இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM)

1,731 . Views .

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com

உணவு, உடை, உறையுள் போன்றன எவ்வாறு மனிதனுக்கு அடிப்படை உரிமையோ அதே போல் கல்வியும் ஒரு அடிப்படை உரிமை ஆகும். கல்விக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது அல்லது கல்வி வியாபாரமாக்கப்படும்போது மாணவர்கள் போராடுவது தவிர்க்க முடியாததொன்றாகும். இலங்கை அரசானது அதன் யாப்பில் குறிப்பிடப்பட்டது போல் ஜனாநாயக சோசலிசக் குடியரசு எனின் குறைந்த பட்சம் தன் நாட்டு மக்களுக்கு உணவு, உடை உறையுள்,கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளையாவது அனைவருக்கும் வழங்க வேண்டும். தவிர, சுய லாபம் கருதி தனியாருக்கு அவற்றை விற்கக்கூடாது.

ஆனால் தற்பொழுது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சைட்டம் ( SAITM – South Asian Institute of Technology and Medicine) என்னும் தனியார் நிறுவனத்துக்கு மருத்துவக் கல்வி வழங்கும் அனுமதி கொடுத்திருக்கின்றது இலங்கை அரசு. இதன் மூலம் இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவக் கல்லூரியாகின்றது சைட்டம். இதுவரை எட்டு அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன தவிர தனியார் மருத்துவ பல்கலைகழகங்கள் என்று எதுவே இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திறமைக்கு மதிப்பு இல்லாமல் பணம் இருந்தால் மருத்துவம் கற்க முடியும் என்ற நிலைமையினை சைட்டம் தோற்றுவித்துவிடும். அதுமட்டுமல்லாமல் போலி வைத்தியர்களை உருவாக்கும், போலிச் சான்றிதழ்களை வழங்கும் நிலையும் உருவாகக்கூடும்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு வங்கிகளையும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும் தனியார்மயப் படுத்தியதோ அதே கொள்கையைத் தான் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் செய்ய முனைகின்றது. இலங்கையின் இலவசக் கல்வி என்பது பல போரட்டங்களின் பின்னரே பெறப்பட்டது. இப்போது அது சைட்டம் மூலம் தனியாரின் கைக்கு மாறத் தொடங்குகின்றது. இன்று சைட்டம் என்ற ஒரு கல்லூரி மட்டுமே உண்டு. ஆனால் நாளைக்கு ஆயிரம் சைட்டங்களை உருவாக்க இது வழி வகுத்துவிடும், அதன் பின்னர் கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமானதொன்றாகிவிடும்.

கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கானது என்ற அடிப்படையிலேயே ஐ.எம்.எப் (IMF) போன்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. ஐ.தே.க வின் கடந்த பட்ஜெட் ஐ.எம்.எப் இன் கொள்கைக்கு ஏற்பவே அமுலுக்கு வந்துள்ளது. கல்வி, சுகாதாரம் ஆகிய சேவைகளை தனியார்மயப்படுத்தி லாப நோக்கை முதன்மைப் படுத்தும் ஐ.எம்.எப் கொள்கையின் நிகழ்ச்சி நிரல்படியே இயங்கி வருகிறது ஐக்கிய தேசியக் கட்சி.

இங்கிலாந்தில் இலவச தேசிய வைத்தியசாலை (NHS) எவ்வாறு பல போராட்டங்களின் பின்னர் பெறப்பட்டதோ, இலங்கையில் இலவசக் கல்வி எவ்வாறு பல போராட்டங்களின் பின்னர் பெறப்படதோ, மக்கள் நலத் திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என அரசுடன் எவ்வாறு ஜெரமி கோபன் போரடிக்கொண்டிருக்கின்ராறோ அது போல் தனியாருக்கு எதிராக, இலவச மருத்துவக் கல்விக்கு ஆதரவாக இன, மத. மொழி பேதமற்று அனைத்து இலங்கை மக்களும், மாணவர்களும் இடைவிடாது போராடவேண்டும். போராட்டத்தின் வீரியம் குறையுமிடத்து அது தனியாரின் வெற்றிக்கு, கல்வியினை விற்பனை செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையின் வெற்றிக்கு வழி வகுத்துவிடும். பின்னர் இலவசக் கல்வி என்பது முன்னொரு காலத்தில் இலங்கையில் இருந்தது என்று பிற்காலச் சந்ததிகள் சொல்ல வேண்டிய நிலமை வந்துவிடும்.

