சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில் நிற்பதாக சிலர் இன்று பேசி வருகின்றனர். சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில்தான் – ஓட வேண்டும் என சிலர் வாதிக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் புதியவை இல்லை. அனிதாவின் இறப்பை ஒட்டி – குறிப்பாக பிரபல திரைப்பட இயக்குனர்கள் அமீர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதங்களை ஒட்டி இந்த உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்டுவது எவ்வாறு என்ற அடிப்படையில் இந்த விவாதங்கள் நகர வேண்டும் என்ற நோக்கில் சில கருத்துக்களை இங்கு பதிவது அவசியமாக இருக்கிறது.
‘தமிழ் தேசியம்’ என்ற சொல்லாடலைப் பாவிப்பவர்கள் பெரும்பாலானோர் அதை ஒற்றைப் பரிமாணத்தில் பாவித்து வருகின்றனர். தேசியம் என்பது ஒற்றை முகம் கொண்டதல்ல என்ற புரிதலை வசதிக்காக சிலர் மறந்து விடுகின்றனர். தீவிர வலதுசாரிய தேசியம் முதற்கொண்டு தேசியம் பல தளங்களில் பல்வேறு நலன்களை நிறைவு செய்யும் நோக்கில் பல்முகமாக இயங்கி வருகிறது. இந்தியப் பிரதமர் மோடியின் தேசியமும் சாதாரண நாகலாந்து பிரசையின் தேசியமும் ஒன்றல்ல. இலங்கை முன்னால் சனாதிபது ராஜபக்சவின் தேசியத்தை வடக்கு தமிழ் மக்களின் தேசியத்தோடு சமன்படுத்த முடியுமா?
மக்களின் தேசிய அபிலாசைகளுக்கும் அதிகார சக்திகளின் தேசிய சொல்லாடல்களுக்கும் பெரும் இடைவெளி உண்டு. அதிகார சக்திகளின் கையில் தேசியம் ஒரு ஒடுக்கும் ஆயுதம். தீவிர வலது சாரிகள் அதி தீவிர தேசியத்தைப் பொப்புலிச கோரிக்கைகளுடன் பிணைந்து உபயோகிப்பதை பார்க்கலாம். அது அவர்கள் பாவிக்கும் ஆள் திரட்டும் உத்தி. அவர்களின் முக்கிய கவனம் எதிராளிகளை வரையறுப்பதிலும் அவர்களை எதிர்பதிலும் குவிகிறது. இது ‘மற்றயவர்கள்’ அல்லது ‘அன்னியர்’ என வரையறுக்கப் பட்டவர்கள் மேல் வன்முறை செய்வது நோக்கி வளர்கிறது. இங்கிலாந்தில் இயங்கி வரும் யு.கே சுதந்திரக் கட்சி எனப்படு தீவிர வலதுசாரிய கட்சியை உதாரணமாகக் குறிப்பிடலாம். நெதர்லாந்து, அவுஸ்திரியா முதலான பல நாடுகளில் பெரும்பான்மை ஆதரவை திரட்டி வரும் துவேச- தீவிர வலது சாரியக் கட்சிகள் அனைத்தும் தீவிர தேசியத்தை தமது ஆள் சேர்க்கும் உத்தியாகப் பாவித்து வருகின்றன. பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உடைந்து வருவது ஏராளமான தொழிலாளர்களை இவர்களை நோக்கி நகர்த்தும் ஆபத்துள்ளது. அவ்வாறு மிக ஒடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் இவர்கள் வளர்வது மரபு ரீதியான பாசிச கருத்து நிலை மீண்டும் வலுவடைய உதவக்கூடும் ஆபத்தும் உண்டு. இருப்பினும் மரபு ரீதியான பாசிச எழுச்சி என்பது தற்போதைய உலக நிலைவரத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.
இத்தகைய தீவிர வலதுசாரிய தேசியத்தை கோவை குணா போன்றவர்களின் கருத்து – மற்றும் நடவடிக்கைகளில் அவதானிக்கலாம். இதன் கூறுகளை சில சமயம் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் இயக்கத்திலும் பார்க்கலாம். ஆனால் பல சமயங்களில் சீமான் இடது சாரிய அல்லது முற்போக்கு கருத்துக்களை தேசியத்தோடு இனைத்துப் பேசி வருவதையும் அவதானிக்கலாம். சீமான் அரசியல் ஒரு பொபுலிச அரசியல். அவரது தேசியம் பொபுலிச உள்நோக்கை மட்டுமே கொண்டியங்குகிறது. அரசியலின் எந்த திசையில் எப்போது நகரும் என்று நிர்ணயிக்க முடியாத நிலை பொபுலிசத்தின் முக்கிய பண்புகளில் ஓன்று.
