மாற்று அரசியலை முன்வைக்கும் ஜெரமிக் கோர்பின் – பிரித்தானிய தேர்தல் ஒரு பார்வை

891 . Views .

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com

பிரித்தானியாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 318 ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 262 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. 650 மொத்த ஆசனங்களில் 326 ஆசனங்களைப் பெற்று எவரும் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை என்பதனால் கன்சர்வேடிவ் கட்சி டி.யு.பி கட்சியுடன் (DUP) உடன் இணைந்து தொங்கு பாராளுமன்றமே அமைத்துள்ளது. அதுவும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதனால் வெகு விரைவில், அடுத்த ஐந்து வருடங்களுக்கு முன்னரே, அடுத்த தேர்தலை எதிர்பார்க்கலாம். அறுதிப் பெரும்பான்மை பெற்று கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைக்கத் தயாராகவிருந்த தெரேசா மேயிற்கு விழுந்த மிகப்பெரும் அடியே இந்த தேர்தல் முடிவுகள் ஆகும். ஆட்சியமைக்க முடியவில்லையாயினும், கன்சர்வேடிவ் கட்சிக்கு மிகப் பெரும் தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருகின்றது ஜெரமிக் கோர்பின் தலைமையிலான தொழிலார் கட்சி, இது எவ்வாறு சாத்தியமானது?, டோனி பிளேயர் ஈராக் மீது போர் தொடுத்ததால் தொழிலார் கட்சியின் மீது, கடந்த பத்து வருடத்துக்கும் மேலாக வெறுப்பாக இருந்த மக்கள் இன்று அதிகளாவாக தொழிலாளர் கட்சியின் பக்கம் திரும்பியது ஏன்? அனைத்துக்கும் ஒரு பதில் ஜெரமிக் கோபன் முன்வைத்த கொள்கைகள், மக்கள் நலத் திட்டங்களே அதற்குரிய முக்கிய காரணமாகும்.

கன்சர்வேடிவ் கட்சியானது தேசிய வைத்தியசாலை, ரயில்வே துறைகளை தனியார் மயப்படுத்தல்,மக்களின் வரியை அதிகரித்தல், காப்ரேட் நிறுவனங்களுக்கு வரியைக் குறைத்தல் (19% இலிருந்து 17% வரை), பாடசாலைகள் சுகாதார சேவைகளுக்கு முதலீட்டைக் குறைப்பது, மனித உரிமை சட்டங்கள், தொழிலாளர் சட்டங்களை கடுமையாக்குதல், ஐரோப்பிய குடியேற்றவாசிகள், அகதிகளின் உரிமைகளைக் கட்டுபடுத்துவது போன்ற மக்கள் விரோத திட்டங்களையே முன்வைத்தன. அதேவேளை ஜெரமிக் கோர்பின் அதிகாரத்துக்கு எதிரான, மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் திட்டங்களையே முன்வைத்தார் அதாவது ரயில்வே துறை, தேசிய வைத்தியசாலை போன்றனவற்றை தேசியமயப்படுத்துவது, காப்ரேட் நிறுவனங்களின் வரியை அதிகரித்து மக்கள் வரியைக் குறைப்பது, அடிப்படைச் சம்பளத்தை பத்து பவுணாக அதிகரித்தல், வீடில்லாப் பிரச்சனையை தீர்க்க பத்து லட்சம் வீடுகள் கட்டுதல், ஐரோப்பியர்களுக்கு குடியுரிமை வழங்குதல், பல்கலைகழக கட்டணங்களை ரத்து செய்வது போன்றனவாகும். இதனால் ஜெரமிக் கோர்பினின்  கொள்கைகள் மக்கள் மத்தியில் பிரபலமானது. மாணவர்களும், இளம் தலைமுறையினரும் ஜெரமிக் கோர்பின் பக்கம் சாயத் தொடங்கினர். இது முன்னெப்போதும் பிரித்தானியாவில் இல்லாத வரலாறு ஆகும். மொத்த சனத்தொகையின் வாக்களிக்கத் தகுதியானவர்களில் 68.7 வீதமான (46,843,896) மக்களே வாக்களித்திருந்தனர் எனினும் கடந்த 2015 தேர்தலில் 43 வீதமான மாணவர்களே வாக்களித்து இருந்தனர் ஆனால் இம்முறை 69 வீதமான மாணவர்கள் வாக்களித்திருந்தனர். அதிகளாவான மாணவர்களை அரசியலின் பக்கம் நோக்கி திருப்பிய பெருமை ஜெரமிக் கோர்பினையே சாரும். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் முன்வைத்த மக்கள் சார்பான கொள்கைகளாகும்.

