ஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும்

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com

இனம் மதம் மொழி என்பனவற்றின் பெயரால் பிளவுபட்டிருக்கும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பற்றி தமிழ் தலைமைகளுக்கு எந்த கருத்து நிலைப்படும் இல்லை. மக்களை ஒன்றினைப்பதின் ஊடாக நிரந்தர தீர்வு நோக்கி நகர்வது சாத்தியம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது சில புலம்பெயர் அமைப்புகளோ ஐ.நா வையோ அல்லது அரசாங்கத்தையோ வால்பிடிக்க எண்ணுகிறார்களே தவிர அனைத்து இன மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி தமிழர் தரப்பின் தேவையை அல்லது நியாயத்தை எடுத்துச் சொல்ல முயலவில்லை. லொபி என்ற பெயரில் மக்களின் பணத்தை வாரி இறைக்கின்றது புலம் பெயர் அமைப்புகள் சில. நல்லிணக்கம் என்ற பெயரில் சிங்கள பேரினவாத கடும்போக்கு சக்திகளுக்கு நான்காவது தூணாக முண்டு கொடுத்துக்கொண்டு நிற்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இந்நிலையில் சிங்கள மக்களுக்கு அதன் கடும்போக்குவாத தலைமைகளும், அது சார்பான ஊடகங்களும் தெரிவிக்கும் இனவாத, மதவாத திரிபுபடுத்தப்பட்ட பொய்த் தகவல்களே சென்றடைகின்றது. தமிழ் மக்களின் தேவை என்ன ?, அவர்களின் அரசியல் எதிர்ப்பார்ப்பு என்ன? என்ற தகவல்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. அதனை அம்மக்களுக்கு தெளிவுபடுத்த சம்பந்தன் சுமந்திரன் கூட்டணியும் முயற்சிப்பதுமில்லை.

2015 இல் மகிந்தவின் தோல்வி என்பது வெறுமனே தமிழ் மக்களின் மகிந்த மீதான வெறுப்பினால் மட்டும் வந்ததல்ல, மாறாக மைத்திரி – ரணில் கூட்டணி அறிமுகப்படுத்திய நூறு நாள் திட்டத்தின் மீதான எதிர்பார்ப்பினால் வந்தது. ஆனால் பல நூறு நாள் கடந்த  பின்னரும் அத்திட்டம் முழுமையாக நடைமுறைப் படுதப்படாமல் இருக்கின்றமை குறித்து கெளரவ எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் அய்யா வாய் திறந்து எதிர் கேள்வி கேட்டு இருக்கின்றாரா? இவர்கள்தான் ஐ.நா விடம் போர்க்குற்ற விசாரணை செய்ய வலியுறுத்தப் போகிறார்களாம். இனப்படுகொலைக்கு, மனித உரிமை மீறலுக்கு நீதி கேட்கப் போகிறார்களாம். இலங்கை அதிகார சக்திகளுக்கு எதிராக உள்நாட்டில் வாயே திறக்காத்த ஜீவன்கள் வெளிநாட்டில் மட்டும் எப்படி வாயைத்திறக்கும்.

ஐ.நாவின் அடிப்படைக் கட்டமைப்பு புரியாமல் அதன் அரசியல் கொள்கை தெரியாமல் ஐ நா வின் வாசல் கதவை தட்டிகொண்டிருப்பதில் பயனேதுமில்லை. காஸ்மீர் முதல் பாலஸ்தீனம் வரை அனைவரும் ஐ.நாவின் கதவுகளை வலிக்க வலிக்கத் தட்டிவிட்டார்கள். அவர்களுக்கு கிடைக்காதத் தீர்வா ஈழத் தமிழர்களுக்கு கிடைத்து விடப்போகின்றது என்ற கேள்வியை நாம் ஏன் கேட்கவில்லை. எண்ணெய் வளமுள்ள நாடுகளின் பக்கம் பொருளாதார நலனுக்காக திரளும் அமெரிக்க ஐரோப்பிய நிலவரம் வேறு எமது நிலவரம் வேறு. ஐ.நாவும் பொருளாதார நலனுக்கேற்றாற் போல்தான் கண்மூடி இயங்குகிறது. எண்ணெய் போன்ற முக்கிய வளமற்ற இலங்கை போன்ற நாடுகளை தனது அரசியல் பொருளாதார காரணங்களுக்கா எவ்வாறு ஐ.நாவின் ஊடாக  பயன்படுத்தலாம் என்பதிலையே அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள்  குறியாக இருக்கும். அதற்காக சிறுபான்மை இனக் குழுக்கள் ஒரு கருவியாக பயன்படுத்தப்படும். சர்வதேச அரசியல் புரியாமல் லோ லோ என்று லொபி செய்வதும், ஐ.நாதான் இறுதித் தீர்வை தரும் என்று மக்களை நம்ம வைப்பதும் படு மோசமான செயல். மக்களை அமைதிபடுத்துவதற்காக ஒரு சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமே தவிர நிரந்தரத் தீர்வு என்பது ஐ.நாவின் ஊடாக நிச்சயம் வரப்போவதில்லை.

