-சு. கஐமுகன் gajan2050@yahoo.com
ஜூன் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளார் தற்போதைய பிரதமர் தெரசா மே. இன்னமும் மூன்று ஆண்டுகள் ஆட்சிக் காலம் இருந்தும் அவசரமாக உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பாராளுமன்றத்தில் தங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை வேண்டும் எனவும் , நாட்டில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை காணப்டுகிறது என்பதாலும் இந்த தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டது என்கிறார் தெரேசா மே.
மேலும் எதிர்க்கட்சிகள் தமது பிறெக்சிட்டுக்கான முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதாலும் , வெஸ்ட்மின்ஸ்டர் பிரிந்து காணப்படுவதாலும் தமது பலத்தை பாராளுமன்றத்தில் நிறுவுவதன் ஊடாக மக்களுக்கான நல்லாட்சியை நடாத்த தமக்கு இந்த தேர்தல் மூலம் பெரும்பான்மையை வழங்குமாறு கேட்க்கிறார் மே.
டேவிட் கேமரூனின் பதவி விலக்கலுக்கு பின்னர் கட்சி பதவிக்கான போட்டி கான்செர்வ்டிவ் கட்சிக்குள் பலமாக நடந்தது. பிறெக்சிட்டுக்கு ஆதரவாக இருந்த போரிஸ் ஜோன்சன் தான் கட்சியின் தலைமைக்கு வருவார் என கனவு கண்டார். ஆனால் இறுதியில் பிறெக்சிட் ஆதரவு நிலைப்பாடு அளிக்காத தெரேசா மே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டனர் கட்சிக்குள் சிலர் என ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் போரிஸ் ஜோன்சன்.
கட்சிக்குள் நடக்கும் உட் பூசல்களும் , கட்சி பிளவு பட்டு இருபதுவும் தெளிவாகியது. ஒரு வருடத்திற்கு தாங்காது இந்த ஆட்சி என்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.தெரசா மே இன் பிரதமர் நியமனம் ஒரு ஜனநாயக மறுப்பு என விமர்சிக்கப்பட்டு உடனடி தேர்தலுக்கு பல முனைகளில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது எல்லாம் தமக்கு பெருபான்மை உண்டு எனக்கூறி அடியோடு மறுத்து வந்தார். இன்று ஆர்டிகள் 50 இனை அமுல்படுத்தி விட்டு உடனடி தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருப்பது அவரது கையறு நிலையை காட்டுகிறது.
பிரெக்ஸிட் என தீர்வாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை, எவ்வாறான உடன்பாடுகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக போகிறது என்பது பற்றி எந்த தெளிவும் இல்லாத நிலையிலேயே மக்களை வைத்துள்ளது தெரேசா மே தலைமையிலான அரசாங்கம். இவ் ஆட்சியின் விளைவுகளால் நசுக்கப்படும் உழைக்கும் மக்கள் வெறுப்படைந்து வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளார்கள். தேசிய சுகாதார துறையை (NHS) தனியார் மயபடுத்தும் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு இரண்டரை லட்சம் பேர் வீதியில் திரண்டது மக்கள் இந்த ஆட்சியின் திட்டங்களால் விரக்தி அடைந்துள்ளார்கள் எனபதைக் காட்டுகிறது.
பிராக்ஸிட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு மக்கள் சென்றதற்கு பல காரணங்கள் உண்டு. தமது அடிப்படைத் தேவைகள் மீதான அரசாங்கத்தின் முதலீடுகள் அதிகரிக்கும். இதனால் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து ஆகிய சேவைகள் தரமாகவும் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் அமையும் என்ற நம்பிக்கையும் பிரதான காரணம். ஆனால் நிலைமையோ தலைக்கீழாக மாறி மக்களை வீதியில் கொண்டு வந்து விட்டுள்ளது. மக்கள் அடைந்துள்ள விரக்தி நிலையினை மடை மாற்றி தமது ஆட்சி கட்டில்களை தக்கவைத்து கொள்ளும் போக்கே உலக அரசியலாக இருக்கிறது.
குடிவரவாளர்கள் வருகையால்தான் மக்களுக்கு இந்த பொருளாதார நெருக்கடிகளும் , வாழ்கை சுமைகளும் உருவாகின்றன என்ற துவேச பிரசராம் செய்யப் பெருபாலான ஊடகங்களும் துணைபோகின்றன. தீவிர வலதுசாரியான தெரசா மே தமது ஆட்சியில் நிலவும் பொருளாதர கொள்கைகளின் தோல்வியை திசை திருப்ப முயல்கிறார். கட்சியில் தனது தலைவர் பதவியை நிலைநிறுத்துவதன் மூலம் தாம் விரும்பும் மிக கடினமான , உழைக்கும் மக்களின் நலன்களை இன்னும் மோசமாக்கும் பிராக்ஸிட் உடன்படிக்கைகளை பெரிய எதிர்ப்பின்றி நடைமுறை படுத்தலாம் என கணக்கிடுகிறார்.
பெரும்பாலான ஊடகங்கள் தெரேசா மே நாட்டிற்காக உழைக்கும் ஓர் வீரப் பெண்மணி போல் காட்டுகின்றனர். மக்களுக்காக பல நாடுகள் சென்று பல உடன்படிக்கைகள் , ஒப்பந்தங்கள் செய்கிறார் என திருப்ப திருப்ப ஒளிப்பரப்புகின்றன. இவ்வாறு ஊடகங்களின் உதவி மட்டுமின்றி வேறு பல காரணங்களாலும் தான் தேர்தலில் வெல்லலாம் என அவர் எண்ணுகிறார். UKIP இன் தடுமாற்றத்தால் அவர்களின் வாக்கு வங்கியும் தமக்கு கிடைக்க பெறும் என நம்புகிறார். கோர்பின் தலைமை பலவீனமானது – அதனால் தனக்கு லேபர் வாக்கும் கிடைக்கும் எனக் கணிப்பிடுகிறார். இவ் அனைத்தின் வெளிப்பாடே இந்த திடீர் தேர்தல் ஆகும்.
பிரித்தானிய அரசியலில் ஏற்பட்ட இந்தச் சூழ்நிலை ஊடகங்களின் திணிக்கப்பட்ட கருத்து கணிப்புக்களின் அடிப்படையிலாலான வெளிப்பாடாகுமா? இல்லையேல் மக்களின் கருத்தியல் வேறு விதமாக அமையுமா? என்பதை ஜூன் 8ஆம் திகதி வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்