ஜெரமி கோர்பின் ஏற்படுத்திய இந்த மாற்றமானது பிரித்தானிய வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனையாகும் ஏனெனில் தற்பொழுது உலகெங்கும் மோடி, டொனல்ட் ட்ரம்ப் என வலது சாரியத் தலைவர்கள் ஆட்சி அமைத்து வரும் வேளையில் மக்களுக்கிடையில் இன, மத, நிற, மொழி  ரீதியாக பிளவுகளை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றும்  இவ்வேளையில் பிளவுகளுக்கு எதிராக, அதிகார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, சிதறுண்டு கிடக்கும் மக்களை ஒன்றிணைக்க ஒரு தலைவன் குரல் கொடுத்து ஆட்சியைக் அமைக்க முயல்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஆகும்.

தேர்தலின் பின்னர் 350,000 மக்கள் தொழிலாளர் கட்சியில் இணைவதற்கு முன்வந்துள்ளனர். மேலும் தேர்தல் முடிவுகளின் பின்னர் “தொழிலாளர் கட்சியில் எவ்வாறு இணைவது” (How to join labour party), என்பதே பிரித்தானியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக இருக்கின்றது. ஜெரமிக் கோர்பின் ஏற்படுத்திய கோர்பின் அலை (Corbyn movement) அதிகளவான மக்களை அரசியல் நோக்கி திருப்பி உள்ளது.

கன்சர்வேடிவ் கட்சிக்கு சார்பான செய்திகளை மட்டுமே வழங்கி மக்களை தமது அரசியல் தேவைக்கு ஏற்றாற் போல் திசை திருப்பலாம் என ஊடகங்கள்,அதிகார சக்திகள் முயன்றன. ஜெரமிக் கோர்பின் ஆட்சிக்கு வந்தால் பிரித்தானியா மீண்டும் 1970 இற்கு சென்றுவிடும், தீவிரவாதிகளின் நண்பன், ஜிகாதிகளின் தோழர், திறந்த குடிவரவுக் கொள்கையாளர், அனுவைக் கையாளத் தெரியாதவர், மார்க்சிய கடும்போக்குவாதி, என பல்வேறு மோசமான தாக்குதலை மேற்கொண்டது பி.பி.சி, சன் ,மெயில் , எக்ஸ்பிரஸ் போன்ற பிரித்தானிய முன்னனி ஊடகங்கள், அதிலும் குறிப்பாக தேர்தலுக்கு முதல் நாள் பதின்மூன்று பக்கங்களை ஒதுக்கி கோபனுக்கு எதிரான தகவல்களையே வெளியிட்டு இருந்தது டெய்லி மெயில் என்னும் பத்திரிகை. சன், மெயில் போன்ற பத்திரிகைகள் தேர்தலன்று முதல் பக்க செய்தியாக கோர்பினுக்கு எதிரான தகவல்களையே வெளியிட்டு இருந்தது. எனினும் ஊடகங்களின் பக்கச் சார்பான பொய்ப் பிரச்சாரத்தையும் தாண்டி கணிசமான வாக்குகளை, கடந்த தேர்தலை விட அதிகாமான வாக்குளைப் பெற்றுக் கொண்டது தொழிலாளர் கட்சி.  தற்பொழுது டெலிக்ராப், கார்டியன் போன்ற பத்திரிகைகள் கோர்பினுக்கு சார்பான சில செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஊடகங்கள் மக்களைத் திசை திருப்பும் காலம் போய் இப்போது ஊடகங்களின் அரசியலை மக்கள் அம்பலப்படுத்தும் நிலமை உருவாகி உள்ளது.

