பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும்.

910 . Views .

1 உடனடித் தேர்தல் நடத்த முதற் காரணம் பொருளாதார பின்னணியே

பிரித்தானியா மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் நோக்கி நிற்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. மக்கள் சேவையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் என்ற அபிலாசை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் வாக்களிப்புக்கு உந்துதலாக இருந்தது (பிரக்சிட்). மறு பக்கம் ஸ்கொட்லாந்தில் பிரிந்து போவதற்கான உணர்வு மிக அதிகரித்துள்ளது. வட அயர்லாந்து அமைதி உடன்படிக்கை ஆடிப்போய் நிற்கிறது. சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என ஒரு காலத்தில் வர்ணிக்கப் பட்டப் பிரித்தானியப் பேரரசு இன்று சிதைந்து சின்னாபின்னமாகி வளர்ச்சி குன்றிச் செல்வதைப் பார்க்கலாம்.

உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ லாபத்தைக் காப்பாற்றும் நோக்குக்காக மக்களின் சேவைகள் சூறையாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக இந்த நாடுகளில் இருக்கும் எதிர்ப்பு பல்வேறு வடிவங்களில் வெளி வருவதைப் பார்க்கலாம். பிரித்தானியாவில் எதிர்ப்போர் தொழிலாளர் கட்சியை (லேபர் பார்ட்டி) நோக்கித் திரும்பக் கரணம் ஒரு சோசலிஸ்ட்டான ஜெரமி கோர்பின் அதன் தலைமைக்கு தேர்வு செய்யப்பட்டதே ஆகும்.

2 டோரிகளின் தக்கை அடிக்கும் பிரச்சாரம்

பிரதமர் பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப் படாத தெரேசா மே, தான் ஒருபோதும் அதிரடித் தேர்தலை கோரப்போவதில்லை என்று பல தடவை அடித்து மறுத்திருந்தார். இந்த நிலையில் இருந்து அவர் தலை கீழாக மாறித் தேர்தலைக் கோரியதற்கு அடிப்படைக் காரணம் பொருளாதார நிலவரமே. ஆனால் கன்சவேடிவ் கட்சியினர் பொருளாதார நிலவரம் பற்றி பேச மறுக்கிறார்கள்.

மரபுக் கட்சியினர் (கன்சவேடிவ் கட்சி – டோரி) லிண்டன் குரோஷ்பி என்ற மிக வலது சாரிய செய்தித் திரிப்பாலரை தமது தேர்தல் திட்டமிடல் ஆலோசகராக அமர்த்திய போதே பலருக்கும் தெரிந்து விட்டது இவர்கள் எத்தகய பிரச்சாரத்தை செய்யப் போகிறார்கள் என்று. லிண்டன் குரோஷ்பி மிக மோசமான வலது சாரிய வரலாறு கொண்டவர் மட்டுமல்ல பல இடங்களில் துவேச கருத்துக்களைப் பரப்பியவரும் கூட. 2015 தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவும் இவரது ஆலோசனயின் படிதான் தனது அழுக்கை மறைத்து அடுத்தவர்கள் மேல் அழுக்கைச் சுரக்கும் பிரச்சாரம் சிலதைச் செய்தார். இதே பாணியில்தான் அவுஸ்திரேலிய தேர்தல், மற்றும் போரிஸ் ஜோன்சனின் லண்டன் மேயர் தேர்தல் ஆகியவற்றை இவர் வெற்றிகரமாக நடத்தினார்.

ஆனால் பல தேர்தல்களில் கடுமையான தோல்வியைச் சந்தித்த ஆலோசகர் இவர். தேர்தலில் நேர்மையாக தமது கொள்கைகளை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கோ அல்லது தேர்தல் வெற்றியடையும் திட்டமிடல்களைச் செய்வதற்கோ காசு கொடுத்து இவர் கூலிக்கு அமர்த்தப் படுவதில்லை. மாறக்க ‘தக்கை’ அடிக்கும் வியூகத்திற்காகவே அவர் கூலிக்கு அமர்த்தப் படுகிறார். தமக்கு பொறுத்த மில்லாத விசயங்கள் வெளிவருமாயின் அவற்றுக்கு எவ்வாறு தக்கை அடித்து மறைப்பது என்பதில் வல்லுநர் அவர். ‘செத்த பூனையை எறிதல்’ எனவும் அவரது செயல் முறை வர்ணிக்கப் படுகிறது. ஏதாவது முக்கிய உரையாடல் நிகழும் பொழுது – அது இவர்களுக்கு சார்பானதாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் எவ்வாறு உரையாடலின் திசையைத் திருப்புவது என்பதுதான் அந்தத் திட்டமிடல். திடீரென எல்லாருடைய கவனமும் திரும்பும் முறையில் இன்னுமொரு விசயத்தை ஊடகங்களுக்கு எறிந்து அதனை நோக்கி உரையாடலை திசை திருப்புதல் என்பது அவரது செயன் முறை. முகப் புத்தக உரையாடல்கள் மற்றும் விவாதங்களில் இதைப் பார்த்திறுக்கிறோம். தான் தோன்றித் தனமாக – தங்களைத் தாங்களே பெரிதாகக் கருதும் சிலர் எவ்வாறு எல்லா வாதங்களையும் தங்களை நோக்கித் திருப்புவது என்பதில் குறியாக செயற்படுவர் என்பதைப் பார்த்திருக்கிறோம். இது ஒன்றும் புதிதில்லை. இதைத் திட்ட மிட்ட முறையில் பயன்படுத்தி மக்கள் மத்தியில் உண்மை போய் சேரவிடாமல் தேர்தல் வெல்ல முயலுகின்றனர் டோரிகள். \

