
ஈழ விடுதலைத் தாகம் தணிந்துவிடவில்லை -இலங்கை சுதந்திரம் எமக்கானதல்ல.
இலங்கையின் 77 வது சுதந்திர தினத்திற்கு எதிராக அனைத்து ஒடுக்கப்படும் மக்களும் ஏன் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றது தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கை
கடந்த தேர்தலின் பின் ஈழக் கோரிக்கை மடிந்து விட்டது என்று சிலர் பிரச்சாரிக்கிறார்கள். தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை உச்சரிப்பவர்கள், இல்லாத ஒன்றைக் கிளறுகிறார்கள் என்றும், பிரிவினை வாதம் பேசுகிறார்கள் என்றும் முத்திரை குத்தப் படுகிறார்கள். தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் இனவாதிகள் – தீவிரவாதத்தை தூண்டுபவர்கள் எனவும் பேசப்படுகிறது. தமிழ் தேசியம் சமன் தீவிர வாதம் என நிறுவுவதற்கு கங்கணம் கட்டித் திரிகிறார்கள் பலர். இலங்கையின் இறையாண்மையைக் காத்தல்தான் முற்போக்கு நடவடிக்கையாக முன்வைக்கப் படுகிறது.
தற்போதைய அரசு முற்போக்கு அரசு என்றும் தமிழ் பேசும் மக்களின் எல்லா பிரச்சினைகளையும் அவர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் சிலர் நம்ப வைக்க முயல்கிறார்கள். உண்மை இதற்கு மாறானது. தீவிர வலது சாரியக் கட்சிகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்த சொற்ப உரிமைகளைக்கூட வழங்க தயாராக இல்லை தற்போதைய அரசு. தம்மைத் தாமே இடதுசாரிகள் என அறிவித்துக் கொள்ளும் இந்த அரசு வலது சாரியக் கொள்கை நடைமுறையிலேயே தொடர்ந்து இயங்கி வருகிறது. தேசிய ஒற்றுமை, இறையாண்மை என்ற பெயரில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளும் அபிலாசைகளும் ஓரங்கட்டப் பட்டுள்ளது.
உண்மையான தேசிய விடுதலை – சனநாயகப் புரட்சி என்றெல்லாம் தேர்தல் காலத்தில் பேசிய என் பி பி யினர், அதிகாரம் தங்கள் கையில் வந்ததும் பழைய அராசின் தொடர்ச்சியாகவே இயங்கி வருகின்றனர். தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல ஒடுக்கப்படும் சிங்கள மக்களும் இதுவரையும் எந்த அர்த்தமுள்ள மாற்றங்களையும் பார்க்கவில்லை. செய்வார்கள், செய்வார்கள், என்ற நம்பிக்கையுடன் இந்த அரசுக்கு அவகாசம் கொடுத்து பலர் காத்திருக்கிறார்கள். அந்தப் போலி நம்பிக்கை நிறைவேறப்போவதில்லை.
தமிழ் பேசும் மக்களும் இலங்கையில் இருக்கும் அனைத்து ஒடுக்கப்படும் மக்களும் இலங்கை சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு எந்த காரணங்களும் இல்லை. இது எமது சுதந்திரம் அல்ல. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று இலங்கையின் பல பாகங்களில் இந்த போலி சுதந்திர தினத்தை மறுத்து போராட்டங்கள் நடத்தப் பட்டது. இவ்வருடமும் அத்தகைய போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என நாம் கோரிக்கொள்கிறோம்.
தமிழ் மக்களின் விடுதலைக் கோரிக்கை அவர்களின் அனைத்து உரிமைகளையும் பெறுவதோடு சம்மந்தப்பட்டது. உரிமைகள் முடக்கப்பட்டு மக்கள் இரண்டாம் பிரசைகாளாக இருக்கும் வரை அந்த விடுதலை தாக குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கப் போகிறது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இன குழுமம். இலங்கை தேசத்துக்குள் அவர்கள் இருப்பதா அல்லது பிரிந்து ஈழ தேசமாக வாழ்வதா என்பது அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அத்தகைய முடிவை எடுக்கும் உரிமையை மறுக்கும் எந்த அரசும் சனநாயக மறுப்பு செய்யும் அரசே. அந்த வலுக்கட்டாய மறுப்பு தொடர்ந்து விடுதலைத் தீயை வளர்க்கும். வெற்று பிரச்சாரங்களால் மட்டும் இதை தணிய வைத்துவிட முடியாது.
ஈழ விடுதலை கோரிக்கையை உரிமைப் போராட்டமாக பார்க்க மறுக்கும் அனைத்து சக்திகளும் அதிகாரத்தின் பக்கம் நின்று குளிர்காய்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த மறுப்பு இருக்கும் வரை போராட்ட நடவடிக்கைகைகள் தொடரும்.
இலங்கையின் போலி சுதந்திர கொண்டாட்டம் எமக்கானதல்ல. சுதந்திரத்துக்கான போராட்டம் தொடரும்.
- தமிழ் சொலிடாரிட்டி
அடக்குமுறை இலங்கை அரசின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக அணி திரளுவோம்.