முள்ளிவாய்க்கால் தினம் வெறும் நினைவுகூறல் மட்டும் அல்ல: இது தமிழர் எழுச்சி நாளும்: உலக வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான தமிழர் அரசியல் பிரகடனமும்.

Views: 0

முள்ளிவாய்க்கால் தினம் வெறும் நினைவுகூறல் மட்டும் அல்ல:
இது தமிழர் எழுச்சி நாளும்:
உலக வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான தமிழர் அரசியல் பிரகடனமும்.

– ராகவன், தமிழ் சொலிடாரிட்டி

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு துக்க நாள் மட்டும் அல்ல. அது தமிழர் தேசிய வரலாற்றின் இரத்தச் சாட்சி. 2009 மே மாதத்தில் இலங்கை அரசு அதன் கூட்டாளிகளுடன் நடத்திய இனபடுகொலை, வெறும் போரின் முடிவு அல்ல, அது பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட அரசியல், இராணுவ, பொருளாதார மற்றும் பண்பாட்டு இனஅழிப்பின் உச்சக்கட்டம்.

1948 மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு, 1956 “சிங்களம் மட்டும்” சட்டம், 1958, 1977, 1983 இனப்படுகொலைகள், நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், காணாமல் ஆக்கல்கள் இவை அனைத்தும் தனித்தனி சம்பவங்கள் அல்ல. தமிழரை ஒரு தேசிய இனமாக உடைத்து, அவர்களின் தாயக உரிமை, அரசியல் சுயநிர்ணயம், மொழி, நினைவு, நிலம் ஆகியவற்றை அழிக்கும் அரசின் நீண்டகால திட்டமாகவே பார்க்க வேண்டும்.
இன்று 17 ஆண்டுகளுக்குப் பின்னும், முள்ளிவாய்க்கால் முடிவடையவில்லை. வட கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, நிலப் பறிப்பு, நினைவேந்தல் மீதான கண்காணிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதி மறுப்பு ஆகியவை தொடர்கின்றன. 2026-இலும் தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டிருப்பது, இந்த நினைவு இன்னும் உயிருள்ள எதிர்ப்பாக இருப்பதை காட்டுகிறது.

உலக அரசியல் சூழலைப் பார்க்கும்போது, முள்ளிவாய்க்கால் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. பாலஸ்தீனம், குர்திஸ்தான், காஷ்மீர், உக்ரைன், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா என எங்கு பார்த்தாலும் சிறிய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகள் ஒடுக்குமுறை அரசுகளின், வல்லாதிக்கசக்திகளின், இராணுவ கூட்டணிகளின் மற்றும் சந்தை நலன்களின் கீழ் நசுக்கப்படுகின்றன. மனித உரிமை பாதுகாவலர்களாக தம்மை காட்டிக்கொள்ளும் மேற்கு நாடுகள் , தங்கள் அரசியல் மற்றும் வர்த்தக நலன்களுக்கு ஏற்றால் போது அமைதியாகவும் கொலைகளின் பங்களிகளாகவும் இருக்கின்றார்கள். இதுதான் முள்ளிவாய்க்கால் நமக்கு கற்றுக் கொடுத்த மிகப் பெரிய அரசியல் உண்மை.

இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச நீதிப் போராட்டம் இன்னும் பலவீனமாக உள்ளது. ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 2025 அக்டோபரில் இலங்கை தொடர்பான போர்க்குற்றங்களுக்காண ஆதாரங்கள் சேகரிப்பு பணியை நீட்டித்தாலும், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரத்தை ஏற்கவில்லை, முழுமையான குற்றவியல் பொறுப்புக் கூறல் இன்னும் உருவாகவில்லை. இது “சர்வதேச சமூகம்” எனப்படும் அமைப்பு நீதியை தானாக வழங்காது என்பதையும், மக்கள் அழுத்தம் இல்லாமல் எந்த அரசும் இனப்படுகொலைக்கு உண்மையான பொறுப்புக் கூறாது என்பதையும் காட்டுகிறது. இனப்படுகொலை என்று உலக அரங்கில் நிறுவுவது ஒரு அரசியல் செயல்முறை பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான அரசியல் பலத்தினை கட்டி எழுப்பாமல் இதை செய்ய முடியாது என்பதை தமிழ் சொலிடாரிட்டி தொடர்ச்சியாக சொல்லி வருகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்கின்ற – செய்வதாக சொல்கின்ற – பல்வேறு அமைப்புகள் இனப்படுகொலை என்பதை நிறுவ வேண்டும்- அதற்குரிய வேலையை செய்து வருகின்றோம் என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றார்கள், ஆனால் நிஜத்தில் அவர்கள் உலகமெங்கும் இன்று வரை இனப்படுகொலைகளை செய்து கொண்டு வருகின்ற அரசாங்கங்களிடம் சென்று எமது தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைக்கு நீதி தாருங்கள் என இரஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சரணாகதி அரசியலின் மூலம் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு இல்லை.