3 ஊடகங்களின் பக்கச் சார்பு

இது மட்டுமின்றி மிக மோசமான வலது சாரியப் பத்திரிகைகளான டெய்லி மெயில் டெலிகிராப் முதலிய பத்திரிகைகள் கோர்பினுக்கு எதிராக மோசமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. கோர்பின் முன் வைக்கும் பல கொள்கைகள் பெரும் முதலாளிகள் பலருக்கு தாக்கம் ஏற்படுத்துவதாக இருப்பதால் (வரி அறவிடுதல் சிறிதளவு கூடுவதால்) அவர்கள் எல்லோரும் சேர்ந்து எதிர்கிறார்கள். பெரும் பான்மை ஊடகங்கள் மேர்டொக் முதலான பெரும் பண முதலைகளின் கை வசமே உண்டு. இவர்கள் தமது ஊடகப் பலத்தை கோர்பினுக்கு எதிராக ஓன்று திரட்டி உள்ளார்கள்.

மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் பி. பி . சி போன்ற ஊடகங்கள் கூட கடுமையாக கோர்பின் எதிர்ப்புச் செய்கின்றன. டோனி பிளேயர் காலத்திலும் டோரி அரசு காலத்திலும் இந்தத் தொலைக் காட்சிக்குள் பல வலது சாரிய ஊடகவியலாளர்கள் பல வந்தமாக உள் நுழைய வைக்கப் பட்டனர். இதானால் அங்கு வேலை செய்வோர் பலர் வெளிப்படையாகவே கோர்பினை எதிர்பதைப் பார்க்காலாம்.

சமூக வலைத் தளங்கள் மற்றும் மக்கள் சார் சிறு ஊடகங்கள் தவிர எந்த பெரும் ஊடகங்களும் நாடு நிலையில் இல்லை. கோர்பினுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்கள் உட்பட பல பிரச்சராங்களைச் செய்வது மட்டு மின்றி தெரேசா மேயை தூக்கி வைத்து உயர்த்திப் பேசி வருகின்றன.

4 மக்களின் நிலை

ஏன் இந்த நிலை? எதற்காக பெரும் முதலாளிகள் கோர்பினுக்குப் பயப் படுகிறார்கள். மக்கள் வாழ்க்கை நிலவரம் மோசமாகி வருவதை எதிர்க்கும் கோர்பின் அதை தீர்பதற்கு எனச் சில கொள்கைகளை முன் வைப்பதுதான் இதற்குக் காரணம்.

  • தொழிலாளர்களின் சம்பளம் 10 வீதம் குறைந்திருக்கிறது.
  • மக்களின் வீட்டு கடன் தொகை 1.5 ட்ரில்லியன் தொகையாக அதிகரித்திருக்கிறது.
  • பிரித்தானியாவில் இருக்கும் ஒவ்வொரு வயது வந்தவருக்குக்கும் சராசரி 30 000 பவுன்சுகள் கடன் உள்ளது
  • 16 மில்லியன் மக்கள் வங்கிக் கணக்கில் 100 பவுன்சுகள் கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
  • 5 மில்லியன் மக்கள் பாதுகாப்பற்ற வேலை செய்து வருகிறார்கள்.
  • 4 மில்லியன் மக்கள் தினமும் உணவுண்ண சிரமப் படுபவர்களாக இருக்கிறார்கள்.
  • பிரித்தானியாவில் ஏறத்தாள 65 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு மில்லியன் மக்கள் உணவுக்கு வசதி இன்றி உணவு வங்கி என அழைக்கப் படும் தெருவில் வைத்து இலவசமாக வழங்கப்படும் உணவை உண்டு வாழ்கிறார்கள்.
  • நேர்சாக வேலை செய்பவர்கள் கூட உணவு வங்கியில் வாங்கி உண்ணும் நிலை தான் இருக்கிறது.
  • இங்கு வாழும் மூன்றில் ஒரு குழந்தைகள் வறுமையில் தான் வளர்கின்றன.
  • 2010ம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைகள் மத்தியில் இருக்கும் வறுமை இரண்டு மடங்காகி விட்டது.
  • லண்டனில் வீடு வசதி அற்று தெருவில் நிற்பவர்கள் எல்லாம் வேலை செய்யாதவர்கள் அல்ல. வீடற்றவர்களில் அரைவாசிப்பேர் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.