இது தவிர தேசிய அரசுகளின் பாதுகாவலர்களின் தேசியம் ஒன்றுண்டு. உலகில் எந்த ஒரு நாட்டிலும் தேசியத்தின் அடிப்படையில் இயங்காத அரசுகள் – அரச கட்சிகள் எதுவுமில்லை. பொது மக்களுக்கு இந்தத் தேசியத்தில் பெரும் பங்கில்லை. இருப்பினும் தேசிய அரசு பாதுகாக்கப் படுவது தேசிய முதலாளித்துவத்தின் இருப்பை தக்க வைக்க அத்தியாவசியமாக இருக்கிறது. மக்களை இணைத்து பொதுவில் கட்டமைக்கப்பட்ட மொழி, இனம் முதலான அடையாளங்கள் தேசிய அடையாளங்களாக வலிமை வாய்ந்து இயங்குவதால் இந்த தேசிய உணர்வு மக்கள் மத்தியில் பலமானதாக இயங்கி வருகிறது. தேசிய அரசின் அதிகாரக் கவர்ச்சியில் இயங்கும் அமைப்புக்கள் – கட்சிகள் பல இத்தகய தேசியவாத அடிப்படையில் இயங்கி வருவதைப் பார்க்காலாம். தாம் மக்கள் நலன் சார்ந்து இயங்குவதாக – மக்கள் இயக்கங்களாக காட்டிக் கொள்பவர்களும் தேசிய அரசின் கவர்ச்சியில் வலது சாரிய – முதலாளித்துவ தேசிய அடிப்படையிலேயே பயணிப்பதை அவதானிக்கலாம். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அலது தமிழ் நாட்டில் இயங்கி வரும் பல்வேறு திராவிட கட்சிகள் முதலியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஒடுக்கப்படும் மக்களின் மத்தியில் வளரும் தேசிய அபிலாசைகள் எடுக்கும் முற்போக்கு வடிவம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓன்று. மேற்குறிப்பிட்டதுபோல் ஒடுக்கப்படும் மக்களும் பல்வேறு திசைகளில் இழுக்கப் படுவர். அவர்கள் மத்தியில் வளரும் அரசியற் பிரஞ்ஞை, மற்றும் பல்வேறு புறக் காரணிகள் அவர்கள் நகரும் அரசியல் திசையை தீர்மானிக்கிறது. ஒடுக்கப்படுகிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் மக்களை ‘அரசியல் சரித்தன்மை’ உடையவர்களாக நிறுத்தி விடாது. ஆனால் ஒடுக்குமுறையில் இருந்து தப்புதல் என்பது அவர்கள் முன் இருக்கும் மிகப் பெரும் சுமை. அரசியற் பிரஞ்ஞை பின் தங்கிய நிலை இருப்பின் அது மக்களை குறுக்கு வழிகள் நோக்கி தள்ளுகிறது. இதிலிருந்து மாறுபட்ட முற்போக்கான திசையில் நகராமல் அவர்கள் தாம் எதிர்கொள்ளும் ஒடுக்கு முறையில் இருந்து தப்பி விட முடியாது. விடுதலை குறுக்கு வழியில் சாத்தியமில்லை.
முற்போக்கு தேசியம் – அல்லது இடது சாரியத் தேசியம் ஒரு புனிதமான தேசிய நிலைப்பாடு என்று வாதிக்கவில்லை. மாறாக அந்தத் திசை குறைந்த பட்சம் மக்கள் விரும்பும் ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை என்ற என்ற நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இல்லை. தேசிய அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் தேசிய அபிலாசைகள் வளர்வது தவிர்க்க முடியாத ஓன்று. ஆனால் இந்தத் தேசிய அபிலாசை முற்போக்கு வடிவம் எடுக்காமல் விடுதலை நோக்கி நகர முடியாது.
