09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு எல்லா அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைக்கப் பட்டோர் மட்டும் பங்குபற்றிய இந்தக் கூட்டம்  ஈலிங் அம்மன் கோவிலின் உள்ளே ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்றது.

அம்மன் அருளால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும் எனக்கூறி எல்லா தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இதுவாகும் என்று ஒரு BTF தலைமை உறுப்பினர் அறிவித்தார். ஏறக்குறைய 40 பேர் வந்திருந்த கூட்டத்தில் BTF தவிர Tamil Solidarity (TS), மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) ஆகிய அரசியல் அமைப்புக்கள் மட்டுமே பங்கு பற்றி இருந்தன. இது தவிர தொண்டு நிறுவனங்களான தமிழ் தகவல் மையம் (TIC) , உலக  தமிழ் வரலாற்று மையம் முதலிய சில அமைப்புக்களும் கலந்து கொண்டன. மற்றும் ஐக்கிய ராச்சிய பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

மாணவர் பேரவையின் ஸ்தாபகர்களில் ஒருவரும்; BTF இன் உறுப்பினருமான சத்தியசீலன் அவர்கள்  வந்திருப்பவர்களை வரவேற்று,  மெளன அஞ்சலியுடன் 13.40 மணியளவில் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். ‘இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஐந்து நிமிடங்கள் தம்முடைய குறிக்கோள்கள் , நிலைப்பாடுகள் பற்றிப் பேசலாம். மற்றவர்களுக்கு அரசியல் விளக்கம் கொடுக்கும் நிகழ்வோ , விமர்சனம் செய்யும் இடமோ , கேள்விகள் முன்வைக்கும் களமோ இது இல்லை’ எனக்கூறி அறிமுக உரையை முடித்தார்.

தொடர்ந்து கூட்டத்தை நெறிபடுத்தினார் BTF உறுப்பினர் சிவராசா. ‘பல இயக்கங்களும் , அமைப்புகளும் பல வழிகளில் இங்கு இயங்குகின்றன. எல்லோருடைய குறிகோளும் ஒன்றாக இருப்பினும் நாம் பிரிந்து செயல்படுகின்றோம். இலங்கை அரசு நாம் பிரித்து இருப்பதையே விரும்புகிறது. நாம் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும்’ என்றார். கூட்டத்தில் எந்த வரிசையில் பேச வேண்டும் என்பதனை குலுக்கல் போட்டு தீர்மானித்தார்கள்.

BTF சார்பாக பேசிய சுதா ,  BTF வின் உருவாக்கம் பற்றி கூறுகையில்  “அண்ணையின் ஆசீர்வாதத்துடன் ரவி அண்ணா BTF உருவாக்க அனுப்பிவைக்க பட்டார் என்றார். ‘2007 ஆம் ஆண்டுதொடக்கம்  BTF அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவை உருவாக்கி செயற்படுகிறோம். BTF கட்சி சார்பான நிலைப்பாடு எடுப்பதில்லை ஏன் என்றால் நாங்கள் பிரித்தானியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுடன் advocacy செய்து மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முற்படுகின்றாம். நாங்கள் கோட் சூட் போட்டு கொண்டு ஐ.நா  சென்று விடுகிறோம் என்று விமர்சிக்க படுகிறோம். ஐ .நா எமக்கு மக்களின் பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்த ஒரு கருவி (Tool) மட்டும் தான்’ என்றார்.

அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE ) , மக்களவை ஆகிய அமைப்புக்களின்  உருவாக்கத்தில் BTF இன் பங்கு இருப்பது குறித்தும் பேசினார். BTF மற்ற அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் , தமிழ் சொலிடாரிட்டி உடன் இணைந்து தொழிற்சங்களின் ஆதரவை பெறும் வேலை திட்டங்களில் செயற்பட்டோம் என்றும் மேற்கோள் காட்டினார்.

