மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01)

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com

மதமும் அரசியலும் சேர்ந்தால் பற்றி எரிவதற்கு எண்ணெய் தேவையில்லை. இலங்கை, இந்தியா, இஸ்ரேல், அரபு நாடுகள் போன்றன அதற்கு மிகச் சிறந்த உதராணம். அதன் வரிசையில் அண்மைக்கால உதாரணமாக இருப்பது மியன்மார் தேசம். பெளத்தமதமும் அரசியலும் இணைந்து எண்ணெய்யே இல்லாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ARSA (Arakan Rohingya Salvation Army) என்ற அமைப்பு முப்பது போலீஸ் மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்கியதைத் தொடர்ந்து  வெடித்த கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற அரச பயங்கரவாதத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர். இதுவரை 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். “இனச் சுத்திகரிப்பிற்கான வரைவிலக்கணம்” இது என்று சொல்லப்படுமளவிற்கு மியன்மார் அரசால் ரோஹிங்கிய இனம் சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டிருகின்றது.

உள்ளூர் காவல்துறை, மியன்மார் ராணுவம் மற்றும் பெளத்த மத அடிப்படைவாதிகள் அனைவரும் இணைந்து ரோஹிங்கிய மக்களின் சொத்துகளை சூறையாடியும், கிராமங்களை எரித்தும், மக்களை ராக்கெய்ன் மாநிலத்தை விட்டே துரத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் முதல் ஒரு சில வாரங்களில் மட்டும் 400,000 க்கும் மேற்பட்ட மக்கள், பக்கத்திலுள்ள நாடுகளை நோக்கி குறிப்பாக பங்காளதேசை நோக்கி இடம்பெயர்ந்து விட்டனர். கிட்டத்தட்ட மூன்றிலொரு பங்கு ரோஹிங்கிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். ஈழத்தில் நடைபெற்றதைப் போன்று மியன்மாரிலும் மிகப் பெரும் இனச் சுத்திகரிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் அரங்கேறிக் கொண்டிருகின்றது. ஆங்சாங் சூகியின் அரசு அதற்கு மௌனமாக ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது பகுதிகளுக்கு திரும்பக் கூடாது என்ற நோக்கில் பங்காளதேஷ் எல்லைப் பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகளைப் புதைத்து வருகிறது மியன்மார் ராணுவம். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே கண்ணிவெடிகளை புதைத்து வெளிப்படையாகவே மனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கின்றது மியன்மார் அரசு.

சிறுபான்மையினரைத் தாக்க பெளத்த மத அடையாளத்தைப் பாவித்து வன்முறைகளை ஏவி, பயத்தை மக்கள் மத்தியில் விதைத்து, விட்டுச் சென்ற மக்களின் பொருட்களை சூறையாடி, கிராமங்களை அழித்தொழித்து மீண்டும் அம்மக்களை தமது இருப்பிடம் நோக்கி திரும்பி வரவிடாமல் செய்கின்றன இனவாத சக்திகள். எதிர்காலத்தில் மியன்மாருக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சத்தில் யுத்தத்தில் ஈடுபடாத இளைஞர்களைக் கூட கொன்று குவிக்கின்றது மியன்மார் இராணுவம்.

கலவரம் நடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பங்களாதேஷ் நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிகை 100,000 ஆக இருந்தது எனினும் மூன்று கிழமைகளின் பின்னர் அகதிகளின் எண்ணிகை சடுதியாக நான்கு மடங்காக அதிகரித்தது. மியன்மார் நாட்டில் ரோஹிங்கிய மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையிலன் 4.5 வீதமாகவே காணப்பட்டது, ஆனால் தற்பொழுது கலவரத்தின் பின்னர் அம்மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.

அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கான உணவு, மருந்து ,குடிநீர் மற்றும் தற்காலிக கூடாரம் போன்றனவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஐ.நாவில் அகதிகளுக்காக ஆரம்பத்தில் 77 மில்லியன் டொலர்கள் கோரிக்கை விடப்பட்ட போதும் தற்பொழுது அந்தத் தொகை போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்த போதும் மேலதிக நிதியை வழங்கவோ அல்லது உடடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்கவோ ஐ.நா வும் முன்வரவில்லை. அதிகரித்து வரும் அகதிகளின் சிக்கல்களைத் தீர்க்காமல் ஐ.நா மிகவும் மந்த கதியிலேயே இயங்குகின்றது.