எல்லாவித ஒடுக்குமுறைகளையும் மறுத்து புதிய வளமான சமூகத்தை கோருகின்ற -கட்டி எழுப்புகின்ற தேசிய உணர்வு எதிர்க்கப்பட முடியாதது. இதன் தேசியம் சார் சில பிற்போக்குப் பண்புகள் வெறும் வெளி ஓடாக மட்டுமே இயங்குகிறது. போராட்டம் அதையும் உடைத்து சமூகத்தை முன்னோக்கி நகர்த்த வல்லது. இதனால் இத்தகைய தேசிய அபிலாசை முற்போக்குச் சக்திகளின் நட்புச் சக்தியாக இயங்க வல்லது. இத்தகைய தேசியமே பெரும்பான்மை மக்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து பலப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. மக்களை அரசியல் ரீதியாக திரட்டுவது – வெற்றி பெறுவது நோக்கிப் பலப்படுவது – ஏதோ ஒரு அடக்கு முறை தக்க வைத்த நிலையில் சாத்தியப்படாது. அத்தகைய திரட்டல்கள் குறுகிய காலப் பகுதிகளுக்கு மட்டுமே சாத்தியப்படும். அத்தகைய பிற்போக்குத் தேசியத்தின் அடிப்படையில் எழும் திரட்டலின், நிலைக்கும் தன்மை இயற்கைக்கு எதிரானது. ஒடுக்குதலை நியாயப்படுத்துதல் சமூக இயற்கை நியதிக்குப் புறம்பானது. பாசிசம் வெற்றி பெறலாம். ஆனால் வரலாற்றில் நிலத்துக் கால் ஊன்ற முடியாது. (இங்கு நாம் போராட்டம் சார்ந்த மக்கள் திரட்சி பற்றி பேசுவதை அவதானிக்க – தேசிய அரசு சார்ந்த உறவுகளை அல்ல).
ஆனால் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் திரட்டல் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தில் மட்டுமே தங்கி இருக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தில் மட்டுமே அத்தகைய திரட்டல் சாத்தியம் எனக் கருதுவது அரசியற் போதாமை மட்டுமல்ல – இதன் பின் ஒரு சுய லாப நோக்கமும் உண்டு. தமிழ் என்ற அடையாளம் பின் தங்கி போய்விட்டால் திரட்சி பட்டு விடும் என்ற பயம் அந்த ஒற்றை அடையாளத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர்களுக்கு ஏற்படுகிறது. ஒற்றை அடையாளத்துக்குள் பல்வேறு போராட்டங்களை முடக்கும் தேவை அவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. அந்த ஒரு பரிமாணப் போக்கு இன்றி வேறு விதத்தில் அரசியல் லாபங்கள் எடுக்க முடியாத குறுகிய பார்வை உள்ளவர்கள் தான் இந்த அந்தரத்துக்கு உள்ளாகிறார்கள். ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்தும் போராட்டத் திட்டமிடல் இன்மை – அதன் தேவை பற்றிய தெளிவின்மை இவர்களின் இருத்தலை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது. இவர்கள் தம்மை நிலை நாட்டிக் கொள்ளும் சுய லாப நோக்கில் ஒற்றை அடையாளத்தை மட்டும் தூக்கிப் பிடித்து மிகுதி அனைத்தையும் அதன் பகுதிகளாக சுருக்க முயல்கிறார்கள். இது அடிப்படையில் நேர்மை அற்ற செயற்பாடு. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் – அதன் திரட்சி – அதன் வெற்றி பற்றி நியாயமான முறையில் சிந்திப்பவர்கள் – அதனை முதன்மைப் படுத்துபவர்கள் அவ்வாறு சிந்திக்கவோ செயற்படவோ முடியாது.