மேலும் ‘போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா.வில் இலங்கைக்குச் சார்பாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இப்போது ஐ .நா. வின் நிலைப்பாடு மாற்றப்பட்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவந்துளோம்’ என்றார். இனப்படுகொலை ஆவணம் வெளியிடப் பட்டதும் , டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தில் நின்று கூறியதும் , இந்த விடயங்களில் BTF முக்கிய பங்காற்றியுள்ளது எனவும் கூறினார்.

அத்துடன் TNA உறுப்பினர்களை எவ்வாறு ஐ.நாவிற்குள் BTF அழைத்து சென்றது என்பது பற்றியும் தெரிவித்தார்கள். இன்று தாயகத்தில் பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அதற்கு இவ்வாறான BTF இன் வேலைத்திட்டங்கள் முக்கியமானது எனவும் நாம் வேலைத்திட்டங்கள் அடிப்படையில் இணைந்து வேலை செய்யலாம் என்று கூறி தமது உரையை முடித்தார். ரிஷாட் பதியுத்தீன் “புலிகள் அழியவில்லை நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் “ என்று கூறியதாக சுதா தனது உரையில் சுட்டி காட்டினார்.

Tamil solidarity சார்பாக முதலில் பேசிய நடேசன், குறிக்கோளை பற்றி பேச நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.  அமைப்புகள் எல்லாவற்றுக்கும் குறிக்கோள் மக்களின் விடுதலை தான். அதனை  அடையும் வழிகள் என்ன என்பன பற்றி தான் நாம் பேச வேண்டும் என்றார். ஓர் சமூகத்தில் ஓர் அமைப்பு தான் இருக்க வேண்டும் என்பது சனநாயக பண்பு இல்லை. பல அமைப்புக்கள் இருக்கத்தான் போகின்றன எனவும் அவை பல அரசியல் நிலைப்பாட்டில் பயனளிக்க போவது தான் நிதர்சனம் என்றார். அவ்வாறு உள்ள நிலையில் அமைப்புக்களின் அரசியல் நிலைப்பாட்டின் மீதும் அவர்கள் வேலைத்திட்டங்கள் மீதும் அரசியல் ரீதியாக விமர்சனம் இருக்கத்தான் போகிறது எனவும், இது ஓர் போராட்டச் சமூகத்தில் ஆரோக்கியமானதுதான் எனவும் பேசினார்.

பின்னர் வந்த இசைப்பிரியா Tamil solidarity இன் வேலை திட்டங்கள் தொடர்பாகவும் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் பேசினார். நாம் அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்யத் தயங்குவதில்லை. ஆனால் Tamil solidarity கொள்கை ரீதியாக இணைவதையே வலியுறுத்துகிறது என்றார். மேலும் தாம் எண்ணிக்கை அடிப்படையில் சிறிய அமைப்பாக இருந்தும் GSP PLUS , பிரித்தானிய தேர்தல் 2017,காணாமல் போனோருக்காக தென்  இலங்கையில் இயக்கும் செயற்குழுவுடன் இணைந்து செயற்படுதல் ,   தொழிற்சங்க வேலைத்திட்டங்கள் ,தாயகமக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி புலத்தில் இருக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கும் Tamil solidarity செயற்படுதல் ஆகிய நடவடிக்கைகளில் இருப்பது குறித்து விளக்கினார். அனைத்து அடக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஓர் அரசியல்அமைப்பு Tamil solidarity  என்பதை வலியுறுத்தினார்.

இங்கு கலந்து கொண்ட தொண்டு நிறுவனங்களான நம்பிக்கை ஒளி, சிவன் பவுண்டேசன்ஸ் ஆகியன தாயக மக்கள் கல்வி, சுகாதாரம், உணவு போன்ற அடிப்படை தேவைகளில் மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய நாம் தொண்டுப் பணிகளை மேலும் முன்னெடுக்க வேண்டும் என்று பேசினர். சிவன் பவுண்டேசனைச் சேர்ந்த முன்னை நாள் TELO உறுப்பினர் கணேசலிங்கம் கல்வியில் வடமாகாணம் மிகவும் பின்தங்கி காணப்படுவதாகவும் மலையக மக்கள் கொஞ்சம் பரவாயில்லை தோட்டத்திற்கு போய் வேலை செய்யலாம், வடக்கு மக்களுக்கு அதுவும் இல்லை என ஆதங்கப்பட்டார். நம்பிக்கை ஒளியை சேர்ந்த 12 வருடங்கள் வி.த.பு அரசியல் பிரிவில் பணியாற்றிய ராஜன் பேசுகையில் செத்த வீட்டில் ஒன்றிணைந்து வேலை செய்வது எமது பண்பாடு என்றும் இப்போது இருக்கும் சூழல் ஓர் செத்த வீடு போன்றது. ஆகவே நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வேலை செய்வோம் என்றார்.

