
மாவை சேனாதிராஜா – இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பராரம்பரிய இறுதித் தலைவரும் தனது அரசியல் வாழ்வை முடித்திருக்கின்றார்.
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த நீண்ட கால அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா அவர்கள் 29 ஜனவரி 2025 காலமானார். தனது மாணவர் காலத்தில் இருந்து தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியல் போராட்டத்தில் இணைந்து கொண்ட மாவை சேனாதிராஜா ஐயா அவர்கள் இயற்கை எய்திய 83 வது வயது வரை தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டில் இருந்து வந்தார். சமந்தர் ஐயாவை போலவே இவரும் ஈழத் தமிழ் மக்களின் சவாலான அரசியல் காலகட்டங்களில் அரசியல் செயற்பாட்டில் இருந்து வந்தவர்.
1960 களின் முற்பகுதியில் அரசியல் களத்திற்கு வந்த மாவை சேனாதிராஜா அவர்கள் 1961 இல் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு அரச வன்முறையை எதிர்கொண்டார். 1962இல் இலங்கை தமிழரசு கட்சியில் மாணவர் பருவத்தில் இணைந்து கொண்ட அவர், 1966 முதல் தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளராக பதவியேற்றார். இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக கிழக்கு மாகாண எல்லையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடு அப்போது இருந்த இளைஞர்களுடன் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களை குடியேற்றும் செய்யும்செயற்பாடுகளில் ஈடுபட்டார். அவரின் தொடர்ச்சியான தீவிர அரசியல் செயற்பாடுகளின் காரணமாக 1969க்கும் 1983 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அரசாங்கத்தின் பல்வேறு கைது நடவடிக்கைகளுக்கு உள்ளாகி 7 ஆண்டுகள் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் சிறைப்படுத்தப்பட்டார். இலங்கையில் இருக்கும் மூத்த அரசியல்வாதிகளில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவித்த ஒரு தலைவராக சேனாதிராஜா ஐயா அவர்கள் இருந்திருக்கின்றார். இலங்கை தமிழரசு கட்சியில் இருந்த தலைவர்களுள் தீவிர போராட்ட சிந்தனையை உடைய ஒருவராக இவர் இருந்திருக்கின்றார். அதே நேரம் அவரது அரசியல் நிலைப்பாடு தொடர்பான பல்வேறு விமர்சனங்களும் இருப்பதை மறுக்க முடியாது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியின் செயலாளராக பதவி வகித்த அவர், அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலைக்குப் பிறகு முதல் முறையாக தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பாடார்.தீவிர போராட்ட சிந்தனையுடன் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மிதவாத பாராளுமன்ற அரசியலுக்குள் தன்னையும் சமரசம் செய்து கொண்டார், இருந்த போதும் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை முழுமையாக கைவிட்ட ஒருவராக சேனாதிராஜா ஐயா அவர்கள் இருந்திருக்கவில்லை, இருப்பினும் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது என்பது தொடர்பான எந்த விதமான செயல் திட்டங்களும் அவரிடம் இருக்கவில்லை. பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் உரிமை தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தாலும் இந்திய அரசின் அனுதாபியாகவே செயல்பட்டார்.
தனது மாணவர் பருவத்தில் இருந்து அர்பனிப்புடன் தமிழ் மக்களின் விடுதலைக்கான தீவிர கள செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த மாவை சேனாதிராஜா ஐயா அவர்கள் மாறும் அரசியல் சூழல்கள் தொடர்பாக தன்னை தகவமைத்துக் கொள்வதில் ஆர்வமற்றவராகவே இருந்துவந்திருக்கின்றார்.இந்த நிலை அவருக்கு மாத்திரமல்ல ஈழத்தமிழர்கள் மத்தியில் இருந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் இதே போதாமைகளுடனே இருக்கின்றார்கள். அத்தோடு சரியான நிலைப்பாடுகளை எடுப்பதிலும் பல்வேறு இயலாமைகளை அவரது இறுதி தலைமைத்துவ காலத்தில் வெளிப்படுத்தி இருந்திருக்கின்றார் .
விடுதலை போராட்ட அரசியலில் ஈடுபட்ட, பாராளுமன்ற மிதவாத அரசியல்வாதியாக, கட்சி அரசியலின் தலைவராக என மாவை சேனாதிராஜா ஐயா அவர்களின் அரசியல் வாழ்க்கையில் நாம் படிப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் பல்வேறு விடயங்கள் இருக்கின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் போராட்ட அரசியலுடன் தொடர்புடைய இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பராரம்பரிய இறுதித் தலைவரும் தனது அரசியல் வாழ்வை முடித்திருக்கின்றார்.