவதற்கு முயல்கின்றார்கள். இந்த BRICKSல் முக்கிய நாடுகளாக இருப்பது இந்தியா சீனா ரஷ்யா. இது உலகின் இன்னொரு அதிகார பீடமாக உருவாகி வருகின்றது. பிரிக்ஸ் பொது நாணயத்தை உருவாக்கினால் அது டொலருக்கு நேரடியாக விடப்படும் சவால் என்கின்றர் ட்ரம்ப். அவ்வாறு நடந்தால் BRICKSஇல் இருக்கும் ஒவ்வொரு நாடுகளின் இறக்குமதிக்கும் 100 சதவீத வரி விடப்படும் என்று எச்சரிக்கின்றார். இருக்கும் உலக ஒழுங்கு சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றது. இதே சமயம் பிரிக்ஸ் நாடுகளுக்குள்ளும் பலமான முரண்பாடுகள் உண்டு. இருப்பினும் தென் ஆபிரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இந்த கூட்டில் இணைவதால் ப்ரிக்சுக்கு மேலும் பலம் கூடி இருக்கிறது. சீனாவுக்கு விஜயம் செய்ய இருக்கும் பிரித்தானிய அமைச்சர் ரேச்சல் ரீல்ஷ் சீன மின்சார கார் உற்பத்திகளை பிரித்தானியாவில் செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் என்று சொல்கின்றார். இது பிரித்தானிய பொருளாதாரத்துக்கு வலுசேர்த்தாலும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு ஆகும். பல் துருவ ஒழுங்கில் இந்த பொருளாதாரங்கள் தமது நலன் சார்ந்தும் அதிகாரம் சார்ந்தும் பல பக்கங்களில் இழுக்கப்படுகின்றன.
பல்துருவ ஒழுங்கு சார்ந்து ஒரு தர்க்கரீதியான வாதம் நீண்ட காலமாக முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சீனாவை எதிர்க்கின்றது ஆகவே அந்த பிராந்தியத்தில் இவை இந்தியாவை ஆதரிக்கும். அதனால் இந்தியா சீனாவுக்கு மாற்றாகும் என்பது அது. இது ஒரேடியாக சாத்தியமில்லை. எரிசக்தி தேவைக்காக சீனா ஈரான் ரஷ்யா ஆகியவை தமக்குள் உடன்படிக்கையில் இருக்கின்றன. அத்தோடு இந்திய பொருளாதாரம் ரஷ்ய எரிபொருளில் தங்கி இருக்கின்றது. ஆகவே ஒரேடியாக இந்தியாவினால் மேற்கு நோக்கி நகர முடியாது. இதை உக்கிரேன் போரில் அமெரிக்காவை மீறி இந்தியா ரஷ்யாவை முழுமையாக எதிர்க்காத நிலைப்பாட்டை எடுத்ததை பார்த்திருப்போம். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கின் கபட நாடகத்தை சாடியிருக்கின்றார், அதே நேரம் நமக்கான சாத்தியப்பாடுகளை நோக்கி எங்களை நகர விடுங்கள் என்கின்றார். ஒட்டுமொத்தமாக அனைத்து பொருளாதாரங்களும் நலிவடைந்து வருகின்றன பணமதிப்பிழப்பு பணவீக்கம் வட்டி போன்ற பொருளாதார ஆயுதங்களை பயன்படுத்திய வர்த்தக போர் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தற்போதைய டிரம்ப் அரசு தன்னல பெரும் முதலாளிகளுக்கான அரசு. அமெரிக்காவின் உள்நாட்டு போரின் பின்பு முதலாவது திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்பு அமைந்த அரசாங்கங்களில் ஜனநாயகம் அற்ற அரசாக இந்த ட்ரம்ப் அரசாங்கம் இருக்கின்றது. தன்னல முதலாளிகளின் லாபத்துக்காக அரசு எந்த எல்லை வரை செல்லும் என தெரியவில்லை. இந்த வர்த்தகப் போரினால் பிராந்தியங்களின் அபிவிருத்திக்கான நிதிகள் குறைக்கப்படுகின்றன ஆயினும் பிராந்தியங்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கப்படுகின்றது
2.மாற்றத்துக்கு உள்ளாகாத இலங்கை அரசு.