TNA பிரதிநிதி ரொனி பிரான்சிஸ் நாம் உலக அரசியலைப் பேசி நேரத்தை வீணடிப்பதாகவும் நமக்கு ஒரே ஒரு எதிரி தான் எனவும் அதற்கு எதிராக நமது மக்களையும் தலைமகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றார். அரசியலமைப்பு சட்ட மாற்றத்திற்கு உழைப்பவர்களை ஆதரித்து நமது உரிமைகளை அதனூடாக பெற்று விட வேண்டும் என்றார். மற்றுமோர் TNA பிரதிநிதி, போஸ், தொண்டு நிறுவனங்களின் கருத்துகளை ஆதரித்தார்

அத்துடன் வடமாகாண சபை இழுபறிகளை சுட்டிக்காட்டி நாம் நிர்வாக திறன் குறைந்தவர்கள் எனவும், தனி நாடு கிடைத்தால் அதனை நிர்வாகம் செய்ய தமிழர்கள் தகுதியானவர்களா என பரிசீலித்து பார்க்க வேண்டும் என்றார். எவ்வாறு இருப்பினும் சிங்கள பாராளுமன்றத்தின் ஊடாக தான் தீர்வு வரவேண்டும் என்று நல்லிணக்க அரசியலை நியாயப்படுத்தினார்.

அன்டன் பாலசிங்கத்தின் நீண்ட நாள் நண்பரான இராமச்சந்திரன் பேசுகையில் பல அமைப்புகள் இருந்தாலும் ஐ.நா.வில் வேலை செய்வது , மக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம் செய்வது போன்ற செயற்பாடுகளில் இணைந்து செயற்படலாம் என்று கூறி அமர்ந்தார். தொடர்ந்து பேசிய இலங்கை மன்னன் பௌத்த பீடாதிபதிகளின் அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவும் ,சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மூலம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை குலைக்க பட்டிருப்பதாகவும் கூறினார்.

தமிழரசுக் கட்சி உறுப்பினரான சின்னத்துரை சிறிநிவாஸ் சாத்வீக போராட்டம் , சத்தியாக்கிரக போராட்டம் என போராட்டக்கள் வடிவம் மற்றங்கள் பெற்றது என்றார். ஆரம்ப காலங்களில் மாணவர் பேரவை மட்டும் தான் இயங்கியது எனவும் மற்றவை எல்லாம் சிறிய குழுக்கள் தான் எனவும் , பின்னர் இந்தியாவுடன் இணைந்து செல்வோர் , தமிழ் தலைமைகளுடன் இணைந்து செல்வோர் , தனியாக இயங்குவோர் என இளையோர் பிரிந்து சென்ற போது சிலர் யாருடன் செல்வது என மூக்குச் சாஸ்திரம் பார்த்து பிரிந்து சென்றனர் என்று அன்று இருந்த அரசியல் நிலைமையை விளக்கினார். தமிழ் மக்களின் தீர்வுக்கு TNA இன் தேர்தல் விஞ்ஞாபனம் தான்  முக்கியமானது என்றும் , TNA க்குள் வலது ,இடது, நடுவு என்று எல்லாம் இருக்கிறது என்றும் கூறினார். வரபோகும் தீர்வை ஏற்பதா? மறுப்பதா? என்பதை சர்வதேசத்தின் ஆலோசனையின் பேரில் தான் செய்வோம் என்று கூறி அமர்ந்தார்,

