சைபர் தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin)

1,291 . Views .

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com

உலகளாவிய ரீதியில் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் தயாரித்து வழங்கும் HBO (Home Box Office) என்னும் நிறுவனத்தின் இணையதளம் கடந்த ஜூலை மாதம் சைபர் தாக்குதலுக்குள்ளானது. மிஸ்டர் ஸ்மித் ( Mr. Smith) என அழைக்கப்படும் ஹக்கர் குழுவே இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மிகப் பிரபலமான தொலைகாட்சித் தொடரான கேம் ஒப் திரோன்ஸ் ( Game Of Thrones) நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட், தொடரின் இதுவரை வெளிவராத பாகங்கள், நடிகர்களின் தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி இலக்கங்கள், சந்தைபடுத்தும் ஆவணங்கள் (Marketing Materials), நிறுவனம் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சனைகள்,  நிர்வாகிகளின் கடவுச்சொற்கள், 37,977 ஈமெயில்கள் போன்ற பல உயர் இரகசியத் தகவல்கள் பல  திருடப்பட்டுள்ளன. HBO இன் இணையதளத்தினை ஹக் செய்வதற்கு தங்களுக்கு ஆறு மாதம் எடுத்துள்ளது எனவும் ஆகையால் தமக்கு ஆறுமாதச் சம்பளத்தை வழங்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது மிஸ்டர் ஸ்மித் ஹக்கர் குழு. HBO நிறுவனம் 250,000 டொலர் பெறுமதியான பிட்காயின்களை செலுத்தி திருடப்பட்ட கோப்புக்களை மீட்க தயாராகிக் கொண்டிருக்கின்றது.

2013 இல் சில்க் ரோட் (Silk Road) என்னும் இணையத்தளம் ஊடாக தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் உட்பட பல மருந்துப் பொருட்களை பிட்காயின் மூலம் ஆன்லைன் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்த குற்றத்துக்காக ரோஸ் உல்ப்றிச் (Rose Ulbricht) என்பவரை கைது செய்தது அமெரிக்க காவல்துறையான எப்.பி.ஐ (FBI). ரோஸ் உல்ப்றிச்க்கு ஆயுள்தண்டனை வழங்கி அவரது நிறுவனத்தையும் சீல் வைத்து மூடியது அமெரிக்க நீதிமன்றம். சீல் வைத்து மூடப்படும்பொழுது அதன் மதிப்பு 28.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கடந்த மே மாதம் இந்தியா, அமெரிக்கா , பிரான்சு உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 230,000 க்கும் மேற்பட்ட கணனிகள்  வோன்ன கிரை என அழைக்கப்படும் ராம்சார் வேர் வைரஸ் தாக்குதலுக்குள்ளானது. இதனால் ஸ்பெயின் தொலைத் தொடர்பு சேவை, பிரித்தானியாவின் தேசிய வைத்திய சேவை, நிசான் கார் உற்பத்தி  நிறுவனம், சவூதி தொலைத் தொடர்பு நிறுவனம்  போன்ற பல்வேறு அரச. தனியார் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின. தாக்குதலுக்கு உள்ளான கோப்புகளை மீட்பதற்கு  300 டொலர் முதல் 1200 டொலர் வரை பெறுமதியான  பிட்காயின்களை  மீட்ப்புப் பணமாக செலுத்தும்படி ஹாக்கர் குழுவினால் கோரிக்கை விடப்பட்டது.

மேற்படி சம்பவங்களின் மூலம் தற்பொழுது இணைய உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது பிட்காயின் எனப்படும் இலத்திரனியல் பணம் என்பது தெளிவாகின்றது. இவ்வாறு இணையத்தை ஆட்டிப்படைக்கும் பிட்காயினின் பின்னால் உள்ள ரகசியம் என்ன?