5 பொருளாதார நிலை

வளர்ச்சி வீதம் வெறும் ௦.3 வீதமாக இருக்கிறது. உலகப் பொருளாதாரமும் நெப்போலியன் காலத்தில் இருந்த அளவு தேங்கிய நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கும் எனச் சொல்கிறார்கள்.

வலது சாரிகள் சொல்லும் பொருளாதார மீட்சி என்பது சொற்பமானது. 1920 களிற்குப் பிறகு மிக குறைந்தளவு வளர்ச்சி வீதத்தில் பொருளாதாரம் இருப்பது இதுவே முதல் முறை.

உற்பத்தித் தொழில்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. நெப்போலியன் காலத்துக்குப் பிறகு இப்போதுதான் மிக குறைந்த அளவில் ஊதிய உயர்வு நிகழ்கிறது.

6 பெரும் முதலாளிகளின் பேராசை

  • ஒரு சிறு தொகை முதலாளிகளுக்கும் பெரும் பான்மை மக்களுக்கும் இருக்கும் ஏற்றத்தாழ்வு என்பது இதுவரை காலத்தில் இல்லாத அளவு பெரிதாக வளர்ந்துள்ளது.
  • பிரித்தானியாவில் இருக்கும் 1 வீதமானோர் 55 வீதத்துக்கும் அதிகமான சொத்துக்களைத் தம் கைவசம் வைத்திருக்கிறார்கள்.
  • 1000 செல்வந்தர்களிடம் 658 பில்லியன் பவுன்சுகள் குவிந்திருக்கிறது. இது 14 வீதமாக ஒரு வருசத்தில் கூடி இருக்கிறது.
  • 2010க்குப் பிறகு பெரும் செல்வந்தர்களின் சொத்துக்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
  • இந்த வருசம் மட்டும் 14 புதிய பில்லியனர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
  • வங்கிகள் மற்றும் பங்கு சந்தையில் வேலை செய்வோர் ஆகியோருக்கு வழங்கப்படும் பெரும் தொகை போனஸ் – மற்றும் மக்கள் சேவையை குறைந்த விலையில் வங்கி லாபம் பெருக்க நிற்போர் நிலவரம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

7 கோர்பின் முன் வைக்கும் கொள்கை என்ன ?

இத்தகைய மோசமான ஏற்றத்தாழ்வை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனச் சொல்லும் கோர்பின் முன் வைக்கும் கொள்கைகளில் சில.

  • எல்லா தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியத்தை மணிக்கு 10 பவுன்சுகளாக அதிகரித்தல்.
  • தேசிய சுகாதார சேவையை முழுமையாக தேசிய மயப்படுத்தல்.
  • இரயில் சேவையை தேசிய மயப்படுத்தல்.
  • இலவச கல்விச் சேவையை திருப்பி அமுல் படுத்துதல்.
  • மணித உரிமைச் சட்டத்தை பாது காத்தல்.
  • தொழிற்சங்கங்களுக்கான உரிமைகளை வழங்குதல்.
  • குழந்தைகள் மத்தியில் இருக்கும் வறுமையை போக்குதல்
  • அரச ஊழியருக்கு ஊதியத்தை அதிகாரிக்கு முகமாக ஊதிய உயர்வு தடையை அகற்றுதல்.
  • சிறு வியாபாரங்கள் மற்றும் சேமிப்பு செய்வோருக்கு சலுகைகள் வழங்குதல்.
  • ஒரு மில்லியன் வீடுகளை கட்டுதல். இதில் அரை மில்லியன் வீடை வீடற்றவர்கள் கவுன்சில் வீடாக பெற்றுக் கொள்ள வழி ஏற்படுத்துதல்.
  • நியாயமான குடி உரிமை – வதிவிட கொள்கைகளை அமுல்படுத்துதல்.
  • அகதிகளுக்கான உரிமைகளை வழங்குதல்.

 

இது போன்ற பல சிறந்த கொள்கைகளை கோர்பின் அறிமுகப் படுத்தியிருக்கிறார். மக்கள் சார்த்து பேசுபவருக்கு ஏன் கடும் எதிர்ப்பு இருக்கிறது என்ற அரசியல் பின்னணியை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

சேனன்