குறிப்பிட்ட ஒரு சில பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பான்மை ஊடகங்கள் அதிகார சக்திகளுக்கு சேவகம் செய்யும் கருவிகளாக மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக மக்கள் சமூக வலைத்தளங்களை நாடிச் செல்வதும் அதன் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. ஜெரமி கோர்பின் கொள்கைகள் பற்றிய விபரங்கள் சமூக வலைத்தலங்களிலேயே பெரும்பாலும் பரவிச் சென்றன.

அது மட்டுமல்லாது தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக வெறுமனே பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் அறுபது வெவ்வேறு இடங்களில் தொண்ணுறு மேடைகளில் பேசி மக்களின் மனதை வென்றெடுத்தார் ஜெரமிக் கோர்பின்.

தேர்தல் அறிவிக்கபட்ட தினத்திலிருந்து அடுத்த ஏழு கிழமைகளில் கிட்டத்தட்ட 100,000 மக்களை நேரில் சந்தித்து உரையாடினார்.  ஆரம்ப கருத்துக் கணிப்புகளின்படி தொழிலாளர் கட்சியின் வாக்குவீதம் 24 வீதமாகவே காணப்பட்டது. அடுத்த ஏழு வாரங்களில் அதன் வீதமானது 40 வீதத்தை அடைந்தமைக்கு காரணம் ஜெரமிக் கோர்பினின் சூறாவளிப் பிரச்சாரம் மற்றும் மக்கள் நலக் கொள்கைகாளாகும். அதனால் தான் கடந்த 2015 தேர்தலை விட இந்த முறை 3.5 மில்லியன் அதிக வாக்குகளையும் 32 அதிக ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

கன்சவேட்டிவ் கட்சியானது கோர்பின் மீதான தாக்குதலுக்காக இணையம் மற்றும் பேஸ்புக், ட்விட்டர், ஸ்னப்சட்(Snapchat) போன்ற சமூக வலைத்தளங்களில் 1.2 மில்லியன்களை செலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்து, காப்ரேட் நிறுவனங்களின் வரியினைக் குறைக்கத் தயாராகவிருக்கும் கன்சர்வேடிவ் அரசானது தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள, பிற நாடுகளின் மீதான யுத்தத்திற்கும்,எதிராளியின் மீதான இணைய தாக்குதலுக்கும் எவ்வளவும் செலவிடத் தயாராகவே உள்ளது. மறுபக்கதில் மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவு செய்யத் தனது தயக்கத்தையே காட்டுகிறது.

கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்டும் கன்ரர்பேறி (Canterbury) என்னுமிடத்தில் முதலாம் யுத்தக் கால கட்டமான 1918 இலிருந்து கன்சர்வேடிவ் கட்சியே ஆசனத்தை வென்று வந்திருக்கின்றது. வரலாற்றில் முதன் முறையாக 99 வருடங்களின் பின்னர் தொழிலாளர் கட்சி இம்முறை ஆசனத்தைப் கைப்பற்றிக்கொண்டது. தனது மக்கள் நலக் கொள்கைகலள் மூலம் ஒரு அரசியல் எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார் ஜெரமிக் கோர்பின் என்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது.