அதிகரித்து வரும் அகதிகளின் பிரச்சனையை தீர்க்க, பங்களாதேஷ் உட்பட பக்கத்து நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, போன்றன உரிய உகந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை. யானைப் பசிக்கு சோழப் பொரி என்பது போல இந்தோனேசிய அரசு வெறுமனே அரிசி, தண்ணீர், போர்வை என்பனவற்றை மட்டும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. பெருகி வரும் அகதிகளின் அடிப்படை, அவசர அவசியத் தேவைகளை நிறைவு செய்ய இவைகள் மட்டும் போதாது.

மியன்மார் அரசின் ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் உலகெங்கும் உள்ள முஸ்லிம் மக்களை கோபமடையச் செய்துள்ளது. ஆனால் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அமைப்பு அல்லது அரசு அம்மக்களுக்காக உதவ முன்வந்துள்ளது?, எதுவும் இல்லை. இத்தகைய கவனிப்பாரற்ற நிலைமை இளையோரை தீவிரவாதம் நோக்கி நகர்த்தவல்லது. தீவிரவாத அமைப்புகளும் இச்சசந்தர்ப்ப்பத்தை பயன்படுத்தி  மக்களை தமது அமைப்பினுள் உள்வாங்கக்கூடும். இந்திய பாகிஸ்தான் பங்காளதேஷ் முஸ்லிம் சகோதர்களை மியன்மாருக்கு எதிராக திரும்புமாறு அறைகூவல் விடுத்த அல் கெய்டா அமைப்பு “எமது முஸ்லீம் சகோதரர்களை துன்பப்படுத்தியமைக்கான தண்டனையை மியன்மார் அரசு பெற்றுக்கொள்வார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிகம் துன்புறுத்தப்படும் சிறுபான்மை இன மக்களில் ரோஹிங்கிய இன முஸ்லிம் மக்களும் ஒன்றாகும். ஒரு இனம் விடுதலையை வேண்டி பயணிக்கையில், அதன் உரிமைகளை மறுத்து விடுதலை போராட்டத்தை ஒடுக்குவது அரசுகளுக்கு கை வந்த கலையாகும். மியன்மாரிலும் ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக தேசிய ஒடுக்குமுறையையே மேற்கொண்டு வருகிறது மியன்மார் அரசு. பல தசாப்தங்களுக்கு மேலாக குடியுரிமை இன்றியும், கடவுச் சீட்டு இன்றியும், கல்வி பயில முடியாமலும், அரசிடம் அனுமதி வாங்காமல் திருமணம் செய்ய முடியாமலும், திருமணம் செய்தாலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளமுடியாமலும், சொத்துக்களை வாங்க முடியாமலும், அரசியலில் ஈடுபட முடியாமலும், சுதந்திரமாக பயணம் செய்ய முடியாமலும், அடிமட்டத் தொழில்களை மட்டுமே செய்து பிழைத்து வருகின்றனர் ரோஹிங்கிய மக்கள். மியன்மார் அரசும் அவர்களை மனிதர்கள் என்று கூடக் கருதுவதில்லை. “அன்பும் கருணையும் இருக்கத்தான் வேண்டும் அதற்காக தெரு நாயுடன் எல்லாம் வாழ முடியுமா?” என அண்மையில் மியன்மார் பெளத்த துறவி ஒருவர் கேள்வியெழுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.

1960 இலிருந்தே ரோஹிங்கிய மக்கள் பெளத்த அடிப்படை வாத மியன்மார் அரசால் ஒடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றனர். அதன் உச்சக் கட்டமாகவே அவர்களின் குடியுரிமை 1982 ஆம் ஆண்டு பறிக்கப்பட்டது. முன்பொருமுறை இதே போல் இலங்கையிலும் ஐக்கிய தேசிய கட்சியினால் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதன் பின்னர் குடியுரிமை, கடவுச்சீட்டு எதுவும் இல்லாமல் உள்நாட்டிலும், பாகிஸ்தான், மலேசியா, இந்தியா, நேபாளம், இந்தோனேசியா போன்ற  வெளிநாட்டிலும் அகதிகளாகவே திரிகின்றனர் ரோஹிங்கிய மக்கள். பர்மாவிலிருந்து மியன்மாராக பெயர் மாறியதே தவிர ரோஹிங்கிய மக்களின் மீதான ஒடுக்குமுறையில் மாற்றம் நிகழவே இல்லை.

மறுபக்கத்தில் மியன்மார் அரசானது தனது உறவை சீனா மற்றும் ரஷ்யாவுடன் பலப்படுத்தி வருகிறது. ஏனெனில் ஐ.நா பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், ஐ.நா மியன்மாருக்கு எதிராக தடைகளை விதித்து தீர்மானம் நிறைவேற்றுமிடத்து அதனை அவர்களின் வீட்டோ வலுவினை பாவித்து முடக்கும். அரசுகளும், அரசுகளுக்கு சேவகம் செய்யும் ஐ.நா, போன்ற அமைப்புகளும், தமது அரசியல் பொருளாதார நலன்களுக்காக, அதிகாரத்துக்கு மட்டுமே தமது வாலை ஆட்டுமே தவிர ஒடுக்கப்படும் மக்களுக்கு அல்ல என்பதையே இது வெளிப்படுத்தி நிற்கின்றது.

