வோல்தம் போறேஸ்ட் பகுதியில் மக்கள் போராட்டம்

1,041 . Views .

நேற்று பிரித்தானியாவின் வோல்தம் போறேஸ்ட் (Waltham Forest) பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் சொலிடரிட்டி, சோஷலிச கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. அப்பகுதியில் வாழும் பல நூற்றுக்கனக்கான மக்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். வோல்தம் போறேஸ்ட் பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான பொது நிலமானது பல அடுக்கு மாடிக்குடியிருப்புகளை கட்டும் நோக்குடன் தனியார் கம்பனி ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தனியார் வீட்டுத்திட்டத்தைக் கண்டித்தே இப் போராட்டமானது ஒழுங்கு இடம்பெற்றது. இங்கு அமைக்கப்படும் வீடு ஒன்றினை  வாங்குவதற்கு குறைந்த பட்சம் 90,000 பவுண்டுகள் தேவை. வோல்தேம் போறேஸ்ட் பகுதியில் வாழும் 46 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெறும் அடிப்படை சம்பளத்துடன், குறைந்த வாழ்க்கைத்தரத்தை நடாத்தக்கூடியவர்களாகக் காணப்படுகின்றனர். 8000 திற்கும் மேற்பட்ட மக்கள் பல வருடங்களாக அரசால் வழங்கப்படும் வீடுகளை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். ஆகையால் இங்கு வாழும் சாதாரண உழைக்கும் மக்களால், தனியார் நிறுவனத்தால் அமைக்கப்படும் வீடுகளை வாங்க முடியாது. மேலும் அதிகரிக்கும் வீட்டு வாடகை, வீட்டின் கொள்வனவு விலை போன்றனவற்றால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு அவர்கள் வாழ்க்கை செலவு குறைந்த பிரதேசத்தை நோக்கை நகர வைக்கப்படுகின்றனர்.

வோல்தம் போறேஸ்ட் நகர சபையானது, மக்களுக்கு தேவையான கவுன்சில் வீடுகளை அமைக்காமல் தனியார் நிறுவனத்தின் மூலம் வீடுகளைக் கட்டி அதனை மீண்டும் செல்வந்தர்களுக்கே விற்பனை செய்கின்றது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள செல்வந்தர்களே இவ்வீட்டுத் திட்டத்திற்கு முதலீடு செய்கிறார்கள். ஆகவே நகர சபையின் இத்திட்டமானது வோல்தம் போறேஸ்ட் பகுதியில் வசிக்கும் உழைக்கும் சாதாரண மக்களின் வீடில்லாப் பிரச்னைக்கு எதுவித தீர்வையும் தரப் போவதில்லை. மாறாக மக்களின் வீடில்லாப்பிரச்சனை தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதனைக் எதிர்த்தே மக்கள் விதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர்.

நேற்று தொடங்கப்பட்ட இப்போராட்டமானது நேற்றுடன் முடியப் போவதில்லை. அதிகரித்து வரும் வீட்டு வாடகை கட்டுப்படுத்தப்படவேண்டும், மக்களுக்கு தேவையான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளுடன் நடைபெறும் இப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. மக்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும்.

வோல்தம் போறேஸ்ட் பகுதியில் மூவாயிரத்திற்க்கும் அதிகமான தமிழ் மக்கள் வசித்து வருகின்றர். அவர்களும் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் எதிர்வரும் நாட்களில் இங்கு நடைபெறும் போராட்டங்களில் தம்மை இணைத்துக்கொண்டு, சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதுவித பயனும் தராத தனியார் வீட்டுத்திட்டத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.