இந்த சூழ்நிலையில் தான் இலங்கையின் புதிய அரசு பதவி ஏற்று இருக்கின்றது. இலங்கையில் படித்தவர்களின் பாராளுமன்றம் உருவாக்கி உள்ளது என்ற என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இது உண்மையில் அனுபவம் அற்றவர்களின் பாராளுமன்றம் என்று வேண்டுமென்றால் கூறலாம். அனுராவின் இந்திய பயணத்தின் போது சீன அரச கப்பல் அம்பாந்தோட்டைக்கு வந்திருந்தது. இந்த இரு விடயங்களும் ஒரே நேரத்தில் நடைபெற்ற பின்னர் பாருங்கள் எப்படி அனுரா இந்தியாவையும் சீனாவையும் சமம் செய்து ராஜதந்திர வெற்றியை பெற்றிருக்கின்றார் என்ற துதி பாடல்கள் அதிகரித்து இருக்கின்றன. இது வெற்றி அல்ல உங்களின் எஜமானர்களின் கோரிக்கைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் நீங்கள் அடிபணிந்து விட்டீர்கள் என்பதுதான் இதன் பின்பு மறைந்திருக்கும் உண்மை. இலங்கை இதற்கு முந்திய ஆட்சியாளர்களின் காலத்தில் முழு இறையாண்மை கொண்ட நாடாக இருந்தது இல்லை . இதிலிருந்து எந்த விதத்தில் அணுர இலங்கையின் இறையாண்மையை மீட்டு இருக்கின்றார்.
தனது இந்திய விஜயத்தின்போது இந்தியா முன்வைத்த இந்திய நாணயத்தின் பயன்பாடு, பிராந்தியத்தில் இந்தியாவின் முதன்மை நலன்களை பேணுதல், இந்திய முதலீடுகளுக்கான உத்தரவாதம் ,எரிசக்தி பாதுகாப்பு உட்பட அனைத்தையும் அனுரா ஏற்றுக் கொண்டிருக்கின்றார். இதைத்தான் ரணிலும் செய்தார். இந்தப் புதிய அரசாங்கம் எந்த விதத்தில் மாற்று பொருளாதார கொள்கையை பின்பற்றுகின்றது. ரனில் அரசாங்கத்தின் நவ தாராளமயவாத பொருளாதார நிலைப்பாட்டையே அணுரவும் தொடர்கின்றார். அனுரவும் அவரின் கூட்டாளிகளும் மக்களை முட்டாள்கள் என்று நினைக்கின்றார்களா. பிராந்திய சக்திகளின் நிபந்தனைகளை செயல்படுத்துவதன் மூலம் பூகோள அரசியலில் தமது படகை செலுத்தி விடலாம் என்று நம்புகின்றார்கள்.ரணில் கயிற்று பாலத்தின் மீது கவனமாகக் கொண்டு வந்தாக கூறிய குழந்தையை தான் அனுரா வளர்த்து எடுக்கின்றார். ஒப்பிட்ட அளவில் மிகவும் சிறிய இலங்கையின் பொருளாதாரத்தினை முதலாளித்துவ வரையறைகளின் படி ஓரளவாவது மீட்டெடுக்க முடியும் என்றாலும் அதன் சரிவை தடுக்க முடியாது.தொடர்ச்சியான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதையே வெளிவிவகார அமைச்சர் விஜயதாச ஹரத் கோடிட்டிருக்கின்றார்
இந்தப் புதிய அரசாங்கம் அமைந்ததன் பின்னர் சில விடயங்கள் நடைபெற்று இருக்கின்றன. உள்ளூர் உற்பத்திகளுக்கான மானியம் வழங்கப்பட்டு பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. சம்பளக் கொடுப்பனவு நிலுவைகள் சில ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.இதன் மூலம் சில தொழிற்சங்கங்கள் அனுராவிற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கின்றார்கள். ஆயினும் உண்மையான போராட்டம் 2025ல் தான் ஆரம்பமாக இருக்கின்றது “அனுரா விக்கிரமசிங்கவின்” பொருளாதார கொள்கைகளில் இருந்து இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறிய NPPஅரசு குறுகிய காலத்தில் பல செயற்பாட்டாளர்கள் மீது அந்த சட்டத்தை பாவித்து இருக்கின்றது. ஜனநாயக உரிமைகளை மதிப்பதாக பாவனை காட்டும் இந்த அரசின் அருவருப்பான செயலக இது இருக்கின்றது. இதன் மூலம் தம்மை எதிர்காலத்தில் எதிர்ப்பவர்களை கொடூர சட்டங்கள் மூலம் ஒடுக்குவோம் என்பதை முன்னறிவித்திருக்கின்றார்கள். PTA போன்ற கொடுர சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று PTAக்கு எதிராக எங்களுடன் வீதிகளில் நின்று போராடியவர்கள் இன்று NPP ஊடாக பாராளுமன்ற கதிரைகளில் உட்கார்ந்து இதை அனுமதித்து வாய் மூடி இருப்பது எமக்கு கடும் விசனத்தை ஏற்படுத்துகின்றது.