தெரேசா மேயின் அல்லது கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகள் என்பது 95% வீதமான மக்களைப் பற்றியதல்ல, மாறாக அது 5% வீதமான முதலாளிகளைப் பற்றியது. அதனால்தான் தேசியமயப்படுத்தலை விட தனியார்மயப்படுத்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது தெரேசா  மேயின் அரசு. அதற்கு முக்கிய காரணம் கன்சவேட்டிவ் கட்சிக்கு அதிகளாவான நிதி பல்தேசிய நிறுவங்களிடமிருந்து கிடைப்பதாலாகும். தேர்தல் சமயத்தில் பல நாட்டு எண்ணெய் வள நிறுவனங்கள் இணைந்து கன்சர்வேடிவ் கட்சிக்கு 390,000 பவுண்சுகள் நன்கொடை வழங்கி இருந்தன. Vitol நிறுவனம் 47,000 பவுண்சுகளையும், Rainworths Capital நிறுவனம் 28,500 பவுண்சுகளையும், பெற்றோலிய தொழில்நுட்பத் துறையில் முன்னணி வகிக்கும் OGN குரூப் கம்பனி 63,800 பவுண்சுகளையும், Petrotac நிறுவனம் 90,000 பவுண்சுகளையும் Crescent Petroleum நிறுவனம் 28,000 பவுண்சுகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்நிறுவனங்கள் பல்வேறு மோசடி வழக்குகளிலும், தொழிலாளர் உரிமை மீறல்கள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. மறுபக்கத்தில் ஜெரமிக் கோர்பினுக்குக் கிடைக்கும் நிதி என்பது பெரும்பாலும் ஒரு பவுண், இரண்டு பவுண்கள் என உழைக்கும் மக்களிடமிருந்து பெறப்பட்டதாகும்.

ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற எண்ணெய் வள நாடுகளில்  மட்டுமல்லாது, மேற்கத்தைய நாடுகளில் கூட யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் எண்ணெய் வள நிறுவனங்கள் தாக்கம் செலுத்துகின்றன. தேர்தலுக்கு முதலே தெரேசா மே ஆட்சிக்கு வந்தால் மேலும் நிதி வழங்குவதாக இவ் எண்ணெய் வள நிறுவனங்கள் அவருக்கு வாக்குறுதி அளித்திருந்தன. காப்ரேட் நிறுவனங்கள் அதிகார சக்திகளை தம் வசம் வளைத்துகொண்டு மக்களை சுரண்ட முயற்சிக்கின்றன என்பதற்கு வெளிப்படையான எடுத்துக்காட்டு இதுவாகும்

இம்முறை தேர்தலில் ஜெரமிக் கோபன் வெல்லவில்லை எனினும் இங்கிலாந்தின் வரலாற்றை மாற்றி அமைத்திருக்கிறார். பிரித்தானியாவில்  சர்வாதிகாரப் போக்கைக் கட்டவிழ்க்க, தனிப் பெரும்பான்மைக் கனவுடன் இருந்த தெரேசா மேயின் கனவில் மண்ணள்ளிப் போட்டுத் தொங்கு பாராளுமன்றத்தை அமைக்கும் நிலைமைக்கு தள்ளி விட்டிருக்கின்றார். அதிகாரங்கள், காப்ரேட் நிறுவனங்களின் அடிவருடிகளாக செயற்பட்டு அவைகளின் தேவைகளை முன்னிலைப்படுத்துவதை விட, மக்களின் பிரச்சனைகள், சமூகத்தின் பிரச்சனைகளை முன்னிலைபடுத்த வேண்டும் என அதிகாரத்துக்கு எதிராக சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

மக்களை ஒடுக்கும் அதிகாரத்தினை எதிர்க்க வேண்டும், மக்களைத்தான் முன்னிலைபடுத்தவேண்டும் என ஊடகங்களில் பேட்டி கொடுப்பதினால் மக்களுக்கு எதுவித பயனும் கிடைத்துவிடப்போவதில்லை. மாறாக அவ் ஆதிக்கத்தினுள் நுழைந்து அதனை எதிர்க்க வேண்டும். அதற்காக மக்களையும் , மாணவர்களையும் திரட்ட வேண்டும். அதனைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கின்றார் ஜெரமிக் கோர்பின். கோர்பின் உருவாக்கிய அலை இன்னும் இன்னும் வளர்ந்து விரிந்து கொண்டிருகின்றது. விரைவில் அடுத்த தேர்தல் வருமானால் ஜெரமிக் கோர்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் சாத்தியமுள்ளது.

கஜன்