பின்னர் பேசிய சார்ள்ஸ் , தமிழ் சொலிடாரிட்டி வரும் காலங்களில் பலமடைந்து , முன்னனி அமைப்பாக செயற்பட வேண்டும் என்றார். எமது வரலாற்றில் இடம் பெற்ற பிழைகள் , தூரோகங்கள்  போன்றவை பற்றி மீள் கருத்துருவாக்கம் நடைபெறல் அவசியம் என்பதால் அதற்கான செயற்குழு ஒன்றை அமைத்துச் செயற்படல் வேண்டும் என்றார். மேலும் அமைப்புகள் தற்போதைய சூழலில் ,அரசியல் காரணகள் இன்றி சிதைந்து  செல்வதைச் சுட்டிக் காட்டினார்.  தாயகத்தில் தமிழ் தலைமைகள் அரசியற் அமைப்பு சட்ட திருத்தத்தின் ஊடாக தீர்வை பெறுவோம் என்பது ‘நரியிடம் போய் கோழி கூண்டு கேட்ட கதையாய் இருக்கிறது’ என்றார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தோர் , நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை உருவாக்க முற்படுவதும் , அதற்கு TNA கள்ள மெளனம் காக்கிறதும் எனவும் சாடினார்.

மேலும் காணாமல் போனோருக்கான காரியாலயம் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட எந்தப் பதிலும் கிடைக்க வில்லை எனறார். இன்றைய  இலங்கையின் அரசியல் சூழலில் புதிய புதிய புதிய அரசியல் சக்திகள் உருவாகுவதாகவும் , நாம் தெற்கில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து செயல் பட வேண்டும் என்றும் கூறி முடித்தார். TIC சார்பாக பேசிய வரதகுமார் தமிழ் சொலிடாரிட்டி பேசிய விடயங்கள் முக்கியமானது என்றார். மேலும் இன்று அகதிகளின் பிரச்சனை உலகம் தழுவிய ஓர் பிரச்சனை என்றும் இது தொடர்பாகவும் அமைப்புகள் அதிக கவனம் எடுத்து செயற்பட வேண்டும் என்றார்.

இறுதியில் கூட்டத்தை நெறிப்படுத்திய சிவராசா பேசிய விடயங்களை சாரம்சம் செய்வதாக கூறி தொண்டு நிறுவனங்கள் உட்பட எல்லா அமைப்புக்களும் இணைந்து செயற்படுதல் அவசியம் என்றார். வரலாற்று ரீதியான கலந்தாய்வு, செயற்குழு ஒன்றை அமைத்தல் என்பதே சாராம்சம் என்றார்.  மேலும், கூட்டத்தின் இறுதியில் உடனே ஒரு செயற்குழுவை அமைப்போம் என்றார். செயற்குழு உடனே அமைப்பதற்கு தமிழரசு கட்சி பிரதிநிதியும், Tamil for conservatives பிரதிநிதியும் (அவர் BTF இனதும்  தலைமை உறுப்பினர்) முழு ஆதரவை தெரிவித்தனர். Tamil solidarity பிரதிநிதிகள் தாம் தமது அமைப்பின் உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்த பின்னரே இந்த செயற்குழுவில் இடம்பெறுவதா? யார் இடம்பெறுவது? போன்ற விடயங்களை தீர்மானிக்க வேண்டி உள்ளதால் உடனே செயற்குழு அமைவதை மறுதளித்தனர். முறைப்படி அது சரியான நிலைப்பாடு என்பது பலரும் ஏற்று செயற்குழு உடனே அமைப்பது என்ற யோசனை கைவிடப்பட்டு கூட்டம் 4.15 மணியளவில் நிறைவு பெற்றது. கூட்டத்தின் இறுதியில் சுண்டலும் தேநீரும் வழங்கப்பட்டது. .

மேற்சொன்ன கருத்துக்கள் பற்றியும் செயற்குழு பற்றய நிலைப்பாடு பற்றியும் தமிழ் சொலிடாரிட்டி அடுத்த கட்டுரையில் உங்களுக்கு அறியத் தரும்.