ஈஸ்டர் குண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிக்கான நீதி எங்கே ? மலையக தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு , அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டியவை அல்லவா? முற்போக்காளர்கள் தொழிற்சங்க வாதிகள் என்று தம்மைத்தானே அழைத்துக் கொண்டவர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்கின்றார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளை சமரசமின்றி பாதுகாப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம். அனுரா தலைமையிலான இந்த அரசு ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது. ஒரு சிலரை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தும் பயணத் தடைவிதித்ததுடனும் முடிந்து விட்டதா உங்கள் ஊழலுக்கு எதிரான போராட்டம். உங்களின் முன்னாள் கூட்டாளிகளான ராஜபக்சக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது. அவர்களை கண்டு பயப்படுகிறீர்களா அல்லது பழையபடி கூட்டாளிகள் ஆகி விட்டீர்களா. இதுவரை ஊழலுக்கு எதிரன உங்கள் வேலை திட்டம் என்ன? உங்களை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றப் போகின்றீர்களா!!
3.தமிழ் மக்களின் உரிமை போர் தொடர வேண்டிய அவசியம்.
தமிழ் மக்களை பொருத்தவரை அவர்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் அனைத்து பொருளாதார திட்டமிடல்களும் தமிழர்களுக்கு பாகுபாடானவையாகவே இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு வழங்குவதாக சொல்லப்படும் பொருளாதார நலன்கள் எல்லாம் வெறும் வாய்ச்சவடல்களாகவே இருக்கின்றன. நிஜத்தில் எந்தப் பொருளாதார நலனும் வந்துவிடவில்லை. அனுராவின் இந்திய விஜயத்தின் போது மோடி தனது உரையில் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார். இதன் மூலம் தமது இந்திய நலனுக்காக தமிழர் பிரச்சினையை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்படும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்பட சொல்லி இருக்கின்றார் .அனுர முன்னாள் ஜனாதிபதி ஜெ ஆர் ஜெயவர்த்தனா வழியில் நாங்கள் உங்களுக்கு தேவையானதை செய்கின்றோம் தமிழ் மக்களின் உரிமை பிரச்சனையில் எமது நடவடிக்கைகளில் தலையிடாதீர்கள் என்ற நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றார். அதாவது இந்திய நலன்கள் பாதுகாக்கப்படும் வரை 13-ஆம் திருத்தத்தை இந்தியா கையில் எடுக்காது. அது மறுக்கப்பட்டால் 13ஆம் திருத்தத்துக்கான அழுத்தம் அதிகரிக்கப்படும். இந்த 13ஆம் திருத்தம் என்பது பேச்சுவார்த்தை மேசையில் இருக்கும் ஒரு துருப்புச் சீட்டு தானே தவிர தமிழ் மக்கள் உரிமை சார்ந்த உண்மையான கரிசனை அல்ல. 13ம் அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது ஆரம்ப புள்ளியை தவிர அதுவே முடிவு அல்ல.