இலங்கையின் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை மக்களின் பிரதான வளமாக காணப்படுவது கல்வி ஆகும். அதுவும் படிப்படியாக தனியார் வசம் சென்று விட்டால் வசதியற்றோரின் கனவுகள் நிர்மூலமாக்கப்பட்டுவிடும். பின்னர்  சேர். பொன்னம்பலம் ராமநாதன் போன்றோரின் குடும்பங்களே கல்வியிலும் ஆட்சி அதிகாரத்திலும் கோலேச்சிக்கொண்டு திரியும் நிலை ஏற்படும்.  ஒருபுறம் தமிழ் மக்களைப் பேய்க்காட்டிக் கொண்டும் மறுபுறம் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு சேவகம் செய்துகொண்டும் இருக்கும் செல்வந்தக் குடும்பங்கள் மட்டுமே அதிகாரத்தை தம் கைகளில் வைத்திருக்கும் நிலை வேண்டுமா?

ஐக்கிய தேசியக் கட்சி அரசானது 198௦ இலிருந்தே கல்வியினை வியாபாரமாக்க முயற்சித்து வருகின்றது அதற்காக தேர்தல் காலகட்டங்களில் பலத்த அடியும் வாங்கியுள்ளது என்பது வரலாறு. சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்ற பழமொழி ஐ.தே.க க்கு பொருந்தாது. விடாப்பிடியாக கல்வியினைத் தனியார் மயபடுத்த முனைகிறது ஐக்கிய தேசியக் கட்சி. அதற்காக கடந்த மகிந்த அரசு சிறப்பானது என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம். போர் தந்த வெற்றிப் போதையின் களிப்பில் திளைத்த மகிந்த அரசு கல்விக்கான நிதியை ஆறு வீதத்திலிருந்து இரண்டு வீதத்துக்குக் குறைத்தது. யுத்தத்திற்கும், போர் தளவாடங்கள் வாங்குவதற்கும் நிதியினை அதிகமாக ஒதுக்கிக் கொண்டு மக்களின்  அடிப்படைத் தேவையான கல்விக்கு நிதியைக் குறைத்தது மகிந்த அரசு.

கல்விக்கான பட்ஜெட்டை ஆறு வீதமாக அதிகரிப்போம், கல்வியினை தனியாருக்கு விற்பனை செய்ய மாட்டோம் என கடந்த 2௦15 தேர்தலின் போது தமது நூறுநாள் திட்டத்தில் வாக்குறுதி வழங்கிய மைத்திரி-ரணில் அரசு இன்று அதற்கு எதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. 2௦15 இல் ஆட்சியை கைப்பற்றியவுடன் கல்விக்கான பட்ஜெட்டை ஆறு வீதமாக அதிகரித்த மைத்திரி அரசு, ஆனால்  மீண்டும் கடந்த வரவு செலவு திட்டத்தில் அதனை குறைத்துள்ளது. கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற சப்பைக் காரணத்தையும் கூறியிருந்தார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா. பல பாடசாலைகள் இன்றும்  புனரமைக்கப்படாமலும், அபிவிருத்தி செய்யப்படாமலும், யுத்தத்தால் சிதிலமடைந்தும், ஆய்வு கூட வசதி இன்றியும், ஆய்வு கூட உபகரணங்கள் இன்றியும் காணப்படுகின்றன. இவை ஒன்றும் நிதி அமைச்சரின் கண்களுக்குத் தெரியவில்லைப் போலும்?