பிட்காயின் எனப்படுவது கண்ணால் காண முடியாத, தொட்டு உணரமுடியாத  இலத்திரனியல் பணமாகும் (Digital Money). டொலர், ரூபாய், பவுண்ட்ஸ் என ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பண அலகுகள் இருப்பது போல் ஒட்டு மொத்த உலகத்துக்கும் ஒரே பணம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே பிட்காயின் என்னும் இலத்திரனியல் பணமாகும். இது 2009 இல் சந்தோஷி நகமோடா என்னும் தனி மனிதனால் அல்லது ஒரு குழுவினால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. 2008 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் அதனால் ஏற்பட்ட பணத் தேவையும் பிட்காயினின் உபயோகத்தை அதிகரித்தது எனலாம். பொருளாதார விழ்ச்சியின் பின்னர் அதிலிருந்து எவ்வாறு மீண்டெழுவது என வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தவித்துக் கொண்டிருந்த வேளையில்தான் பிட்காயின் எனப்படும் புதிய செலவாணி முறையினை பற்றிய தகவலை வெளியிட்டார் சந்தோஷி நகமோடா. பின்னர் 2009 அதற்கு செயல் வடிவமும் கொடுத்தவரும் அவரே. சாம்சுங் ( Samsung), டோஷிபா (Toshiba), நகமிச்சி (Nakamichi), மோட்டோரோலா ( Motorola) ஆகிய நான்கு நிறுவனங்களும் சேர்ந்தே இதனை உருவாக்கியது என்று கூறுவோரும் உண்டு. ஏனெனில் இந்நிறுவனங்களின் முதல் ஒரு சில எழுத்துக்களின் சேர்க்கையே சந்தோஷி நகமோடா ( Satoshi Nakamoto) என்பதாகும்

பிட்காயின் என்பது ஒரு மறையீட்டு செலவாணி முறை ஆகும் (Crypto Currency) அதாவது பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தின் அளவு, பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களின் தகவல்கள் அனைத்தும் மறைத்து, குறியீடுகளின் அடிப்படையிலேயே காணப்படும். ஆகவே யாரும் எதுவும் கண்டுபிடிக்க முடியாது. இப்பணத்தைப் பெற, விற்க அல்லது இணையத்தில் தோண்டி எடுக்க ஒருவர் தனது சொந்த தகவல்களை வெளிபடுத்திக் கொள்ளத் தேவையில்லை என்பதனால் சர்வதேச கறுப்புச் சந்தையில் அதிகமாகப் புழங்குகின்றது.

பிட்காயின் என்னும் இலத்திரனியல் பணமானது, பணத்துக்குப் பதிலாக முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செலவாணி முறையாகும். அதன் பின்னர் பல்வேறு இலத்திரனியல் பணங்கள் பாவணைக்கு வந்துவிட்டன. பெதர்காயின், லைட்காயின், நேம்காயின் போன்றன அவற்றுள் சிலவாகும்.

பிட்காயினை பொதுவாக BTC என அழைப்பர். யாரால் யாருக்கு அனுப்பப்படுகிறது என்பதை இணையத்தில் பின்தொடர்த்து கண்காணித்தல் கடினம் என்பதனால் சூதாட்டம், போதைப் பொருள் விற்பனை, ஆயுத விற்பனை, குழந்தைக் கடத்தல் போன்றனவற்றுக்கு இது அதிகமாகப் பயன்படுதப்படுகின்றது. பணத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவப் பொருளாதாரம் எவ்வாறு பொருளாதார நெருக்கடியை அல்லது பொருளாதார வெடிப்பை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஏற்படுத்துமோ அது போல் கட்டுப்பாடு இன்றி வளர்ந்து வரும் பிட்காயின் போன்ற இலத்திரனியல் பணமும் பொருளாதார வெடிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் பொதுவாக பெரும்பாலான அரசுகளின் அங்கீகாரம் பிட்காயினுக்கு கிடையாது ஆனால் சர்வதேச கறுப்புச் சந்தையில் இதற்கு அதிகம் கிராக்கி உள்ளது. ஏனெனில் பிட்காயின் பரிமாற்றம் செய்வதற்கு வங்கியோ அல்லது எந்தவொரு நிதி நிறுவனங்களின் உதவியோ தேவை இல்லை என்பதனாலாகும். மேலும் அரசுக்கான வருமான வரி, வங்கியின் தரகு அல்லது விற்பனைப் பங்கு போன்ற எதுவும் வழங்கத் தேவையில்லை. ஆகக் குறைந்தது ஒரு ஸ்மார்ட் போன் கையில் இருந்தாலே போதுமானது. உலகின் எப்பாகத்திற்கும் குறித்த ஒரு சில நிமிடங்களில் பணத்தை பரிமாற்றம் செய்து விட முடியும். வங்கிப் பரிவர்த்தனை போன்று அதிக நேரம் அல்லது ஒரு சில நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. இது வேகமானதும் ஆகும். சாதாரண வங்கிக் கணக்கை முடக்குவது போல எந்த அரசும் இதனை முடக்கவும் முடியாது.