ஐ. நாவின் சர்வதேச விசாரணை எனபதும் கூட ஒரு வகையில் போலித்தன்மையானதே. உள்ளக விசாரணையை விட ஒப்பிட்டளவில் போலித்தன்மை ஓரளவு குறைவானதாகக் காணப்படும், அவ்வளவுதான் வித்தியாசம். இது வரை எத்தனை நாடுகளில் ஐ நா சர்வதேச விசாரணை மூலம் நீதியை நிலைநாட்டி இருக்கிறது?, எத்தனை நாடுகளில் நிரந்தரத்  தீர்வை எட்டியிருக்கின்றது? எத்தனை நாடுகளில் மனித உரிமை மீறலுக்கு, இனப்படுகொலைக்கு தண்டனை வழங்கியிருக்கின்றது? ஆகவே மக்களின் கைகளில் அதிகாரம் செல்லும் பட்சத்தில்தான் நீதி என்பதும் நிரந்தரத் தீர்வு என்பதும் எட்டும். அதைவிடுத்து ஐ.நாவோ அல்லது இலங்கை கடும் போக்குவாத அரசோ மக்கள் எதிர்பார்க்கும் தீர்வைத் தரப்போவதில்லை. ஏனெனில் மக்களின் எதிர்பார்ப்பு என்பதும் அதிகார சக்திகளின் தேவை என்பதும் வேறுபட்டது. ஒன்றுக்கொன்று முரண்பட்டது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சில காத்திரமான முயற்சிகளை தமது அரசு மேற்கொள்கின்றது என்பதை சர்வதேச சமுகத்துக்கு எடுத்துக் காட்டவே சில கண்துடைப்புகளைச் செய்கின்றது இலங்கை அரசு. யாப்பு சீர்திருத்தம்,அதற்காக பொதுமக்கள் அனைவரினதும் கருத்துக்கள் கேட்கப்படுகின்றமை எனக் கூறுதல் , காணாமல் போனோர்க்கான அலுவலகம் திறக்கபட்டமை போன்றன அவற்றுள் சிலவாகும் – ஆனால் உண்மை என்னவெனில் எழுபது வீதமான மக்கள் யாப்பு உருவாக்கத்தில் பங்கெடுக்கவே இல்லை, காணமல் போனோர்க்கான அலுவலகம் நடைமுறையில் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டு பிடிப்பதற்காக காத்திரமான செயல்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை. காணமல் ஆக்கப்ப்டோர் தொடர்பாக பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் இன்னும் முழுமையாக அமுலாக்கப்படவில்லை. நடைமுறை செயல்பாடுகள் எதுவும் துரித கதியில் இயங்கவில்லை. வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டுமே அலுவலகம் ஒன்று திறக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அது எங்கே  இருக்கின்றது என்பது கூட மக்களுக்கு தெரியாது.  இதுவரை எத்தனை பேரைக் கண்டுபிடித்தார்கள், எதனை பேருக்கு நஷ்ட ஈடு வழங்கினார்கள். ஒருவருக்கும் இல்லை. கண்துடைப்புக் கபட நாடகத்தின் ஒரு பகுதிகளே இவையாகும். நாடகத்தின் மிகுதிப் பாகங்கள் இனியும் வரும் அடுத்த தேர்தல் வரும் வரை வரும். ஆனால் இதையெல்லாம் தமது முன்னேற்ற அரசியலாக, வெற்றியாக பறை சாற்றிக் கொண்டிருக்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது அவர்களின் வங்கிரோத்து அரசியலையே காட்டுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்து -அதே போன்று தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவதில் முன்னிலை வகிப்பவர்கள் பிரபல தமிழ் புலம் பெயர் அமைப்புகள் சில. மாலை போட்டு காவி கட்டி மலையேறும் ஐயப்ப பக்தர்கள் போல் கோர்ட்டு சூட்டு போட்டுகொண்டு வருடாவருடம் ஜெனிவாவுக்கு கிளம்பி விடுவார்கள். கேட்டால் ஐ.நா மூலம் மட்டும்தான்  தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று மக்களுக்கே காதில் பூ சுத்துவார்கள் இந்தப் புண்ணியவான்கள். லொபி லொபி என்று மக்களின் பணத்தை வீணே விழலுக்கு இறைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இரண்டு வருடம் கால அவகாசம் கொடுத்து இலங்கையை பொறிக்குள் மாட்டி விட்டோம் என்கிறது புலம் பெயர் அமைப்புகளில் ஓன்று. எந்த வகையில் இது இலங்கையைப் பொறிக்குள் மாட்டும் செயலாகும். மங்கள முதல் மைத்திரி- ரணில் வரை அனைவரும் சூறாவளி போல் சுற்றிச் சுழன்றடித்ததே கால நீட்டிப்புக்குத்தான். இது புரியாமல் நாங்கள் தான் அவர்களை பொறிக்குள் தள்ளி விட்டோம் எனக் கூறுவது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்.  பொய் புரட்டு சொல்வதில் இவர்களை மிஞ்ச எவருமுண்டோ.

