பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை

1,209 . Views .

மெல்பேர்ணிலிருந்து வெளியாகும் மாதாந்த பத்திரிகை எதிரொலி – ஓகஸ்ட் 2017 பதிப்பில் வெளியாகிய நடேசனின் கட்டுரை

1980 களில் இருந்து புலம் பெயர்ந்து பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு புகலிடம் தேடி செல்ல தொடங்கினர் பெருமளவான ஈழ தமிழ் மக்கள். அவ்வாறு பிரித்தானியாவில் வந்து குடியேற தொடங்கியவர்கள் குறுகிய காலத்தில் மிகவும் பலமடைந்த ஓர் சமூகமாக தம்மை நிலை நிறுத்தியுள்ளது.

2006 ற்கு பின்னர் தாயகத்தில் ஏற்பட்ட சூழ் நிலையால் அதிகமான இளையோர் புலம் பெயர்த்து வரத் தொடங்கினர். உலக அரங்கில் ஏற்பட்ட மாற்றங்களும் , பொருளாதார வீழ்ச்சியும் அகதிகளாக வருவோரின் நிலைமையை மேலும் மோசமடைய செய்தன. அதிகார மையங்களின் நெருக்கடிகள் ஒரு புறம் இருக்க புலம் பெயர்த்து வந்து பிரிட்டிஷ்காரராக மாறியுள்ள தமிழ் பேசும் நல்லுலகத்திற்க்குள் புதிதாக வந்தா அகதிகள் சிக்கி தவிகின்றார்கள்.

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோருவோர் உதவி தொகையாக கிழமைக்கு 35 பவுண்ஸ்களும், தங்குவதற்கு இடம் இல்லை என்றால் புறநகர் பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கபடுவர். இலவச சட்ட உதவியும் (Legal Aid) கிடைக்க பெறும். ஆனால் இவை யாவும் எல்லோருக்கும் வழங்கப்படவும் மாட்டாது. பெருபாலான தமிழர்களுக்கு  இந்த உதவிகள் கிடைப்பதும் இல்லை அதை நாடி செல்வதும் இல்லை.

தமிழ் சட்டத்தரணிகள் மூலம் தான் தமது வழக்கை செய்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கையிலேயே அவர்களை நோக்கி படையெடுக்கிறார்கள். உண்மையில் அகதி அந்தஸ்து விண்ணப்பங்களை செய்வோர் 97 சதவீதமானோர் சட்டத்தரணிகளே இல்லை. இலவச சட்ட சேவைகள் தமிழ் அகதிகளுக்கு சென்றடையாமல் இருப்பதற்கு இதுவும் ஓர் காரணமாகவும்.  விண்ணப்பத்தை தொடங்க குறைந்தது 750 பவுண்ஸ்கள் இவர்களுக்கு செலுத்த வேண்டும். குடிவரவு திணைக்களத்தினூடு அகதி கோரிக்கை ஏற்று

கொள்ளப்பட்டால்  ஏறக்குறைய 1000 பவுண்ஸ்களுடன் தப்பிடலாம். ஆனால் அவ்வாறு நடைபெறும் சந்தர்ப்பங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதே.

கரணம் தப்பினால் மரணம் என்பது போல் சுளையாக 5000 பவுண்ஸ்களுக்கான செலவு அங்கிருந்தே ஆரம்பம் ஆகிறது. அத்தோடு விண்ணப்ப கோரிக்கை ஏற்கப்படும் வரை இந்த போலி சட்டதரணிகள் என்ன சொன்னாலும் செய்தாக வேண்டும். மறுத்து பேசினால் நட்டாற்றில் விட்டு விடுவார்கள்.

தம்மிடம் குடிவரவு சார்ந்த ஆலோசனை பெற வருபவர்களை அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிப்பது தான் ஒரே வழி என மூளையை கழுவி துவைத்து விடுவதில் இவர்கள்  வித்தைக்காரர்கள். ஏன்என்றால் அசேலம் (Asylum) என்றால் தானே பணத்தை தாராளமாக சுருட்டிகொள்ளலாம். எந்த புலத்து அமைப்புடன் சேர்த்து இயங்க வேண்டும் என்று கட்டளை இடும் அளவிற்கு உள்ளது இவர்களின் அட்டகாசம்.