சைட்டம் என்பது கல்வி என்னும் பெயரில், மக்களின் பல மில்லியன் கணக்கான பணத்தை சுரண்ட முயலும் ஒரு சட்ட விரோத நிறுவனம் ஆகும். மருத்துவக் கற்கை நெறியினை கற்பிப்பதற்கு நாநூறு படுக்கைகளைக் கொண்ட கற்பிக்கும் மருத்துவமனை இருக்க வேண்டும் ஆனால் சைட்டத்துக்கு அவ்வாறு ஒன்று இல்லை. மெடிக்கல் கவுன்சிலிடம் முறையாக அனுமதி பெறாத, சட்டத்துக்கு முரணான வகையில் இயங்கும் சைட்டம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். சைட்டதினை உடனடியாக அரசு தனது கட்டுப்பாடில் எடுத்து அதனை தேசியமயப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கான இலவச மருத்துவக் கல்வியினை உறுதிப்படுத்த வேண்டும்

சைட்டம் என்பது மகிந்த காலத்தில் இருந்தே உள்ளது. அதனைக் கொண்டுவந்ததே ஹிட்லரின் குஞ்சு என செல்லமாக அழைக்கப்படும் இந்த மகிந்த ராஜபக்சதான். இன்று தனது அரசியல் சுய நலனுக்காக, கைவிட்டுப் போன ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சைட்டத்துக்கு எதிராகப் பேசுவதானால் ஏதோ மக்களுக்காக குரல் கொடுக்கின்றார் என எண்ணக் கூடாது.  மக்களுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கம் முதலே இருந்திருக்குமானால் சைட்டத்தினை தனது ஆட்சிக்காலத்தில் அனுமதித்திருப்பாரா? அதற்கான அனுமதியினை ரத்து செய்திருக்கலாமே? மகிந்தவின் பல சுத்துமாத்து விளையாட்டுக்களில் இதுவும் ஒன்றே. மகிந்தவும் தனியார் மயப்படுத்தலுக்கு ஆதரவானவரே தவிர இலவச மருத்துவக் கல்விக்கு ஆதரவானவர் அல்ல.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தது மகிந்த அரசு, சைட்டத்தினை நிறுவ அனுமதி வழங்கியது மகிந்த அரசு, அப்போதெல்லாம் அமைதியாக இருந்த ஜாதிக ஹெல உறுமயக் கட்சி (JHU) இன்று மகிந்தவுடன் இணைந்து சைட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கின்றது. மகிந்தவுடன் சேர்ந்து மகிந்தவின் இனவாத குஞ்சுகளும் குரல் கொடுப்பது அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலே தவிர மக்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்டுகின்றது என்ற நோக்கத்தில் அல்ல. ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர வலதுசாரி, மதவாத கட்சிகள் ஏன் சைட்டதுக்கு எதிராக மகிந்த காலத்தில் போராடவில்லை? இதைப் புரிந்து கொண்டாலே போதும் அவர்களின் கள்ள அரசியல் தெளிவாகிவிடும்.

இலங்கை போன்ற நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் IMF போன்ற சர்வதேச அமைப்புகள் முன் வைக்கும் முக்கிய கோரிக்கை உங்கள் அரசின் பரும அளவைக் குறையுங்கள் (Reduce the Size of State) என்பதாகும். அரசின் அனாவசிய செலவைக் குறையுங்கள் அல்லது சனாதிபதி மற்றும் மந்திரிகள் விரயம் செய்யும் செலவைக் குறையுங்கள் என்பதல்ல அதன் அர்த்தம். இந்த சொல்லாடல் மூலம் அவர்கள் குறிப்பது சேவைகளை வெட்டுங்கள் என்பதே. மக்கள் சேவைகளை வெட்டுங்கள் என்பதே அரசின் அளவு குறைத்தல் என்பதன் பின்னிருக்கும் குறியீடு.

அதாவது கல்வி , சுகாதாரம் , வங்கி இம்முன்றினையும் தனியார் மயப்படுத்தல் என்பதே அதன் அர்த்தம் ஆகும். கல்வியினையும், மருத்துவ சுகாதாரத்தையும் தனியார் மயப்படுத்தி அரசின் செலவைக் குறைத்தல் மற்றும் வங்கியினை தனியார் மயப்படுத்தி மக்களின் பணத்தை கொள்ளையடித்தல் இதுதான் IMF இன்  பிரதான நோக்கமாகும். அதாவது கூடுமானவரை சேவைகளினை தனியார் மயப்படுத்தல் மற்றும் சேவைகளுக்காக அரசு ஒதுக்கும் நிதியைக் குறைத்தல். அதனடிப்படையில்தான் தற்பொழுது கல்வியினை தனியார் மயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது தற்போதைய மைத்திரி- ரணில் அரசு. IMF, உலக வங்கி, ஆசிய வங்கிகள் மூன்றாம் உலக நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவது என்பது வெறும் கண்துடைப்பே. அதாவது காணமல் போன்றோரைக் கண்டுபிடிக்க வடக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அலுவலகத்தை திறந்தமையைப் போன்றது. இதுவரை எத்தனை பேரைக் கண்டு பிடித்து விட்டார்கள் என்பது ஜனாதிபதிக்குத்தான் வெளிச்சம்.