ஐ.நாவின் அறிக்கைகளைத்தான் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்கிறது பிரித்தானியாவின் புலம் பெயர் அமைப்பு ஓன்று. அறிக்கைகள் ஆவணங்கள், பக்கம் பக்கமாக  ரிப்போர்ட்டுக்கள் எல்லாம் ஐ.நா தரும். 2009 முதல் பல ஆயிரம் பக்க அறிக்கைகளை மக்கள் பார்த்து விட்டார்கள். அறிக்கை குப்பைகைளை தவிர மக்களுக்கு என்ன தீர்வை ஐ.நா தரும்- அல்லது இதுவரை தந்திருக்கின்றது. ஒடுக்கப்படும் சிறுபான்மை இனக் குழுமத்திற்கு எங்காவது ஐ நா விடுதலை வாங்கித் தந்த வரலாறு உண்டா?, மாறாக அக்குழுக்களை கருவியாகப் பாவித்து தனது சொந்த சுயலாப அரசியலை முன்னிறுத்திய வரலாறுதான் உண்டு. ஈராக் முதல் பாலஸ்தீனம் வரை அதனைக் காணலாம். மேலும் இலங்கையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதுக்கும் ஐ. நா வுடனான தமது செயல்பாடுகள் தான் காரணம் எனத் தெரிவிக்கின்றது அவ்வமைப்பு. தமது நிலத்தை மீட்க வெயிலிலும் மழையிலும் வீதியில் இறங்கிப் போராடிய மக்களை, மக்களின் போராட்டத்தை இதை விட வேறு யாரும் கொச்சைப் படுத்தி விடமுடியாது. மக்கள் போராட்டத்தால் கிடைத்த வெற்றியை தமது வெற்றியாக சுவீகரித்துக் கொள்கிறது இவ்வமைப்பு.

லோ லோ என்று லொபி செய்தும், ஐ நாவில் இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணையும் கொண்டுவரப்படாமை, கால அவகாசம் நீட்டிப்பு என்பதெல்லாம் புலம் பெயர் அமைப்புகளின் படு தோல்வியையே காட்டுகின்றது.  இனியும் லொபி லொபி என்று மாரடித்துக் கொண்டிருக்காமல், மக்களின் பணத்தை வாரி இறைக்காமல், அனைத்து இன மக்களையும் ஒன்றிணைப்பதில் புலம் பெயர் அமைப்புகள் முன்வரவேண்டும். அல்லது இரண்டு வருடங்களின் பின்னரும் கண்துடைப்புக்காக சில மாற்றங்கள், கால அவகாசம் நீட்டிப்பு என்று இலங்கை அரசின் நலன் விரும்பியாகவே ஐ.நா செயற்படும் என்பதில் ஐயமேதுமில்லை.

 

கஜன்