இன்று தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைத்துவம் முழுமையாக அற்று போய் இருக்கின்றது. 2009 இல் தமிழ் மக்கள் இலங்கை அரசால் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டு பொருளாதாரமும் அழிக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து ஒரு தலைமுறை மக்கள் இன்னமும் மீளவில்லை. இது தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை சிறுக சிறுக அழித்து வருகிறது. அது இன்று வெளிப்படையாகத் தெரிகின்றது. புலம்பெயர் தேசங்களில் இருக்கும் அரசியலுக்கும் தாயக மக்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இன்று தாயகத்துக்கும் புலம்பெயர் தேசங்களுக்குமான தொடர்பு வெறுமனவே தொண்டு உதவியாக மட்டுமே இருக்கின்றது. புலம்பெயர் அரசியல் செயற்பாட்டில் உள்ளவர்களின் ஒரு பகுதியினர் அரசுக்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர். பெரும்பகுதி எந்தவித அரசியல் பொருளாதாரம் பூகோள அரசியல் மாற்றம் சார்ந்த அறிதல் இல்லாது இயங்கி வருகின்றனர். இந்த போதாமைகளால் அரசியல் சார்ந்து எதையும் சரியாக கணிக்க முடியாமல் இருக்கின்றார்கள். சிறு பகுதி கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இன்று இலங்கையில் இருக்கும் தமிழ் இளையோருக்கு எதிர்காலம் என்பது இல்லை. அவர்களுக்கு முன்பிருக்கும் தெரிவு குறைவு. ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அல்லது புலம்பெயர் உறவினர்களின் பணத்தினை எதிர்பார்க்க வேண்டும்.இது ஒருவகையான அவநம்பிக்கையான நிலையை அவர்களுக்கு உருவாக்கி இருக்கின்றது. இந்த நிச்சயமற்ற தன்மை கொள்கை அடிப்படையிலான போராட்ட அரசியலை இரண்டாம் பட்சமாக தள்ளி விட்டுள்ளது. ஈழத்தில் இருக்கும் இளைஞர்கள் நம்பிக்கை அற்றதுக்குள் நம்பிக்கையை தேடுகின்றார்கள். இதுவே இம்முறை வடக்கு கிழக்கில் NPPக்கு கிடைத்த வாக்குகள்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் தேசிய கோரிக்கை பின்தள்ளப்பட்டு இருக்கின்றதா என்றால் -இல்லை. வடக்கு கிழக்கில் இலங்கை அரசின் பௌத்த காலனித்துவாக்கத்துகு எதிரான மொழி மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இருந்த போதும் அது இன்னமும் பலப்படவில்லை.தமது தேசிய அபிலாசைகள் தொடர்பாக தம்மை வெளிப்படுத்துவர்களை இந்த அரசும் குற்றவாளிகளாகவே கருதுகின்றது. இவர்கள் இலங்கையின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுகின்றார்கள். தமிழ் மக்களின் தேசிய அபிலாசை சார்பான உறுதியாக இயங்கக் கூடியவர்கள் இந்த மூன்று விடயங்களை ஒருங்கிணைக்க வேண்டும் அதாவது தேசியக் கோரிக்கைகளை ஜனநாயக உரிமைகள் மற்றும் பொருளாதார நலன்களை ஒருங்கிணைத்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும் அத்தோடு சர்வதேச பூகோள அரசியல் மாற்றங்களை விளங்கிக் கொண்டால் இவற்றை மேலும் ஆழமாக வெளிப்படுத்த முடியும். துரதிஷ்டவசமாக அத்தகைய சக்தி இன்று இல்லை – இனித்தான் உருவாக வேண்டும்.
4.புதிய தலைமுறை தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்.