அமைச்சர்களின் செலவுகளையோ அல்லது பாராளுமன்றத்தின் செலவுகளையோ குறைக்கச் சொல்லி IMF போன்ற அமைப்புகள் கோரிக்கை முன்வைப்பதில்லை மாறாக மக்களின் பிரதான அடிப்படைத்  தேவைகளான கல்வி, மருத்துவம் போன்றவற்றில் நிதி வெட்டுக்களை மேற்கொள்ளச் சொல்லித்தான் அறிவுரை வழங்குகிறது.

சைட்டத்தினை தடை செய்யக் கோரி பல்வேறு மாணவர் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் பல போராட்டங்களை நடாத்தி வருகின்றன. அண்மையில் நடந்த போராட்டத்தில் அரசு மேற்கொண்ட தாக்குதலில் எண்பதுக்கும் மேறபட்டோர் காயப்பட்டு வைதியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இத்தாக்குதலை மேற்கொண்டது மகிந்தவுக்கு மாற்று தான்தான் என்று கூறி ஆட்சியை கைப்பற்றிய மைத்திரியின் நல்லிணக்க அரசுதான். உரிமைகளுக்காக போராடுபவர்களைத் தாக்குவது என்பது நாட்டை 1986/87 களின் நிலைக்கு இட்டுச் செல்வதையே காட்டுகின்றது .

சைட்டத்தினை தடை செய்யக் கோரியும் அதனை தேசியமயப்படுத்தக் கோரியும், மருத்துவர், தாதியர் போன்ற மருத்துவ சேவை புரிவோர்களைக் கொண்ட தொழிற்சங்கமாக விளங்கும் GOMA (Government Medical Officers Association) சைட்டதுக்கு எதிராக போராடுகின்றது. ஆனால் வெறுமனே அவை தனித்து போராடாமல் மற்றைய அமைப்புகளுக்கும், மக்களுக்கும் நிலைமையின் தீவிரத்தை விளங்கப்படுத்தி, அவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டமாக இதனைக் கொண்டு செல்லுதல் வேண்டும். மக்களைத் திரட்டாமல் கோமா (GOMA) மட்டும் தனித்து போராடினால் போராட்டம் இலகுவில் சிதற வாய்ப்புண்டு. கோமாவின் தலைமைகள் பல ராஜபக்சவின் சார்பில் இயங்குவதால் இவர்கள் மேல் பலருக்கு அதிருப்தி உண்டு. ராஜபக்ச கொண்டு வந்த சைட்டத்துக்கு எதிராக அப்போது ஏன் போராடவில்லை என்ற சரியான கேள்வியும் இவர்களை நோக்கி வைக்கப் படுகிறது. இவர்களின் போலி அரசியலையும் மாணவர்களும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் நாம் சைட்டத்துக்கு எதிரான போராட்டத்தை நிறுத்துவதோ அல்லது தோல்வியடைய வைப்பதோ சரி அல்ல. அது எம்மை ரணில் ராஜபக்க்ஷ வலைக்குள்தான் மீண்டும் விழுத்தும்.

மேலும் வெறுமனே இலங்கைக்குள் மட்டும் இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்காமல் இப்போராட்டமானது சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும். ஸ்பெயின் மாணவர் அமைப்புகள், அமெரிக்க பிரித்தானிய மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ், சிங்கள வெளிநாட்டு டயஸ்போறா  அமைப்புகளுடன் இணைந்து இப்போராட்டமானது விஸ்தரிக்கப்பட்டு அனைவரும் இணைந்து போராட வேண்டும். இவ்வாறு விஸ்தரிக்கப்படும் போராட்டத்தினால் புதிய மக்கள் அமைப்பு ஒன்று உருவாகக் கூடிய சாத்தியம் உண்டு. எதிர்காலத்தில் மக்களுக்கான மக்கள் அரசியலில் அவ்வமைப்பு ஈடுபடக்கூடிய சாத்தியக்கூறும் உருவாகலாம்.