ஏனெனில் ஒடுக்குதல் என்பது ஒரு தனிப்பட்ட முறையில் இயங்குவதில்லை. பல்வேறு ஒடுக்குமுறைகளின் மொத்த வடிவமாகவே ஒடுக்குகப்படுதல் நிகழ்கிறது. அதுபோலவே ஒடுக்கப்படும் உணர்வும் பல்வேறு ஒடுக்குதலின் மொத்த வெளிப்பாட்டின் விளைவாக எழுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட ஒடுக்குதல்தான் முக்கியம், மற்றவை தேவை இல்லை என்ற அடிப்படையில் ஒடுக்குமுறை இயங்குவதில்லை. ஒடுக்கப்படும் தமிழ் தேசியம் தனித்த ஒடுக்குமுறையாகவா இயங்குகிறது? தமிழர் தேசிய முறையில் மட்டும் தான் ஒடுக்கப்பட வேண்டும் மற்றபடி அவர்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குதல் உற்பட மற்றைய ஒடுக்குதல்கள் இருக்கக் கூடாது என்ற தெரிவு முறையிலா சிங்கள பெரும் தேசிய ஒடுக்குதல் நிகழ்கிறது? சாதிய ரீதியான ஒடுக்குதலின் வடிவமாக பெண்கள் மேலான வன்முறை இருப்பது எதனால்? ஒரு குழு மனிதருக்கு எதிரான ஒடுக்குதல் நிகழ்வது அந்தக் குழுவில் இருக்கும் அனைத்து அடையாளங்களையுமே தனது ஒடுக்குதளுக்குப் பாவிப்பதுதான் வரலாறு முழுக்கப் பார்க்கின்றோம். இந்த அர்த்தத்தில் மொழி, இனம், சாதி, என அனைத்து அடையாலங்களும் ஒடுக்குதலில் கருவியாகிறது. எது கூட எது குறைய என்ற பார்வை கூட ஒடுக்குதலின் ஒரு வடிவமாக இருக்கும் வாய்ப்புள்ளது.
இதனாலும்தான் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒரு பரிமாண முறையில் நிகழ முடியாது. எவ்வாறு ஒடுக்குமுறை ஒரு தெரிவு அடிப்படையில் நிகழ வில்லையோ அதே போல் அதற்கு எதிரான போராட்டமும் தெரிவு அடிப்படையில் திரள முடியாது. முதன்மை முரண் இரண்டாம் முரண் மூன்றாம் முரண் எனப் பிரித்து அணுகும் இருகிய நிலைப்பாடு தவறு. உற்பத்தியின் அடிப்படையில் சமூக உறவுகள் தோன்றுகின்றன என்ற பார்வையை ஏற்றுக் கொள்பவர்கள் நாம் வாழும் சமூகம் இரு வர்க்க திரட்சியாக பிளவு பட்டு நிற்பதை ஏற்றுக் கொள்வர். ஆனால் அத்தகைய பிளவும் இறுகிய எல்லைகள் கொண்டு இயங்கவில்லை. வர்க்கத் திரட்சியே முதன்மை என சொல்லி ஏனய திரட்சிகளை ஓரங்கட்டுவது தவறு. ஏனெனில் சமூக மாற்றுக்கான திரட்சி – எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான திரட்சியோடு ஒன்றிணைந்தது. சாதிய ஒழிப்புக்கு எதிரான திரட்சியும் முற்போக்கு வடிவம் எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் அதுவும் வர்க்க விடுதலைக்கான திரட்சியே. அதன் தெளிவு நேரடியாக இல்லை என்பதற்காக அந்தப் போராட்டம் புறக்கணிக்கப் படுவது தவறு.
போராட்டங்களின் இணைவு என்பது இயற்கையானது. இயற்கைக்கு மாறாக பிரித்துப் பார்க்கப்படுவது என்பது போராட்டத் திரட்சியை முதன்மைப்படுத்தாத அமைப்புக்கள் – அசைவுகள் – மனிதர்களின் ஆதிக்கம் பரந்து இருப்பதாலும்தான் நிகழ்கிறது. குறுக்குதல் தலைமைத்துவங்களின் போதாமையாளும்தான் நிகழ்கிறது. மனிதரின் உரிமை என்பது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானது. எதை முதன்மைப் படுத்துவது என்ற தெரிவு அங்கு இல்லை. அந்தத் தெரிவு அமைப்புமயப்படுதலின் – சுய இருத்தல்களின் தேவைகள் கருதியும்தான் உருவாகிறது. குறுகிய வடிவம்தான் தனிப்பட்ட –அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட போராட்ட வடிவத்தை மட்டும் கோரி நிற்கிறது. இயற்கைக்குப் புறம்பான தனிமைப் படுத்தலை நாம் எதிர்க்க வேண்டும்.
சாதிய ஒழிப்புக்கான போராட்டமும் ஒடுக்கப்படும் தேசிய அபிலாசைகளுக்கான போராட்டம்தான். சாதிய ஒடுக்குதலை புறந்தள்ளுவது தேசிய விடுதலைக்கான நியாயத்தையும் புறம் தள்ளுகிறது. ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரித்துப் பார்ப்பதும் எது முக்கியப்படுதல் வேண்டும் என்பதும் எத்தகய போராட்டத்தை பற்றி நாம் பேசுகிறோம் என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது.