அந்த சக்தியை புதிய தலைமுறையினால் உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். இவ்வாறான ஒரு புதிய புத்துணர்ச்சியான ஆரம்பத்தையே இந்த சூழல் எதிர்பார்க்கின்றது. இந்த புதிய ஆரம்பத்தை சிறிதரன் மற்றும் சாணக்கியனளோ அல்லது அவர்களிடம் இருப்பவர்களோ உருவாக்க முடியாது. இளையோர் மத்தியில் உருவாகும் உரையாடல்கள் மற்றும் அரசியல் வளர்ச்சியே இதை உருவாக்க முடியும். இதை உருவாக்குவதற்கு நமக்குள் இருக்கும் முக்கிய தடை அரசியல் உரையாடல் போதாமையே. அரசியல் புரிதல் இல்லாமை, அரசியல் நம்பிக்கையின்மை, அரசியலில் ஆர்வமின்மை என்பன மாற வேண்டும். இந்த தடைகளுக்கு மத்தியிலும் புதிய தலைமுறையின் அரசியல் எழுச்சியும் அமைப்பாக திரளுதலும் சாத்தியம் என நாங்கள் நம்புகின்றோம். இளைஞர்களினால் தேசியக் கோரிக்கை உட்பட ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். அதுவே எமது எதிர்காலத்தை முன் நகர்த்தும். இந்த செயற்பாட்டை இலகு படுத்த இளையோர் குழுக்களை உருவாக்குதல் – அரசியல் கலந்துரையாட்களை நடத்துதல் என்பனவற்றை செய்ய வேண்டி இருக்கின்றது.
ஏற்கனவே கூறியது போல தாய் நிலத்துக்கும் புலத்து அரசியலுக்குமான தொடர்பு அறுக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் இங்கு இருக்கும் அரசியல் தெளிவின்மைகளும் அரசியல் போதமைகளும் தான். புலம்பெயர் தேசத்து அரசியல் தனி மனித அவதூறுகளாலும் குறுங்குழுவாத நடவடிக்கைகளாலும் முடங்கி இருக்கின்றது. இது முன்னைய தலைமுறையால் இந்த புதிய மாற்றத்தை முன்னெடுக்க முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது. நாங்கள் அவர்களின் கடந்த கால அர்பணிப்புகளையும் தியாகங்களையும் மதிக்கின்ற வேளையில் இந்த புதிய மாற்றத்தை அவர்களால் முன்னெடுக்க முடியாது என்பதையும் இடித்துரைக்க வேண்டி இருக்கின்றது.
பிரித்தானியாவின் செயற்பாட்டில் இருக்கும் தமிழ் சொலிடாரிட்டி , tyo மற்றும் தனிப்பட்ட ரீதியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோர் இந்த வரலாற்று செயல் திட்டத்தை முன்னெடுக்க ஒன்று கூடுமாறு அழைக்கின்றோம்.இலங்கையிலும் புலத்திலும் அரசியல் இளையோர் குழுக்களையும் கலந்துரையாட்களையும் உருவாக்க வேண்டிய வழியை கண்டறிவது வரலாற்றின் தேவை. இதை இந்தக் கட்டத்தில் செயல்படுத்த தவறினால் மக்களை நாம் கைவிட்டவர்களாவோம்.
தேசிய இனங்கள் சார்ந்து எந்தவித புரிதலும் இல்லாமல் வெறுமனவே தமிழ் தேசியம் என்று கதைக்கப்படும் சொல்லாடலை ஆதரிக்க முடியாது. ஈழ மக்களின் தமிழ்த் தேசியம் என்பது தேசிய அபிலாசைகளையும் ஜனநாயக உரிமைகளையும் பொருளாதார நலன்களையும் வெல்வதற்கான கோரிக்கை. இதையே நாங்கள் ஆதரிக்கின்றோம். இதை பெறுவதற்கான போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும். புலம்பெயர் தேசத்தில் பலர் தமிழ் தேசியம் என்பதை வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களால் தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தை ஒரு அடி தானும் முன்னகர்த்த முடியாது. இவர்கள் பிரிந்து சொல்லக் கூடிய சுயநிர்ணய உரிமையை முன்வைப்பதில்லை அந்தக் கோரிக்கை கடந்த காலம் என்று நினைக்கின்றார்கள். நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை அது மக்களின் உரிமை என்கின்றோம் இந்த கோரிக்கைகளை முன்னெடுத்தே போராடுகின்றோம்.
5. தமிழ் சொலிடாரிட்டியில் ஏற்படும் மாற்றம்.