2009  இன் ஆரம்பத்தில் பிட்காயின் அறிமுகப்படுத்தப்பட்ட  சமயத்தில்  அதன் பெறுமதி ஒரு டொலருக்கும்  குறைவேயாகும்.. பின்னர் பிட்காயின் விளம்பரம் அதிகரிக்க அதிகரிக்க அதனைப் பயன்படுத்தும் வியாபார நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களின் எண்ணிகை அதிகரித்தது. அதனால் அதன் பெறுமதியும் அதிகரித்தது. மைக்ரோசொச்ப்ட், பேபால் போன்ற நிறுவனங்களும் தற்பொழுது பிட்காயினைப் பயன்படுத்துகின்றன.

ஒவ்வொரு நாடுகளும் பிட்காயினுக்கு விதிக்கும் தடைகள், கட்டுப்பாடுகள், எச்சரிக்கை காரணமாக அவற்றின் பெறுமதி ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசப்படுகின்றது. சில நாடுகள் பிட்காயினை அங்கீகரித்து அதன் பரிவர்த்தனைக்கு வரிவிதிப்பும் செய்கிறது. பிட்காயினை ஒரு முதலீட்டு வாய்ப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றது.அதாவது பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பது போல் பிட்காயினின் பெறுமதி குறைவாக இருக்கும் பொழுது வாங்கி அதிகமாக இருக்கும் பொழுது விற்பனை செய்கின்றனர்.

பிட்காயினை பெரும்பாலான அரசுகளோ ,நிதி நிறுவனங்களோ அங்கீகரிக்காததால் அதனால் ஏற்படும் நிதி இழப்புக்கு யாரிடமும் நீதி கேட்க முடியாது. ஏனெனில் இப்பணத்தை யார் அனுப்புகிறார்கள் , யார் பெறுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. பிட்காயின் பரிமாற்றத்தில் ஒழுங்கான அங்கீகரிக்கபட்ட பண நிர்வாக முறை இல்லை. சுருக்கமாகச் சொல்லின் பிட்காயின் எனபடுவது அரசு அங்கிகரித்த பணத்துக்குப் பதிலாக தனி நபர் அல்லது தனி குழுக்களால் அங்கீகரிக்கபட்ட இன்னொரு பண பரிமாற்ற முறையாகும்.உதராணமாக நாம் இன்னொருவருக்கு வழங்கும் பரிசு அட்டையைப் (Gift Card) போன்றது. இதற்கு தேசிய எல்லைகள் கிடையாது என்பதனால் இதனை எந்த நாட்டுச் சட்டமும் தடுக்க முடியாது. எந்தவொரு பொருளாதார விதிமுறைக்கும், எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாத கார்பனைட் பணமாகும். பிட்காயினை யாராலும் தடை செய்ய முடியாது என பில்கேட்ஸ் அண்மையில் தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகின் 91 நாடுகளில் பிட்காயின் பாவனையில் உள்ளது. தாய்வான், பங்காளதேஷ் , பொலிவியா , மசிடோனியா , ஈக்வடோர் போன்ற நாடுகள் பிட்காயினை சட்ட ரீதியாக தடை செய்துள்ளன. தமது வங்கிகளும் , நிதிநிறுவனங்களும் பிட்காயின் பயன்படுத்துவதை சீனாவும் அண்மையில்  தடை செய்துள்ளது. அதனால் அதன் மதிப்பு ஐம்பது வீதத்தால் சடாரென்று குறைந்தது. எனினும் தனியார் அதனைப் பயன்படுத்திக் கொண்டுதான் உள்ளனர். இந்தியாவில் அதற்கு முழுமையான அங்கீகாரம் இல்லை. 2013 இல் பிட்காயினை முதன்முதலில் தடை செய்த நாடு தாய்லாந்து ஆகும். எனினும் தாய்லாந்தில்தான் பிட்காயின் அதிக புழக்கத்தில் உள்ளது. பின்னர் தனது சட்ட திட்டங்களை சிறிது தளர்த்தியுள்ளது தாய்லாந்து அரசு. இந்தியாவைப் பொறுத்த மட்டில் கடந்த வருட இறுதியில் பிட்காயினின் மதிப்பு இந்திய ரூபாயில் 74,628 ஆக இருந்து பின்னர் தற்போது 42,737 ஆக இருக்கின்றது. இதன் பெறுமதி மேலும் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.