1988 இல் மியன்மார் அரசு தாராளமயமாக்கால் கொள்கையை அமுல்ப்படுத்த தொடங்கிய பின்னர், சீனா மற்றும் மியன்மாருக்கிடையிலான பொருளாதார உறவு மிகவும் இறுக்கமாக பலமடைந்து வளர்ந்து வருகின்றது. மியன்மாரின் சுரங்கத் தொழில், மின்னுற்பத்தி, விவசாயம் மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புகளில் சீனா முதலீடு செய்துள்ளது. ஆகவே மியன்மார் அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி சீனா அரசு வாய் திறக்கப் போவதில்லை ஏனெனில் அரசும் அதிகார சக்திகளும் எப்போதும் தமது அரசியல் பொருளாதார நலன்களையே முன்னிறுத்தி இயங்கும். மக்கள் நலன் என்பது இங்கு இரண்டாம் பட்சமே. இலங்கையில் இனப்படுகொலை நடந்தபொழுது சீனா வாய் திறந்ததா இல்லை?, அதே போல்தான் ரோஹிங்கிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படும்போதும் சீனா வாய் திறக்காது ஏனெனில் அவர்களின் அரசியல் என்பது ஒடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல. அது அதிகாரத்தின் பக்கம் சாய்ந்திருக்கும் அரசியல். அதிகாரம் இனப்படுகொலை செய்யும், அதிகாரம் இனப்படுகொலை நடைபெறும்போது வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஏனெனில் அதன் விளைச்சலை அறுவடை செய்வது அதிகார சக்திகளே என்பதனாலேயாகும்.

ஐ.நா மூலம் லொபி செய்து ஈழத்தமிழருக்கு விடுதலையை எடுத்துத் தர முயலும் புலம்பெயர் அமைப்புகள் இதிலிருந்தாவது அவ்வுண்மையை நன்குணர வேண்டும். மியன்மாரில் கலவரம் முடிந்தபின் இனப்படுகொலையா? இனவழிப்பா? என்பதிலேயே ஐ.நா தனது காலத்தையும் நேரத்தையும் செலவிட்டு அறிக்கை குப்பைகளை வெளியிடுமே தவிர தற்பொழுது அதனை தடுத்து நிறுத்த முடியாமல் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருகின்றது. மனித உரிமைகள் அமைப்புகள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்றன ஐ.நாவின் செயற்படாத்தன்மையை மிகவும் கண்டித்தமை குறிப்பிடத்தக்கது.

இனம் மாதம் மொழி என்பவற்றின் பெயரால் மக்கள் அழிக்கப்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆனால் ஐ.நா வும் சர்வதேசமும் அதன் அதிகார சக்திகளும் அதனை ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதைத்தான் அதன் அமைதி காட்டுகிறது.

ரோஹிங்கிய என்பது பொற்றோலிய வளமுள்ள பகுதியாக அல்லது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவோ இல்லாததால் சர்வதேசமும், ஐ.நா வும் அம்மக்களைப் பற்றிக் கரிசனை கொள்ளவில்லை. வளங்களற்ற பிரதேசம் என்பதால்தான் மேற்குலக நாடுகளின் நட்பு நாடுகளான எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகள் கூட ரோஹிங்கிய மக்களைப் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. ராக்கெய்ன் எண்ணெய் வளமுள்ள பிரதேசமாக இருக்குமானால் “ஈராக் மக்களை காப்பாற்றியது போன்று” ரோஹிங்கிய மக்களையும் புகுந்து காப்பாற்றியிருக்கும் அமெரிக்க வல்லரசு.

தற்பொழுது ஒடுக்கப்படும் மக்களின் விரோதியாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஆங்சாங் சூகிக்கு உலகெங்கும் கண்டனங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து ஐ.நா இன் வருடாந்த கூட்டத் தொடரில் பேசுவதைக் கூட தவிர்த்துவிட்டார். வீட்டுக் காவலில் இருந்து விடுதலையாகி பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட, அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக் கொண்ட, மனித உரிமைகளின் கதாநாயகியாக காட்டப்பட்ட ஆங்சாங் சூகியின் உண்மை முகம் என்னவென்பது இப்போது தெரியவந்துள்ளது. அவரது அரசியல், அதிகாரம் சார்ந்ததே தவிர ஒடுக்கபட்ட மக்களுக்கானது அல்ல என்பது தெளிவாகின்றது.

