லண்டனில் மே தின ஊர்வலமும் தமிழ் அமைப்புக்களும்

பல்வேறு தொழிற் சங்கங்கள் மற்றும் இடது சாரிய அமைப்புக்களுடன் அகதிகள் உரிமை அமைப்பு மற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு, பறை விடுதலைக்கான குரல் ஆகிய அமைப்புக்களும் லண்டன் மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டன.

தொழிலாளர் தினம் உலகெங்கும் ஒடுக்கப்படும் உளைக்கும் மக்களால் கொண்டாடப்படும் தினம். வலது சாரிய அரசுகள் இந்த தொழிலாளர் தினத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் மே தினத்தன்று கூடும் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதைப் பார்க்கலாம். இந்த நிலையை லண்டனில் நடந்த மே தின நிகழ்வின் போதும் பார்க்க கூடியதாக இருந்தது.

இருப்பினும் இலங்கை போன்ற நவ காலனித்துவ நாடுகளில் மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் உழைக்கும் மக்களால் பெரிதாக கொண்டாடப் படுகிறது.

தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் மே தினக் கொண்டாடங்கள் புத்துயிரடைந்து வருவதைப் பார்க்க கூடியதாக இருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வே முதலிய பல நகரங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மே தின ஊர்வலங்களில் பங்கு பற்றினர்.

லண்டனில் நடந்த ஊர்வலத்தில் பல தமிழ் இளையோர் பங்கு பற்றி பல கோரிக்கைகளை முன் வைத்தனர். மணிக்கு பத்து பவுன்சுகள் குறைந்தளவு ஊதியத்தை வழங்கு – அனைவருக்கும் வேலை செய்யும் உரிமைகளை வழங்கு – மருத்துவ வசதிகளைத் தனியார் மயப்படுத்தாதே. அகதிகள் உரிமைகளை வழங்கு. அகதிகளைத் திருப்பி அனுப்பாதே. அகதிகள் தடுப்பு முகாம்களை மூடு. ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இங்கிலாந்தில் தேர்தல் நிகழ இருப்பதால் தேர்தல் சார்ந்த கோசங்களும் வைக்கப்பட்டன. டோரி அரசுக்கு எதிராகவும் தெரேசா மேயின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் கோசங்கள் வைக்கப்பட்டன.

தொழில் சங்க செயற்பாட்டாளரும், சோஷலிச கட்சி செயற்பாட்டாளருமான மோசின் அகமட் அவர்கள் பேசும் பொழுது போக்குவரத்துத் துறை மீண்டும் தேசிய மயப்படுத்தப் பட வேண்டும் என கூறியது மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. லேபர் கட்சியின் முக்கிய தலைவரான ஜோன் மொக்டோனல்ட் அவர்கள் பேசும் பொழுது இலவச கல்வித்துறை மற்றும் மணிக்கு பத்து பவுன்சுகள் ஆகிய கோர்க்கைகளை தாம் ஆதரிப்பதாக கூறினார்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முன்வைத்து போராடுபவர்கள் இந்த மே தினத்தில் பங்கு பற்றினர். ஆனால் பிரித்தானியாவில் இருக்கும் மற்றய தமிழ் புலம் பெயர் அமைப்புக்கள் இதில் பங்கு பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கண்ணுக்கு முன் இருக்கும் பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை. இங்கு வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் சார்பாக எந்த நடவடிக்கைகளையும் முன் எடுப்பதில்லை. மாறாக ஐக்கிய நாடுகளுக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கும் பறந்து திரிந்து தமிழர் உரிமையை பெற்றுக் கொடுக்கப் போவதாக தம்பட்டம் அடித்துத் திரிகிறார்கள்.

மக்கள் இந்த விடயங்களை பற்றிய தெளிவு பெற வேண்டும். மக்களின் பணம் மற்றும் உழைப்பு வீணே விரயம் ஆகுவதை தவிர்க்க வேண்டும். சரியான கோரிக்கைகள் மற்றும் தூர நோக்கிய பார்வை உள்ள போராட்ட நடவடிக்கைகள் நோக்கி மக்கள் நகர வேண்டும்.

 

[robo-gallery id=”1529″]