எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம்.

4ஆம் திகதி சுதந்திர தினம் அன்று இலங்கை தூதரகம் முன்னால் தமிழ் சொலிடாரிட்டி நடாத்திய ஆர்ப்பாட்டதில் பங்குபற்றியவர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டினார் இலங்கை இராணுவ உயர் அதிகாரி. கழுத்து வெட்டுவது அவர்களுக்கு ஒன்றும் புதிய  விடயமல்ல. இலங்கை இராணுவமும் , சிங்கள பௌத்த பேரினவாத அரசும்  மக்கள் . போராளிகள் , செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரின் கழுத்துக்களை வெட்டி பரீட்சையமானவர்கள் தான். நல்லிணக்க , நல்லாட்சி என்று கூறி கொண்டு லண்டனில் வைத்தே  போராடிய மக்களை நோக்கி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

 

சிங்கள பேரினவாதத்தின் பண்பு மாறாமல் வெறும் அரசியல் மாற்றத்தால் எமது மக்களின் எந்த அடிப்படை அரசியல் உரிமைகளையும் பெறமுடியாது  என்பதை தமிழ் சொலிடாரிட்டி அழுத்தமாக  தெரிவித்தே வந்திருக்கிறோம். சிங்கள பௌத்த பேரினவாத அரசினை எதிர்ப்பதோடு அவர்களுக்கு துணையாக நின்று உறவாடுவோரையும் தமிழ் பேசும் மக்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும். நல்லாட்சி , நல்லிணக்கம் என்று கூறி கொண்டு  இந்த அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ், முஸ்லீம் தலைமைகளிடம் மக்கள் இனியும் ஏமாறக்கூடாது.

 

இலங்கை அரசுக்கு சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற பண்பு இருப்பது போல உலகில் உள்ள எல்லா அரசுகளுக்கும் ஓர் கட்டமைப்பும் , பண்பும் உண்டு. இன்று பிரித்தானியாவில் உள்ள அரசு வலதுசாரிய அடக்குமுறை அரசு. இலங்கை அரசுக்கு எல்லாவழிகளிலும் ஆதவராக செயற்படும் பிரித்தானியாவும் சர்வதேசமும் நமக்கான நீதியை பெற்றுதரும் என்கிற மாயையில் இருந்து வெளிவர வேண்டும். அவர்கள் நாட்டிலேயே மக்களை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்காத இந்த சர்வதேசம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற கழுத்தறுப்பிற்கு நீதி பெற்று தருமா? என நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

 

கண்முன்னே கழுத்தை அறுத்து விடுவோம் என மிரட்டல் விடுத்தலும் , உங்கள் நாட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறி அகதிகளை திருப்பி அனுப்ப முயலும் பிரித்தானிய ஆட்சியாளர்களும் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. எமது உரிமைகளுக்காக நாம் தான் போராட வேண்டும். நாம் போராடிய எமது  உரிமைகளே பெற்றோம். எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம்.  ஒன்றிணைவோம். ஓர் குரலாவோம்.