இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.

இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தன்று லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் எதிர்ப்புக் காட்ட குவிந்து நின்றவர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கார பெர்னாண்டோ நாட்டுக்கு திருப்பி அழைக்கப் பட்டிருக்கிறார். இருப்பினும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அரச தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அரசு என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறது லண்டன் போராட்டத்தை ஒழுங்கமைத்த தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு. தமிழ் சொலிடாரிட்டியின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விபரங்கள் வருமாறு.

 

“பிரிகேடியர் பிரியங்கார பெர்னாண்டோ தண்டிக்கப்பட வேண்டியவர். யுத்தத்தால் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமது சொந்தங்கள் பலரை இழந்தவர்கள் என பலர் சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பற்றி இருந்தனர். இவர்களின் மனநிலை மேலும் பாதிக்கும் வகையில் கொலை மிரட்டலை விட்ட ஒரு ‘உயர் அதிகாரி’ எவ்வாறு தண்டனை இன்றி தப்பிப் போக அனுமதிப்பது? பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு எதிராக வழக்குப் போட்டு இருக்கிறார்கள். இலங்கை அரசு நட்ட ஈடு வழங்கத் தயாரா?

இறுதி யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதற்கும் பிரிகேடியரின் சைகைக்கும் இருக்கும் தொடர்பு பலரும் அறிந்ததே. ஆகையால் இலங்கையில் நடந்த பல போர்க் குற்றங்களுக்கு இவர் பொறுப்பெடுக்க வைக்கப்பட்டு பொது விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

இவர் மட்டுமின்றி பல போர் குற்றவாளிகளை காப்பாற்றி வருகிறது தற்போதைய அரசு. போர் குற்றவாளிகளைக் காப்பாற்றுவது மட்டுமின்றி அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது தற்போதைய அரசு. மற்றுமொரு யுத்தக் குற்றவாளியான கொலோணல் ரத்னப்புளி  வசந்த குமார ஹேவகே அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பதவிக்கு சமீபத்தில் இலங்கை அரசு பரிந்துரை செய்ததும் அதை ஐ.நா ஏற்றுக் கொள்ள மறுத்ததும் அனைவரும் அறிவோம். இதேபோல் பல்வேறு குற்றவாளிகள் தப்பி இருக்க விடப்படிருப்பது மட்டுமின்றி அவர்களை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

இனவாத வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ளவே பிரியங்கார திருப்பி அழைக்கப் படுவதை தான் ரத்து செய்திருப்பதாக முன்பு சனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அறிவித்திருந்ததார். அந்த அறிவிப்பு முன்றிலும் பொய்யானது என்று இன்று தெளிவாகி இருக்கிறது. பிரியங்கார இங்கிலாந்தில் இருப்பின் வழக்கு விசாரணைக்கு உட்பட வேண்டும் என்ற அச்சத்தில் திருப்பி அழைக்கப் பட்டிருக்கிறார் தவிர அவருக்கு தண்டனை வழங்கும் நோக்கு இலங்கை அரசுக்கு இல்லை.

இவரைப் பிரித்தானியாவில் வைத்தே பிரித்தானிய அரசு விசாரணைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். பலர் இங்குதான் இவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருகிறார்கள். இவர் திரும்பிச் செல்ல அனுமதித்து இவர் தப்பிப் போக விட்டுள்ளது பிரித்தானிய கன்சவேடிவ் அரசு. தமது தலை தப்பினால் காணும் என்ற பாவனையில் கை கழுவி விட்டுள்ளார்கள். இதையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ் மக்களின் மணித உரிமையை இவ்வாறு வலது சாரிய அரசுகளும் நிறுவனங்களும் பந்தாடி வருவதை கடுமையாக எதிர்க்கிறோம். மனித உரிமையை மதிப்பவர்கள் நடவடிக்கை அல்ல இது.

இலங்கைக்கு வெளியில் அரச பணத்துடன் உல்லாசம் செய்து வரும் அனைத்து யுத்தக் குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையை ஐ.நா கோர வேண்டும். அனைத்து அரசுகளும் அந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். உங்கள் இடங்களில் யுத்தக் குற்றவாளிகளை தப்பிச் செல்ல விட்டு பின்பு இலங்கை அரசுக்கு மணித உரிமை போதிக்கும் போலிக் கரிசனை எமக்குத் தேவை இல்லை. மக்களை உங்களுக்கு எதிராக திரட்டும் வேலையை –யுத்தக் குற்றவாளிகளை தண்டனைக்கு உள்ளாக்குவதற்கான வேலையை தமிழ் சொலிடாரிட்டி தொடர்ந்து செய்து வரும்.”