இன்று இலங்கை புதிய அரசியல் முகமூடியில் பழைய அரசைத் தொடர்கிறது. பொருளாதார நெருக்கடி, IMF கடன் திட்டம், கடுமையான சிக்கனக் கொள்கைகள், மக்களின் வாழ்வாதாரச் சுரண்டல் — இவை அனைத்தும் தமிழர் பிரச்சினையை மறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. IMF திட்டத்தின் கீழ் கடன் திருப்பிச் செலுத்தல், வரி உயர்வு, பொது செலவுக் குறைப்பு போன்ற கொள்கைகள் உழைக்கும் மக்களை தாக்குகின்றன. ஆனால் பொருளாதார நெருக்கடி இன அடக்குமுறையை அழிக்கவில்லை, மாறாக, தேசிய அடக்குமுறையும் வர்க்கச் சுரண்டலும் ஒரே அரசியல் அமைப்பின் இரு முகங்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழர்களின் தேசிய கோரிக்கை என்பது வெறும் அடையாள அரசியல் அல்ல. அது நிலம், மொழி, உழைப்பு, அரசியல் அதிகாரம், இராணுவ கட்டுப்பாடு, அரச வன்முறை ஆகியவற்றோடு தொடர்புடைய வரலாற்று கேள்வி. சிங்கள பௌத்த மேலாதிக்க அரசினால் அடக்கப்பட்டு கொண்டிருக்கின்ற தமிழ் பேசும் மக்களின் சுயநினைய உரிமை என்பது இன உணர்ச்சியின் கோரிக்கை அல்ல, அது ஜனநாயக உரிமை. அது ஒரு மக்கள் மக்கள் கூட்டம் தங்களின் அரசியல் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமை. தமிழர் சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினை கோஷம் என்ற குறுகிய விளக்கத்தால் புறம் தள்ள முடியாத அடிப்படை ஜனநாயக உரிமை.

ஆனால் இதே நேரத்தில், தேசிய விடுதலைப் போராட்டம் சமூக நீதியிலிருந்து பிரிந்து நிற்க முடியாது. தமிழர் சமூகத்திற்குள் வர்க்க வேறுபாடுகள், பாலின ஒடுக்குமுறை, சாதி அடக்குமுறை, இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடி, புலம்பெயர் தலைமுறை இடைவெளி ஆகியவை உள்ளன. எனவே ஒரு முன்னேற்றமான தமிழர் தேசிய அரசியல், சுயநிர்ணய உரிமையையும் சமூக மாற்றத்தையும் இணைக்க வேண்டும். தேசிய விடுதலை என்பது வெறும் கொடி, நினைவு, சின்னம் மட்டுமல்ல, அது மக்கள் வாழ்வின் பொருளாதார, சமூக, அரசியல் மாற்றமாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்தப் போராட்டம் தனிமையான தமிழ் தேசியவாத கோஷத்தால் மட்டும் வெல்ல முடியாது. அது சிங்கள, முஸ்லிம், மலையக தமிழ் உழைக்கும் மக்களுடன் இணையும் ஜனநாயக மற்றும் வர்க்க அடிப்படையிலான போராட்டமாக வளர வேண்டும். சிங்கள மக்களை தமிழர் எதிரிகளாக அல்ல, அதே முதலாளித்துவ-இராணுவ அரசால் ஏமாற்றப்பட்ட மக்களாக பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், “ஒற்றுமை” என்ற பெயரில் தமிழர் தேசிய உரிமை மறைக்கப்படக் கூடாது.மறுக்கப்படக் கூடாது. உண்மையான ஒற்றுமை என்பது அடக்கப்பட்ட இனத்தின் உரிமையை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில்தான் உருவாக முடியும்.

இன்று தேவையானது நினைவேந்தல் மட்டும் அல்ல, அரசியல்போராட்ட அமைப்பு. இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், புலம்பெயர் தமிழர்கள், இடதுசாரி சக்திகள் — இவர்கள் அனைவரும் இணையும் பரந்த மக்கள் இயக்கம் தேவை.

முள்ளிவாய்க்கால் நமக்கு ஒரு கடமையை விட்டுச் சென்றுள்ளது. அழுவது மட்டும் போதாது. நினைவுகூர்வது மட்டும் போதாது. நாம் ஒழுங்கமைக்க வேண்டும். உலக மக்களுடன் இணைக்க வேண்டும். இன்றைய உலக அரசுகளின் இரட்டை நிலைப்பாட்டை சவால் செய்ய வேண்டும்.

முள்ளிவாய்க்கால் என்பது முடிந்த வரலாறு அல்ல. அது இன்னும் உயிருடன் இருக்கும் அரசியல் கேள்வி.

“ இறந்தோரை நினைவு கூறுவோம், இருப்பவர்களுக்காக போராடுவோம்”