இவ்வாறு போராடுவதனால் அதனைப் பயன்படுத்தி மீண்டும் மகிந்த ஆட்சிக்கு வரக்கூடிய சாத்தியம் உண்டு என்று பூச்சாண்டி காட்டப்படுகின்றது. இது முற்றிலும் தவறான பார்வையாகும். போராட்டம் செய்தால் மகிந்த வந்துவிடுவார், செய்யாமல் விட்டால்தான் மைத்திரியின் ஆட்சி நீடிக்கும் என்று உரிமைகள் மறுக்கப்படும் போது அல்லது உரிமைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும்போது கைகட்டி மெளனமாக இருக்க முடியாது. மக்கள் போராடி தமது உரிமைகளை வென்றெடுக்கத்தான் வேண்டும்.

பெளத்தத்துக்கு முன்னுரிமை, ஒன்றினைக்க்கப்பட்ட ஒற்றையாட்சி, காணி போலீஸ் அதிகாரம் மத்திய அரசின் கைவசம் வைத்திருத்தல்  என சிங்கள மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு யாப்பு  சீர்திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளை, எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் நல்லிணக்க அரசுடன் கைகோர்த்துக் கொண்டு அமைதியாக பயணிக்கின்றது தமிழ் தலைமைகள். அதேபோல் கல்வி தனியார்மயப்படுவதற்கு எதிர்ப்பு காட்டாமல் இருக்கும் தமிழ் தலைமைகளின் மெளனமானது ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கை, தனியார் மயப்படுத்தப்படும் கல்விக்கொள்கை  என்பனவற்றுடேன் முரண்பாடு இல்லாத தன்மையையே காட்டுகின்றது. மாறாக தமக்கான அதி சொகுசு வாகனங்களை வரி விலக்குப் பெற்று இறக்குமதி செய்வதிலும், வட மாகாண சபையில் ஊழல் செய்து மக்களின் மில்லியன் கணக்கான பணத்தை சுருட்டுவதிலும்தான் குறியாக இருக்கின்றது தமிழ் தலைமைகள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தன் ஐயாவைப் பொறுத்தவரை தெற்கில் நடக்கும் பிரச்சனை என்பது வேறொரு நாட்டில் நடக்கும் பிரச்சனையைப் போன்றது. அதில் அவர்கள் தலையிடுவது இல்லை. முழு இலங்கைத் திரு நாட்டுக்கும் அவர்தான் எதிர் கட்சித் தலைவர் என்பதை அடிக்கடி அல்ல எப்போதும் மறந்து விடுகிறார் கெளரவ சம்பந்தர் ஐயா அவர்கள்.

தமிழர் பிரச்சனை வேறு ,தேசியப் பிரச்சனை வேறு, தேசியப் பிரச்சனையில் தாம் மூக்கை நுழைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் தலைமைகளும் எடுக்கின்றன. தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு என்பது சிங்கள தமிழ் முஸ்லிம் அனைத்து மக்களினதும் தேசியப் பிரச்சனைக்கு அவர்கள் சார்பாக குரல் கொடுத்து அம்மக்களின் ஆதரவைப் பெற்று அதன் ஊடாக வென்றெடுக்கப்படுதலே நிரந்தர தீர்வாக அமையும். மாறாக சிங்கள பெளத்த பேரினவாத அதிகார சக்திகளிடம் இருந்து தமிழர் உரிமைகளை கேட்டு வாங்கிப் பெற்றுக் கொள்ளலாம் என்பது வெறும் மூடநம்பிக்கை என்பதையே கடந்த கால வரலாறுகள் எமக்கு சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே தமிழ் தலைமைகள் இது போன்ற சந்தர்பத்தில் வெறுமனே தள்ளி நின்று வேடிக்கை பார்க்காமல் தேசியப் பிரச்சனையில் தாமும் பங்கெடுத்து, தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை அங்கீகரிக்கக் கூடிய தெற்கு அமைப்புகளுடன் இணைந்து தமிழர் போராட்டத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

கஜன்