சாதிய ஒழிப்புப் பற்றிப் பேசுவது தமிழ் தேசியத்தை உடைக்கும் – அல்லது பின் தள்ளும் என்ற பேச்சின் பின் இருக்கும் பயத்தின் அரசியலை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டும். ஒரு போராட்டம் எவ்வாறு இன்னுமொரு போராட்டத்தை உடைக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வி சம்பந்தப்பட்டது இது. ஒரு போராட்டம் இன்னுமொரு போராட்டத்தை உடைப்பது சத்தியம்தான். அந்தச் சாத்தியம் எங்கிருந்து எழுகிறது என நாம் பார்க்க வேண்டும். தமிழ் தேசியத்தை பேசுவோர் சாதிய ஒழிப்பை மறுக்கும் பொழுது – அல்லது அதன் அவசியத்தை குறைத்து மதிப்பிடும் பொழுது சாதிய ஒழிப்பு போராட்டம் எதிர் நிலைக்கு திருப்பப் படுவது தவிர்க்க முடியாதது தானே. அத்தகைய தமிழ் தேசியத்தை எதிர்க்கமால் எவ்வாறு சாதிய ஒழிப்பு பலப்பட முடியும்?
அவரவர் தமது கட்டுப் பாட்டுக்குள் போரட்டங்கள் வளர வேண்டும் எனக் கருதுவதாலும்தான் இத்தகைய முரண்கள் எழுகிறது. சாதிய ஒழிப்பு பேசுவோர் பலர் அந்தப் போராட்ட கதையாடல் தமக்கு மட்டும் சொந்தம் என நினைக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் பலர் சுய லாபம் அடைபவர்கலாகவும் இருக்கிறார்கள். தமது கட்டுப்பாட்டை மீறி செல்லாமல் இருப்பதற்காக மற்றய போரட்டங்களை எதிர் திசையில் நிருத்தும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. வலது சாரிய தமிழ் தேசியத்தை முழு மூச்சோடு எதிர்கிறார்களா இவர்கள்? அவதானித்துப் பாருங்கள். முற்போக்கு சக்திகள் தமது எல்லைக்குள் வந்து விடக்கூடாது என்பதுதான் இவர்கள் கவனமாக இருக்கிறது. நிலப்பிரபுத்துவ எல்லைக்காப்பு மனப் பாங்கோடு இவர்கள் தமது எதிரிகளைக் கட்டமைக்கிரார்கள். தமது எல்லைக்குள் அடுத்தவன் புகுதல் கூடாது என்ற அடிப்படையில் போராட்ட அரசியலின் எல்லைகள் வரையறுக்கப் படுகின்றன. அந்த எல்லைக்குள் முடக்கப்படும் மக்களின் விடிவு முடக்கப்படுகிறது. சுருங்கிய அந்த போராட்டம் நிரந்தர விடுதலை நோக்கி நகர்வது தடுக்கப் படுகிறது.
அத்தகைய குறுகிய போராட்டங்கள் கூட சிறு சிறு வெற்றிகளைப் பெற்றுத் தர வல்லன. இதனால் மக்களும் அதன் தலைமைகளின் பின்னால்- குறுக்கப்பட்ட அடையாளங்களின் பின்னால் தேங்குவதும் நிகழ்கிறது. ‘அரசனை நம்பி புரிசனைக் கைவிடக்கூடாது’ என்ற பழமொழி மனப்பாங்கு அது. இந்தப் பழமொழி ஆணாதிக்கம் சார்ந்தது மட்டுமின்றி அரசியல் தவறையும் உள் வாங்கியதாக இருக்கிறது. சாதிய அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டம் சிறு சிறு சலுகைகளால் வாங்கப் பட்டு அடையாள அரசியலுக்குள் முடக்கபடுவது எதிர்க்கப் பட வேண்டும். ஏனெனில் அந்த போராட்டங்களில் சாதிய ஒடுக்குதல் ஒளித்து மறைத்து வைக்கப்படுவது மட்டுமே நோக்காக இருக்கிறது – ஒழிப்புத் திட்டமிடல் அங்கு இல்லை. அடையாளத்தை உபயோகித்து ஆட்சியை அல்லது அதிகாரத்தை தக்க வைத்திருக்க முயலும் அரசியல் கடுமையாக எதிர்க்கப் படவேண்டியதே. அது மக்கள் விரோத அரசியல். ஒட்டுமொத்தத்தில் போராட்டத்தின் எதிர் திசையில் நிற்கிறது. சொல்லாடல்களால் மட்டும் இதைக் கதைத்துப் பேசி நிமிர்த்தி விட முடியாது.