இதுவே விண்ணப்பதாரி பெண்ணாக இருக்கும் பட்ச்சத்தில் பாலியல் துன்புறுத்தல்களும் , பாலியல் லஞ்சங்களும் சர்வ சாதரணமாகிவிட்டன. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பதாக மருத்துவ அறிக்கை அவசியம். ஆகையால் மருத்துவ அறிக்கை அவ்வாரே வருவதற்கு நான் உதவி செய்கிறேன் என்பதில் இருந்து தொடங்கிறது இவர்களின் பாலியல் சேட்டைகள்.  இதற்கு சற்றும் குறையாமல் அடாவடிகளை பிரித்தானியாவில் இயங்கும் பல புலத்து அமைப்புகளில் காணலாம்.

தமது வழக்குகளுக்கு வலு சேர்க்கும் வகையாக தங்கள் இயங்கும் அமைப்புகளிடம் இருந்து கடிதம் மற்றும்  அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.  இதனை பெறுவதற்கு 100 இலிருந்து 200 பவுன்சுகள் வரை செலவுசெய்ய வேண்டும். எதற்கெடுத்தாலும் காசு என்ற நிலையிலேயே பல புலம் பெயர் அமைப்புகள் இயங்குகின்றன. அமைப்புக்குள் எதாவது கேள்விகள் பதவிகளில் இருப்போரை நோக்கி கேட்கபட்டால்; அதெல்லாம் கைய தூக்கீட்டு (asylum seekers)  இருக்கிற நீங்கள் கேட்க கூடாது என்றும் , மீறி நடந்தால் நாங்களே குடிவரவு திணைக்களத்திற்கு உங்களை பற்றிய தகவல்களை வழங்குவோம் என்ற தொனியில் மிரட்டலும் வரும்.

வாய்கிழியே தேசியம் , விடுதலை என பேசி திரியும் பலரும் தமக்கு முன்னால் ஒருவேளை உணவுக்கு இன்றி இருப்பவரை பற்றி சிந்திப்பதே இல்லை. பிரித்தானியா வாழ் தமிழ் முதலாளிகள் யாருடன் கதைத்தாலும் தாயகத்தில் தங்களின் வள்ளல் தன்மையை கதை கதையாக சொல்லுவார்கள். தங்கள் ஊழியர்களாக இருக்கும் இந்த அகதிகள் சம்பளம் பெருபாலும் மணித்தியாலத்திற்கு 5 பவுண்களுக்கு குறைவாக தான் இருக்கும்.

வேலை செய்ய அனுமதி இல்லாமல் இருக்கும் உங்களுக்கு உதவும் நோக்குடன் நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து உங்களுக்கு வேலை தந்துளேன் என்பார்கள் , ஆனால் உண்மையில் இரண்டு பேர் செய்யும் வேலைக்கு ஒருவரை வைத்துக்கொண்டு , இரண்டு பேர் வேலை செய்வதாக கணக்கில் காட்டுவார்கள். இவ்வாறு இவர்களை பயன்படுத்தி சுரண்டி கொளுத்த குபேரன்கள் தான் பிரித்தானியாவில் பலர்.

நடைபெற்றது இனப்படுகொலை என்பதன் அடிப்படையில் பிரித்தானியாவில் தமிழ் பேசும் அனைவருக்கும் வதிவிட உரிமை வழங்கப்படும் என்ற நிலை வந்தால் பல புலம் பெயர் அமைப்புகளும் , கதை எழுதும் சட்டத்தரணிகளை கடையை மூடவேண்டியதுதான். தாயகத்தில் போராளிகள் எப்படி முன்னைநாள் போராளிகள் ஆக்கப்பட்டு சமூகத்தில் புறம் தள்ளப்பட்ட்டர்களோ , அவ்வாறே புலம் பெயர்ந்த தேசத்தில் கையை தூக்கிவிட்டு இருப்போர் சமூகத்தில் எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்டும் , வெறுக்கப்பட்டும் ஒதுக்கிவைக்க பட்டுள்ளனர்.