-சு. கஐமுகன் gajan2050@yahoo.com
அன்று தமது விடுதலைக்காக போராடிய ஒரு சமூகத்தை, இன்று அவர்களின் விடுதலை என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஐ.நா வின் மூலம்தான் கிடைக்கும் என நம்ப வைத்த பெருமை புலம் பெயர் அமைப்புகள், தூர நோக்கற்ற தமிழ் தலைமைகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும். குறிப்பிட்ட ஒரு இன மக்களின் விடுதலைக்கு அவ்வின மக்களை ஒன்றிணைக்காமல், பல வல்லாதிக்க அரசுகள் சேர்ந்து இயங்கும் ஒரு அமைப்பு (ஐ.நா) விடுதலை வாங்கித் தரும் என எதிர்பார்ப்பது தவறு. ஐ.நாவின் அரசியல் கொள்கை என்பது சுயாதீனமானதோ அல்லது மக்கள் நலம் சார்ந்ததோ அல்ல. அதன் அங்கத்துவ நாடுகளின் தேவைகளுக்கேற்ப ஐ.நாவின் கொள்கைகளும் தீர்மானங்களும் மாறக்கூடியதே. அந்த வகையில் அமெரிக்க மற்றும் ஐ.நாவுடன் முரண்படாத அதிகார சக்திகள் இலங்கையில் ஆட்சியில் இருக்கும் வரை ஐ.நாவின் கொள்கை எனபது இலங்கை சார்பானதாகவே இருக்கும். அதாவது மக்கள் எதிர்பார்க்கும் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் என்பனவற்றுக்கு நீதியோ, நஷ்ட ஈடோ கிடைக்காது என்பது தான் நிதர்சனம்.
இதுவரை ஐ.நா என்பது மனித உரிமைகளைக் காப்பாற்ற, ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கு மேற்கொண்ட நடவடிக்கைளை மதிப்பீடு செய்வதின் ஊடாக அல்லது அதனை மீளாய்வு செய்வதின் ஊடாக ஐ.நா வின் தீர்வு என்பது நிரந்தரத் தீர்வை நோக்கி நகரப் போவதில்லை என்று தெளிவாகப் புரியும். பாலஸ்தீனம், காஸ்மீர், ஈழம் முதல் அண்மைய உதாரணம் சிரியா வரை இதுதான் வெளிப்படை. கொத்துக் கொத்தாக குண்டு மழையை டொனால்ட் ட்ரம்பின் அரசு பொழிகின்ற போதும் ஐ.நா கண்மூடியே கிடக்கின்றது. இவ்வாறுதான் 2009 இல் ஈழத்தில் குண்டு மழை பொழிந்த போதும் மெளனமாக இருந்தது இதே ஐ.நா. மனித உரிமைகளைக் காப்பாற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளும் பெரும்பாலான நடவடிக்கைகள் என்பது வெறுமனே கூடிக் கதைத்தல், அறிக்கை விடுதல் பின்னர் கலைந்து போதல் மட்டுமே. அதனையும் தாண்டி காத்திரமான நடவடிக்கைகள் என்பது குறைவானதாகவே காணப்படுகின்றது.
ஐ.நா என்பது பல்வேறு அரசுகள் ஒன்றிணைந்த ஒரு கூட்டு. இங்கு இலங்கை அரசு முதலாம் தரப்பாகவும் அரச தரப்பில்லாத தமிழர்கள் இரண்டாம் தரப்பாகவுமே நடாத்தப்படுவார்கள். ஐ.நா என்பது மக்களுக்கான அமைப்பு இல்லை.
உலகவங்கி, ஐ.நா போன்றனவற்றின் நோக்கம் என்பது ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையோ அல்லது மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார அபிவிருதித்தியோ அல்ல. மாறாக அமெரிக்காவின் முகவாராகச் செயல்பட்டு அந்நாடுகளின் வளங்களை சுரண்டுவதும் அந் நாடுகள் தமது தனித்துவத்தை இழந்து மேற்கத்தைய நாடுகளைச் சார்ந்து இருக்கச் செய்தலும் ஆகும்.
இறுதி யுத்தத்தில் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கிய நாடுகளே ஐ.நாவில் அங்கம் வகிக்கின்றன. இலங்கைக்கான தீர்மானத்தை இவ்வரசுகளின் துணையோடுதான் ஐ.நாவும் நிறைவேற்றுகின்றது. அதாவது ஆயுதம் கொடுத்த நாடுகளே இலங்கைக்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுகின்றன. அதாவது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுகின்றனர். ஐ நா என்பது போலித்தன்மையானது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும். ஆகவேதான் நிரந்தரத் தீர்வுக்கு ஐ.நாவை நம்பாமல் இலங்கையின் அனைத்து மக்களும் ஒன்று பட்ட சக்தியாக திரளவேண்டும். அப்பொழுதுதான் எதிர்காலத்தில் மகிந்த போன்ற அரசுகள் ஆட்சிபீடம் ஏறினாலும் மீண்டும் தமிழர்கள் ஒடுக்கப்பட்டாலும், அழிக்கப்பட்டாலும் அவர்களை பாதுகாக்க மக்கள் முன்வருவார்கள், ஐ நா அல்ல.