தமிழ் சொலிடாரிட்டி 2009 இனப்படுகொலையின் சாம்பலில் இருந்து எழுந்த அமைப்பு. கடந்த காலத்தில் மிக முக்கியமான போராட்ட – அரசியல் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வந்திருக்கிறோம். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர வேண்டும் என்று தொடர்ந்து வேலை செய்து வருகிறோம். இளையோர் மத்தியில் அதிகளவு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திய அமைப்பு தமிழ் சொலிடாரிட்டி என்பது மிகையில்லை. அடுத்த தலைமுறையின் பங்களிப்பு அரசியல் போராட்ட நடைமுறைகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதாக இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஊடகம், நன்கொடை உதவிகள் செய்தல், போன்ற பல தளங்களில் பல இளையோர் இயங்கி வருகின்றனர். இது போதாது. அரசியல் தலைமை உருவாக வேண்டும். அப்படியாயின் அவர்கள் அரசியல் பொறுப்பை கையில் எடுத்தாக வேண்டும்.
தற்போதைய அரசியல் அவநம்பிக்கை காலத்தில் தலைமைத்துவம் இளையோர் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோருகிறோம். அதற்கு முன்னுதாரனமாக இருக்க விரும்புகிறது தமிழ் சொலிடாரிட்டி. அமைப்புகளின் அனைத்து தலைமைத்துவமும் இளையோரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கின்றோம். இந்தக் கையளிப்பு வெறுமனவே அடையாள ரீதியானதாக இல்லாமல் இளையோர் சுதந்திரமாக செயல்பட கூடியதாக இருக்க வேண்டும். தமிழ் சொலிடாரிட்டியின் அனைத்து பொறுப்புகளையும் இளையோர் எடுக்கும் முன்னுதாரண நடவடிக்கையை நாம் அமுல் படுத்த முடிவேடுத்துள்ளோம். இதனால் தற்போது சில பொறுப்புகளில் இருப்பவர்கள் அதில் இருந்து விலத்திக் கொள்வார்கள். அவர்கள் அரசியல் பங்களிப்பு அதற்கு வெளியில் தொடரும்.
இது மிகவும் ஆபத்தான முடிவாக இருக்கலாம் என சிலர் வாதிடலாம். இளையோர் நாம் எதிர்பார்ப்பதை வழங்க முடியாமல் போகலாம். அத்தகைய காரணத்தைக் காட்டி புதிய தலைமுறைக்கு வழிவிடாமல் இருப்பதுதான் ஆபத்தானது. அடுத்த தலைமுறையிடம் அரசியல் போதாமை இருப்பதை நாம் அறிவோம். இந்த தற்காலிக நிலை மாறும் என நாம் நம்புகிறோம். தமிழ் சொலிடரிட்டி இந்த ‘ஆபத்தான’ முடிவை எடுப்பதற்கு காரணம் பலமான அரசியல் எதிர்காலத்தை கட்ட வேண்டும் என்ற அவாவே. தற்போதைய அரசியல் தேக்க நிலையில் இருந்து இந்த போராட்டத்தை இளைஞர்களாலேயே முன்நகர்த்த முடியும் என்று நாம் நம்புகின்றோம். அவர்கள் கள அரசியலில் ஈடுபடுதல் மூலம் கற்றுக் கொள்வர்.
இந்த உரையாடலை செய்ய எல்லா அமைப்புக்களையும் நாம் அழைக்கிறோம். எவ்வித சுய நல நோக்கங்களும் இன்றி, அரசியல் விடுதலை நோக்கை முதன்மைப்படுத்திய இந்த உரையாடலில் திறந்த மனதுடன் அணைவரும் கலந்து கொள்ளுங்கள். இளையோர் அமைப்புக்கள் மற்றும் பல்வேறு செயற்பாட்டாளர்கள் எதாவது ஒரு தளத்தில் சந்தித்துக் கொள்ள வேண்டிய தேவை உண்டு
இளையோர் அமைப்புகளும் தலைவர்களும் ஒரு கலந்துரையாடல் நடத்துவதற்குரிய தளத்தினை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அரசியலில் அதிகப்பட்ச தாக்கத்தை உருவாக்குதல், அரசியல் கருத்து உருவாக்கம் ,தகவல் பரிமாற்றம் என்பனவற்றை செய்ய முடியும்.