ஆங்சாங் சூகி மியன்மாரில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த இராணுவ ஆட்சிக் எதிராக போராடி, 15 வருடம்  வீட்டுக்காவலில் இருந்தார் என்றெலாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் சூகி மியான்மாரில் ஒடுக்கப்படும் மக்களுடன் சேர்ந்து எந்தவொரு போராட்டத்தையும் நடாத்தவில்லை, அல்லது ஒடுக்கப்படும் மக்களுக்காக எந்தவொரு அமைப்பையும் கட்டவில்லை. வெறுமனே வீட்டுக்காவலில் இருந்தார், நோபல் பரிசு பெற்றார் என்பதே அவரின் கடந்த கால வரலாறாக ஆகும்.

ஆங் சாங் சூகியின் மதிப்பு  தற்போது அவரது பக்கச் சார்பான  நடவடிக்கையினால் சர்வதேச ரீதியாக இழக்கபட்டுக்கொண்டு வருகிறது. ரோஹிங்கிய மக்கள் மீது ஆங் சாங் சூகி பெரிதும் கரிசனை கொள்ளவில்லை ஏனெனில் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவரது அரசியல் நிலைப்பாடு என்பது பெளத்த இனவாத சக்திகளை ஆதரிப்பது ஆகும்.

ஆங் சாங் சூகி பயங்கரவாதத்தை எதிர்த்து எதுவும் செய்யாமல் அரச தீவிரவாதத்தை மேலும் ஊக்கப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார் சூகியைப் போல அமைதிக்கான நோபெல் பரிசை வென்ற மலாலா யூசப். இவர் 2014 இல் மிகக் குறைந்த வயதில் அமைதிக்கான நோபெல் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அதிகாரத்தை மீறி தன்னை சமூகத்துக்காகவும் மக்களுக்காவும் ஒப்படைக்கும் நிலையில் இல்லை சூகி ஆகவே அவரின் நோபல் பரிசை பறிக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைப்பது நியாயமானதே.

மியன்மார் பெளத்த அடிப்படை வாதத்தை பின்பற்றும் அரசியல் தலைமைகள் கூட தமது அரசியல் சுயலாபத்திற்காக ரோஹிங்கிய மக்கள் வங்காளிகள் எனவும், பங்காளதேஷிலிருந்து சட்ட விரோதமாக வந்த அகதிகள் எனவும் மியன்மாரில் வசிப்பதற்கு அவர்களிற்கு உரிமை இல்லை எனவும் காலகாலமாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்தே ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மாவில் வசித்து வருகின்றனர். மேலும் சிலர் மியன்மார் என்ற தேசம் 1948 இல்  உருவாகுவதற்கு முன்னரே பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், பிரித்தானியரால்  பங்காளதேசிலிருந்து மியன்மாருக்கு கொண்டுவரப்பட்டவர்கள் . ஆகவே அவர்களுக்கு மியன்மாரில் உரிமை இல்லை என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

மியன்மார் நாட்டின் ஒடுக்குமுறைகளை தம்மால் முடிவுக்கு கொண்டு வரமுடியாது என்ற பலமின்மையை மக்கள் உணர்கிறார்கள், ஆனால் மக்கள் திரட்சி மட்டுமே இதை சாத்தியப்படுத்தும். மியன்மார் நாட்டின் பல இடங்களில் மற்றைய இன மக்களால் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தகவல்களை காப்ரேட் மீடியாக்கள் வெளிக் கொண்டுவருவதில்லை. ஆகவே அம்மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற பக்கத்து நாடுகளிலும் உலகின் பிற பாகங்களிலும் நடைபெறவேண்டும். அண்மையில் லண்டனிலும் அத்தகைய போராட்டமொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. உலகின் அனைத்து தரப்பு மக்களையும், மாணவர்களையும் கோபத்துக்கு உள்ளாக்கி கொண்டிருக்கும்  ரோஹிங்கிய மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக அம்மக்களை கிளர்ந்தெழச் செய்யவேண்டும். ஒடுக்கப்படும் ரோஹிங்கிய மக்களுக்கான குரல் உலகெங்கும் ஒலிக்கப்படவேண்டும். அக்குரலை எழுப்ப வல்லவர்கள் அரசுகளோ, அதிகார சக்திகளோ அல்லது நிறுவன முதலாளிகளோ அல்ல மாறாக உழைக்கும், ஒடுக்கப்படும் மக்களே ஆவர்.

சு.கஜமுகன் (gajan2050@yahoo.com )