ஐ.நாவை நம்பாதோர் ரியாலிட்டி புரியாமல் பேசுகிறார்கள் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர் சிலர். முதலில் அவர்கள் ரியாலிட்டி எது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். காஸ்மீர் முதல் பாலஸ்தீனம் வரை தராத நீதியையா ஈழத் தமிழனுக்கு தரப்போகுது ஐ.நா?. கண்முன்னே தற்பொழுது சீரழிந்து கொண்டிருக்கும் சிரியாவைக் காபாற்றாத ஐ.நா வா தமிழனுக்கு சிங்கள பேரினவாத சக்திகளிடமிருந்து விடுதலையை வாங்கித் தரப்போகின்றது. இவ் அடிப்படை அரசியல் புரியாமல் அவர்கள் ஐ.நா என்னும் அமைப்பு மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறுவது எதன் அடிப்படையில்?. ஐ.நா என்னத்தைக் சாதித்தது என்று அதன் மீது நம்பிக்கை வைக்க சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழர்களை மையமாக வைத்து, தமிழர்களின் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையை மையமாக வைத்துதான் ஜெனீவாவின் காய்கள் நகர்த்தப்படுகின்றன ஆனால் அங்கு நகர்த்தப்படும் காய்கள் தமிழர்களுக்காக நகர்த்தப்படுவதில்லை. இலங்கை அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஐ நாவின் ஊடாக நகர்த்தப்படும் காய்களே இவை. இலங்கை அரசு முரண்டு பிடிக்காதவரைக்கும் ஐ.நா என்பது இலங்கைக்கு சார்பாகவே செயல்படும். அதுவரை வெறும் பகடைக் காய்களாகவே நிற்கும் தமிழர் தரப்பு. முன்னர் தமிழீழ விடுதலை இயக்கங்களை வளர்த்தெடுத்ததன் ஊடாக எவ்வாறு இந்திய வல்லாதிக்க அரசு, அமெரிக்கா சார்பான ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசை தனது கட்டுப்பா ட்டுக்குள் கொண்டுவந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றியதோ அதேபோல், தமிழர்களுக்கு சார்பாக அல்லது எதிராக தனது காய்களை நகர்த்தி இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யும் அமெரிக்க அரசு. அதற்கு முகவராக செயல்படுவதுதான் ஐ.நா என்னும் அமைப்பு.
வரலாறு முன்னெப்போதும்,கண்டிராதவாறு தமிழ் மக்களின் போராட்டம் என்பது தற்பொழுது ஐ நாவில் முடங்கியுள்ளது. ஆனால் யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் ஆன பின்பும் தமிழ் மக்களுக்குரிய தீர்வை ஐ.நாவோ அல்லது தமிழ் தலைமைகளோ பெற்றுக் கொடுக்க வில்லை எனின் அது தமிழ் தலைமைகளின் தோல்வியையும் மற்றும் ஐ.நாவின் தோல்வியையையுமே எடுத்துக் காட்டுகின்றது. இங்கு தமிழ் மற்றும் சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளின் நோக்கம் என்பது பிரச்சனைகளை தீர்ப்பது அல்ல மாறாக பிரச்சனைகளை தக்க வைத்திருப்பது. அதன் ஊடாக தமது அரசியல் இருப்புக்களை நிலைநிறுத்துவது. அதற்காகவே தமிழ் தலைமைகளும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு தொடந்தும் தமது நல்லாதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
தற்போது இலங்கைக்கு கொடுக்கபட்ட இரண்டு வருட கால அவகாசம் எனபது ஐ நா தீர்மானத்தை நிறைவற்றுவதர்க்கான கால அவகாசம் அல்ல. மாறாக யாப்பு கீப்பு என்று எதையாவது மாற்றி தீர்வு என்ற பெயரில் எதனையாவது திணித்து விடுக என்ற அடிப்படையில் சர்வதேசம் இலங்கைக்கு வழங்கிய கால அவகாசமே இதுவாகும். இதன் மூலம் நிரந்தரத்தீர்வு வரும் அல்லாவிடில் இரண்டு வருடங்களின் பின் ஐ நா முழு முச்சுடன் இறங்கி வேலை செய்து தீர்வை பெற்றுத் தரும் என்பதெல்லாம் பகல்கனவே. கால அவகாசத்தின் மூலம் மக்களை அயர்சியுறச் செய்வதும் அரசியல் நீக்கம் செய்வதுமேயன்றி வேறொரு நோக்கமுமில்லை அதிகார சக்திகளுக்கு.
மக்களிடம் செல்லவேண்டும் ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளோ மக்களை ஒன்று திரட்டாமல் தமிழர்களின் விடுதலைக்காக சிங்கள பேரினவாதிகளிடமும், உலகை ஒடுக்கும் வல்லாதிக்க சக்திகளிடமும் சென்று விடுதலையை கெஞ்சுகின்றன. விடுதலையை நோக்கி நகராத தமிழர் அரசியல் போக்கின் பாதை மாற்றப்படுதல் வேண்டும். தற்பொழுது தமிழர்கள் நடாத்துவது ஆயுதப் போராட்டம் அல்ல, அதனிலும் கடினமான பாதையான அரசியல் போராட்டம். அதன் மூலம் தீர்வுகளை எட்டுவதற்கு அனைத்து இன மக்களையும் அரசியல் போராட்டத்துக்கு ஒன்றிணைக்க வேண்டும் அதன் ஊடாக விடுதலையை வென்றெடுக்க வேண்டும், அதுவல்லாமல் வேறு எந்த வழிமுறைகளாலும் கடும்போக்கு சிங்கள அதிகார சக்திகளிடமிருந்து தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை, விடுதலையை பெற்றுக் கொள்ள முடியாது.
கஜன்