பிட்காயினானது கணனியில் உள்ள அல்கோரிதம்( Algorithm) வகை கணித முறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு எண்ம நாணயமாகும் (Digital- Currency) ஆகும். இக்கணித முறைமை மூலம் அதிக பட்சம் 21 மில்லியன் பிட்காயின்களை மட்டுமே தோண்டி எடுக்க முடியும். 2030 க்குள் 21 மில்லியன் பிட்காயின்களும் தோண்டி எடுக்கப்பட்டுவிடும், அதன் பின்னர் புதிதாக பிட்காயின் எதுவும் உருவாக்கமுடியாது. அதனால்தான் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான இணையதள பாவணையாளர்கள் ஒருவருக்கெதிர் போட்டி போட்டுக்கொண்டு பிட்காயின் தோண்டி எடுத்தலில் ஈடுபடுகின்றனர். தோண்டி எடுத்தல் என்றால் கத்தி, கடப்பாறை கொண்டு தோண்டுவதல்ல, மாறாக கணித புதிரை விடுவித்து இலவச பிட்காயினை பெறுதலே அதன் அர்த்தமாகும். இருபத்தியொரு மில்லியனில் எண்பது சதவீதமானவை 2018 க்குள் தோண்டி எடுக்கப்பட்டு விடும் என்றும் மீதி 4.2 மில்லியன் பிட்காயின்கள் 2030 க்குள் எடுக்கப்பட்டுவிடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதன் பின்னர் பிட்காயின்கள் எதுவும் உருவாகமாட்டாது.

மேலும் பிளாக் செயின் (Block Chain) என்னும் பொதுக் கணக்கேட்டில் பரிவர்த்தனைகள் பதிவு செய்யபப்டுவதனால் ஒரே பிட்காயினை ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தரம் பயன்படுத்த முடியாது. 2010 இல் இரண்டு பீசாக்களை வாங்குவதற்காக ஒருவர் செலுத்திய தொகை 10,000 பிட்காயின்கள். இதுவே முதன் முதலில் பிளாக் செயினில் பதிவு செய்யப்பட்ட பிட்காயின் பரிவர்த்தனை ஆகும். இன்று அதன் மதிப்பு பல மில்லியன் டொலர்களாகும்.

இதுவரை பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆவணங்களை வெளியிட்டு உலக நாடுகளின் போர்க் குற்றங்களையும், ஊழல்களையும் வெளிப்படுத்திய ஜூலியன் அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் நன்கொடை பெறுவதை தடை செய்யும் பொருட்டு பெரும்பாலான நிதி நிறுவனங்கள் விக்கிலீக்ஸ் உடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளமையினால் விக்கிலீக்ஸ் பிட்காயினை நன்கொடையாகப் பெறுகின்றது.

எதிர்கால தொழில்நுட்பத்தின் மிகச் சிறந்த, மிகப் பிரபல்யமான தொழில்நுட்பமாகக் காணப்படப்போவது பிட்காயின் போன்ற இலத்திரனியல் பணம்தான் என்கிறார் சோபி (SoFi) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராகிய மைக் ஹக்னி ( Mike Cagney). பிட்காயினின் வளர்ச்சியினால் எதிர்காலத்தில் வங்கிகள், நிதிநிறுவனங்கள், விசா கார்ட், மாஸ்டர் கார்ட் போன்றன தமது மேலதிக கட்டணங்களை குறைக்க வேண்டிய அல்லது நீக்கவேண்டிய நிலை ஏற்படலாம். பண்டமாற்றில் ஆரம்பித்து பின்னர் உலோகம், உப்பு , சிப்பி, சோழி  போன்றன பரிமாற்ற கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் தற்பொழுது  கடதாசி நாணயம், கடனட்டையில் வந்து  நிற்கும் பரிமாற்ற கருவிகளின் அடுத்த கட்ட பாய்ச்சல் இலத்திரனியல் பணமாகவே இருக்கும் சாத்தியம் உள்ளது. அரசுகளும் வங்கிகளும் அதிகார வர்க்கத்துடன் இணைந்து  பணத்துக்காக வளங்களை சுரண்டி மக்களை ஒடுக்கும் காலம் மறைந்து பிட்காயினுக்காக மக்களை சுரண்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

கஜன்