இந்த அர்த்தத்தில் சாதிய ஒழிப்பை முதன்மைப் படுத்தி தமது திட்டமிடலை நகர்த்தாத ‘சாதிக் கட்சித் தலைமைகள்’ சாதிய ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்களின் எதிரிகளே. அதே போல் சாதிய ஒழிப்பை ஏற்றுக் கொள்ளாத ‘தமிழ் தலைமைகளும்’ மக்கள் விரோத சக்திகளே. உண்மையில் அத்தகைய தமிழ் தேசிய தலைமைகள் (‘புத்தி சீவிகள்’) பக்கம் மேலதிக அதிகாரம் குவிந்திருப்பதால் இவர்கள் செய்யும் சேதம் அதிகமாக இருக்கிறது.
முற்போக்கான தேசிய விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் சமூக விடுதலையே சாத்தியமில்லை என்ற அடிப்படையில் போராட்டங்களை உரிமை அடிப்படையில் இணைத்த வரலாறுதான் வெற்றி பெற்ற போராட்டங்களுக்கு உண்டு. அந்த வெற்றிக்காண திட்ட மிடலில் தோன்றிய சுலோகன்தான் சுய நிர்ணய உரிமை என்ற கோரிக்கை. ஒடுக்கப்படும் தேசியங்களின் விடுதலை இன்றி சமூக விடுதலை இல்லை எனப் பேசுவதை சாதிய ஒடுக்குமுறைக்கும் விரித்துப் பார்க்க முடியும். சாதிய ஒழிப்பு இன்றி எப்படி சமூக விடுதலை சாத்தியப் படப்போகிறது? சாதிய ஒழிப்பு இல்லாத தேசிய விடுதலை பற்றிய பேச்சு அர்த்தமற்றது. உள்ளடக்கத்தில் போரட்டத்துக்கு நியாயமற்றது.
அனைத்து அடையாளங்களும் அரூபம்தான். கட்டமைக்கப் படுபவைதான். சமூக அமைப்பு முறையில் இருந்து எழும் முரண் என்பது வேறு – அடையாள அடிப்படையில் இருந்து எழும் முரண் வேறு. இவற்றுக்கிடையில் உறவுகள் உண்டு. ஆனால் ஒன்றுபடுத்தல் குறிப்பிட்ட அடையாளத்தில் மட்டுமே நிகழ வேண்டும் எனக் கருதுவது அடிப்படையிலேயே தவறு. எதிர்ப்பு நிலையின் குவியமும் இயற்கையின் பாற்பட்டதே அன்றி எழுந்தமான அரூப அடையாளத்தின் பாற்பட்டது இல்லை.
ஒடுக்குமுறைக்கு எதிரான எந்தப் போராட்டமும் இன்னொரு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் எதிரி இல்லை. இந்த எதிர் முரண் நிலை அமைப்புக்களால் – அதிகார சக்திகளால் – சுய லாபம் தேடுபவர்களால் – தலைமை என தங்களைத் தாங்களே வரித்துக் கொள்பவர்களால் இயற்கைக்கு மாறாக கட்டமைக்கப் படுகிறது. இதப் புரிதல் அவசியம். இந்தப் புரிதல் இருப்பவர்கள் சாதிய ஒழிப்புக்கு எதிரான அனைத்து அசைவுகளையும் – அனைத்துப் போராட்டங்களையும் தமது போராட்டமாகப் பார்ப்பர். தேசிய போராட்டத்தை அது முடக்கி விடும் என்ற பயக்கேடுதி அவர்களுக்கு வராது. மாறாக இதுவும் ஒடுக்கப்படும் தேசியத்தின் போராட்டத்தை பலப்படுத்தும் என அறிவர். இதே போல் தமிழ் எதிர் தலித்தியம் என்று நிறுவி அடையாள அரசியலில் பலனடைவோரால் எமது போராட்டம் குறுக்கப் படுவதும் மறுக்கப்பட்டே ஆக வேண்டும்.