இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1,520 . Views .

கடந்த பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் யாருக்காக இந்த சுதந்திரம் என்ற தொனிப் பொருளில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது ஆர்பாட்டம் ஒன்றை நிகழ்த்தியிருந்தது. அதன்போது இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ கழுத்தை வெட்டுவேன் என்று விரல் மூலம் சைகை செய்து அமைதியாக போராட்டம் செய்த மக்களை அச்சுறுத்தினார். நல்லிணக்கம் என்ற பெயரில் நல்லாட்சி செய்யும், பெளத்த சிங்கள பேரினவாதத்தின் உண்மையான இரட்டை முகத்தினையே மேற்படி சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.

அதனைக் கண்டிக்கும் முகமாக நேற்று (09/02/2018) தமிழ் அமைப்புக்களினால் ஒழுங்கு செய்யபட்ட ஆர்பாட்ட பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். தமிழ் சொலிடாரிட்டி, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் இளையோர் அமைப்பு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய தமிழர் பேரவை அகதிகள் உரிமைக்கான அமைப்பு மற்றும் சோசலிஸ்ட் பார்ட்டி (Socialist Party), உட்பட பல்வேறு அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இரண்டு மணியளவில் ஒன்று கூடிய மக்கள் கொலை மிரட்டல் செய்த இராணுவ அதிகாரியை பணிநீக்கம் செய்யவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோசங்களை முன்வைத்தனர். பின்னர் மக்கள் லண்டன் காமன்வெல்த் அலுவலகம் வரை கோசங்களை எழுப்பியயவாறு பயணித்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டமையானது நீண்ட காலத்தின் பின்னர் தமிழ் மக்களின் மிகப் பெரிய அரசியல் எழுச்சியையே காட்டுகின்றது. இராணுவ அதிகாரிக்கு சார்பாக இயங்கும், தற்பொழுது ஆட்சி செய்யும் மைத்திரி- ரணில் அரசானது இனவாத அரசு என்பதனை சர்வதேச சமூகத்துக்கும், சர்வதேச மக்களுக்கும் சுட்டிக் காட்ட மேற்படி போராட்டமானது அவசியமானதாகும். மேலும் இப்போராட்டத்தில் பல்வேறு தமிழ் ஊடகங்களும் வந்து தமது ஊடக அனுசரணையை வழங்கிக்கொண்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் இப்போரட்டத்தை குழப்பும் நோக்குடன் சிலர் இலங்கை தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு வந்தனர். இச் சம்பவம் ஒரு முறுகல் நிலையை தோற்றுவித்தது எனினும் பிரித்தானியக் காவலர்களின் தலையீட்டினால் அவர்கள் பின்பு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராகத் திரளும் தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியை பொறுக்கமுடியதா சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளின் முறையீட்டால் தமிழ் சொலிடாரிட்டியின் முகப்புத்தகம் உட்பட பலரின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. குறித்த சிலரின் முறையீட்டால் மக்களின் கருத்துரிமையை பறிக்கும் முகநூலின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. எனினும் வாட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்களின் ஊடாக போராட்டம் பற்றிய தகவல் மக்களை சென்றடைந்தது.

அரசும் அதிகாரமும் பிரியங்கா போன்ற இராணுவ அதிகாரிகளுக்கே சேவகம் செய்யும். ஆகவே மக்களாகிய நாம் எமது உரிமைகளை நாமே போராடி வென்றெடுக்க வேண்டும்.

[robo-gallery id=”2701″]